இன்றைய மனித உரிமைகளும் உரிமை மீறல்களும்
சமீபத்தில், மனித உரிமைகளை ஆதரிப்பவர்கள் ஒரு பெரும் சாதனை புரிந்தனர். முதலாவதாக, 60 நாடுகளிலுள்ள 1,000-க்கும் அதிகமான அமைப்புகளை ஒன்றாக இணைத்து கண்ணி வெடிகள் உபயோகத்தைத் தடைசெய்வதற்கான சர்வதேச இயக்கம் ஒன்றை (International Campaign to Ban Landmines [ICBL]) அமைத்தனர். பிறகு, இந்த ஆயுதங்களைத் தடைசெய்யும் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதற்காக, 1997-ம் ஆண்டிற்கான சமாதான நோபல் பரிசு ஐசிபிஎல்-க்கும் அதன் இயக்குநர் ஜோடி வில்லியம்ஸுக்கும் கிடைத்தது. வில்லியம்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த சளைக்காத சமூக சேவகர்.
இப்படிப்பட்ட சாதனைகளைச் செய்தபோதிலும் பின்வரும் அறிக்கைக் காட்டுகிறபடி வெற்றி கிடைப்பது ஒன்றும் சுலபமானதல்ல. உலகமுழுவதிலும் மனித உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எண்ணமே, “தொடர்ந்த எதிர்க்கப்பட்டு வருகிறது” என மனித உரிமைகள் கவனிப்பு உலக அறிக்கை 1998 கூறுகிறது. இதற்காக சின்னஞ்சிறிய வல்லரசுகளை மட்டுமே குற்றம்சாட்ட முடியாது. “பெரும் வல்லரசுகள், அவற்றின் பொருளாதார அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆபத்தாக அமைந்தால் உடனே மனித உரிமைகளை அசட்டை செய்யும் மனப்பான்மையைக் காட்டுகின்றன. இது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பொதுவாக காணப்படும் ஓர் பிரச்சினை.”
மனித உரிமை மீறல்களால் உலகம் முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். வேறுபாடு, ஏழ்மை, பட்டினி, துன்புறுத்தல், கற்பழிப்பு, குழந்தைத் துர்ப்பிரயோகம், அடிமைத்தனம், குரூர மரணம் ஆகியவையே இவர்களின் அன்றாட வாழ்க்கை. மலைபோல் குவிந்து கிடக்கும் மனித உரிமை ஒப்பந்தங்கள் எல்லாமே இவ்விதமான துன்பம் அனுபவிப்பவர்களைப் பொறுத்தவரை வெறும் கானல் நீர்தான். அதுமட்டுமா, மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக உறுதிமொழியிலுள்ள 30 பிரிவுகளின் பட்டியலில் இருக்கும் அடிப்படையான உரிமைகள்கூட மனிதவர்க்கத்தின் பெரும்பகுதியினருக்கு பகல் கனவாகவே இருக்கின்றன. இதை விளக்க, அந்த உறுதிமொழியில் சொல்லப்பட்டிருக்கும் உயர்வான உரிமைகளில் சில அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு தூரம் பொருந்துகின்றன என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
எல்லாருக்கும் சம உரிமை?
எல்லா மனிதர்களும் சுதந்திரத்துடனும், சமத்துவத்துடனும், சம உரிமையுடனும் பிறந்திருக்கிறார்கள்.—பிரிவு 1.
‘எல்லா ஆண்களும் . . . சமம்’ என அனைத்துலக உறுதிமொழியின் முந்தைய வரைவில் பிரிவு 1 கூறியது. ஆனால் இது பெண்களை உட்படுத்தாது என அர்த்தம் கொள்ளக்கூடும், ஆகவே அதை மாற்றவேண்டும் என்று பெண் அங்கத்தினர்கள் ஆட்சேபித்தனர். கடைசியில் வென்றது அவர்களே; ‘எல்லா ஆண்களும் . . . சமம்’ என்பது ‘எல்லா மனிதர்களும் . . . சமம்’ என்று மாறியது. ஆனால் இந்த வார்த்தையை மாற்றியதால் மட்டும் பெண்களின் நிலை மாறிவிட்டதா என்ன?
