“பூமியின் கடைமுனை வரைக்கும்” ஒளிவீச உதவினார்
அப்போஸ்தலன் பவுல் “பூமியின் கடைமுனை வரைக்கும்” சத்தியத்தின் ஒளியை வீசுவதற்கு பயன்படுத்தப்பட்டார். அதனால், “நித்திய ஜீவனுக்கான மனச்சாய்வுடையவர்கள் விசுவாசிகளானார்கள்.”—அப்போஸ்தலர் 13:47, 48, NW; ஏசாயா 49:6.
வாழ்க்கையையே அர்ப்பணித்து அயராது உழைத்தவரும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினருமான வில்லியம் லாயிட் பாரி ஆவிக்குரிய ஒளியை வீசுவதில் அதிக ஆர்வத்தை காட்டியதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. ஜுலை 2, 1999 அன்று ஹவாய் மாவட்ட மாநாட்டில் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கையில் சகோதரர் பாரி காலமானார்.
லாயிட் பாரி டிசம்பர் 20, 1916-ல் நியூ ஜீலாந்தில் பிறந்தார். உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் விநியோகம் செய்யப்பட்ட சி.டி. ரஸலின் வெளியீடுகளில் காணப்படும் பைபிள் சத்தியங்களில் ஆரம்பத்திலேயே பாரியினுடைய அப்பாவும் அம்மாவும் அதிக அக்கறையை காட்டினார்கள். ஆகவே, கிறிஸ்தவ பக்தியுள்ள குடும்ப சூழ்நிலையில் சகோதரர் பாரி வளர்ந்து வந்தார்.
விளையாட்டிலும் படிப்பிலும் அதிக ஆர்வம் காட்டினார். அறிவியலில் பட்டம் பெறவிழைந்தபோதிலும், சகோதரர் பாரி ஆவிக்குரிய விஷயங்களில் தன்னுடைய கவனத்தை தொடர்ந்து ஒருமுகப்படுத்தி வந்தார். எனவே, ஜனவரி 1, 1939-ல் முழுநேர சேவையை ஆரம்பித்து, ஆஸ்திரேலிய பெத்தேல் குடும்பத்தின் ஓர் அங்கத்தினரானார். 1941-ல் சங்கத்தின்மீது அரசாங்கம் தடையுத்தரவு விதித்தது. ஆகவே, அதன்பின் அலுவலக வேலையில் சகோதரர் பாரி சுறுசுறுப்பாக ஈடுபட்டார், உடன் ஊழியர்களுக்கு ஊக்கமூட்டும் தகவல்களை எழுதும் பொறுப்பும் சிலசமயங்களில் அவருக்கு கொடுக்கப்பட்டது. வெளி ஊழியத்திலும் அவர் மிகச் சிறந்த முன்மாதிரியாக இருந்தார்.
பிப்ரவரி 1942-ல் சகோதரர் பாரி முழுநேர சேவை செய்யும் ஒரு சகோதரியை திருமணம் செய்துகொண்டார். இத்தனை வருடங்களாக, உலகின் பல பகுதிகளில் அவருடைய அன்பு மனைவி மெல்பாவும் அவரோடு சேர்ந்து உண்மையுடன் சேவை செய்தார். அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் நடைபெற்ற உவாட்ச் டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 11-வது வகுப்பில் கலந்து கொள்வதன்மூலம் வெளிநாடுகளில் சேவை செய்யும் மிகப் பெரிய வேலைக்கு அவர்கள் அடியெடுத்து வைத்தார்கள். “பூமியின் கடைமுனை” என அநேகரால் கருதப்படும் தேசத்தில்—ஜப்பானில்—சேவை செய்ய நியமிக்கப்பட்டார்கள். நவம்பர் 1949-ல் அங்கு வந்து சேர்ந்தபின் கோப் துறைமுக பட்டணத்தில் மிஷனரிகளாக சேவை செய்ய ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் ஜப்பானில் 12 பேர் மட்டுமே நற்செய்தியை பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். சகோதரர் பாரி அந்நாட்டு மொழியையும் பழக்கவழக்கங்களையும் கற்றார். அந்த ஜப்பானிய ஜனங்களோடு ஆழ்ந்த அன்பையும் வளர்த்துக்கொண்டார். அவர்களோடு 25 வருடங்களாக சேவை செய்தார். “நித்திய ஜீவனுக்கான மனச்சாய்வுடையவர்கள்” மீது அவர் காட்டிய அன்பு, ஜப்பானில் இருந்த கிறிஸ்தவ சகோதரர்களுக்கு தெளிவாக தெரிந்தது. அதனால் பல பத்தாண்டுகளாக கிளை அலுவலகத்தை திறம்பட்ட முறையில் கண்காணிப்பதற்கும் அவருக்கு உதவியது.
