‘யெகோவாவின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்’
நாமனைவரும் ஆசீர்வாதத்தைப் பெறவே விரும்புகிறோம். ஆசீர்வாதம் “ஆனந்தத்தையும் சுகவாழ்வையும் செழுமையையும்” அதிகரிக்கச் செய்கிறது என தி அமெரிக்கன் ஹெரிடேஜ் காலேஜ் டிக்ஷ்னரி சொல்கிறது. ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ அருளுகிறவர் யெகோவாவே. ஆகையால் மெய்யான, நிரந்தர ஆசீர்வாதம் எதுவும் நம்முடைய அன்பான படைப்பாளரிடமிருந்தே வருகிறது. (யாக்கோபு 1:17) மனிதகுலம் அனைத்தின் மீதும், ஏன், அவரை அறியாதவர்கள் மீதும் அவர் ஆசீர்வாதத்தை பொழிகிறாரே. தம்முடைய பிதாவைப் பற்றி இயேசு இவ்வாறு கூறினார்: “அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” (மத்தேயு 5:45) ஆனால் அவரை நேசிப்போர் மீது அவர் விசேஷ அக்கறை காட்டுகிறார்.—உபாகமம் 28:1-14; யோபு 1:1; 42:12.
தாவீது இவ்வாறு எழுதினார்: “உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு [யெகோவா] நன்மையை வழங்காதிரார்.” (சங்கீதம் 84:11) ஆம், யெகோவாவை சேவிப்பவர்கள் வளமான, அர்த்தமுள்ள வாழ்வை பெற்றிருக்கிறார்கள். ‘யெகோவாவின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்’ என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். பைபிள் மேலும் சொல்கிறது: “[யெகோவாவால்] ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.” (நீதிமொழிகள் 10:22; சங்கீதம் 37:22, 29) அது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாக இருக்கும்!
நாம் எவ்வாறு யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெறலாம்? அவருக்குப் பிரியமான குணங்களை வளர்த்துக்கொள்வதே ஒரு காரியம். (உபாகமம் 30:16, 19, 20; மீகா 6:8) பூர்வ காலங்களில் வாழ்ந்த யெகோவாவின் மூன்று ஊழியர்களுடைய முன்மாதிரியிலிருந்து இதை நாம் அறிந்துகொள்ளலாம்.
யெகோவா தம் ஊழியரை ஆசீர்வதிக்கிறார்
நோவா—கடவுளுடைய ஊழியரில் குறிப்பிடத்தக்க ஒருவர். ஆதியாகமம் 6:8-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘நோவாவுக்கோ, [யெகோவாவுடைய] கண்களில் கிருபை கிடைத்தது.’ (ஆதியாகமம் 6:8) ஏன்? ஏனென்றால் நோவா கீழ்ப்படிந்து நடந்தார். அந்த விவரப்பதிவு கூறுகிறது: ‘நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தார்.’ யெகோவாவின் நீதியான நியமங்களை நோவா பின்பற்றினார், அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தார். இந்த உலகம் வன்முறையிலும் ஒழுக்கக்கேட்டிலும் மூழ்கிக் கிடந்த சமயத்தில், ‘நோவா அப்படியே செய்தார்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்து முடித்தார்.’ (ஆதியாகமம் 6:9, 22) அதனால், நோவா “தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை” கட்டும்படி யெகோவா அவருக்கு கட்டளையிட்டார். (எபிரெயர் 11:7) இவ்வாறு, நோவாவும் அவருடைய குடும்பமும்—அவர்களால் மனித இனமும்—அப்போதைய தலைமுறையினருக்கு வந்த அழிவிலிருந்து தப்பிப்பிழைத்தது. பூங்காவனம் போன்ற பரதீஸிய பூமியில் நித்தியமாக வாழ்வதற்கு உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கையில் நோவா மரித்தார். அவருக்கு எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதங்கள்!