டிசம்பர் 10, 1997-ல், மனித உரிமைகள் நாளில், இந்த உலகம் இன்னமும் “பெண்களை இரண்டாந்தர குடிமக்களாகவே கருதுகிறது” என அமெரிக்காவின் முதல் பெண்மணி ஹில்லாரி கிளின்டன் ஐநாவிடம் கூறினார். அதை ஆதரிப்பதற்கு பின்வரும் உதாரணங்களையும் கொடுத்தார்: உலகிலுள்ள ஏழைகளில் 70 சதவிகிதத்தினர் பெண்களே. உலகம் முழுவதிலும் பள்ளிக்கு போகமுடியாமல் தவிக்கின்ற 13 கோடி பிள்ளைகளில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களே. உலகில் மொத்தம் 9.6 கோடி படிப்பறிவு இல்லாதவர்கள் இருக்கின்றனர்; அவர்களில் மூவரில் இருவர் பெண்களே. வீட்டில் நடக்கும் கொடுமைகளாலும் பாலுறவு கொடுமைகளாலும் மிக அதிகம் பாதிக்கப்படுவதும் பெண்களே. “அதுவே மிகவும் குறைவாக அறிக்கை செய்யப்படுவதும், உலகமுழுவதிலும் மிகப் பரவலாக காணப்படும் மனித உரிமை மீறல்களில் ஒன்றுமாகும்” என்றும் திருமதி கிளின்டன் கூறினார்.
பிறப்பதற்கு முன்பேகூட சில பெண்கள் வன்முறைக்கு ஆளாவது அதையும்விட கொடுமையானது. முக்கியமாக, சில ஆசிய நாடுகளிலுள்ள தாய்மார்கள் பெண் பிள்ளைகளைவிட ஆண் வாரிசுகளை அதிகம் விரும்புவதால் பெண் குழந்தைகளை கருவிலேயே கலைத்துவிடுகிறார்கள். சில இடங்களில், ஆண் பிள்ளைகளை விரும்புவது அவ்வளவு அதிகமாக இருப்பதால் கருவிலேயே அதைக் கண்டுபிடிப்பதற்காக செய்யப்படும் பரிசோதனைகள் பெரும் வியாபாரமாக கொடிகட்டிப் பறக்கின்றன. பாலினத்தைக் கண்டறியும் ஒரு கிளினிக் பின்வரும் விளம்பரத்தைச் செய்தது: இன்று 38 டாலர் செலவு, நாளை 3,800 டாலர் லாபம். பெண் கருவைக் கலைத்து வரதட்சணையை மிச்சப்படுத்துங்கள். இப்படிப்பட்ட விளம்பரங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக விளைவை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, ஆசியாவில் பிரசித்தி பெற்ற ஒரு ஆஸ்பத்திரியில் பெண் சிசுக்களாக அடையாளம் கண்டறியப்பட்டவற்றில் 95.5 சதவிகிதம் கருக்கலைப்பு செய்யப்பட்டன என்று ஓர் ஆய்வு காண்பித்தது. ஆண் பிள்ளைகளை விரும்பும் இந்த டிரென்ட் உலகின் மற்ற பாகங்களிலும்கூட காணப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஒருவருக்கு எத்தனை பிள்ளைகள் என்று கேட்டபோது அவருடைய பதில் என்ன தெரியுமா? “ஒரு செல்வமும், ஏழு தரித்திரங்களும்.” பெண்களும் வன்முறையும் என்ற ஐநாவின் ஆங்கில பத்திரிகை ஒன்று, “பெண்களிடம் மக்கள் காண்பிக்கும் மனப்பான்மையையும் நோக்குநிலையையும் மாற்றுவதற்கு நீண்டகாலம் எடுக்கும். குறைந்தபட்சம் ஒரு தலைமுறையாவது ஆகும்; அதையும்விட அதிக காலம் ஆகலாம் என சிலர் நினைக்கின்றனர்” என்று கூறுகிறது.
ஓடிவிளையாடாத பாப்பாக்கள்
யாரும் அடிமைகளாகவோ அடிமைத்தனத்திலோ இருக்கமாட்டார்கள்; எல்லா விதமான அடிமைத்தனமும் அடிமை வியாபாரமும் தடை செய்யப்பட்டிருக்கும்.—பிரிவு 4.
