சுத்தம் ஏன் முக்கியம்?
தொற்றுநோய்களும் கொள்ளைநோய்களும் காலம் காலமாகவே மனிதரை வாட்டி வதைத்திருக்கின்றன. இவை கடவுளுடைய கோபத்திற்கு அடையாளம் என்றும், கெட்டவர்களைத் தண்டிப்பதற்காக அவர் இவற்றைப் பயன்படுத்துகிறார் என்றும் சிலர் நினைத்தார்கள். இப்படிப்பட்ட கொள்ளைநோய்களுக்குக் காரணமான “கள்வர்களை,” பல நூற்றாண்டுகளாகப் பொறுமையோடும் சிரத்தையோடும் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் காட்டிக்கொடுத்திருக்கின்றன; நம் கூடவே குடியிருக்கும் சின்னஞ்சிறு ஜீவிகளே அந்தக் கள்வர்கள்.
எலிகள், சுண்டெலிகள், கரப்பான் பூச்சிகள், ஈக்கள், கொசுக்கள் ஆகிய அந்த ஜீவிகளே நோய்களை ‘வாரி வழங்கும் கொடையாளிகள்’ என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். சுத்தமும் சுகாதாரமும் இல்லாததால் மக்கள் தொற்றுநோய்களைத் தாங்களே விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள் என்பதையும் அவர்கள் கண்டுபிடித்தார்கள். ஆகவே, வாழ்வா சாவா என்பது நாம் எந்தளவுக்குச் சுத்தமாக இருக்கிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது என்று சொல்லலாம்.
பொதுவாக, மக்கள் தங்களுடைய பழக்கவழக்கங்களுக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கும் ஏற்ப வெவ்வேறு விதங்களில் சுத்தத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். குழாய்த் தண்ணீர் இல்லாத இடங்களில், அல்லது கழிவுநீரை முறையாக அகற்றும் வசதி இல்லாத இடங்களில் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது படு கஷ்டம்! என்றாலும், எப்படியெல்லாம் சுத்தமாயிருக்க வேண்டுமென்ற கட்டளைகளைப் பூர்வ இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்தார்; அப்போது அவர்கள் வனாந்தரத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதற்கு அது மிக மிகக் கஷ்டமான சூழ்நிலையாக இருந்தது.
சுத்தத்திற்குக் கடவுள் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்? சுத்தத்தைக் குறித்த சரியான கண்ணோட்டம் என்ன? நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அடிக்கடி நோய்வாய்ப்படாமல் இருப்பதற்குச் சின்னச் சின்ன விஷயங்களில்கூட எப்படி எச்சரிக்கையாக இருக்கலாம்?
கேமரூன் நாடு.. ஒரு சாதாரண வீடு.. குட்டிப் பையன் ஜான்a பள்ளி முடிந்து வீட்டிற்கு வருகிறான்.. பசியோடும் தாகத்தோடும் விறுவிறுவென்று வருகிறான்.. முதல் வேலையாகத் தன் செல்ல நாய்க்குட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கொஞ்சுகிறான்.. புத்தகப் பையைச் சாப்பாட்டு மேஜைமீது வீசிவிட்டு தடாலென்று உட்காருகிறான்.. ‘அம்மா பசிக்கிறது’ என்று குரல் கொடுக்கிறான்.
மகனின் குரலைக் கேட்டு, சமையலறையிலிருந்து அம்மா எட்டிப் பார்க்கிறார்.. சுடச்சுட சாப்பாடு போட்டு எடுத்துவருகிறார்.. சுத்தமான மேஜைமீது மகனின் புத்தகப் பை கிடப்பதைப் பார்க்கிறார்.. அம்மாவின் முகம் மாறுகிறது. மகனை முறைத்துவிட்டு, மெதுவாக, “ஜா. . . . . . ..ன்!” என்று மட்டும் சொல்கிறார்.. ஜானுக்குப் புரிந்துவிட்டது.. சட்டென்று பையை அங்கிருந்து எடுத்துவிடுகிறான்.. கைகழுவ ஓட்டமாய் ஓடுகிறான்.. கைகழுவிவிட்டு அவசர அவசரமாக மேஜையிடம் வருகிறான்.. “சாரிம்மா . . . மறந்துட்டேன்!” என்று முணுமுணுக்கிறான்.
