சுத்தம்—உண்மை அர்த்தம் என்ன?
ஐரோப்பாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும் 18-வது, 19-வது நூற்றாண்டுகளில் நிலவிய சுகாதாரமற்ற நிலைமை அதிர்ச்சியூட்டுவதாய் இருந்ததால், அந்தக் காலப்பகுதியில், “சுத்தம் பற்றிய கோட்பாடு” என்ற ஒன்றை மிஷனரிகள் பிரசங்கித்தார்கள். இந்தக் கோட்பாட்டின்படி, அசுத்தம் என்பது பாவம் என்றும், சுத்தமோ ஒருவரை கடவுளிடம் நெருங்கிவரச் செய்யும் என்றும் சொல்லப்பட்டது. “இறைபக்திக்கு அடுத்து வருவது தூய்மையே” என்ற பழமொழி பிரபலமாவதற்கு ஒருவேளை இதுவே காரணமாயிருக்கலாம்.
வில்லியம் மற்றும் கேத்தரீன் பூத் தோற்றுவித்த சால்வேஷன் ஆர்மி என்ற மதத் தொகுதியினர் இக்கருத்தையே வைத்திருந்தனர். அவர்களுடைய ஆரம்ப கால சுலோகன்களில் ஒன்று, “சோப், சூப், சால்வேஷன்” என்பதாக சுவிசேஷ பாரம்பரியத்தில் உடல்நலமும் மருந்தும் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. அதன் பிறகு லூயி பாஸ்டரும் மற்றவர்களும் நோய்க்கும் பாக்டீரியாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதை ஆணித்தரமாக காண்பித்தபோது, அது மேம்பட்ட சுகாதார திட்டங்களை வகுக்க இன்னுமதிக உத்வேகத்தை அளித்தது, அதற்கு விஞ்ஞான ஆதாரத்தையும் தந்தது.
சில உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உதாரணத்திற்கு, சாட்சி கூண்டில் நிற்பவர் பைபிளை முத்தமிட்டு சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் நீக்கப்பட்டது; மேலும் பள்ளிகளிலும் இரயில் நிலையங்களிலும் பொது டம்ளரில் தண்ணீர் குடிப்பது தடை செய்யப்பட்டது. மத ஆராதனைக் கூட்டங்களில் பொது பூசை பாத்திரங்களில் திராட்சரசம் அருந்துவதற்கு பதிலாக தனித்தனி கப்புகள் கொடுக்கப்பட்டன. சுத்தத்தைப் பற்றிய மக்களின் மனநிலையை மாற்றும் விஷயத்தில் இந்த ஆரம்பகால முன்னோடிகள் ஓரளவு வெற்றி பெற்றதாக தெரிகிறது. மக்களின் மனநிலையில் பெருமளவு மாற்றத்தைப் பார்த்த ஒரு எழுத்தாளர் “சுத்தத்தின்மீது அளவிலா மோகம் ஏற்பட்டிருக்கிறது” என குறிப்பிட்டார்.
ஆனால் ‘சுத்தத்தின்மீது ஏற்பட்ட இந்த அளவிலா மோகம்’ மேலோட்டமானதே. சீக்கிரத்தில் வியாபாரிகள் சாதாரண சோப்பை ஒரு அழகு சாதனமாக மாற்றிவிட்டனர். குறிப்பிட்ட சுகாதார பொருட்களை பயன்படுத்தினால் சமுதாய அந்தஸ்து கிடைக்கும் என்றும் மற்றவர்களை பொறாமைப்பட வைக்கும் என்றும் சாமர்த்தியமாக தயாரிக்கப்பட்ட விளம்பரங்கள் நுகர்வோரை நம்ப வைத்தன. டெலிவிஷனும் இந்த கற்பனையை வளர்க்கிறது. விளம்பரங்களிலும் சீரியல்களிலும் வரும் பிரபலங்கள் வீட்டை சுத்தம் செய்வது போல, முற்றத்தைப் பெருக்குவது போல, குப்பைகளை பொறுக்குவது போல, பூனைகள், நாய்கள் என தங்கள் செல்லப்பிராணிகளின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்வது போல காட்டப்படுவது அபூர்வமே.
வெளியில் போய் வேலைசெய்தால் வாழ்க்கை செலவுகளுக்கு பணம் கிடைக்கும், ஆனால் வீட்டிலேயே இருந்து சுத்தப்படுத்திக் கொண்டும் மற்ற வேலைகளை செய்துகொண்டும் இருந்தால் என்ன லாபம் என்று நினைப்பவர்களும் இருக்கின்றனர். பண ரீதியில் லாபம் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை என்பதால் ஏன் சுற்றுப்புறத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதன் காரணமாக, நம்மை சுத்தமாக வைத்துக்கொண்டாலே போதும் என இன்று சிலர் நினைக்கின்றனர்.
