பொறுப்புகள் இல்லாத உரிமைகளா?
“எல்லா மானிடரின் இயல்பில் அமைந்த கண்ணியமும் சமத்துவமும் மாற்றப்பட முடியா உரிமைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும். உலகில் சுயாதீனம், நீதி, சமாதானம் ஆகியவற்றுக்கு இதுவே அஸ்திபாரம்.” இவ்வாறு அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை அதன் முன்னுரையில் அறிவித்தது. இந்த அமைப்பு 1998 டிசம்பரில் தனது 50-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. சமீபத்தில் அனைத்து கண்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்த 24 முன்னாள் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் பின்வரும் பரிந்துரையை சமர்ப்பித்தார்கள். உரிமைகளுக்கான இந்த அறிக்கையோடு மானிடரின் பொறுப்புகளை விளக்கும் அனைத்துலக அறிக்கையையும் ஐக்கிய நாட்டு சங்கம் ஏற்க வேண்டும் என்பதே அது. ஏன் இத்தகைய ஒரு திட்டம் தேவை என அநேகர் கருதுகின்றனர்.
“உரிமைகளையும் பொறுப்புகளையும், ஒட்டிப் பிறந்து கடைசிவரை அப்படியே வாழ்ந்த சையாமீஸ் இரட்டையருக்கு ஒப்பிடலாம். 50 ஆண்டுகளுக்கு பின்பு இந்த உண்மை மறக்கப்பட்டு விட்டது அல்லது ஒருபுறமாக ஒதுக்கப்பட்டுவிட்டது என்பது வருத்தத்திற்குரியது. அநேகர் தங்கள் உரிமைகளுக்காக கோரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் அதோடு சம்பந்தப்பட்ட பொறுப்புகளை குறித்து கவலைப்படுவதே இல்லை” என்பதாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய கமிஷனின் உறுப்பினர் பேராசிரியர் ஸான்-க்லாடு ஸ்வாயே விவரிக்கிறார். இதனால் கடமைகள் உதாசீனப்படுத்தப்படுகின்றன என்பதை அநேகர் கவனித்திருக்கின்றனர். பாரிஸின் செய்தித்தாள் இன்டர்நேஷனல் ஹெரால்டு ட்ரிபூன், “உலகை ஆட்டிப் படைக்கும் பேராசை, சுயநலம், மனிதநேயமில்லாமை ஆகிய நிலைமைகளை சமாளிப்பதற்கும் களைவதற்குமான ஒருங்கிணைந்த எதிர்கால திட்டங்களைக் குறித்து வாலிபரிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. உலகமுழுவதும், மக்களிடையே நல்லொழுக்கத்தை வளர்ப்பதற்காக அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கின்றன. இதிலிருந்து ஏதோ குறைவுபடுகிறது என்பது தெளிவாகிறது” என கூறுகிறது. மனித பொறுப்புகளை வரையறுக்க வேண்டும், குறைவுகளை சரிசெய்ய வேண்டும் என ஐ.நா. கல்வி, அறிவியல், கலாச்சாரக் கழகம் சொல்கிறது. இதனால் அரசியல்வாதிகளும் இறையியல் வல்லுநர்களும் தத்துவ ஞானிகளும் “உலகளாவிய நன்னெறி திட்டத்தைக்” குறித்து விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இம்முயற்சிக்கு சில முட்டுக்கட்டைகள் இருக்கின்றன.
என்னென்ன மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஓரளவு எளிதே. ஆனால் அகிலம் முழுவதும், எப்படிப்பட்ட மனித பொறுப்புகள் கட்டாயமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதை விளக்குவது அவ்வளவு எளிதல்ல. வெளியீட்டுக்காக காத்திருக்கும் மானிட பொறுப்புகளை விளக்கும் அறிக்கையில் உள்ள மதிப்பீடுகள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்த பொன் விதியிலிருந்து கருத்தரித்தவையே. எல்லா இடங்களிலும் எல்லா சமயத்திலும் பொருந்தும் பொன் விதியை இயேசு கொடுத்தார்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—மத்தேயு 7:12.
மனித உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்களுக்கு தூண்டுதலாக பைபிள் இருந்தபோதிலும் தனிநபருடைய பொறுப்புகளையும் இது வலியுறுத்துகிறது. சீஷனாகிய யாக்கோபு அறிவித்தார்: “ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.” (யாக்கோபு 4:17) மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கான வாய்ப்புகளை இயேசு தேடினார். உண்மை கிறிஸ்தவர்களும் தங்களுடைய உடன் மானிடருக்கு அதையே செய்ய முயலுகின்றனர். தங்கள் உரிமைகளை அனுபவிப்பதில் மாத்திரம் இவர்கள் திருப்தியடைவதில்லை. இப்படிப்பட்ட உரிமைகளில் பொறுப்புகளும் இருக்கின்றன என்பதையும் புரிந்துகொள்கின்றனர். நாம் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்திருக்கின்றனர்.