அடிமைத்தனம் ஒழிந்துவிட்டது, ஆம் ஏட்டில் மட்டும். அடிமைத்தனம் சட்டவிரோதமானது என கூறும் அநேக ஒப்பந்தங்களை அரசாங்கங்கள் கையெழுத்திட்டிருக்கின்றன. ஆனால், “முன்பு எப்போதும் இருந்ததைவிட இன்று அதிக அடிமைகள் இருக்கின்றனர்” என்று உலகின் மிகவும் பழமையான மனித உரிமைகள் அமைப்பான பிரிட்டனைச் சேர்ந்த அடிமைத்தன எதிர்ப்பு சங்கம் கூறுகிறது. நவீன நாளைய அடிமைத்தனத்தில் பல்வேறு விதமான மனித உரிமை மீறல்களும் உட்படும். அதில் ஒரு வகைதான் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது.
இதற்கு, தென் அமெரிக்காவைச் சேர்ந்த டெரிவான் மிகவும் வருந்தத்தக்க ஓர் உதாரணம். ‘சொரசொரப்பாக இருக்கும் சீசல் செடியின் இலைகளைத் தூக்கிச் செல்வதால் அவனுடைய சின்னஞ்சிறிய கைகள் காய்ப்பேறி இருக்கின்றன; மெத்தை தயாரிக்க இந்த இலைகள் பயன்படுகின்றன. குடௌன்-ல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இலைகளை 300 அடி தூரத்திலுள்ள ஓர் இயந்திரத்திற்கு கொண்டு செல்வதே அவனுடைய வேலை. ஒவ்வொரு நாளும் 12 மணிநேரம் வேலை செய்தபிறகு சுமார் ஒரு டன் இலைகளை அவன் சுமந்திருப்பான். ஐந்து வயதாக இருந்தபோதே டெரிவான் வேலை செய்ய ஆரம்பித்தான். இப்போது அவனுக்கு வயது 11.’—உவர்ல்ட் பிரஸ் ரிவ்யூ.
ஐந்து முதல் 14 வயது வரையுள்ள பிள்ளைகளில் ஏறக்குறைய 25 கோடி பேர் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர் என சர்வதேச தொழிலாளர் சங்கம் கணிக்கிறது. இந்தக் குட்டித் தொழிலாளர்களின் படை கிட்டத்தட்ட பிரேஸில் மற்றும் மெக்ஸிகோவின் மொத்த ஜனத்தொகைக்கு சமமாகும்! ஓடிவிளையாட வாய்ப்பில்லாத இந்தப் பிள்ளைகளில் அநேகர் நிலக்கரி சுரங்கங்களில் பாடுபட்டு மூட்டை சுமக்கின்றனர்; பயிர் அறுவடை செய்வதற்காக உளை மண்ணில் உழைக்கின்றனர்; அல்லது விரிப்புகள் நெய்வதற்காக தறியில் வேலை செய்கின்றனர். மூன்று, நான்கு அல்லது ஐந்து வயது நிரம்பிய பால் மணம் மாறாத பிஞ்சுக் குழந்தைகள்கூட உழுதல், விதைத்தல், நிலங்களை சுத்தப்படுத்துதல் போன்ற வேலைகள் செய்வதற்காக சிறு சிறு குழுக்களாக இணைக்கப்பட்டு காலை முதல் மாலை வரை மாடாய் உழைக்கின்றனர். “சின்ன பசங்கள வெச்சு வேலைவாங்குனா டிராக்டரைவிட செலவு கம்மி, மாட்டைவிட ஜரூராய் வேலை செய்வானுங்க” என ஆசியாவிலுள்ள ஒரு நாட்டிலிருக்கும் பண்ணையார் ஒருவர் கூறுகிறார்.
மதத்தைத் தெரிவு செய்வதும் மாற்றுவதும்
கருத்து, மனச்சாட்சி மற்றும் மத சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது; தன்னுடைய மதத்தை மாற்றிக்கொள்ளும் சுதந்திரமும் இதில் அடங்கும்.—பிரிவு 18.
