உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 3/1 பக். 30-31
  • இயேசு 70 சீஷர்களை அனுப்புகிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசு 70 சீஷர்களை அனுப்புகிறார்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கவனச்சிதறலற்ற ஊழியர்கள்
  • நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
  • ‘புறப்படுங்கள் . . . சீஷர்களாக்குங்கள்’
    என்னைப் பின்பற்றி வா
  • “முதலாவது நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • இயேசுவின் சீஷரானவர்கள்
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • அறுவடையில் மகிழ்ச்சி காணுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 3/1 பக். 30-31

அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்

இயேசு 70 சீஷர்களை அனுப்புகிறார்

அது பொ.ச. 32-ன் இலையுதிர்காலம். இயேசு மரிப்பதற்கு இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே இருந்தன. எனவே, பிரசங்க வேலையை துரிதப்படுத்துவதற்கும், அவரைப் பின்பற்றிய சிலருடைய பயிற்றுவிப்பை அதிகரிப்பதற்கும் அவர் 70 சீஷர்களை நியமித்து, “தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.”—லூக்கா 10:1. a

இயேசு தம் சீஷர்களை “தமக்கு முன்னே” அனுப்பினார்; ஏனெனில், இயேசுதாமே பின்னர் அங்கு சென்றபோது, ஜனங்கள் மேசியாவின் சார்பாக இருந்தார்களா அல்லது எதிராக இருந்தார்களா என்பதை உடனடியாக தீர்மானிக்க அவர்களுக்கு உதவும். ஆனால் அவர் ஏன் அவர்களை “இரண்டிரண்டு பேராக” அனுப்பினார்? அவர்கள் எதிர்ப்பை எதிர்ப்படுகையில் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொள்வதற்காகவே என்பது தெளிவாயிருக்கிறது.

அவர்களுடைய பிரசங்க வேலையின் அவசரத்தன்மையை அழுத்திக் காண்பிப்பவராய், இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “அறுப்புமிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.” (லூக்கா 10:2) அதை ஒரு அறுவடைக்கு ஒப்பிட்டு பேசுவது பொருத்தமாயிருந்தது, ஏனெனில் அறுவடை சமயத்தில் சிறிதளவு தாமதித்தாலும்கூட அது விலைமதிப்புள்ள பயிர்கள் வீணாய்ப் போவதில் விளைவடையக்கூடும். அதேபோல், சீஷர்கள் தங்கள் பிரசங்க வேலையை அசட்டை செய்தால், அருமையான உயிர்கள் இழக்கப்பட்டுவிடும்!—எசேக்கியேல் 33:6.

கவனச்சிதறலற்ற ஊழியர்கள்

இயேசு கூடுதலாக தம் சீஷர்களுக்கு அறிவுரை கூறினார்: “பணப்பையையும் உணவு பையையும் காலணிகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வாழ்த்துவதற்காக கட்டித் தழுவ வேண்டாம்.” (லூக்கா 10:4, NW) பயணம் செய்பவர் சிறுபையையும் உணவையும் மட்டுமல்லாமல், கூடுதலாக ஒரு ஜோடி காலணிகளையும் கொண்டுபோவது வழக்கமாய் இருந்தது. ஏனெனில் காலணிகளின் அடிப்பாகம் தேய்ந்து போகலாம், அவற்றைக் கட்டும் நாடாக்கள் அறுந்துபோகலாம். ஆனால் இயேசுவின் சீஷர்கள் அப்படிப்பட்ட விஷயங்களைக் குறித்து கவலைப்படக்கூடாது. மாறாக, உபசரித்தலை பழக்கமாய் கடைப்பிடித்த உடன் இஸ்ரவேலர் மூலமாய் யெகோவா தங்களை கவனித்துக்கொள்வார் என்று அவர் பேரில் அவர்கள் நம்பிக்கை வைக்கவேண்டியதாய் இருந்தது.

ஆனால் ஒருவரையும் வாழ்த்துவதற்காக கட்டித் தழுவ வேண்டாம் என்று இயேசு ஏன் தம் சீஷர்களிடம் கூறினார்? அவர்கள் பாசமற்றவர்களாகவும் அநாகரீகமானவர்களாகவும்கூட நடந்துகொள்ள வேண்டுமா? இல்லவே இல்லை! வாழ்த்துவதற்காக கட்டித் தழுவுதல் என்று பொருள்படும் கிரேக்க சொல் அஸ்பாஸோமேய், (a·spaʹzo·mai) மரியாதைமிக்க “ஹலோ” அல்லது “நன்னாள்” என்பதைக் காட்டிலும் அதிகத்தை அர்த்தப்படுத்தலாம். அறிமுகமான இருவர் சந்திக்கையில், முத்தங்கள், கட்டித் தழுவல்கள், அதைத் தொடர்ந்து நீண்ட நேரம் அளவளாவுதல் போன்ற வழக்கமாய் செய்யும் காரியங்களையும்கூட அது உள்ளடக்கலாம். ஒரு கருத்துரையாளர் இவ்வாறு சொல்கிறார்: “வாழ்த்து தெரிவிப்பதில், நம் மத்தியில் இருப்பதுபோல் கிழக்கத்திய நாடுகளிலுள்ள மக்களுக்கிடையே சற்றே குனிவது அல்லது கை குலுக்குவது அடங்கியிருக்கவில்லை. ஆனால் அநேக முறை கட்டித் தழுவுதல், தலை வணங்குதல், சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்குதல் போன்றவற்றை செய்தனர். இவையனைத்திற்கும் நேரம் அதிகம் தேவைப்பட்டது.” (2 இராஜாக்கள் 4:29-ஐ ஒப்பிடுக.) இவை வழக்கமான செயல்களாய் இருந்தாலும், தேவையற்ற கவனச்சிதறல்களை தவிர்க்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு உதவினார்.

