ஆயுதங்களோடு வந்து திருடர்கள் தாக்கும்போது
ஒதுக்குப்புறத்தில் இருக்கும் மேற்கு ஆப்பிரிக்க புறநகர்ப் பகுதி இக்காயி. இங்கே வீடுகள் இப்போது கோட்டைகளாகிவிட்டன. அவற்றுக்கு இரும்பு முள், கண்ணாடித் துண்டுகள் அல்லது கூர்மையான முள் கம்பிகள் பொருத்தப்பட்ட பத்து அடி உயரமுள்ள மதில்சுவர்கள். காவற்காரர், தாழ்ப்பாள்கள், கதவை இறுக்கும் நீண்ட தாழாகிய அடிதண்டா, சங்கிலிகள், பூட்டுகள் கொண்ட பிரமாண்டமான கதவுகள். ஜன்னல்களுக்கு கம்பிக் கிராதிகள். படுக்கை அறைகளுக்கு இரும்புக் கதவுகள். இரவு நேரத்தில் காவலுக்கென அவிழ்த்துவிடப்பட்ட அல்சேஷன், ராட்வேய்லர் நாய்கள். இருளை விரட்டியடிக்க பிரகாசமான விளக்குகள். எல்லாம் அமைதியாக இருந்தால் கண்காணித்துக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டரிலிருந்து மிகவும் மெல்லியதாக ஒரு பீப் சத்தம்.
தங்கள் வீடுகள் பாதுகாப்புள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் எல்லாருக்கும்தான் அக்கறை இருக்கிறது. ஏனென்றால் செய்தித்தாளில் “சோடா பாட்டில்கள், சைக்கிள் செயின்களோடு வந்த திருடர்கள் கொள்ளை”; “முகமூடி கொள்ளை”; “ரவுடி கும்பல் தாக்கியதால் மக்கள் பீதி”; போன்ற தலைப்புச் செய்திகள் வராத நாளே இல்லை. அநேக தேசங்களில் நிலைமை இதுவே. பைபிள் முன்னறிவித்திருக்கும் விதமாக நாம் கொடிய காலங்களில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.—2 தீமோத்தேயு 3:1.
ஆயுதங்களோடு வந்து திருடுவது உட்பட குற்றச் செயலின் எண்ணிக்கை கிடுகிடுவென்று உயர்ந்துகொண்டே இருக்கிறது. அரசாங்கங்களுக்கு தங்கள் சொந்த குடிமக்களை பாதுகாக்க முடியவுமில்லை அல்லது அவற்றுக்கு மனமுமில்லை. சில நாடுகளில் எண்ணிக்கையிலும் பலத்திலும் குறைவாக இருக்கும் போலீஸாரிடம் பலர் உதவி கேட்டுவருகையில் அவர்களால் சமாளிக்க முடிவதில்லை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் பெரும்பாலான பொது மக்களும் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிடுகிறார்கள்.
போலீஸாரிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் உதவி கிடைக்காத நிலையில் திருடர்களிடம் மாட்டிக்கொள்பவர்கள் என்ன செய்வார்கள்? தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வதைவிட அவர்களுக்கு வேறு வழியில்லை. வளர்முக நாட்டில் வாழும் ஒரு கிறிஸ்தவ மூப்பர் இப்படிச் சொன்னார்: “கூச்சல்போட்டால் கொள்ளைக்காரர்கள் உங்களை குத்திவிடுவார்கள் அல்லது கொன்றுவிடுவார்கள். யாராவது ஓடிவந்து உங்களைக் காப்பாற்றுவார்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம். யாராவது வந்து காப்பாற்றினால் நல்லதுதான், ஆனால் அதை எதிர்பார்க்காதீர்கள் அல்லது கூச்சல்போட்டு யாரையும் கூப்பிடாதீர்கள், கூப்பிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.”
