“ஒரு பெரிய வேலை முடிந்தது”
ஐம்பது வருடங்களுக்கு முன்பு வயதான பெண்மணி ஒருவர் பேசுகையில் முழு உலகமும் மரியாதையோடு செவிகொடுத்து கேட்டது. அது நிகழ்ந்ததோ பாரிஸில் டிசம்பர் 10, 1948-ல். புதிதாக கட்டப்பட்டிருந்த பேலே ஷையோ மன்றத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூடியிருந்தது. அப்போது, மனித உரிமைகளுக்கான ஐநா கமிஷனின் தலைவர் ஒரு பேச்சுக் கொடுக்க எழுந்து நின்றார். அவர்தான் காலஞ்சென்ற அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்லின் டி. ரூஸ்வெல்ட்டின் மனைவி எலனார் ரூஸ்வெல்ட். உயரமான பனை மரம்போல் நின்ற அவர், அவையோரிடம் உறுதியான குரலில்: “மனிதகுலத்தின் வாழ்க்கையிலும் ஐக்கிய நாடுகளின் சரித்திரத்திலும் முக்கியமான காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். அதுதான், மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக உறுதிமொழியை (Universal Declaration of Human Rights) பொதுச்சபை அங்கீகரிக்கும் இந்த நாள்” என்று கூறினார்.
அந்த உறுதிமொழியின் தீர்க்கமான முன்னுரையையும் அதன் 30 பிரிவுகளையும் அவர் வாசித்து பிறகு பொதுச்சபை அந்தச் சாசனத்தை அங்கீகரித்தது.a பிறகு, “உலகின் முதல் பெண்மணி” என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட திருமதி ரூஸ்வெல்ட்டின் தனிச்சிறப்பான தலைமைத்துவத்திற்கு மரியாதை காண்பிக்கும் வண்ணம் ஐநா அங்கத்தினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். அந்த நாளின் முடிவில், “அப்பாடா, ஒரு பெரிய வேலை முடிந்தது” என தன் டைரியில் எழுதிவைத்தார்.
அநேக கருத்துகளிலிருந்து ஒரு உறுதிமொழி தயார்
இரண்டு வருடங்களுக்கு முன்பு, அதாவது ஜனவரி 1947-ல் ஐநா கமிஷனின் வேலை ஆரம்பமானது. ஐநாவில் அங்கம் வகிக்கும் தேசங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் மனித உரிமைகள் சாசனம் ஒன்றைத் தயாரிப்பது ஆகாசக் கோட்டைதான் என்பது அப்பொழுதே தெளிவாகிவிட்டது. 18 அங்கத்தினர்கள் அடங்கிய அந்தக் கமிஷன் ஆரம்பத்திலிருந்தே அநேக குழப்பங்களில் சிக்கித் தவித்தது. உதாரணமாக, கன்ஃபூசியஸின் தத்துவங்கள் அந்தச் சாசனத்தில் இடம்பெற வேண்டும் என சீனாவின் பிரதிநிதி உணர்ந்தார். கத்தோலிக்கராக இருந்த மற்றொருவரோ, தாமஸ் அகியுனஸின் போதகங்களை அதில் சேர்க்கவேண்டும் என்றார். இதற்கிடையில், அமெரிக்காவின் உரிமைகள் மசோதாவை அதில் இணைப்பதற்கு ஐக்கிய மாகாணம் தளராது உழைத்தது. விடுவாரா சோவியத் நாட்டு பிரதிநிதி; கார்ல் மார்க்ஸின் கருத்துகளை அதில் அவசியம் சேர்க்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார். மலைத்துவிடாதீர்கள்—எழுந்த எதிர்ப்புகளில் இவை கொஞ்சம்தான்!
இவ்வாறு, கமிஷனிலிருந்த அங்கத்தினர்களிடையே ஏற்பட்ட சண்டைகள் திருமதி ரூஸ்வெல்ட்டின் பொறுமையைச் சோதித்தன. ஒருமுறை, 1948-ல் பாரிஸிலுள்ள சோர்போனில் ஆற்றிய ஒரு சொற்பொழிவின்போது, தன்னுடைய பெரிய குடும்பத்தை வளர்த்து ஆளாக்கியதுதான் தன்னைப் பொறுமையின் எல்லைக்கே கொண்டுசென்றது என நினைத்ததாக கூறினார். ஆனால், “மனித உரிமைகள் கமிஷனுக்கு தலைவராக இருப்பது அதைவிட கடினமாக இருக்கிறது” என்று அவர் கூறியபோது பார்வையாளர்களின் கரவொலி விண்ணைப் பிளந்தது.