ஆபிரகாமிடமும் யெகோவாவுக்குப் பிரியமான குணங்கள் இருந்தன. இவற்றில் மிகவும் முதன்மையானது விசுவாசம். (எபிரெயர் 11:8-10) ஊர் பட்டணத்தில் வாழ்ந்த சொகுசான வாழ்க்கையை விட்டுவிட்டு, பிற்பாடு ஆரானுக்கு வந்தார். ஏனென்றால் அவருடைய சந்ததி பெருகி, எல்லா தேசத்தாருக்கும் ஆசீர்வாதமாக அமையும் என்ற யெகோவாவின் வாக்குறுதியில் விசுவாசம் வைத்திருந்தார். (ஆதியாகமம் 12:2, 3) சோதனைமிகு வாழ்க்கையை பல வருடங்களாக வாழ்ந்தபோதிலும், அவருக்கு ஈசாக்கு என்ற குமாரன் பிறந்தபோது அவருடைய விசுவாசத்திற்கு பலன் கிடைத்தது. அவர் மூலமாக, கடவுளின் தெரிந்தெடுக்கப்பட்ட தேசத்தாராகிய இஸ்ரவேலருக்கும், கடைசியில் மேசியாவுக்கும் ஆபிரகாம் மூதாதையானார். (ரோமர் 4:19-21) மேலும், “விசுவாசிக்கிற யாவருக்கும் . . . தகப்பனாயிரு”க்கிறார், அதோடு ‘யெகோவாவின் சிநேகிதர்’ என்றும் அழைக்கப்பட்டார். (ரோமர் 4:11; யாக்கோபு 2:23; கலாத்தியர் 3:7, 29) எவ்வளவு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்தார், எவ்வளவு அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டார்!
மோசே என்ற உண்மையுள்ள மனிதனையும் சிந்தித்துப் பாருங்கள். அவருடைய குணங்களில் முதன்மையானது ஆவிக்குரிய காரியங்கள் மீது அவருக்கு இருந்த போற்றுதல். மோசே எகிப்தின் செல்வங்கள் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு, “அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல, உறுதியாயிருந்”தார். (எபிரெயர் 11:27) மீதியான் தேசத்தில் 40 வருடங்களைக் கழித்தப் பிறகு, வயதான மனிதராக எகிப்திற்கு திரும்பி வந்து, தன்னுடைய சகோதரர்களுக்கு விடுதலை கேட்டு அப்போதைய மிகப் பெரிய வல்லரசராகிய பார்வோனுக்கு முன்பு பயமின்றி உறுதியாக நின்றார். (யாத்திராகமம் 7:1-7) பத்து வாதைகளையும், செங்கடல் பிளவுற்றதையும், பார்வோனுடைய சேனைகளின் அழிவையும் கண்ணார கண்டார். இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாண சட்டத்தைக் கொடுப்பதற்கும் அந்தப் புதிய தேசத்தாருடன் தாம் வைத்துக்கொள்ளப்போகும் உடன்படிக்கைக்கு மத்தியஸ்தம் வகிப்பதற்கும் யெகோவா அவரை பயன்படுத்தினார். 40 வருடங்களாக, வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்களை மோசே வழிநடத்தி வந்தார். அவருடைய வாழ்க்கைக்கு மெய்யான நோக்கம் இருந்தது, தன்னுடைய சேவையில் பெற்று மகிழ்ந்த அருமையான ஆசீர்வாதங்களுக்கு அளவேயில்லை.
