வாழ்க்கை சரிதை
சகிப்புத்தன்மையையும் விடாமுயற்சியையும் யெகோவா எங்களுக்கு கற்பித்தார்
அரிஸ்டாட்டலிஸ் அப்பாஸ்டோலீடிஸ் சொன்னபடி
காகஸஸ் மலைகளின் வடக்கு மலையடிவாரத்தில் பியாடிகார்ஸ்க் நகரம் அமைந்துள்ளது. இது தாது நீரூற்றுகளுக்கும் மிதமான தட்பவெப்பத்துக்கும் பெயர்பெற்ற ஒரு ரஷ்ய நகரம். இங்குதான் 1929-ல் கிரேக்க அகதிகளுக்கு நான் பிள்ளையாக பிறந்தேன். பத்து ஆண்டுகளுக்குப்பின், ஸ்டாலினின் கொள்கைப்படி நடந்த சுத்திகரிப்பு, பயங்கரவாதம், இன ஒழிப்பு ஆகியவற்றால் திணறிக்கொண்டிருந்த நாங்கள் மறுபடியும் அகதிகளானோம், ஏனென்றால் கட்டாயத்தின்பேரில் கிரீஸுக்கு இடம் மாறிச் செல்ல வேண்டியதாயிற்று.
கிரீஸில் பிரேயஸ் என்ற இடத்தில் நாங்கள் குடியேறியபின், “அகதிகள்” என்ற வார்த்தைக்கு எங்களுக்கு முழுவதும் புதிய அர்த்தம் கிடைத்தது. நாங்கள் ஒரேயடியாக அந்நியமாக உணர்ந்தோம். என் அண்ணனுக்கும் எனக்கும் சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில் என்ற இரண்டு பிரபல கிரேக்க தத்துவஞானிகளின் பெயர் வைக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பெயர்களை வைத்து யாரும் எங்களை கூப்பிடவில்லை. குட்டி ரஷ்யர்கள் என்றே எல்லாரும் எங்களை அழைத்தார்கள்.
இரண்டாம் உலகப் போர் வெடிக்க ஆரம்பித்த பின் என்னுடைய அருமை தாயார் இறந்துவிட்டார்கள். வீட்டில் அவர்களைச் சுற்றியே எங்கள் வாழ்க்கை இருந்தது, ஆகவே இது எங்களுக்கு பேரிடி. சில காலமாக அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த காரணத்தால், வீட்டு வேலைகள் பலவற்றை செய்ய எனக்கு கற்றுக்கொடுத்திருந்தார்கள். இந்தப் பயிற்சி என் வாழ்க்கையில் பிற்காலத்தில் மிகவும் பிரயோஜனமாக இருந்தது.
போரும் விடுதலையும்
போர், நாசிக்களின் ஆக்கிரமிப்பு, நேச நாடுகளின் ஓயாத குண்டு மழை—இதனால் ஒவ்வொரு விடியலும் எங்களுக்கு கடைசி விடியலாக தோன்றியது. வறுமை, பசி, மரணம் தலைவிரித்தாடின. 11 வயதிலிருந்தே எங்கள் மூவரின் பிழைப்புக்காகவும் நான் அப்பாவோடு சேர்ந்து மாடாக உழைக்க வேண்டியிருந்தது. கிரேக்க மொழி அறிவு எனக்கு மிகவும் குறைவாக இருந்ததும் போரும் அதன் பின்விளைவுகளும் கல்வி கற்பதற்கு தடையாக இருந்தன.
கிரீஸில் ஜெர்மானியர்களின் ஆக்கிரமிப்பு அக்டோபர் 1944-ல் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு சிறிது காலத்திற்குள் எனக்கு யெகோவாவின் சாட்சிகளோடு பழக்கம் ஏற்பட்டது. மனமுடைந்து துயரத்தில் இருந்த அந்தக் காலங்களில் கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றி பைபிள் கொடுத்த நம்பிக்கை என் இருதயத்தைத் தொட்டது. (சங்கீதம் 37:29) இங்கே பூமியில் சமாதானமான நிலைமைகளின்கீழ் முடிவில்லாத வாழ்க்கைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதி என் காயங்களுக்கு அருமருந்தாக இருந்தது. (ஏசாயா 9:7) யெகோவாவுக்கு செய்திருந்த ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக என்னுடைய அப்பாவும் நானும் 1946-ல் முழுக்காட்டுதல் பெற்றோம்.