அக்கறையுள்ள ஒரு தாய், குடும்பத்தாரின் சுத்தம் சுகாதாரத்திற்காக எவ்வளவோ செய்யலாம்; என்றாலும், குடும்பத்தார் அனைவருமே அதற்கு ஒத்துழைக்க வேண்டும். சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியிருக்கிறது; அதற்காகச் சளைக்காமல் முயற்சி எடுக்க வேண்டும், பிள்ளைகளுக்குச் சதா சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்; இதைத்தான் ஜானின் உதாரணம் காட்டுகிறது.
உணவு மாசுபடுவதற்குப் பல காரணங்கள் இருப்பது ஜானின் அம்மாவுக்குத் தெரியும். அதனால்தான், உணவுப் பொருள்களைத் தொடுவதற்குமுன் மறக்காமல் தன் கைகளைக் கழுவுகிறார், ஈக்களால் தொற்று ஏற்படாமல் இருக்க உணவை மூடியும் வைக்கிறார். உணவை அப்படியே திறந்து போடாமல் இருப்பதன் மூலமும், வீட்டைச் சுத்தம் சுகாதாரத்தோடு பராமரிப்பதன் மூலமும் எலிகள், சுண்டெலிகள், கரப்பான் பூச்சிகள் ஆகியவற்றால் தொற்று ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறார்.
ஜானின் அம்மா ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு ஒரு முக்கியக் காரணம், அவர் கடவுளைச் சந்தோஷப்படுத்த நினைப்பதே. அவர் கூறுகிறார்: “கடவுள் பரிசுத்தராக இருப்பதால் அவருடைய மக்களும் பரிசுத்தராக இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.” (1 பேதுரு 1:16) “பரிசுத்தத்திற்கும் சுத்தத்திற்கும் சம்பந்தமிருக்கிறது. அதனால்தான் என் வீடும் சுத்தமாய் இருக்க வேண்டும், என் வீட்டிலுள்ளவர்களும் சுத்தமாய் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்; என் குடும்பத்தார் எல்லாருமே ஒத்துழைப்பதால்தான் இதையெல்லாம் என்னால் செய்ய முடிகிறது” என்றும் அவர் கூறுகிறார்.
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அவசியம்
ஜானின் அம்மா சொல்வதைப் போலவே, குடும்ப சுகாதாரத்தைக் கட்டிக்காக்கிற பொறுப்பு குடும்பத்திலுள்ள எல்லாருக்குமே இருக்கிறது. எனவே, சிலர் குடும்பமாக உட்கார்ந்து, தங்கள் வீட்டை உள்ளேயும் வெளியேயும் எப்படிச் சுத்தமாக வைக்கலாம் என்றும், அதற்கு இன்னும் என்ன செய்யலாம் என்றும் அவ்வப்போது கலந்துபேசுகிறார்கள். இப்படிப் பேசுவது, அவர்களுடைய குடும்ப ஒற்றுமையை மேம்படுத்துகிறது, குடும்பத்திலுள்ள எல்லாருடைய நலனுக்காக அவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் என்பதை நினைப்பூட்டிக்கொள்ள வாய்ப்பளிக்கிறது. உதாரணமாக, சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறைக்குப் போய்வந்த பின்பும், ரூபாய் நோட்டு போன்ற எதையாவது கையில் தொட்ட பின்பும் ஏன் கைகழுவ வேண்டுமென்று பெரிய பிள்ளைகளுக்குத் தாய் சொல்லிக் கொடுக்கலாம். தம்பி தங்கைகளும் அப்படியே செய்கிறார்களா இல்லையா என்பதைப் பின்பு அந்தப் பிள்ளைகள் பார்த்துக்கொள்ளலாம்.
வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்குக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்யலாம். ஒவ்வொரு வாரமும் வீட்டைச் சுத்தம் செய்யவும், வருடத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ வீட்டிலுள்ள எல்லாச் சாமான்களையும் எடுத்துப்போட்டுச் சுத்தம் செய்யவும் தீர்மானிக்கலாம். வீட்டின் சுற்றுப்புறத்தை எவ்வாறு சுத்தமாக வைக்கலாம்? சுற்றுச்சூழல் ஆர்வலர் ஸ்டியூவர்ட் எல். உடால் அமெரிக்காவைக் குறித்துக் கவலை தெரிவித்தார்: “நம் நாட்டில் அழகு மறைந்து வருகிறது; அசிங்கம் பெருகி வருகிறது; காலி இடம் குறுகி வருகிறது; தூசுகளாலும், மாசுகளாலும், இரைச்சல்களாலும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலே பாழாகிவிட்டது.”