சுத்தத்தைப் பற்றிய கடவுளின் நோக்கு
சுத்தத்தைக் கற்றுக்கொடுக்க ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளால் மக்களின் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. சொல்லப்போனால், சுத்தம் அப்படிப்பட்ட முன்னேற்றத்திற்கு கண்டிப்பாக வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாம்; ஏனெனில் அது பரிசுத்தமும் தூய்மையும் நிறைந்த கடவுளாகிய யெகோவாவின் ஒரு குணம், அது அவரிடமிருந்தே தோன்றியது. நம்முடைய எல்லா வழிகளிலும் பரிசுத்தமாயும் சுத்தமாயும் இருந்து அதனால் பயனடையும்படி அவர் நமக்குக் கற்பிக்கிறார்.—ஏசாயா 48:17; 1 பேதுரு 1:15.
யெகோவா தேவன் இந்த விஷயத்தில் மிகச் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார். சுத்தமும் காணக்கூடாத அவருடைய மற்ற குணங்களும் காணக்கூடிய படைப்பில் தெளிவாக காணப்படுகின்றன. (ரோமர் 1:20) படைப்புதானே நிரந்தரமாக எந்த தூய்மைக் கேட்டையும் உண்டுபண்ணுவது கிடையாது என்பதை நம்மால் காண முடிகிறது. சூழியல் சுழற்சிகள் பலவற்றைக் கொண்ட இந்தப் பூமி தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்ளும் அதிசய படைப்பாகும்; சுத்தமான, ஆரோக்கியமான வாழ்விற்காக அது வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சுத்தமான படைப்பு சுத்தமான மனதுள்ள வடிவமைப்பாளர் ஒருவரிடமிருந்து மட்டுமே வரமுடியும். அப்படியென்றால், கடவுளை வணங்குவோர் தங்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
சுத்தத்தின் நான்கு அம்சங்கள்
கடவுளுடைய வணக்கத்தார் கடைப்பிடிக்க வேண்டிய சுத்தத்தின் நான்கு அம்சங்களை பைபிள் அடையாளம் காட்டுகிறது. இவை ஒவ்வொன்றையும் நாம் ஆராயலாம்.
ஆன்மீகம். இதுதான் எல்லா சுத்தத்திலும் மிகவும் முக்கியமான சுத்தம். ஏனென்றால் ஒருவர் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வது இதையே சார்ந்திருக்கிறது. ஆனால் இந்தச் சுத்தம்தான் மிக அதிகமாக அசட்டை செய்யப்படுகிறது. எளிமையாக சொல்ல வேண்டுமானால், ஆன்மீகத்தில் சுத்தமாயிருப்பது என்றால் உண்மை மதத்திற்கும் பொய் மதத்திற்கும் இடையே கடவுள் வரைந்திருக்கும் அந்தக் கோட்டை ஒருபோதும் தாண்டாதிருப்பதாகும். ஏனென்றால் எந்த விதமான பொய் வணக்கத்தையும் அவர் அசுத்தமானதாகவே கருதுகிறார். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்”கொள்வேன். (2 கொரிந்தியர் 6:17) சீஷனாகிய யாக்கோபும்கூட இந்த விஷயத்தை திட்டவட்டமாக சொல்கிறார்: ‘உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறது பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.’—யாக்கோபு 1:27.
பொய் வணக்கத்தை மெய் வணக்கத்தோடு கலப்பதை கடவுள் அறவே வெறுப்பதை மிகவும் தெளிவாக காட்டியிருக்கிறார். பொய் வணக்கத்தில் அசுத்தமான பழக்க வழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன, அருவருப்பான விக்கிரகங்களும் கடவுட்களும் வணங்கப்படுகின்றனர். (எரேமியா 32:35) இதன் காரணமாகவே மெய் வணக்கத்தாருக்கு அசுத்தமான வணக்கத்தில் எந்த ஈடுபாடும் கூடாது என்று சொல்லப்படுகிறது.—1 கொரிந்தியர் 10:20, 21; வெளிப்படுத்துதல் 18:4.
