29-வது மாடியிலிருந்து தோன்றும் காட்சி
இப்போது நீங்கள் நியூ யார்க் மாநகரத்திலுள்ள ஐக்கிய நாட்டு சங்க கட்டடத்தின் லிஃப்ட்டில் இருக்கிறீர்கள். 29-வது மாடிக்கு வருகையில் ஒரு சிறிய நீலநிற பெயர்ப் பலகையைப் பார்க்கிறீர்கள். மனித உரிமைகளின் உயர் ஆணையருடைய அலுவலகம் (ஓ.ஹெச்.சி.ஹெச்.ஆர்.) இருக்கும் இடத்தை அது சுட்டிக் காட்டுகிறது. மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட செயல்களுக்கான மைய இடமாகிய ஓ.ஹெச்.சி.ஹெச்.ஆரின் தலைமை அலுவலகம் ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவாவில் இருக்கிறது. நியூ யார்க்கில் இருப்பது அதன் இணை அலுவலகம் மட்டுமே. ஜெனீவாவிலுள்ள ஓ.ஹெச்.சி.ஹெச்.ஆர். அலுவலகத்தில் மேரி ராபின்சன் என்பவரே மனித உரிமைகளுக்கான உயர் ஆணையராக செயல்படுகிறார். நியூ யார்க்கிலுள்ள அலுவலகத்திலோ கிரீஸ் நாட்டைச் சேர்ந்த எல்சா ஸ்டாமாடாபூலூ என்பவரே தலைமை தாங்குகிறார். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் திருமதி ஸ்டாமாடாபூலூவை விழித்தெழு! நிருபர் சந்தித்து பேசினார். அவரை அன்போடு வரவேற்று, கடந்த ஐம்பது வருடங்களாக மனித உரிமைகளின் நிலை எப்படி இருந்து வருகிறது என்பதைப் பற்றி திருமதி ஸ்டாமாடாபூலூ கூறினார். அந்தப் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:
கே. மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட காரியங்களில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்?
ப. முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை நிரூபிக்கும் மூன்று உதாரணங்களை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். முதலாவதாக, 50 வருடங்களுக்கு முன்பு மனித உரிமைகள் என்ற வார்த்தையே வழக்கில் இருக்கவில்லை; இன்றோ அது எங்கும் பரவி உயிர்த்துடிப்புள்ளதாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு மனித உரிமைகளைப் பற்றியே கேள்விப்படாத அரசாங்கங்கள் இன்று அதைப் பற்றி மேடைபோட்டு பேசுகின்றன. இரண்டாவதாக, சர்வதேச சட்ட தொகுப்பு அல்லது சட்ட புத்தகம் ஒன்று இப்போது நம் கைவசம் இருக்கிறது. அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை எழுத்து வடிவில் விளக்கும் ஏராளமான ஒப்பந்தங்கள் அதில் அடங்கியிருக்கின்றன. [பக்கம் 7-ல் உள்ள “மனித உரிமைகள் பற்றிய சர்வதேச மசோதா” என்ற பெட்டியைக் காண்க.] இந்தத் தொகுப்பைத் தயாரிக்க பல வருடங்கள் கடினமாக உழைத்ததன் பலனாக இன்று அதைப் பற்றி பெருமைப்படுகிறோம். மூன்றாவதாக, முன்பு ஒருபோதும் இவ்வளவு அதிகமான ஆட்கள் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஈடுபடவில்லை. அதுமட்டுமா, மனித உரிமைகள் பிரச்சினைப் பற்றி இவ்வளவு தெளிவாக பேசும் திறமையும் பெற்றிருக்கவில்லை.
கே. என்ன பிரச்சினைகள் எழுந்தன?