தற்கால ஆசீர்வாதங்கள்
கடவுளை சேவிப்போருடைய வாழ்க்கை உண்மையிலேயே அர்த்தமுள்ளது என்பதை இந்த விவரப் பதிவுகள் காட்டுகின்றன. கீழ்ப்படிதல், விசுவாசம், ஆவிக்குரிய காரியங்களுக்குப் போற்றுதல் ஆகிய குணங்களை யெகோவாவின் ஜனங்கள் வளர்த்துக்கொள்ளும்போது அவர்கள் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
நாம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறோம்? கிறிஸ்தவமண்டலத்திலுள்ள கோடாகோடி ஜனங்கள் ஆவிக்குரிய பஞ்சத்தால் வாடிக்கொண்டிருக்கையில், நாம் “யெகோவா அருளும் நன்மைகளின் காரணமாக ஒளிவீசிக்கொண்டிருக்க” முடியும். (எரேமியா 31:12, NW) இயேசு கிறிஸ்து மற்றும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வாயிலாக ஆவிக்குரிய உணவை யெகோவா நமக்கு வாரி வழங்கியிருக்கிறார்; ‘ஜீவனுக்குப் போகிற வழியில்’ நிலைத்திருப்பதற்கு இது நமக்கு உதவுகிறது. (மத்தேயு 7:13, 14; 24:45, NW; யோவான் 17:3) நம்முடைய கிறிஸ்தவ சகோதரத்துவத்துடன் கூட்டுறவு கொள்வதும் அளவில்லா மற்றொரு ஆசீர்வாதம். கூட்டங்களிலும் வேறுசில சமயங்களிலும், அன்பை காட்டுகிற, ‘புதிய ஆள்தன்மையை’ தரித்துக்கொள்ள கடின முயற்சியெடுக்கிற உடன் வணக்கத்தாருடன் இருப்பது பெருமகிழ்ச்சியின் ஊற்றாக விளங்குகிறது. (கொலோசெயர் 3:8-10, NW; சங்கீதம் 133:1) ஆனால், யெகோவா தேவனுடன் தனிப்பட்ட உறவுகொள்வதற்கும் அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடப்பதற்கும் கிடைத்திருக்கிற அருமையான சிலாக்கியமே நமக்கு மிகப் பெரிய ஆசீர்வாதம்.—ரோமர் 5:1, 8; பிலிப்பியர் 3:8, 9, 11.
இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை சிந்தித்துப் பார்க்கையில், கடவுளுக்கு செய்யும் நம்முடைய சேவை உண்மையிலேயே எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை உணர்ந்துகொள்கிறோம். சிறந்த முத்தைப் பெற நாடிய ஒரு வியாபாரியைப் பற்றிய இயேசுவின் உவமையை ஒருவேளை நாம் சிந்தித்துப் பார்க்கலாம். இந்த மனிதனைப் பற்றி இயேசு இவ்வாறு சொன்னார்: “அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.” (மத்தேயு 13:46) நிச்சயமாகவே, கடவுளுடன் கொண்டிருக்கும் நம்முடைய உறவையும், அவரை சேவிக்க கிடைத்த சிலாக்கியத்தையும் நம்முடைய கிறிஸ்தவ கூட்டுறவையும் கிறிஸ்தவ நம்பிக்கையையும் நம்முடைய விசுவாசத்தோடு தொடர்புடைய அனைத்து ஆசீர்வாதங்களையும் பற்றி அப்படியே நாமும் உணருகிறோம். நம் வாழ்க்கையில் இதைவிட மதிப்புமிக்கது ஒன்றுமில்லை.
யெகோவாவுக்குத் திருப்பிக் கொடுங்கள்
நன்மையான எந்த வரத்தையும் அருளுகிறவர் யெகோவாவே என்பதை நாம் உணருவதால், நாம் பெறும் ஆசீர்வாதங்களுக்காக போற்றுதலை தெரிவிப்பதற்கு நம்முடைய இருதயம் நம்மை தூண்டுகிறது. அதை நாம் எவ்வாறு செய்யலாம்? இதே ஆசீர்வாதங்களை மற்றவர்களும் அனுபவித்து மகிழ உதவி செய்வதே ஒரு வழி. (மத்தேயு 28:19) இதைச் செய்வதற்காகவே யெகோவாவின் சாட்சிகள் 230-க்கும் அதிகமான நாடுகளில் தங்களுடைய அயலாரை சென்று சந்திப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படி செய்கையில், ‘சத்தியத்தின் திருத்தமான அறிவை அடைய’ பிறருக்கு உதவி செய்வதற்கு தங்களிடம் இருக்கும் சொற்ப வளங்களை—நேரம், சக்தி, பொருளுடைமைகள் ஆகியவற்றை—செலவழிக்கிறார்கள்.—1 தீமோத்தேயு 2:4, NW.