ஒழுக்கம். இதிலும்கூட எது சுத்தம் எது அசுத்தம் என்ற விஷயத்தை கடவுள் மிகவும் தெளிவாக கூறியுள்ளார். மொத்தத்தில் பார்த்தால், எபேசியர் 4:17-19-ல் விவரிக்கப்பட்டுள்ளபடியே இந்த உலகம் இருக்கிறது: “அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, . . . தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.” ஒழுக்கங்கெட்ட இப்படிப்பட்ட சிந்தனைகள், வெளிப்படையாகவும் சரி மறைமுகமாகவும் சரி, அநேக வழிகளில் வெளிப்படுகின்றன; ஆகவே கிறிஸ்தவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
உடலை விற்பதும், ஓரினப்புணர்ச்சியும், திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்வதும், ஆபாசங்களும் யெகோவாவின் ஒழுக்க தராதரங்களை மீறும் செயல்கள் என்பதை கடவுளை நேசிப்பவர்கள் அறிவார்கள். ஆனால் பொழுதுபோக்கு, ஃபாஷன் உலகில் இதெல்லாம் சர்வசாதாரணமாக காணப்படுகின்றன. ஆகவே கிறிஸ்தவர்கள் இந்தப் போக்கைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவர்ச்சியாகவும் அரைகுறையாகவும் உடுத்திக்கொண்டு கிறிஸ்தவ கூட்டங்களுக்கு அல்லது சமூக கூட்டுறவுகளுக்குச் செல்லும்போது, அது உடல் மீது தேவையற்ற கவனத்தை ஈர்க்கிறது, ஒழுக்கம் குறைவுபடுவதையும் வெளிப்படுத்துகிறது. மேலும், கிறிஸ்தவ கூட்டுறவுக்குள் அசுத்தமான உலக சிந்தையைக் கொண்டு வருவதோடு மற்றவர்கள் மனதில் அசுத்தமான எண்ணங்கள் தோன்ற காரணமாகிறது. இந்த விஷயத்தில் கிறிஸ்தவர்கள் ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தைக்’ காட்டுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.—யாக்கோபு 3:17.
மனம். உங்கள் உள்மனம் அசுத்தமான எண்ணங்களின் சேமிப்பு கிடங்காக இருக்கக் கூடாது. அசுத்தமான எண்ணங்களைக் குறித்து இயேசு இவ்வாறு எச்சரித்தார்: “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று.” (மத்தேயு 5:28; மாற்கு 7:20-23) இந்த வார்த்தைகள் ஆபாசமான படங்களையும் திரைப்படங்களையும் பார்ப்பதற்கும், கீழ்த்தரமான பாலுறவு செயல்களைப் பற்றி வாசிப்பதற்கும், இரட்டை அர்த்தமுள்ள பாடல் வரிகளை கவனித்து கேட்பதற்கும்கூட பொருந்தும். இதன் காரணமாக கிறிஸ்தவர்கள் அசுத்தமான, பரிசுத்தமற்ற பேச்சுக்கும் செயலுக்கும் காரணமாயிருக்கும் அசுத்தமான எண்ணங்களில் லயித்திருப்பதன் மூலம் தங்களை கறைபடுத்தாதபடிக்கு இவற்றை தவிர்க்க வேண்டும்.—மத்தேயு 12:34; 15:18.
உடல். பைபிளில் பரிசுத்தமும் உடல் சுத்தமும் நெருக்கமாக தொடர்புபடுத்தப்பட்டு பேசப்படுகிறது. உதாரணமாக, பவுல் இவ்வாறு எழுதினார்: “பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1) ஆகவே உண்மை கிறிஸ்தவர்கள் சூழ்நிலைகள் அனுமதிக்கும் அளவு, தங்கள் உடல், வீடு, சுற்றுப்புறம் ஆகியவற்றை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க பாடுபட வேண்டும். சுத்தம் செய்ய அல்லது குளிக்க தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் இடங்களில்கூட சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்க தங்களால் முடிந்த மிகச் சிறந்ததை செய்ய முயல வேண்டும்.
உடல் சுத்தம், எந்த வகையிலும் புகையிலையை பயன்படுத்துவதையும், அளவுக்கு அதிகமாக குடிப்பதையும், எந்த வகையான போதை பொருட்களை துஷ்பிரயோகம் செய்வதையும் தவிர்ப்பதைக்கூட அர்த்தப்படுத்தும். இவை உடலை அசுத்தப்படுத்தி அதை கெடுத்துவிடுகின்றன. உன்னதப்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ள மேய்ப்பன், சூலேமித்திய பெண்ணின் உடையிலிருந்து வந்த நறுமணத்தை நுகர்ந்து மகிழ்ந்தான். (உன்னதப்பாட்டு 4:11) தனிப்பட்டவர்களாக நம் சுத்தத்தைக் குறித்து கவனமாயிருப்பது அன்பான காரியம், ஏனென்றால் நம் உடல் துர்நாற்றத்தால் மற்றவர்களை தர்மசங்கடப்படுத்த நாம் விரும்புவதில்லை. சென்டுகளும் வாசனை திரவியங்களும் இன்பம் தருவதாக இருக்கலாம், ஆனால் இவை தவறாமல் குளிப்பதையும் சுத்தமான உடைகளையும் மாற்றீடு செய்திட முடியாது.