அடுத்த வருடமே, விளம்பர ஊழியர் (பிற்காலங்களில் பத்திரிகை ஊழியர்) என்ற முதல் நியமனத்தை பிரேயஸில் ஏற்படுத்தப்பட்ட இரண்டாவது சபையில் நான் பெற்றேன். எங்கள் பிராந்தியம் ப்ரெய்வ்ஸிலிருந்து இல்யூஸிஸ் வரை சுமார் 50 கிலோமீட்டர் தூரம் பரந்திருந்தது. அந்தச் சமயத்தில் ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் அநேகர் சபைகளில் சேவை செய்துவந்தார்கள். அவர்களோடு சேர்ந்து வேலை செய்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பிரசங்க வேலையை செய்வதற்கு தேவைப்படும் கடுமையான முயற்சிகளைப் பற்றி எங்களுக்குச் சொல்ல எத்தனை எத்தனையோ அனுபவங்கள் அவர்களிடம் இருந்தன. ஆகவே அவர்களோடு சேர்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுடைய வாழ்க்கையை பார்த்தபோது, யெகோவாவை உண்மையுடன் சேவிப்பதற்கு பொறுமையும் விடாமுயற்சியும் நிறைய வேண்டும் என்பது எனக்கு தெளிவாக புரிந்தது. (அப்போஸ்தலர் 14:22) இன்று இந்தப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் இருப்பதை எண்ணிப் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது!
எதிர்பாராத ஒரு சவால்
கொஞ்ச காலத்துக்குப்பின், பட்ரஸ் நகரில் எலினி என்ற அழகான, வைராக்கியமுள்ள ஒரு இளம் கிறிஸ்தவ பெண்ணை நான் சந்தித்தேன். 1952-ன் முடிவில் எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்குப்பின், எலினி கடுமையாய் நோய்வாய்ப்பட்டாள். டாக்டர்கள் அவளுக்கு மூளையில் கட்டி இருப்பதாக கண்டுபிடித்தார்கள், அவளுடைய நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. உடனடியாக ஆபரேஷன் செய்தாக வேண்டிய நிலை. அப்போதெல்லாம் இன்றிருப்பது போல வசதிகள் கிடையாது. ஆகவே எங்கள் மத நம்பிக்கைகளை மதித்து இரத்தமில்லாமல் ஆபரேஷன் செய்ய முன்வந்த ஒரு டாக்டரை மிகவும் சிரமப்பட்டு ஆதன்ஸில் கண்டுபிடித்தோம். (லேவியராகமம் 17:10-14; அப்போஸ்தலர் 15:28, 29) நல்லபடியாக ஆபரேஷன் முடிந்ததாக டாக்டர்கள் சொன்னாலும், அது திரும்ப வராது என்று அவர்கள் உறுதியாக கூறவில்லை.
இந்த நிலைமையில் நான் என்ன செய்வேன்? சூழ்நிலை இப்போது மாறிவிட்டபடியால் திருமண நிச்சயத்தை முறித்துக்கொண்டு அதிலிருந்து என்னை விடுவித்துக்கொள்வேனா? இல்லை! திருமண நிச்சயம் செய்தபோது நான் உறுதிமொழி அளித்திருந்தேன், ஆம் என்பது ஆம் என்பதாகவே இருக்க வேண்டும் என்று நினைத்தேன். (மத்தேயு 5:37, NW) என் எண்ணத்தை மாற்றிக்கொள்வதற்கு சிறிதும் இடம் கொடுக்கவில்லை. எலினியின் அக்காவின் கவனிப்பில் அவள் ஓரளவு குணமடைந்தபோது நாங்கள் டிசம்பர் 1954-ல் திருமணம் செய்துகொண்டோம்.
மூன்று வருடங்களுக்குப்பின் எலினிக்கு திரும்பவும் கட்டி வளர்ந்தது. அதே டாக்டர் இன்னொரு ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்தது. கட்டியை முழுவதுமாக அகற்றிவிட இந்த முறை கொஞ்சம் ஆழமாக ஆபரேஷன் செய்தார். இதன் காரணமாக, பேச்சை கட்டுப்படுத்தும் என் மனைவியின் மூளை பகுதி மோசமாக பாதிப்படைந்தது. இப்போது எங்களுக்கு வேறுபல சிக்கலான பிரச்சினைகள் புதிதாக முளைத்தன. சிறிய வேலையை செய்வதற்குக்கூட என் அருமை மனைவி மிகவும் சிரமப்பட்டாள். அவள் நிலைமை மோசமாகியதால் அன்றாட வேலையில் பெரிய மாற்றங்களை நாங்கள் செய்ய வேண்டியதாயிற்று. எல்லாவற்றுக்கும் மேலாக, சகிப்புத்தன்மையும் விடாமுயற்சியும் மிகுதியாக தேவைப்பட்டன.