கடைசியில், அவர்கள் ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கிறபோது வரவேற்கப்பட்டால், ‘அந்த வீட்டிலேதானே தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவற்றைப் புசித்துக் குடிக்க’ வேண்டும் என்று இயேசு தம் சீஷர்களிடம் சொன்னார். ஆனால் அவர்கள் ஒரு பட்டணத்திற்குள் பிரவேசிக்கிறபோது, நன்றாக வரவேற்கப்படாவிட்டால், “அதின் வீதிகளிலே . . . போய்: எங்கள் கால்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப் போடுகிறோம்” என்று சொல்ல வேண்டும். (லூக்கா 10:7, 10, 11, NW) ஒருவருடைய கால்களில் ஒட்டின தூசியை துடைத்து விடுவது அல்லது உதறிவிடுவது என்பது, தங்களை வரவேற்காத வீட்டை அல்லது பட்டணத்தை கடவுளிடமிருந்து வரும் விளைவுகளை எதிர்ப்படும்படி அனுமதித்துவிட்டு சீஷர்கள் எந்தவித சச்சரவுமின்றி புறப்பட்டுச் செல்வதை அர்த்தப்படுத்தும். ஆனால் இயேசுவின் சீஷர்களை தயவோடு வரவேற்றவர்கள், ஆசீர்வாதங்களை பெற தகுதியுள்ளவர்களாய் தங்களை வைத்துக்கொள்வர். இயேசு மற்றொரு சமயம் தம் அப்போஸ்தலர்களிடம் பின்வருமாறு கூறினார்: “உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மத்தேயு 10:40, 42.

நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்

கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதும் சீஷராக்குவதுமான வேலையை இப்போது 50,00,000-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகள் உலகமுழுவதும் செய்துவருகின்றனர். (மத்தேயு 24:14; 28:19, 20) தாங்கள் கொண்டு செல்லும் செய்தி அவசரமானது என்பதை அவர்கள் உணருகின்றனர். ஆகையால், அவர்கள் தங்கள் நேரத்தை நன்றாக பயன்படுத்துகின்றனர், தங்களுடைய முக்கியமான வேலைக்கு முழு கவனத்தையும் செலுத்துவதிலிருந்து தடைசெய்யும் கவனச்சிதறல்களை தவிர்க்கின்றனர்.

யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் சந்திக்கும் அனைவரோடும் அன்பாக இருக்க முயற்சி செய்கின்றனர். என்றபோதிலும், அவர்கள் வெறுமனே வீண் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை, சமுதாயப் பிரச்சினைகள் அல்லது அநீதிகளை திருத்துவதற்கு இந்த உலகம் எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைவது பற்றிய விவாதங்களிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. (யோவான் 17:16) மாறாக, கடவுளுடைய ராஜ்யமே மனிதனுடைய பிரச்சினைகளுக்கு ஒரே நிரந்தரமான தீர்வு என்பதன் பேரில் தங்கள் கலந்துரையாடலை ஒருமுகப்படுத்துகின்றனர்.

யெகோவாவின் சாட்சிகள் பெரும்பாலும் இருவராக சேர்ந்தே ஊழியம் செய்கின்றனர். ஒவ்வொருவரும் தனித்தனியாக ஊழியம் செய்தால் அதிகத்தை செய்யமுடியுமல்லவா? ஒருவேளை முடியலாம். இருப்பினும், ஒரு உடன் விசுவாசியோடு ஒருவருக்கொருவர் உதவியாக வேலை செய்வதால் கிடைக்கும் பயனை இன்று கிறிஸ்தவர்கள் உணருகின்றனர். அது ஆபத்தான பகுதிகளில் சாட்சி கொடுக்கையில் ஓரளவு பாதுகாப்பை தருகிறது. மற்றொரு நபரோடு சேர்ந்து வேலை செய்வது, நற்செய்தியை பிரசங்கிப்பதில் அதிக அனுபவமுள்ள பிரஸ்தாபிகளின் திறமையிலிருந்து பயனடையவும்கூட புதியவர்களுக்கு உதவுகிறது. உண்மையில், இருவருமே உற்சாகத்தை பரிமாறிக்கொள்வதில் தங்கள் பங்கைச் செய்யலாம்.—நீதிமொழிகள் 27:17.

இந்தக் “கடைசிநாட்களில்” பிரசங்க வேலையே அதிக அவசரமாய் செய்யப்பட வேண்டிய வேலை என்பதில் சந்தேகமில்லை. (2 தீமோத்தேயு 3:1) “சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காக ஒருவருக்கொருவர் உதவியாக” வேலை செய்வதில் உலகளாவிய சகோதரத்துவத்தின் ஆதரவைப் பெற்றிருப்பதில் யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷப்படுகின்றனர்.—பிலிப்பியர் 1:27, NW.

[அடிக்குறிப்பு]

a இயேசு “எழுபத்திரண்டு” சீஷர்களை அனுப்பினார் என்று சில பைபிள்களும் பண்டைய கிரேக்க கைப்பிரதிகளும் சொல்கின்றன. இருப்பினும், “எழுபது” என்ற எண்ணிக்கையை ஏராளமான கைப்பிரதிகள் ஆதரிக்கின்றன. இயேசு தம் சீஷர்களின் ஒரு பெரிய கூட்டத்தாரை பிரசங்கிப்பதற்கு அனுப்பினார் என்ற முக்கிய குறிப்பிலிருந்து இந்த நுணுக்கமான வித்தியாசம் கவனத்தைத் திருப்பக்கூடாது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்