நீங்கள் வசிக்கும் பகுதியின் சுற்றுச்சூழலும் அப்படித்தான் இருக்கிறதென்று நினைக்கிறீர்களா? அந்தக் காலத்திலெல்லாம், மக்களின் கவனத்தைக் கவருவதற்காக ஒருவர் மணி அடித்துச் சத்தமாகச் செய்தி அறிவிப்பது வழக்கமாக இருந்தது. தெருக்களைக் கூட்டும்படியும், சாக்கடைகளிலுள்ள குப்பைகூளங்களை அகற்றும்படியும், மரக்கிளைகளைக் கத்தரிக்கும்படியும், களைகளைப் பிடுங்கும்படியும், குப்பைகூளங்களை அப்புறப்படுத்தும்படியும் அவர் அறிவிப்பார்; மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள சில நகரங்களில் இன்றும்கூட இந்த வழக்கம் இருக்கிறது.
குப்பைகூளங்களை அப்புறப்படுத்துவது ஓர் உலகளாவிய பிரச்சினையாகிவிட்டது; பல அரசாங்கங்களுக்கு அது ஒரு சிம்மசொப்பனமாகவே ஆகிவிட்டது. சில நகராட்சிகள் கழிவுப்பொருள்களைச் சரிவர அகற்றாமல் விட்டுவிடுவதால் குப்பைகூளங்கள் தெருக்களில் சேர்ந்துவிடுகின்றன. அதனால் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் தோள்கொடுக்கும்படி அதிகாரிகள் உள்ளூர்வாசிகளைக் கேட்டுக்கொள்ளலாம். கிறிஸ்தவர்கள், அரசாங்க சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிற நல்ல குடிமக்களாக இருப்பதால் முகம் சுளிக்காமல் அப்பணியில் ஈடுபடுவதற்கு முதல் ஆளாக நிற்கிறார்கள். (ரோமர் 13:3, 5-7) இவ்விஷயத்தில், எதிர்பார்க்கப்படுவதைவிட அதிகமாகச் செய்ய அவர்கள் மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டுமென்ற அக்கறை தங்களுக்கு இருப்பதால் ஒருவர் வந்து தங்களுக்கு நினைப்பூட்டும்வரை காத்திராமல், தாங்களாகவே முன்வந்து சுத்தம் செய்கிறார்கள். நல்ல பயிற்சியும் பொறுப்புணர்வும் இருந்தால்தான் சுத்தத்தைக் காக்க முடியுமென்பதை அவர்கள் புரிந்திருக்கிறார்கள். அப்படிச் சுத்தம் காப்பதற்கு, தனிநபராகவும் குடும்பமாகவும் முயற்சி எடுக்க வேண்டும். மக்கள் தங்களுடைய வீட்டின் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்குக் கொஞ்சம் கவனம் செலுத்தினால் அவர்களுடைய உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, அவர்கள் வசிக்கிற பகுதியும் அழகுடன் மிளிரும்.
சுத்தமான தோற்றம் நமது கடவுளுக்கு மகிமை சேர்க்கிறது
சுத்தமான, கண்ணியமான தோற்றம் நமது வணக்கத்தின் பாகமாக இருக்கிறது, மற்றவர்களின் கவனத்தைப் பெரும்பாலும் ஈர்க்கிறது. பிரான்சிலுள்ள டௌலூஸ் நகரில் யெகோவாவின் சாட்சிகளது மாநாடு ஒன்று நடந்தது; அதில் கலந்துகொண்டவர்களில் இளைஞரும் இளைஞிகளுமாகச் சுமார் 15 பேர் ஓர் உணவகத்திற்குச் சென்றார்கள். அவர்கள் சத்தம்போட்டுப் பேசுவார்கள் என்றும், கிண்டலடித்துத் தொல்லை கொடுப்பார்கள் என்றும் அருகே உணவருந்திக்கொண்டிருந்த வயதான ஒரு தம்பதியர் நினைத்தார்கள்; நேர்த்தியாக உடையணிந்திருந்த அந்த இள வயதினரோ ஒருவருக்கொருவர் மரியாதையோடு நடந்துகொண்டார்கள், இனிமையாக உரையாடினார்கள்; இதைக் கண்ட அந்தத் தம்பதியர் ஆச்சரியப்பட்டுப்போனார்கள். அந்த இளைஞர் கூட்டம் அங்கிருந்து கிளம்பிய சமயத்தில் அத்தம்பதியர் அவர்களது நல்நடத்தையைப் பாராட்டினார்கள், அவர்களில் ஓர் இளைஞரிடம், ‘இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பார்ப்பது அபூர்வம்!’ என்றும் சொன்னார்கள்.
யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்களையும் அச்சகங்களையும் குடியிருப்புக் கட்டிடங்களையும் பார்க்கச் செல்பவர்கள் அவையெல்லாம் பளிச்சென்று சுத்தமாக இருப்பதைப் பார்த்துப் பெரும்பாலும் மனம் நெகிழ்ந்துபோகிறார்கள். இந்த இடங்களில் தங்கியிருந்து வேலை செய்கிற வாலண்டியர்கள் சுத்தமான உடைகளை உடுத்தும்படியும், நாள்தவறாமல் குளிக்கும்படியும் எதிர்பார்க்கப்படுகிறார்கள். உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் வெறுமனே ‘பாடி-ஸ்பிரே,’ ‘சென்ட்’ ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் பிரயோஜனம் இல்லை. முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிற இந்த வாலண்டியர்கள், மாலை நேரத்திலோ வாரக் கடைசியிலோ தங்கள் அக்கம்பக்கத்தாரிடம் நற்செய்தியை அறிவிக்கச் செல்கிறார்கள்; அச்சமயங்களில், நேர்த்தியான அவர்களுடைய தோற்றத்தைக் கண்டு பலர் அவர்கள் சொல்கிற செய்தியைக் காதுகொடுத்துக் கேட்கிறார்கள்.
“கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்”
‘கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றும்படி’ கிறிஸ்தவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். (எபேசியர் 5:1) “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று தேவதூதர்கள் கடவுளைத் துதித்துப் பாடியதை ஒரு தரிசனத்தில் கண்ட ஏசாயா தீர்க்கதரிசி அதைப் பதிவுசெய்து வைத்தார். (ஏசாயா 6:3) தூய்மையிலும் சுத்தத்திலும் கடவுள் நிகரற்று விளங்குவதையே இது படம்பிடித்துக் காட்டுகிறது. அதனால்தான் தமது ஊழியர்கள் எல்லாரும் பரிசுத்தமாய் இருக்க வேண்டுமெனக் கடவுள் எதிர்பார்க்கிறார். எனவே, “நான் பரிசுத்தர், அதனால் நீங்களும் பரிசுத்தராக இருக்க வேண்டும்” என்று அவர்களிடம் சொல்கிறார்.—1 பேதுரு 1:16.
‘நேர்த்தியாக உடை உடுத்தும்படி’ கிறிஸ்தவர்களை பைபிள் அறிவுறுத்துகிறது. (1 தீமோத்தேயு 2:9) “பளபளப்பான, சுத்தமான நார்ப்பட்டு ஆடை,” கடவுளுடைய பரிசுத்தமான ஊழியர்களது நீதியான செயல்களைக் குறிக்கிறதென வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்வதில் ஆச்சரியமில்லை. (வெளிப்படுத்துதல் 19:8) ஆனால், பாவத்தைக் கறையோடு அல்லது அழுக்கோடு பைபிள் அடிக்கடி சம்பந்தப்படுத்திப் பேசுகிறது.—நீதிமொழிகள் 15:26; ஏசாயா 1:16; யாக்கோபு 1:27.
இன்று உடல் ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் தங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள சில இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் சதா போராட வேண்டியுள்ளது. கடவுள் ‘எல்லாவற்றையும் புதிதாக்கப்போகிற’ சமயத்தில் இந்தப் பிரச்சினைக்கு விடிவுகாலம் பிறக்கும். (வெளிப்படுத்துதல் 21:5) அந்த வாக்குறுதி நிறைவேறும்போது, எல்லாவித அசிங்கமும் அசுத்தமும் தடம்தெரியாமல் போய்விடும். (w08 12/1)
[அடிக்குறிப்பு]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.
[பக்கம் 10-ன் பெட்டி]
சுத்தத்தைக் கடவுள் எதிர்பார்க்கிறார்
பெருந்திரளான இஸ்ரவேலர் வனாந்தரத்தில் பயணித்தபோது, மலஜலம் கழிக்கும் விஷயத்தில் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். (உபாகமம் 23:12-14) அவர்கள் ஒரு பெரிய இடத்தில் முகாமிட்டிருந்ததால், அந்த அறிவுரைப்படி நடப்பது அவர்களுக்குச் சிரமமாக இருந்திருக்கும்; ஆனாலும் அப்படி நடந்ததால், டைஃபாய்டு காய்ச்சல், காலரா போன்ற தொற்றுநோய்களிலிருந்து நிச்சயமாகவே அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்.