பாதுகாப்பும் கடவுளுடைய வார்த்தையும்
கிறிஸ்தவர்கள் உலகத்தின் பாகமில்லை, ஆனால் அதே சமயத்தில் அவர்கள் உலகத்தில்தான் வாழ்ந்துவருகிறார்கள். (யோவான் 17:11, 16) ஆகவே மற்ற எல்லாரையும் போலவே அவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்தையும் செய்கிறார்கள். இருந்தாலும் யெகோவாவை சேவிக்காத மற்ற அநேகர் செய்வதைப் போல் கடவுளுடைய மக்கள் பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதில்லை. அவர்கள் கிறிஸ்தவ நியமங்களை மீறாதவகையில் மட்டுமே தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
இதற்கு நேர்மாறாக, சில ஆப்பிரிக்க நாடுகளிலுள்ள மக்கள் திருடர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மாயமந்திரங்களின் உதவியை நாடுகிறார்கள். பில்லிசூனிய மருத்துவர் அவர்களுடைய மணிக்கட்டில், மார்பில் அல்லது முதுகில் கத்தியைவைத்து கீறிவிடுகிறார். அதன்மீது ஒரு மந்திர சக்தியுடைய மருந்து பூசப்படுகிறது, மந்திரங்கள் ஓதப்படுகின்றன, இப்பொழுது திருடர்களை எதிர்க்க இவர்களுக்குச் சக்தி கிடைத்துவிடுகிறதாம். இன்னும் சிலர், திருடர்கள் தங்களைத் தாக்க முடியாது என்ற எண்ணத்தில் தாயத்துக்களையோ மந்திரித்த பொருட்களையோ தங்கள் வீடுகளில் வைத்திருக்கின்றனர்.
உண்மைக் கிறிஸ்தவர்களுக்கும் எந்தவித மாய மந்திரங்களுக்கும் சம்பந்தமில்லை. ஏனென்றால் எல்லாவிதமான ஆவிக்கொள்கையையும் பைபிள் கண்டிக்கிறது. அது சரிதான், காரணம் இப்படிப்பட்ட பழக்க வழக்கங்கள்தான் பூமியில் வன்முறையின் வளர்ச்சிக்கே காரணமாக இருக்கும் பேய்களோடு நம்மைத் தொடர்புகொள்ளச் செய்கின்றன. (ஆதியாகமம் 6:2, 4, 11) அதனால்தான் பைபிள் தெளிவாக இப்படிச் சொல்கிறது: “குறி பார்க்க வேண்டாம்.”—லேவியராகமம் 19:26, பொ.மொ.
சில ஆட்கள் தற்காப்புக்காக துப்பாக்கிகள் வைத்திருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்களோ “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு” என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளை மறப்பதே கிடையாது. (மத்தேயு 26:52) கடவுளுடைய மக்கள் ஏற்கெனவே ‘தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடித்துவிட்டபடியால்’ திருடர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக துப்பாக்கிகளை வாங்குவது கிடையாது.—மீகா 4:3.
பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய காவலாளர்களை வைத்திருப்பதை பற்றியென்ன? இது தனிப்பட்ட தீர்மானத்தை தேவைப்படுத்துகிற விஷயம். ஆனால், அப்படி செய்வதன் மூலம் வேறு ஒருவரிடம் துப்பாக்கியைக் கொடுக்கிறோம் என்பதை நினைவில் வைக்க வேண்டும். திருடன் வந்தால் காவலாளர் என்ன செய்யும்படி அவரை வேலைக்கு அமர்த்திய முதலாளி எதிர்பார்ப்பார்? தங்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக காவலாளி திருடனைச் சுடவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கமாட்டாரா?