கலிபோர்னியாவிலுள்ள க்ளென்டேல் என்ற இடத்தில் வாழும் பயனியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஃபெடரல் சிறைச்சாலையில் உள்ளவர்களை சந்திப்பதற்காக ஒவ்வொரு சனிக்கிழமை காலை போகவர மொத்தம் 100 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் சிறைக்கைதிகளுடன் சில மணிநேரங்களே செலவழிக்க முடிகிறபோதிலும், அவர்கள் உற்சாகமிழந்துவிடவில்லை. அவர்களில் ஒருவர் சொல்கிறார்: “வித்தியாசமான இந்தப் பிராந்தியத்தில் ஊழியம் செய்வது அதிக பலன் தருகிறது. இதை நாங்கள் அதிக சந்தோஷத்தோடு செய்கிறோம். அக்கறை காண்பிக்கும் அனைவரையும் சந்திக்க முடியாத அளவுக்கு எங்களுக்கு நிறைய மறுசந்திப்புகள் இருக்கின்றன. தற்போது நாங்கள் ஐந்து பேருடன் படிப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம், இன்னும் நான்கு பேர் பைபிள் படிப்பிற்கு கேட்டிருக்கிறார்கள்.”
ஜீவனை காக்கும் இந்த வேலையை இலவசமாக செய்வதற்கு வைராக்கியமுள்ள கிறிஸ்தவ ஊழியர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என்று சொன்ன இயேசுவின் மனப்பான்மையை பிரதிபலிக்கிறார்கள். (மத்தேயு 10:8) உலகிலுள்ள லட்சக்கணக்கானோர் இதுபோன்ற சுயநலமற்ற சேவையில் ஈடுபடுகிறார்கள்; அதன் பலனாக, நேர்மை இருதயம் படைத்த ஆட்கள் அநேகர் நற்செய்திக்கு செவிசாய்த்து சீஷர்களாக மாறி வருகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டுமே, கிட்டத்தட்ட 17 லட்சம் பேர் தங்களுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து வளர்ந்துவரும் இந்த அதிகரிப்பை கவனித்துக்கொள்வதற்கு, பைபிள்களையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் தயாரிக்க வேண்டும், புதிய ராஜ்ய மன்றங்களையும் கூடுவதற்குரிய மற்ற இடங்களையும் கட்ட வேண்டும். இதற்கு எப்படி பண உதவி கிடைக்கிறது? முழுவதும் மனமுவந்து கொடுக்கும் நன்கொடைகளாலேயே.
உலகில் சில இடங்களில் பொருளாதார நிலைமைகள் மோசமாக இருப்பதால், தங்களுடைய குடும்பங்களுக்கு அடிப்படை தேவைகளை கொடுப்பதற்கே அநேகர் போராடுகிறார்கள். உணவுக்காக நூறு கோடி ஜனங்கள் தங்களுடைய வருமானத்தில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தை செலவழிக்கிறார்கள் என நியூ சயன்டிஸ்ட் என்ற பத்திரிகை சொல்கிறது. நம்முடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளில் பெரும்பாலானோர் இப்படிப்பட்ட சூழலில்தான் வாழ்கிறார்கள். சக விசுவாசிகளுடைய உதவியின்றி, கிறிஸ்தவ பிரசுரங்களையோ தகுந்த ராஜ்ய மன்றங்களையோ அவர்களால் பெற முடியாது.