இப்போதுதான் அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்த வீட்டு வேலைகள் மிகவும் உதவியாக இருந்தன. ஒவ்வொரு நாளும் அதிகாலையிலே எழுந்து சமையலுக்கு வேண்டிய அனைத்தையும் தயாராக வைத்துவிடுவேன், எலினி எழுந்து சமைத்துவிடுவாள். முழுநேர ஊழியர்கள், நாங்கள் பைபிள் படிப்பு நடத்திக்கொண்டிருந்த மாணாக்கர்கள், சபையில் ஏழ்மையிலிருந்த உடன் கிறிஸ்தவர்கள் உட்பட பலரையும் நாங்கள் அடிக்கடி வீட்டுக்கு அழைத்து உபசரித்தோம். சாப்பாடு மிகவும் ருசியாக இருந்ததாக இவர்கள் எல்லாரும் சொல்வார்கள்! வீட்டு வேலைகளை எலினியும் நானும் சேர்ந்தே செய்து வீட்டை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருந்தோம். இந்த சிரமமான வாழ்க்கை 30 வருடங்களுக்குத் தொடர இருந்தது.
பலம் குறைந்தாலும் வைராக்கியம் குறையவில்லை
யெகோவா மீது என் மனைவி வைத்திருந்த அன்பையும் ஊழியத்தின் மீது அவளுக்கு இருந்த வைராக்கியத்தையும் எதுவுமே குறைத்துவிடவில்லை என்பதை கவனித்தபோது நானும் மற்றவர்களும் மிகவும் நெகிழ்ந்து போனோம். கொஞ்ச காலத்துக்குப்பின், விடாது முயற்சி செய்ததன் விளைவாக எலினி சில வார்த்தைகளின் உதவியுடன் கொஞ்சம் பேச ஆரம்பித்தாள். தெருவில் போகும் மக்களிடம் பைபிளிலுள்ள நற்செய்தியை சொல்வது அவளுக்கு மிகவும் பிடித்த விஷயம். வியாபார வேலையாக வெளியில் செல்லும்போதெல்லாம், அவளை என் கூடவே அழைத்துச் சென்று ஜன சந்தடி அதிகமுள்ள நடைபாதைக்கு அருகே காரை நிறுத்திவிடுவேன். அங்கே கடந்து செல்கிறவர்களிடம் காவற்கோபுரம், விழித்தெழு! பிரதிகளை காரின் ஜன்னல் வழியாக கொடுப்பாள். ஒரு சமயம் இரண்டே மணிநேரத்தில் 80 பிரதிகளை கொடுத்துவிட்டாள். சபையில் தங்கிவிட்ட எல்லா பழைய பத்திரிகைகளையும் அவள் பெரும்பாலும் இவ்வாறு கொடுத்துவிடுவாள். மற்றவிதமான பிரசங்க ஊழியத்திலும் எலினி தவறாமல் ஈடுபட்டாள்.
அவள் சுகமில்லாதிருந்த எல்லா வருடங்களும் என்னோடு தவறாமல் கூட்டங்களுக்கு வந்துவிடுவாள். ஒரு மாநாட்டையும் அசெம்பிளியையும் தவறவிட மாட்டாள். கிரீஸில் யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்பட்டதால், இம்மாநாடுகளுக்காக நாங்கள் வெளி நாடு செல்ல வேண்டியிருந்தாலும் வந்துவிடுவாள். அவளுக்கிருந்த உபாதைகளின் மத்தியிலும் அவள் ஆஸ்திரியா, ஜெர்மனி, சைப்ரஸ், இன்னும் மற்ற நாடுகளில் நடந்த மாநாடுகளுக்கும் சந்தோஷமாக வந்தாள். எலினி ஒருபோதும் குறைகூறவில்லை, தன்னை மற்றவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றுகூட அதிகம் எதிர்பார்க்கவில்லை. யெகோவாவின் சேவையில் நான் கூடுதலான பொறுப்புகளை கவனிக்க வேண்டிய சமயங்களில் அவளுக்கு அசெளகரியங்கள் ஏற்பட்டபோதிலும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாள்.
என்னைப் பொறுத்தவரை, இது சகிப்புத்தன்மையிலும் விடாமுயற்சியிலும் நீண்ட கால கல்வியாக எனக்கு அமைந்தது. பல சமயங்களில் யெகோவாவின் உதவிக்கரங்களை நான் அனுபவித்தேன். முடிந்தவரை எங்களுக்கு உதவியாக இருக்க சகோதர சகோதரிகள் உண்மையில் பல தியாகங்களைச் செய்தார்கள். டாக்டர்களும் எங்களை தயவாக ஆதரித்தார்கள். அந்த கஷ்டமான காலங்களில், என்னுடைய சூழ்நிலையில் ஒரு முழுநேர வேலையை செய்ய என்னால் முடியாதபோதிலும் வாழ்க்கையின் அத்தியாவசியமான தேவைகளில் எங்களுக்கு குறையே இல்லை. யெகோவாவின் அக்கறைகளும் ஊழியமுமே எப்போதும் முதலிடத்தில் இருந்தன.—மத்தேயு 6:33.