கிறிஸ்தவர்கள் பாதுகாப்புக்காக மாய மந்திரங்களையும் ஆயுதங்களையும் பயன்படுத்தாதிருப்பதை, கடவுளை அறியாத மக்கள் பார்க்கையில் இது என்ன முட்டாள்தனம் என்று யோசிக்கலாம். ஆனால் பைபிள் “கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்” என்று நமக்கு உறுதியளிக்கிறது. (நீதிமொழிகள் 29:25) யெகோவா தம்முடைய மக்களை ஒட்டுமொத்தமாக பாதுகாப்பது உண்மை என்றாலும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக திருடர்களிடமிருந்து பாதுகாப்பது கிடையாது. யோபு கடவுளுக்கு எவ்வளவு உண்மையுள்ளவராக இருந்தார், ஆனால் கொள்ளையர்கள் யோபுவின் கால்நடைகளை கொள்ளையடிக்கவும் அவருடைய வேலைக்காரர்களை கொன்றுபோடவும் கடவுள் அனுமதிக்கவில்லையா என்ன? (யோபு 1:14, 15, 17) அப்போஸ்தலன் பவுல் ‘கள்ளரால் வந்த மோசங்களை’ அனுபவிக்கும்படி கடவுள் அனுமதித்தார். (2 கொரிந்தியர் 11:26) இருந்தாலும் என்ன நியமங்களின்படி வாழ்ந்தால் கொள்ளையடிக்கப்படும் ஆபத்து குறைவாக இருக்கும் என்பதை கடவுள் தம்முடைய ஊழியர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். மேலுமாக திருடர்கள் தாக்கும்போது எப்படி நடந்துகொண்டால் காயப்படும் அபாயத்தைக் குறைக்கலாம் என்ற அறிவையும் கொடுத்து கடவுள் அவர்களை தயார் செய்கிறார்.
திருடர்களால் வரும் ஆபத்தை குறைப்பது எப்படி
வெகு காலத்துக்கு முன்பாக ஞானி இவ்வாறு சொன்னார்: “செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.” (பிரசங்கி 5:12) வேறு விதமாக சொன்னால் அநேக பொருட்களை வைத்திருப்பவர்கள் அதைக் காப்பாற்ற வேண்டுமே என்று சதா கவலைப்படுவதால் அவர்களுக்கேது நிம்மதியான தூக்கம்!
ஆகவே கவலையையும் திருடர்களால் வரும் ஆபத்தையும் குறைப்பதற்கு ஒரு வழி ஏராளமாக விலையுயர்ந்த பொருட்களை சேர்த்து வைக்காமல் இருப்பதாகும். ஆவியால் ஏவப்பட்டு அப்போஸ்தலன் இப்படி எழுதினார்: “மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.” (1 யோவான் 2:16) விலையுயர்ந்த பொருட்களை வாங்கும்படி மக்களை எந்த ஆசை தூண்டுகிறதோ அதே ஆசைதான் மற்றவர்களை திருடும்படியும் தூண்டுகிறது. மேலும் ‘ஜீவனத்தின் பெருமையை’ வெளிச்சம் போட்டுக் காட்டுவது திருடர்களுக்கு அழைப்பு விடுப்பதுபோல இருக்கிறது.
தோற்றத்தில் சாதாரணமானவராக இருப்பதோடுகூட, நீங்கள் உங்களை ஒரு கிறிஸ்தவர் என்று அடையாளம் காட்டுவது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மற்றொரு வழியாகும். நீங்கள் மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொண்டு, கள்ளங்கபடமில்லாமல் பழகி, கிறிஸ்தவ ஊழியத்தில் சுறுசுறுப்பாக இருந்தால் மரியாதை பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவர் என்ற பெயர் உங்களுக்கு சமுதாயத்தில் கிடைக்கும். (கலாத்தியர் 5:19-23) இப்படிப்பட்ட ஒரு நல்ல பெயர் ஆயுதங்களைவிட உங்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும்.
ஆயுதங்களோடு திருடர்கள் வரும்போது
ஆனால் எப்படியோ திருடர்கள் உங்கள் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அவர்கள் உங்கள் முன்னால் நிற்கிறார்கள் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்களுடைய உடைமைகளைவிட உங்கள் உயிர்தான் அதிக முக்கியமானது என்பதை மறந்துவிடாதீர்கள். கிறிஸ்து இயேசு இப்படிச் சொன்னார்: “தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.”—மத்தேயு 5:39, 40.