ப. ஐநாவின் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்காக 17 வருடங்களாக வேலைசெய்ததில் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்ப்பட்டிருக்கிறோம் என்பதை இப்போது உணருகிறேன். அதில் மிகவும் சிக்கலான ஒன்று, மனித உரிமைகளை மனிதாபிமானம் சார்ந்த ஒன்றாக இல்லாமல் அரசியல் சார்ந்த பிரச்சினையாக அரசாங்கங்கள் நோக்குவதே ஆகும். அரசியல் பிரச்சினைகளுக்கு பயந்து மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்ற அவை விரும்பாமல் இருக்கலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டுமே இருக்கும். முன்னாள் யுகோஸ்லாவியா, ருவாண்டா போன்ற நாடுகளிலும், வெகு சமீப காலத்தில் அல்ஜீரியாவிலும் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும் ஐநா தடைசெய்ய முடியாமற்போனது மற்றொரு குறைபாடு. இந்த நாடுகளில் ஏற்பட்ட படுகொலைகளை ஐநா தடுக்கமுடியாமல் போனது உண்மையில் மிகப் பெரிய தோல்வி. மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கின்றன, ஆனால் யாராவது ஒருவர் அவற்றை செயல்படுத்த வேண்டும். இப்போது கேள்வி, பூனைக்கு மணிகட்டுவது யார்? பாதுகாப்பு அளிக்கக்கூடிய நாடுகளின் தனிப்பட்ட அக்கறைகள் பிரச்சினைக்குள்ளானால் மட்டுமே மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கான அரசியல் எண்ணம் அவர்களுக்கு ஏற்படுகிறது. இல்லையென்றால் அதைப் பற்றி நினைப்பதேயில்லை.
கே. எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
ப. எல்லாருக்கும் மனித உரிமைகள் என்ற இந்தப் பாதையில் ஓர் ஆபத்தும் இருக்கிறது; அதேசமயம் நம்பிக்கை ஒளியும் எனக்கு தென்படுகிறது. உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் விளைவாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களே எனக்கு பயத்தை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக, வேலையாட்கள் சீப்பாக கிடைக்கக்கூடிய நாடுகளில் பெரிய நிறுவனங்கள் தங்களை நிலைநாட்டிக்கொள்ள விரும்பலாம். இன்று மனித உரிமை மீறல்களுக்காக நாம் அரசாங்கங்கள் மீது குற்றம் சுமத்தி அவசியம் ஏற்பட்டால் அவற்றின் மீது நிர்ப்பந்தத்தைக் கொண்டுவரலாம். ஆனால், சர்வதேச வியாபார ஒப்பந்தங்கள் காரணமாக அரசாங்கத்திடம் இருக்கும் அதிகாரம் பொருளாதார சக்திகள் கையில் மாறும்போது மீறுதல்களுக்காக நாம் யாரைக் குற்றஞ்சாட்ட முடியும்? இந்தப் பொருளாதார அமைப்புகள் மீது நமக்கு அதிகாரம் இல்லாததால், அரசாங்கங்களிடையே வேலை செய்யும் ஐநா போன்ற அமைப்புகள் வலிமையிழந்து போய்விடுகின்றன. மனித உரிமைகளைப் பொருத்தவரையில் இந்த டிரென்ட் அழிவுக்குத்தான் வழிநடத்தும். ஆகவே இப்போது, தனியார் நிறுவனங்களையும் மனித உரிமைகள் இயக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும்.
கே. அந்த நம்பிக்கை ஒளி பற்றி சொல்லுங்களேன்.
ப. உலகளவில் மனித உரிமைகள் கலாச்சாரம் வளர்ந்திருப்பதே அந்த நம்பிக்கை ஒளியாகும். அதாவது, கல்வியின் மூலம் மனித உரிமைகளைப் பற்றி மக்களுக்கு இன்னும் அதிகம் எடுத்துரைக்க வேண்டும். அது பெரிய சவால்; ஏனென்றால் அதற்கு மனநிலை மாற்றம் தேவை. அதனால்தான் பத்து வருடங்களுக்கு முன்பே, மக்களுக்கு தகவல் கொடுப்பதற்கான ஓர் உலகளாவிய நிகழ்ச்சியை ஐநா ஆரம்பித்தது. அதன் மூலம், பொது மக்களின் உரிமைகளைப் பற்றி மக்களுக்கும் ஒரு நாட்டின் கடமைகளைப் பற்றி அந்த நாட்டின் அரசாங்கத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, 1995-2004 வருடங்களை “மனித உரிமைகள் கல்விக்கான தசாப்தம்” என ஐநா அறிவித்திருக்கிறது. மக்களின் மனங்களையும் இருதயங்களையும் கல்வியால் மாற்ற முடியும் என நம்புகிறேன். இது கேட்பதற்கு நற்செய்திபோல் இருக்கலாம்; ஆனால் மனித உரிமைகள் கல்வி என்று வரும்போது அது நிச்சயம் நடக்கும் என உறுதியாக நம்புகிறேன். அடுத்த நூற்றாண்டிலாவது இந்த உலகம் மனித உரிமைகள் கலாச்சாரத்தைத் தனதாக்கிக் கொள்ளும் என்று நினைக்கிறேன்.