இருந்தபோதிலும், ஒரு பெரிய குடும்பத்திற்கு தாயாக இருந்த அவருடைய அனுபவம் அதிக உதவியாக இருந்தது. கமிஷனின் அங்கத்தினர்களைத் திருமதி ரூஸ்வெல்ட் நடத்திய விதம், ஒரு தாய் தன் பிள்ளைகளை நடத்துவதை தனக்கு நினைப்பூட்டியதென ஒரு பத்திரிகையாளர் எழுதினார். அது, “ஒரு பெரிய குடும்பம். அந்தப் பையன்கள் ஓயாமல் சண்டைபோட்டுக் கொண்டும் பிரச்சினை பண்ணிக்கொண்டும் இருப்பார்கள். அவர்களுக்கு அவ்வப்போது சரியான தண்டனை கொடுக்க வேண்டியிருந்தாலும் மொத்தத்தில் நல்ல பையன்கள்.” (எலனார் ரூஸ்வெல்ட்—குடும்ப வாழ்க்கையும் பொது வாழ்க்கையும் [ஆங்கிலம்]) உறுதியுள்ளவராகவும் அதேசமயம் இரக்கமுள்ளவராகவும் இருப்பதன் மூலம், பகைமையை வளர்த்துக் கொள்ளாமலேயே தன் எதிரிகளையும்கூட சம்மதிக்க வைத்தார்.
அதன் விளைவாக, இரண்டு வருடங்களாக கூட்டங்கள், நூற்றுக்கணக்கான திருத்தங்கள், ஆயிரக்கணக்கான அறிக்கைகள், ஒவ்வொரு வார்த்தைக்கும் சொற்றொடருக்கும் 1,400 வாக்கெடுப்புகள். ஒருவழியாக, இவை எல்லாவற்றிற்கும் பிறகு ஒரு சாசனத்தை அந்தக் கமிஷன் தயாரித்து முடித்தது. உலகமுழுவதிலும் உள்ள எல்லா ஆண்களும் பெண்களும் பெறவேண்டிய உரிமைகள் என அந்தக் கமிஷன் நினைத்த மனித உரிமைகள் அதில் பட்டியலிடப்பட்டிருந்தன. அது, மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக உறுதிமொழி என்று அழைக்கப்பட்டது. ஒரு காலத்தில் ஆகாசக் கோட்டை என நினைத்த இந்த வேலை கடைசியில் அசல் கோட்டை ஆனது!
அதிக எதிர்பார்ப்புகள்
இந்த எக்காள சத்தம் முழங்கியவுடன் ஒடுக்குதல் எனும் மதிற்சுவர் தகர்ந்துவிடும் என எதிர்பார்க்கவில்லை என்பதென்னவோ உண்மைதான். என்றபோதிலும், இந்த அனைத்துலக உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்தன. “பாரிஸிலும் நியூ யார்க்கிலும் மட்டுமல்ல உலகின் மற்ற பாகங்களில் இருக்கும் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும், உதவிக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் தூண்டுவிப்பிற்காகவும் இந்த உறுதிமொழியை ஆவலோடு நோக்குவார்கள்” என ஐநா பொதுச்சபையின் அப்போதைய தலைவர் டாக்டர் ஹெர்பர்ட் வி. இவட் முன்னறிவித்தார். இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.
டாக்டர் இவட் அந்த வார்த்தைகளைக் கூறி இப்போது ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன. இதற்கிடையில், உதவிக்காக அநேகர் இந்தச் சாசனத்தை நோக்கியிருக்கின்றனர் என்பது உண்மைதான். உலகமுழுவதிலும் மனித உரிமைகள் எந்தளவு மதிக்கப்படுகின்றன என்பதை நிறுத்துப் பார்க்க தராசாகவும் அதைப் பயன்படுத்தி இருக்கின்றனர். அவ்வாறு நிறுத்துப் பார்க்கையில் என்ன குறையைக் கண்டிருக்கின்றனர்? ஐநாவில் அங்கம் வகிக்கும் தேசங்கள் அனைத்தும் அதற்கு கட்டுப்பட்டு நடக்கின்றனவா? இன்றைய உலகில் மனித உரிமைகளின் நிலை என்ன?