இது ஞானமான புத்திமதி. நம்மிடமுள்ள சொத்து விவரங்களை குற்றவாளிகளுக்கு சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் கிறிஸ்தவர்களுக்கு இல்லாதபோதிலும், நாம் எதிர்ப்பதை, ஒத்துழைக்க மறுப்பதை அல்லது ஏமாற்றுவதை திருடர்கள் புரிந்துகொண்டுவிட்டால் அவர்களுக்கு கோபம் தலைக்கேறிவிடும். “அவர்கள் உள்ளம் மரத்துப்போய்” இருப்பதால் அநேகர் சட்டென்று கொடூரமாகவும் இரக்கமில்லாமலும் நடந்துகொள்ளலாம்.—எபேசியர் 4:19, பொ.மொ.
சாம்வேல் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் கொள்ளையர்கள், யாரும் உள்ளே வரமுடியாதபடி கட்டிடத்தை வளைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று கொள்ளையடித்தார்கள். துப்பாக்கி வெடி ஓசையும், கதவுகள் அடித்து நொறுக்கப்படும் சத்தமும், மக்களின் கூச்சலும் அழுகையும் சாம்வேலின் காதில் விழுந்தது. தப்பியோட வழியே இல்லை. தரையில் முட்டிப்போட்டு, கைகளைத் தூக்கி, கண்களை மூடிக்கொண்டு அப்படியே இருங்கள் என்று சாம்வேல் தன் மனைவியிடமும் தன் மூன்று மகன்களிடமும் சொன்னார். கொள்ளையர்கள் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள். சாம்வேல் பின்னால் அவர்களை அடையாளம் காட்டிவிடுவார் என்று கொள்ளையர்கள் நினைத்துவிடக்கூடாதல்லவா? அதற்காக அவர்களை ஏறெடுத்துப் பார்க்காமலே சாம்வேல் அவர்களிடம் பேசினார். “உள்ளே வந்து உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எதைவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். நாங்கள் யெகோவாவின் சாட்சிகள். நாங்கள் உங்களைத் தடுக்கமாட்டோம்” என்பதாக அவர் சொன்னார். கொள்ளையர்கள் திகைத்துப்போய் நின்றார்கள். அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் ஆயுதங்களோடு மொத்தம் 12 பேர் மாறி மாறி வந்தார்கள். நகை நட்டுகள், பணம், எலக்ட்ரானிக் சாமான்கள் ஆகியவற்றை அவர்கள் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டாலும் அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்த மற்றவர்கள் வாங்கிய அடிகளோ கத்தி குத்துக்களோ இவர்களுக்கு கிடைக்கவில்லை. சாம்வேலின் குடும்பம் உயிர்தப்பியதற்காக யெகோவாவுக்கு நன்றிசெலுத்தினார்கள்.
பணத்துக்காகவும் பொருளுக்காகவும் கொள்ளையர்கள் வரும்போது நாம் அதை எதிர்க்காத பட்சத்தில் நம்மை அவர்கள் காயப்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.a
ஒரு கிறிஸ்தவர் சாட்சி கொடுப்பாரேயானால் சில சமயங்களில் காயப்படுவதற்கு எதிராக அது அரண்போல் இருக்கும். கொள்ளையர்கள் ஆடேவின் வீட்டைத் தாக்கியபோது அவர் இவ்வாறு அவர்களிடம் சொன்னார்: “உங்களுடைய கஷ்டம் எனக்குப் புரிகிறது, அதனால்தான் நீங்கள் இந்த மாதிரியான வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. நாமும் நம்முடைய குடும்பங்களும் வயிறார உண்பதற்கு நமக்கு ஏராளமாக உணவு கிடைக்கப்போகும் ஒரு நாள் வரும் என்பதாக யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் நம்புகிறோம். கடவுளுடைய ராஜ்யத்தில் அனைவரும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழப்போகிறோம்.” இதைக் கேட்டபோது கொள்ளையரின் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. அவர்களில் ஒருவர் இப்படிச் சொன்னார்: “உங்களுடைய வீட்டுக்கு வந்ததற்காக நாங்கள் வருந்துகிறோம், ஆனால் வேறு வழியில்லை, எங்கள் பசி கொடுமையை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.” ஆடேவின் உடைமைகளை கொள்ளையடித்தபோதிலும் அவர்கள் அவர்மீதோ அவருடைய குடும்பத்தார்மீதோ கைவைக்கவில்லை.