சமநிலையான ஒரு கருத்து
உடல் சுத்தத்திற்கு வரும்போது மக்கள் மிதமிஞ்சிப் போய்விடக்கூடும். சுத்தத்தை அளவுக்கதிகமாக கடைப்பிடித்தால் வாழ்வதில் இருக்கும் சந்தோஷத்தை அது பறித்துவிடலாம். மதிப்புமிக்க பெரும்பாலான நேரத்தையும் எடுத்துக்கொள்ளலாம். மறுபக்கத்தில், வீடு அசுத்தமாகவும் பராமரிக்கப்படாமலும் இருந்தால், அதை பழுதுபார்ப்பதற்கு அதிக செலவாகலாம். இந்த இரு மிதமிஞ்சிய நிலைகளுக்கும் இடையே இருப்பதுதான் நடைமுறையான, சமநிலையான நோக்குநிலை; நம்முடைய வீட்டை சுத்தமாகவும் பார்க்க அழகாகவும் வைத்திருப்பதில் இந்த சமநிலைதான் தேவைப்படுகிறது.
எளிமையாக வைத்திருங்கள். தாறுமாறாக வைக்கப்பட்டிருக்கும் வீடுகளை அல்லது அறைகளை சுத்தம் செய்வது கஷ்டம். பொருட்கள் அடைந்து கிடக்கும் இடங்களில் சுத்தப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல. எளிமையாக, ஒழுங்காக வைக்கப்பட்டுள்ள வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு அதிக நேரமெடுக்காது. எளிமையான வாழ்க்கை முறையையே பைபிள் அதிகமாக சிபாரிசு செய்கிறது: “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.”—1 தீமோத்தேயு 6:8.
நேர்த்தியாக வைத்திருங்கள். வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது அதில் வசிக்கும் அனைவரின் பொறுப்பாகவும் இருக்கிறது. பெரும்பாலும் அறைகள் ஒழுங்காக வைக்கப்படாவிட்டால் வீடும் ஒழுங்காக இருக்காது. நேர்த்தி என்பது எல்லா பொருட்களும் அதனதின் இடத்தில் இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. உதாரணமாக, படுக்கை அறையின் தரையில் அழுக்கு துணிகளை போட்டுவைக்கக் கூடாது. அதைவிட விளையாட்டு பொருட்களும் கருவிகளும் ஆங்காங்கே கிடந்தால் அது மிகவும் ஆபத்தானதாக அமையும். ஒழுங்கில்லாத பழக்க வழக்கங்களால்தான் வீட்டில் பல விபத்துக்கள் நிகழுகின்றன.
சுத்தமும் கிறிஸ்தவ வாழ்க்கை முறையும் பிரிக்க முடியாத வகையில் பின்னிப்பிணைந்திருப்பது தெளிவாக தெரிகிறது. தேவ பயமுள்ள வாழ்க்கையை “பரிசுத்த வழி” என ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார். “தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை” என்ற முக்கியமான கருத்தையும் அவர் அதோடு சேர்க்கிறார். (ஏசாயா 35:8) ஆம், கடவுள் வெகு விரைவில் சுத்தமான ஒரு பரதீஸிய பூமியை ஏற்படுத்தப்போகிறார் என்ற அவருடைய வாக்குறுதியை நாம் விசுவாசிக்கிறோம் என்பதற்கு சுத்தமான நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொள்வது இப்போது பலமான அத்தாட்சி அளிக்கிறது. அந்தச் சமயத்தில், இந்த அழகிய கிரகத்தின் எல்லா பகுதிகளிலும் யெகோவா தேவனுடைய பரிபூரணமான சுத்த தராதரங்களை மக்கள் முழுமையாக கடைப்பிடிப்பதன் மூலம் அவரை மகிமைப்படுத்துவார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9.
[பக்கம் 6-ன் படம்]
வீட்டை சுத்தமாக வைத்திருப்பது அதில் வசிக்கும் அனைவரின் பொறுப்பு
[பக்கம் 7-ன் படம்]
பூமி தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்ளும் ஓர் அதிசயம்