அக்டோபர் 16, 1997-ல், “எல்லாவிதமான மத வெறுப்பையும் நீக்குவது பற்றிய இடைக்கால அறிக்கை” ஐநா பொதுச்சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரிவு 18 இன்றும் மீறப்பட்டுவருகிறது என்பதை மனித உரிமைகள் கமிஷனின் சிறப்பு நிருபர் அப்தெல்ஃபாடா அமாரால் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை சுட்டிக்காண்பித்தது. பல வித்தியாசமான நாடுகளைப் பற்றி குறிப்பிடுகையில், ‘தொல்லைகள், பயமுறுத்தல்கள், தவறாக நடத்தப்படுதல், கைது செய்யப்படுதல், சிறைவாசம், ஆட்கள் காணாமல் போதல், கொலைகள்’ போன்ற அநேக காரியங்கள் நிகழ்வதையும் குறிப்பிடுகிறது.
அதுமட்டுமல்ல, நீண்ட காலமாக மக்களாட்சியைப் பின்பற்றி வந்த நாடுகள்கூட, “வித்தியாசப்பட்ட தொகுதிகளுடைய சிறுபான்மை மதங்களின் சுதந்திரத்தைத் தடைசெய்ய முயற்சித்திருக்கின்றன. அவை எல்லாவற்றையுமே ‘கருத்து வேறுபாட்டுக் குழுக்கள்’ என்று ஒன்றாக இணைத்தே பேசுகின்றன” என்று அமெரிக்காவின் மக்களாட்சி, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளருக்கான செயலகத்தால் தயாரிக்கப்படும் 1997 மனித உரிமைகள் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இப்படிப்பட்ட காரியங்கள் கவலையை அதிகரிக்கின்றன. “எந்தவொரு சமுதாயத்திலும் தனிமனித சுதந்திரம் இருக்கிறதா என்பதை அளப்பதற்கான மிகச் சிறந்த அளவுகோல் மத சுதந்திரமே” என வில்லி ஃபாட்ரே குறிப்பிடுகிறார். இவர், ப்ருஸ்ஸெல்ஸில் அமைந்திருக்கும் எல்லைகளற்ற மனித உரிமைகள் என்ற அமைப்பின் தலைவர்.
இடுப்பொடிய வேலை, கால்காசு பெறாத கூலி
வேலைசெய்யும் ஒவ்வொருவருக்கும் நியாயமான, போதியளவான சம்பளம் பெறுவதற்கு உரிமை இருக்கிறது; மனித கண்ணியத்திற்கு ஏற்ற வாழ்க்கை வாழ அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் அது உதவ வேண்டும்.—பிரிவு 23.
கரிபியன் தீவுகளில் வசிக்கும் கரும்பு விவசாயிகள் ஒரு நாளைக்கு மூன்று டாலர் சம்பாதிக்கலாம். ஆனால், வாடகைக்கும் உபகரணங்களுக்கும் ஆகும் செலவின் காரணமாக கையில் சம்பளம் கிடைத்த மறுகணமே தோட்டத்தின் முதலாளிகளுக்கு கடன்பட்டுவிடுகின்றனர். அதோடுகூட, அவர்கள் சம்பளத்தைப் பணமாக அல்ல செக்காகத்தான் பெறுகிறார்கள். அந்தத் தோட்டத்தின் மளிகை ஸ்டோர் மட்டுமே அருகில் இருப்பதால் வீட்டிற்கு தேவையான எண்ணை, அரிசி, பருப்பு போன்றவற்றை அந்த ஸ்டோரில் வாங்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், அந்தச் செக்கை ஏற்றுக்கொள்வதற்கான சர்வீஸ் சார்ஜாக 10 முதல் 20 சதவிகிதத்தைக் குறைத்துவிடுகிறார்கள். இதைப் பற்றி, மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் கமிட்டியின் இணை இயக்குநர் பில் ஓ’நீல், ஐநாவின் ரேடியோ ஒலிபரப்பு நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது: “பல மாதங்களாக வியர்வை சிந்த வேலைசெய்தபிறகு அந்த ஸீசன் முடிவில் அவர்கள் கையில் ஒன்றுமே மிஞ்சுவதில்லை. ஒரு பைசாகூட சேமிக்க முடிவதில்லை; அந்த ஸீசனில் காலம் தள்ளுவதே அவர்களுக்கு பெரும்பாடாக போய்விடும்” என்றார்.
எல்லாருக்கும் மருத்துவ உதவி?
தானும் தன் குடும்பமும் ஆரோக்கியத்தோடும் சுகநலத்தோடும் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வாழ்க்கைத் தரத்தை பெற ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது; இதில் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ உதவி ஆகியவையும் அடங்கும்.—பிரிவு 25.