[அடிக்குறிப்புகள்]
a நாற்பத்தெட்டு நாடுகள் அதை ஆதரித்தன, எந்த நாடும் எதிர்க்கவில்லை. இன்றோ, ஐநாவில் அங்கம் வகிக்கும் 185 தேசங்களும் அந்த உறுதிமொழியை அங்கீகரித்திருக்கின்றன. 1948-ல், வாக்கெடுப்பில் பங்கெடுக்காத தேசங்களும் அதில் அடங்கும்.
[பக்கம் 4-ன் பெட்டி]
மனித உரிமைகள் என்றால் என்ன?
“அவை இல்லாமல் நாம் மனிதர்களாக உயிர்வாழ முடியாது என்ற அளவுக்கு நம் உயிரில் இரண்டறக் கலந்துவிட்டவையே” மனித உரிமைகள் என ஐநா விளக்குகிறது. அவற்றை “மனிதவர்க்கத்தின் பொது மொழி” என்று அழைத்திருப்பதும் பொருத்தமானதே. ஒரு மொழியைப் பேச கற்றுக்கொள்வது நமக்குள் இருக்கும் ஓர் இயல்பான குணம்; அதுவே நம்மை மனிதனாக்குகிறது. அதைப் போலவே, பூமியிலிருக்கும் மற்ற உயிரினங்களிலிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும் இயல்பான மற்ற தேவைகளும் குணங்களும் நமக்கு இருக்கின்றன. உதாரணமாக, அறிவு, கலையுணர்வு, ஆன்மீகம் ஆகியவற்றிற்கான தேவை மனிதர்களுக்கு இருக்கிறது. அடிப்படையான இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத மனிதன் மிருகத்தைப்போல வாழ்கிறான். மனிதர்கள் அவ்வாறு துயரப்படுவதைத் தவிர்க்க, “‘மனித தேவைகள்’ என்பதற்கு பதிலாக ‘மனித உரிமைகள்’ என்ற பதத்தை உபயோகிக்கிறோம். ஏனென்றால், சட்டப்படி பார்த்தால், ‘உரிமை’ என்ற வார்த்தைக்கு இருப்பதைப் போன்ற வலிமை ‘தேவை’ என்ற வார்த்தைக்கு இல்லை. அதை ‘உரிமை’ என்று அழைப்பதன் மூலம் அதன் தரத்தை உயர்த்துகிறோம். இவ்வாறாக, ஒவ்வொரு மனிதனுடைய தேவைகளையும் பூர்த்தி செய்வதை தார்மீக ரீதியிலும் சட்ட ரீதியிலும் முக்கியமானதாக்குகிறோம்” என்று கூறுகிறார் மனித உரிமைகள் வழக்கறிஞர் ஒருவர்.
[பக்கம் 5-ன் பெட்டி/படம்]
மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக உறுதிமொழி
எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான அலெக்ஸான்டர் சோல்ஷினிட்சைன், ஐநா இயற்றிய சாசனங்களிலேயே அனைத்துலக உறுதிமொழிதான் “மிகச் சிறந்த சாசனம்” என கூறினார். அதன் பொருளடக்கத்தை நோட்டமிட்டால் அவர் கூறியதை அநேகர் ஏன் ஒப்புக்கொள்கின்றனர் என்பது புலப்படும்.
அந்த உறுதிமொழியின் அடிப்படைத் தத்துவம் பிரிவு 1-ல் சொல்லப்பட்டிருக்கிறது: “எல்லா மனிதர்களும் சுதந்திரத்துடனும், சமத்துவத்துடனும், சம உரிமையுடனும் பிறந்திருக்கிறார்கள். நியாயத்தன்மையும் மனசாட்சியும் அவர்களுக்கு இருக்கிறது; ஆகவே ஒருவருக்கொருவர் சகோதர உணர்வுடனேயே பழகவேண்டும்.”