1975-ன் மத்திபத்தில் ஜப்பானில் 30,000 சாட்சிகள் இருந்தபோது, பாரியும் அவருடைய மனைவியும் நியூ யார்க்கிலுள்ள புரூக்ளினுக்கு மாற்றம் செய்யப்பட்டார்கள். அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவராக இருந்தபடியால், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினராக சேவை செய்ய சகோதரர் பாரி அழைக்கப்பட்டிருந்தார். (ரோமர் 8:16, 17) கட்டுரைகளை எழுதுவதில் அவருக்கு இருந்த அனுபவம், ‘ரைட்டிங் டிபார்ட்மென்டில்’ அவருடைய புதிய நியமிப்பிற்கு அதிக பயனுள்ள ஒன்றாக இருந்தது. கிளை அலுவலகத்திலும், சர்வதேச அளவிலும் அவருக்கு இருந்த பரந்த அனுபவம் அவரை ஆளும் குழுவின் ‘பப்ளிஷிங் கமிட்டி’யின் மதிப்புள்ள அங்கத்தினராக்கியது.
ஜப்பானிய மக்களிடமாக சகோதரர் பாரியின் அன்பு இன்னும் ‘பசுமை மாறாமல்’ அவர் மனதில் நீங்காமலேயே இருந்தது. அவருடைய பேச்சிலும் குறிப்புகளிலும், மிஷனரி ஊழியர்களாக சேவை செய்த அநேகருடைய அனுபவங்களை பற்றிய இருதயத்திற்கு அனலூட்டும் சம்பவங்கள் இல்லாமல் இருக்கவே இருக்காது. இது கிலியட் பள்ளி மாணவர்களும் பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களும் நன்கு அறிந்த விஷயம். சகோதரர் பாரி தன்னுடைய அனுபவங்களை உற்சாகத்துடன் தத்ரூபமாக விவரித்தது, “பூமியின் கடைமுனை வரைக்கும்” செய்யப்பட்ட ராஜ்ய பிரசங்க வேலையை மனக்கண் முன் கொண்டுவந்தது. இவற்றில் சில, செப்டம்பர் 15, 1960 காவற்கோபுரம் பத்திரிகையில் வெளியிடப்பட்ட அவருடைய வாழ்க்கை சரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
“நித்திய ஜீவனுக்கான மனச்சாய்வுடையவர்கள்” மீதான சகோதரர் பாரியின் அக்கறை ‘அவர் கிறிஸ்துவின் உடன் சுதந்திரராக’ ஆனபிறகும் தொடரும் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். யெகோவாவுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்து அவருடைய ஜனங்கள்மீது கனிவான பாசம் வைத்திருந்த ஓர் ஆவிக்குரிய நபராக அவரை அறிந்தவர்களுக்கும் அவர்மீது அன்புள்ளம் கொண்டவர்களுக்கும் அவருடைய மரணம் உண்மையில் மாபெரும் இழப்பே. இருந்தாலும், சகோதரர் பாரி தம்முடைய பூமிக்குரிய வாழ்வின் இறுதிவரை உண்மையுடன் நிலைத்திருந்தார் என்பதில் நாம் களிகூருகிறோம்.—வெளிப்படுத்துதல் 2:10
[பக்கம் 16-ன் படம்]
1988-ல் “வேதாகமங்களின் பேரில் உட்பார்வை” என்ற புத்தகத்தை வெளியிடுகையில் லாயிட் பாரியும் ஜான் பாரும்
[பக்கம் 16-ன் படம்]
கிலியட் பள்ளியின் 11-வது வகுப்பு மாணவர்கள் 40 வருடங்களுக்குப்பின் ஜப்பானில் சந்திக்கிறார்கள்.