‘ரிக்கார்டோவும் ஜஸ்டினாவும் லத்தீன் அமெரிக்காவில் வாழும் ஏழை விவசாயிகள். அவர்கள் வாழும் கிராமத்திலிருந்து மிக அருகிலுள்ள நகரத்திற்கு செல்ல 80 கிலோமீட்டர் பயணம்செய்ய வேண்டும். அவர்களுடைய பெண் குழந்தை ஹேமாவுக்கு காய்ச்சல் வந்தபோது அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவளைத் தூக்கிச் சென்றனர். ஆனால், ரிக்கார்டோவால் பணம்கட்ட முடியாது என்பதை அறிந்த அந்த மருத்துவமனை ஊழியர்கள் ஹேமாவுக்கு சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். மறுநாள், ஜஸ்டினா தன் நண்பர்களிடமிருந்து பணம் கடன் வாங்கிக்கொண்டு 80 கிலோமீட்டர் பயணம் செய்து நகரத்திற்கு சென்றார். ஒருவழியாக, அந்த நகரத்தின் சின்னஞ்சிறிய அரசு மருத்துவமனையை அடைந்தபோது படுக்கை ஒன்றும் காலியாக இல்லாததால் அடுத்த நாள் காலை வரும்படி ஜஸ்டினாவிடம் கூறினார்கள். அந்த நகரத்தில் அவர்களுக்கு உறவினர்களும் இல்லை, ரூம் எடுத்து தங்குமளவுக்கு கையில் பணமும் இல்லை. என்ன செய்வது? மார்கெட்டிலிருந்த ஒரு பெஞ்சு மீது தங்கவேண்டியதாயிற்று. ஹேமா ஓரளவு பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் உணருவதற்காக அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். ஆனால் பரிதாபகரமாக அன்று இரவே குட்டி ஹேமா இறந்து போனாள்.’—மனித உரிமைகளும் சமூக சேவையும் (ஆங்கிலம்).
உலகமுழுவதிலும் உள்ள நான்கு பேரில் ஒருவர், ஒரு நாளைக்கு ஒரு (ஐமா) டாலரை மட்டுமே வைத்து காலம் தள்ளுகிறார். ரிக்கார்டோவுக்கும் ஜஸ்டினாவுக்கும் இருந்த அதே பிரச்சினையைத் தான் இவர்களும் எதிர்ப்படுகிறார்கள்: தனியார் மருத்துவ உதவி அருகில் இருக்கிறது ஆனால் கட்டுப்படியாகாது, அரசு மருத்துவ உதவி கட்டுப்படியாகும் ஆனால் அருகில் இல்லை. உலகிலுள்ள 100 கோடிக்கும் அதிகமான ஏழைகள் ‘மருத்துவ உதவிக்கான உரிமை’ பெற்றிருந்தும் மருத்துவ உதவியின் பயன்கள் அவர்களைப் பொறுத்தவரை எட்டாக் கனியாகவே இருக்கின்றன.
இவ்வாறு, மனித உரிமை மீறல்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மேலே சொல்லப்பட்டதைப் போன்ற நிகழ்ச்சிகள் கோடிக்கணக்கில் தினமும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. உலகம் முழுவதிலுமுள்ள ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவிப்பதற்காக மனித உரிமை அமைப்புகள் எடுக்கும் இமாலய முயற்சியின் மத்தியிலும், தங்கள் உயிரையே பணயம் வைத்து உதவிசெய்யும் ஆயிரக்கணக்கான சமூக சேவகர்களின் முயற்சிகள் மத்தியிலும் எல்லாருக்கும் மனித உரிமைகள் என்பது வெறுமனே கண்ணில் படும் நிழலாகத்தான் இருந்துவருகிறது. அது என்றாவது நிஜமாகுமா? நிச்சயம் நிஜமாகும்; ஆனால் அதற்கு முன் பெரிய மாற்றங்கள் ஏற்படவேண்டும். அவற்றில் இரண்டை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
நன்றி: MgM Stiftung Menschen gegen Minen (www.mgm.org)
[பக்கம் 9-ன் படத்திற்கான நன்றி]
UN PHOTO 148051/J. P. Laffont—SYGMA
WHO photo/PAHO by J. Vizcarra