அமைதியாய் இருங்கள்
ஆபத்தான ஒரு நிலைமையில் அமைதியாய் இருப்பதொன்றும் சுலபமில்லை. நம்மை மிரட்டி காரியத்தைச் சாதித்துக்கொள்வதே கொள்ளையர்களின் முக்கியமான எண்ணமாக இருக்கும்போது அது ஒன்றும் சுலபமில்லை. ஜெபம் நமக்கு உதவிசெய்யும். மெளனமாகவும் சுருக்கமாகவும் ஜெபித்தாலும்கூட உதவிக்காக நாம் யெகோவாவை நோக்கி கூப்பிடும்போது அவர் அதைக் கேட்பார். பைபிள் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.” (சங்கீதம் 34:15) யெகோவா நமக்குச் செவிகொடுக்கிறார், எந்த ஒரு நிலைமையிலும் பதட்டப்படாமல் நடந்துகொள்வதற்கு ஞானத்தை அவர் நமக்குக் கொடுப்பார்.—யாக்கோபு 1:5.
ஜெபம் செய்வதோடுகூட, நீங்கள் கொள்ளையடிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்ன செய்யமாட்டீர்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானம் செய்துவிடுவது கலவரமடையாமல் இருக்க உதவும் மற்றொரு வழியாகும். என்னவிதமான சூழ்நிலையில் நீங்கள் கொள்ளையடிக்கப்படுவீர்கள் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்வது முடியாத காரியம். எளிதில் தீ பற்றிக்கொள்ளக்கூடிய ஒரு கட்டிடத்தில் நீங்கள் இருந்தீர்களென்றால் பாதுகாப்பு நடவடிக்கைகளை யோசித்து வைத்திருப்பது எப்படி ஞானமாக இருக்குமோ அது போலவே இந்த விஷயத்திலும் நியமங்களை மனதில் வைத்திருப்பது நல்லதாக இருக்கும். முன்யோசனை இருந்தால் நீங்கள் கலவரமடையாமல் அமைதியாக இருந்து காயப்படாமல் தப்பித்துக்கொள்ளலாம்.
திருடுவதை கடவுள் எவ்வாறு கருதுகிறார் என்பது தெளிவாக சொல்லப்பட்டுள்ளது: “யெகோவாவாகிய நான் நீதியை விரும்புகிறேன், கொள்ளையையும் குற்றத்தையும் வெறுக்கிறேன்.” (ஏசாயா 61:8, NW) கொள்ளையடிப்பது மிகவும் மோசமான ஒரு குற்றம் என்று எழுதும்படி யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியான எசேக்கியேலை ஏவினார். (எசேக்கியேல் 18:18) ஆனால் இதிலிருந்து மனந்திரும்பி கொள்ளையடிக்கப்பட்ட பொருளைத் திருப்பித் தந்துவிடும் நபரை யெகோவா இரக்கத்தோடு மன்னித்துவிடுவார் என்றும் அதே பைபிள் புத்தகம் நமக்குச் சொல்கிறது.—எசேக்கியேல் 33:14-16.
குற்றச் செயல்கள் நிரம்பிய உலகில் கிறிஸ்தவர்கள் இப்பொழுது வாழ்ந்துவந்தாலும் திருடர்களைப் பற்றிய பயமில்லாமல் கடவுளுடைய ராஜ்யத்தில் வாழப்போகும் நம்பிக்கை இருப்பதால் அதை நினைத்து அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். அந்தச் சமயத்தில் இருக்கப்போகும் நிலைமையைக் குறித்து பைபிள் இப்படி வாக்குறுதி அளிக்கிறது: “[கடவுளுடைய மக்கள்] அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.’—மீகா 4:4.
[அடிக்குறிப்புகள்]
a ஆனால் நம்முடைய ஒத்துழைப்புக்கு எல்லைகள் உண்டு. யெகோவாவின் ஊழியர்கள் கடவுளுடைய சட்டத்தை மீறும் வகையில் ஒத்துழைப்பதில்லை. உதாரணமாக ஒரு கிறிஸ்தவர் கற்பழிக்கப்படுகையில் எதிர்க்காமல் இருக்கமாட்டார்.