உண்மையில், தங்களுடைய பாரத்தை மற்றவர்கள் சுமப்பதில் அவர்களுக்கு கவலையில்லை என இது அர்த்தப்படுத்தாது. ஆனால் அவர்களுக்கு உதவி தேவை. தாங்கள் பெறும் ஆசீர்வாதங்களுக்காக யெகோவாவுக்கு நன்றி செலுத்த ஒரு வழியாக பொருள் சம்பந்தமான நன்கொடைகளை வழங்குவதற்கு இஸ்ரவேலரை மோசே உற்சாகப்படுத்தியபோது, அவர் இவ்வாறு சொன்னார்: ‘உன் தேவனாகிய [யெகோவா] உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.’ (உபாகமம் 16:17) ஆகவே, ஆலயத்தில் ஒரு விதவை “இரண்டு காசைப் போடுகிறதை” இயேசு பார்த்தபோது, அவளைப் பற்றி தம்முடைய சீஷர்களிடம் போற்றி பேசினார். அவள் தன்னால் இயன்றதை செய்தாள். (லூக்கா 21:2, 3) அதைப் போலவே, மிகவும் ஏழ்மையான சூழ்நிலைகளில் வாழும் கிறிஸ்தவர்களும் தங்களால் இயன்றதை செய்கிறார்கள். பற்றாக்குறை ஏற்பட்டால், பொருளாதார ரீதியில் அதிக ஏழ்மையில் இல்லாத சக கிறிஸ்தவர்களிடமிருந்து பெறும் நன்கொடைகளால் அதை சரிசெய்யலாம்.—2 கொரிந்தியர் 8:13-15.
இப்படிப்பட்ட விதங்களில் நாம் கடவுளுக்குத் திருப்பிக் கொடுக்கும்போது, சரியான உள்நோக்கம் இருப்பது முக்கியம். (2 கொரிந்தியர் 8:12) பவுல் இவ்வாறு கூறினார்: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (2 கொரிந்தியர் 9:7) இருதயத்திலிருந்து உந்துவிக்கப்பட்டு தாராளமாக கொடுப்பதன் மூலம் இப்பொழுது நடைபெற்று வரும் தேவராஜ்ய விஸ்தரிப்புக்கும் ஆதரவு அளிக்கிறோம், நம்முடைய மகிழ்ச்சியையும் அதிகரிக்கிறோம்.—அப்போஸ்தலர் 20:35.
பிரசங்க வேலையில் பங்குகொள்வதும் மனமுவந்து நன்கொடைகள் வழங்குவதும் யெகோவா நமக்கு தந்திருக்கும் ஆசீர்வாதங்களுக்கு கைம்மாறு செய்வதற்கு இரண்டு வழிகளாகும். தற்பொழுது அவரைப் பற்றி அறியாத நல்மனம் படைத்த அநேகர் மீது யெகோவா தம்முடைய ஆசீர்வாதத்தைப் பொழிய விரும்புகிறார் என்பதை அறியும்போது எவ்வளவு உற்சாகமாயிருக்கிறது! (2 பேதுரு 3:9) ஆகவே, நேர்மை இருதயமுள்ளோரை கண்டுபிடித்து அவர்களும் கீழ்ப்படிதல், விசுவாசம், போற்றுதல் ஆகிய குணங்களை வளர்த்துக்கொள்ள உதவி செய்வதற்கு கடவுளுடைய சேவையில் நம்முடைய வள ஆதாரங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவோமாக. இந்த விதத்தில், ‘[யெகோவா] நல்லவர் என்பதை ருசித்துப் பார்க்க’ அவர்களுக்கு உதவி செய்வதால் வரும் சந்தோஷத்தை நாம் பெறுவோம்.—சங்கீதம் 34:8.
[பக்கம் 28, 29-ன் பெட்டி]
உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள் வழங்க சிலர் விரும்பும் வழிகள்
அநேகர் திட்டமிட்டு பணம் ஒதுக்கி, அதை “உலகளாவிய வேலைக்காக நன்கொடைகள்—மத்தேயு 24:14” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளில் போடுகின்றனர்.