உயிரற்ற உடலில் எந்தப் பொருளாவது பட்டுவிட்டால், அதைக் கழுவ வேண்டும், அல்லது அழித்துவிட வேண்டும் என்பதாக அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள். அதற்கான காரணத்தை அவர்கள் புரிந்துகொள்ளா விட்டாலும், தொற்று ஏற்பட்டு நோய்க்கு ஆளாகாதவாறு தங்களைப் பாதுகாத்துக்கொண்டார்கள்.—லேவியராகமம் 11:32-38.
ஆசரிப்புக் கூடாரத்தில் ஆசாரியர்கள் தங்கள் பணிகளைச் செய்யத் தொடங்குவதற்கு முன்பு தங்களுடைய கைகளை மட்டுமின்றி கால்களையும் கழுவ வேண்டியிருந்தது. இதற்காக வெண்கலத் தொட்டியில் தண்ணீரை நிரப்ப வேண்டியிருந்தது; இது எளிதான வேலையாக இருந்திருக்காது. ஆனாலும், கண்டிப்பாக அப்படிச் செய்ய வேண்டியிருந்தது.—யாத்திராகமம் 30:17-21.
[பக்கம் 11-ன் பெட்டி]
ஒரு மருத்துவரின் ஆலோசனைகள்
உயிர் வாழ நமக்குத் தண்ணீர் அத்தியாவசியமானதுதான்; அதுவே மாசடைந்த தண்ணீரானால் நம்மை நோய்க்கு ஆளாக்கி விடும், நம் உயிருக்கே உலை வைத்துவிடும். கேமரூனிலுள்ள டியூவாலா துறைமுகத்தில் மருத்துவத் துறைத் தலைவரான டாக்டர் ஜே. எம்பாங்கே லோபே அளித்த பேட்டியில் நடைமுறையான ஆலோசனைகளைக் கொடுத்தார்.
“ப்ளீச்சை அல்லது பிற ரசாயனங்களைப் போட்டுத் தண்ணீரைச் சுத்தமாக்கலாம், ஆனால் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் ஆபத்தாகிவிடலாம்” என்று அவர் எச்சரித்தார். அதோடு, “சந்தேகமாக இருந்தால், குடிநீரைக் கொதிக்க வையுங்கள். சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறைக்குப் போய்வந்த பின்பும் சோப்புப் போட்டுக் கைகளைக் கழுவுங்கள். சோப்பு வாங்குவதற்கு அதிகம் செலவாகாது என்பதால் ஏழைபாழைகள்கூட அதை வாங்க முடியும். உங்கள் துணிமணிகளைத் தவறாமல் துவையுங்கள்; சருமத் தொல்லைகளும் நோய்களும் இருந்தால் சுடுதண்ணீரில் துவையுங்கள்” என்றெல்லாம் தெரிவித்தார்.
“குடும்பத்தார் அனைவருமே வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பெரும்பாலும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யாமலே விட்டுவிடுவதால் அங்கே கரப்பான் பூச்சிகளும் ஈக்களும் பெருகிவிடுகின்றன” என்றும் அவர் தெரிவித்தார். பிள்ளைகள் சம்பந்தமாக அவர் கொடுத்த ஒரு முக்கிய எச்சரிக்கை: “உங்கள் வீட்டுப் பக்கத்திலுள்ள குளம் குட்டைகளில் குளிப்பது ஆபத்தானது! அவற்றில் நோய் பரப்பும் கிருமிகள் ஏராளமாக இருக்கின்றன. இரவு படுக்கப் போவதற்குமுன் குளியுங்கள், நன்கு பல் துலக்குங்கள், கொசு வலைக்குள் தூங்குங்கள்.” நீங்கள் முன்கூட்டியே யோசிப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும், பிரச்சினையைத் தவிர்ப்பதற்குமே இந்த ஆலோசனையெல்லாம் கொடுக்கப்படுகிறது.
[பக்கம் 10-ன் படம்]
துணிமணிகளைத் துவைப்பது சருமத் தொல்லைகளிலிருந்தும் நோய்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும்
[பக்கம் 10-ன் படம்]
கிறிஸ்தவர்கள் தாங்களே முன்வந்து சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்கிறார்கள்
[பக்கம் 10-ன் படம்]
அக்கறையுள்ள ஒரு தாய், குடும்பத்தாரின் சுத்தம் சுகாதாரத்திற்காக எவ்வளவோ செய்யலாம்