அந்த உறுதிமொழியைத் தயாரித்தவர்கள், இதன் அடிப்படையில் மனித உரிமைகளை இரண்டு தொகுதிகளாக பிரித்தனர். முதல் தொகுதியைப் பற்றி பிரிவு 3 இவ்வாறு கூறுகிறது: “உயிர் வாழ்வதற்கும், சுதந்திரமாக இருப்பதற்கும், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது.” மனிதனுடைய அரசு சாராத மற்றும் அரசியல் சார்ந்த உரிமைகளுக்கு இந்தப் பிரிவுதான் அடிப்படையாக அமைகிறது; இவை, 4 முதல் 21 பிரிவுகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. இரண்டாவது தொகுதி, பிரிவு 22-ஐச் சார்ந்தது. அதன் ஒரு பகுதி கூறுவதாவது: “ஒருவருடைய தகுதிக்கும் அவருடைய முன்னேற்றத்திற்கும் இன்றியமையாத” உரிமைகளை அவர் தாராளமாக பெறவேண்டும். மனிதனுடைய பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை விவரிக்கும் 23 முதல் 27 பிரிவுகளை அது ஆதரிக்கிறது. இந்த இரண்டாவது தொகுதியை அடிப்படை மனித உரிமைகளின் பாகமாக அங்கீகரித்த முதல் சாசனமே அனைத்துலக உறுதிமொழிதான். “மனித உரிமைகள்” என்ற பதத்தை உபயோகித்த முதல் சர்வதேச சாசனமும் இதுதான்.
பிரேஸில் நாட்டு சமூகவியல் நிபுணர் ரூட்டி ராஷா, அனைத்துலக உறுதிமொழி சொல்வதை இவ்வாறு தெளிவாக விளக்குகிறார்: “நீங்கள் எந்த இனத்தவராகவும் இருக்கலாம். ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். எந்த மொழியை வேண்டுமானாலும் பேசலாம், எந்த மதத்தைச் சேர்ந்தவராகவும், எந்த அரசியல் கட்சியை ஆதரிப்பவராகவும், எந்த நாட்டைச் சேர்ந்தவராகவும், எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். ஏழையாகவோ பணக்காரராகவோ இருக்கலாம். உலகத்தின் எந்தப் பாகத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்; உங்கள் நாடு ஒரு ராஜ்யமாகவோ குடியரசாகவோ இருக்கலாம். என்றாலும், இந்த உரிமைகளை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும் என்பதே இந்த உரிமைகளின் மற்றும் சுதந்திரங்களின் நோக்கமாகும்.”
அனைத்துலக உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்ட சமயத்திலிருந்து இன்றுவரை 200-க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; அதோடு, அநேக நாடுகளின் அரசியல் சாசனத்திலும் இடம் பெற்றிருக்கிறது. அப்படியிருந்தும், இந்த உறுதிமொழியை மாற்றி எழுதவேண்டும் என இன்றுள்ள அநேக தலைவர்கள் உணருகிறார்கள். ஆனால், ஐநா பொதுச் செயலரான கோஃபி அன்னான் இதை மறுக்கிறார். “பைபிளையோ குர்ஆன்னையோ மாற்றி எழுத வேண்டிய அவசியம் இல்லாததுபோலவே இந்த உறுதிமொழியையும் மாற்றவேண்டிய அவசியம் இல்லை. மாற்றப்படவேண்டியது அனைத்துலக உறுதிமொழியை அல்ல, அதைப் பின்பற்றுவோரின் நடத்தையைத்தான்” என அவர் கூறியதாக ஐநாவின் அதிகாரி ஒருவர் மேற்கோள் காட்டுகிறார்.
ஐநா பொதுச் செயலர் கோஃபி அன்னான்
[படத்திற்கான நன்றி]
UN/DPI photo by Evan Schneider (Feb97)
[பக்கம் 3-ன் படம்]
மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக உறுதிமொழியை திருமதி ரூஸ்வெல்ட் பிடித்திருக்கிறார்
[படத்திற்கான நன்றி]
திருமதி ரூஸ்வெல்ட்டும் பக்கங்கள் 3, 5 மற்றும் 7-ல் உள்ள சின்னம்: UN photo