இத்தொகையை சபைகள் ஒவ்வொரு மாதமும் நியூ யார்க்கிலுள்ள புரூக்லினில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்திற்கு அல்லது உள்ளூர் கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கின்றன. மனப்பூர்வமாக அளிக்கப்படும் நன்கொடை பணத்தை நேரடியாக The Watch Tower Bible and Tract Society of India, G-37, South Avenue, Santacruz, Mumbai 400 054 என்ற விலாசத்திற்கு அல்லது உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். நகைகளையோ அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களையோ நன்கொடையாக வழங்கலாம். இவையனைத்தும் எவ்வித நிபந்தனையுமின்றி அளிக்கப்பட்ட அன்பளிப்பு என்பதைக் குறிப்பிட்டு சுருக்கமான கடிதத்தோடு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
திட்டமிட்ட நன்கொடை
நிபந்தனையற்ற பண நன்கொடைகள், நிபந்தனையோடுகூடிய பண நன்கொடைகள் தவிர, உலகளாவிய ராஜ்ய சேவைக்கு உதவ மற்ற முறைகளும் இருக்கின்றன. அவை:
இன்ஷ்யூரன்ஸ்: ஆயுள் காப்புறுதி பத்திரம் அல்லது ஓய்வூதிய திட்டத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம்.
வங்கி பண இருப்பு: வங்கி பண இருப்புகள், டெபாஸிட் சர்டிஃபிகேட்டுகள், அல்லது தனிநபரின் ஓய்வூதிய கணக்குகளை ஒரு டிரஸ்ட் ஏற்பாட்டின் மூலம் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு கொடுக்கலாம், அல்லது மரணத்திற்குப் பிறகு உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு கொடுக்கும்படி உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதிவைக்கலாம்.
பங்குகளும் பாண்டுகளும்: பங்குகளையும் பாண்டுகளையும் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம்.
நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு முதலியவற்றை நிபந்தனையற்ற நன்கொடையாக அல்லது அதை அளிப்பவர் உயிரோடிருக்கும் வரையில் அவற்றை அனுபவித்து, அவருடைய மரணத்துக்குப்பின் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு உரியதாகும்படி செய்யலாம். இதில் எவற்றையாவது சட்டப்படி பத்திரமாக எழுதுவதற்குமுன் உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்துடன் தொடர்புகொள்ள வேண்டும்.
உயில்களும் டிரஸ்டுகளும்: சொத்து அல்லது பணத்தை சட்டப்படி எழுதப்பட்ட உயில்கள் மூலம் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு சேரும்படி எழுதிவைக்கலாம் அல்லது ஒரு டிரஸ்ட் ஒப்பந்தத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம்.
சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக குறிப்பிட்டு ஒரு உயில் எழுதும்போது, இந்திய வாரிசுரிமை சட்டம், 1925-ன் பிரிவு 118 சொல்வதை தயவுசெய்து கவனத்தில் வையுங்கள். அது சொல்வதாவது: “ஒருவருக்கு அவரது உடன்பிறந்தாரின் மகனோ மகளோ அல்லது நெருங்கின உறவினர் யாராவது இருந்தால், அவர் தன்னுடைய எந்த சொத்தையும் மத அல்லது அறநிலைய உபயோகத்துக்காக கொடுக்கவோ உயில் எழுதி வைக்கவோ உரிமை கிடையாது; தன்னுடைய மரணத்துக்கு பன்னிரண்டு மாதங்களுக்கு முன்பே அந்த உயிலை எழுதியிருந்தால், உயிரோடிருப்பவர்களின் உயில்களை காப்பில் வைக்க அதிகாரம் பெற்ற இடங்களின் பாதுகாப்பில் ஆறு மாதங்களுக்குள் அதை வைத்துவிட்டால் மட்டுமே அந்த உயில் செல்லுபடியாகும்.”
உங்களுடைய உயிலில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக நீங்கள் குறிப்பிட விரும்பினால் உயிலில் குறிப்பிட வேண்டிய சொஸைட்டியின் முழுப் பெயரையும் விலாசத்தையும் கீழே காண்க:
The Watch Tower Bible and Tract Society of India
G-37, South Avenue,
Santa Cruz,
Mumbai - 400 054.