[பக்கம் 7-ன் பெட்டி]
மனித உரிமைகள் பற்றிய சர்வதேச மசோதா
மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக உறுதிமொழி என்பதோடு மனித உரிமைகள் பற்றிய சர்வதேச மசோதா என்ற மற்றொன்றும் இருக்கிறது. அவை இரண்டிற்கும் என்ன சம்பந்தம்?
மனித உரிமைகள் பற்றிய சர்வதேச மசோதாவை ஐந்து அதிகாரங்களுள்ள ஒரு புத்தகத்திற்கு ஒப்பிட்டால் மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக உறுதிமொழியை அந்தப் புத்தகத்தின் முதல் அதிகாரத்திற்கு ஒப்பிடலாம். அரசு சாராத மற்றும் அரசியல் சார்ந்த உரிமைகளைப் பற்றிய சர்வதேச ஒப்பந்தம் என்பதை 2-ம் அதிகாரத்திற்கும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தம் என்பதை 3-ம் அதிகாரத்திற்கும் ஒப்பிடலாம். அதிகாரங்கள் 4 மற்றும் 5-ல் விருப்ப மூல வரைவு காணப்படுகிறது.
அனைத்துலக உறுதிமொழி தார்மீக மதிப்புள்ளதாக கருதப்படுகிறது; ஏனென்றால் அது, தேசங்கள் என்ன செய்ய கடமைப்பட்டிருக்கின்றன என்பதைக் கூறுகிறது. அதே சமயத்தில் மற்ற நான்கு ஆவணங்களும், தேசங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பட்டியலிடுவதால் சட்டப்படி செல்லுபடியாகும். இந்த ஆவணங்கள் சம்பந்தப்பட்ட வேலை 1949-லேயே ஆரம்பித்துவிட்டபோதிலும் அவற்றை அமல்படுத்த பல வருடங்கள் எடுத்தன. இன்று, அனைத்துலக உறுதிமொழியும் இந்த நான்கு ஆவணங்களும் சேர்ந்ததே மனித உரிமைகள் பற்றிய சர்வதேச மசோதா ஆகும்.
இந்தச் சர்வதேச மசோதாவை மட்டுமல்ல, கூடுதலான 80 ஒப்பந்தங்களையும் ஐநா அங்கீகரித்திருக்கிறது. “ஆகவே சர்வதேச மசோதாவிலுள்ள மனித உரிமை ஒப்பந்தங்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என நினைப்பது தவறு” என்று மனித உரிமைகள் நிபுணர் ஒருவர் கூறுகிறார். “உதாரணமாக, 1990-ல் ஏற்பட்ட குழந்தையின் உரிமைகள் பற்றிய ஒப்பந்தம் என்பதே மிகவும் அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துலக ஆவணமாகும்; ஆனாலும் அது சர்வதேச மசோதாவின் பாகமாக இல்லை. ‘மனித உரிமைகள் பற்றிய சர்வதேச மசோதா’ என்ற பெயர் விளம்பரத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டது; ஒரு புதிய கருத்தைத் தெரிவிப்பதாக இல்லை. அது கவர்ந்திழுக்கும் ஒரு சொற்றொடர் தான் என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா?”a
[அடிக்குறிப்பு]
a குழந்தையின் உரிமைகள் பற்றிய ஒப்பந்தம் எழுதப்பட்ட சமயத்தில் 191 தேசங்கள் (ஐநாவில் அங்கம் வகிக்கும் 183 தேசங்களும் அங்கத்தினர்களாக இல்லாத 8 தேசங்களும்) அதை அங்கீகரித்தன. சோமாலியா மற்றும் ஐக்கிய மாகாணங்கள் மட்டுமே அதை அங்கீகரிக்கவில்லை.
[பக்கம் 6-ன் படம்]
எல்சா ஸ்டாமாடாபூலூ
[படத்திற்கான நன்றி]
UN/DPI photo by J. Isaac