இந்த கஷ்டமான காலங்களை எப்படி சமாளித்தோம் என்பதாக பலர் என்னை கேட்டிருக்கிறார்கள். பைபிளை தனிப்பட்ட விதமாக படித்ததும், கடவுளிடம் மனம் திறந்து ஜெபித்ததும், கிறிஸ்தவ கூட்டங்களில் தவறாமல் ஆஜராயிருந்ததும், பிரசங்க வேலையில் வைராக்கியமாக பங்குகொண்டதுமே எங்களுடைய சகிப்புத்தன்மையையும் விடாமுயற்சியையும் பலப்படுத்தியிருக்கின்றன என்று சொல்ல வேண்டும். சங்கீதம் 37:3-5-ல் (தி.மொ.) உள்ள உற்சாகமூட்டும் வார்த்தைகள் எப்போதும் எங்கள் மனதில் இருந்தன: “யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்; . . . யெகோவாவில் மனமகிழ்ச்சியாயிரு; . . . உன் வழியை யெகோவாவுக்கு ஒப்புவி; அவரில் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.” எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த மற்றொரு வசனம் சங்கீதம் 55:22 (தி.மொ.): “யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்.” முழுமையாக தன் அப்பாவை நம்பும் ஒரு சிறு குழந்தையைப் போல, நாங்கள் எங்கள் பாரத்தை யெகோவாமீது வைப்பதோடு, அவரிடமே அதை விட்டுவிட்டோம்.—யாக்கோபு 1:6.
1987, ஏப்ரல் 12-ஆம் தேதி, என்னுடைய மனைவி எங்கள் வீட்டுக்கு முன்னால் பிரசங்கித்துக்கொண்டிருக்கும் போதே ஒரு பெரிய இரும்பு கதவு டமாரென்று மூடி, அவளை நடைபாதையில் தள்ளிவிட, அவள் படுகாயமடைந்தாள். இதனால் அடுத்த மூன்று வருடங்கள் கோமா நிலையில் இருந்தாள். 1990-ன் ஆரம்பத்தில் அவள் உயிர் பிரிந்தது.
முடிந்தளவு சிறந்தமுறையில் யெகோவாவை சேவித்தல்
1960-ல், ப்ரெய்வ்ஸில் நிக்கேயா என்ற இடத்தில் சபை ஊழியராக சேவிக்கும் நியமனத்தை நான் பெற்றேன். அப்போதிலிருந்து, ப்ரெய்வ்ஸில் மற்ற பல சபைகளில் ஊழியம் செய்யும் பாக்கியமும் எனக்கு கிடைத்துள்ளது. எனக்கென்று சொந்தமாக பிள்ளைகள் இல்லாவிட்டாலும், என்னுடைய ஆவிக்குரிய பிள்ளைகள் பலர் சத்தியத்தில் ஸ்திரப்பட்டவர்களாவதற்கு உதவிசெய்யும் சந்தோஷம் எனக்கு கிடைத்திருக்கிறது. அவர்களில் சிலர் இப்போது சபை மூப்பர்களாக, உதவி ஊழியர்களாக, பயனியர்களாக, பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களாக சேவை செய்கிறார்கள்.
1975-ல் கிரீஸில் மீண்டும் குடியாட்சி வந்த பிறகு யெகோவாவின் சாட்சிகளுக்கு மாநாடுகளை நடத்த முழு சுதந்திரம் கிடைத்ததால், இனிமேலும் காடுகளில் மறைந்துகொண்டு அவற்றை நடத்த வேண்டிய நிலை இருக்கவில்லை. வெளி நாடுகளில் மாநாடுகளை ஒழுங்கமைப்பதில் எங்களில் சிலருக்கு கிடைத்திருந்த அனுபவம் இப்போது கைகொடுத்தது. ஆகவே பல வருடங்களாக பல்வேறு மாநாட்டு கமிட்டிகளில் சேவை செய்யும் சந்தோஷமும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.
அதன்பிறகு 1979-ல், ஆதன்ஸின் புறநகர் பகுதியில் கிரீஸின் முதல் மாநாட்டு மன்றத்தைக் கட்டுவதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டன. இந்த மாபெரும் கட்டுமான பணியில் உதவிசெய்து இதை பூர்த்தியாக்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. இந்த வேலைக்கும்கூட நிறைய சகிப்புத்தன்மையும் விடாமுயற்சியும் தேவையாக இருந்தது. தன்னலமின்றி தியாகங்களை செய்த நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகளோடு மூன்று வருடங்களாக வேலை பார்த்ததால் எங்கள் மத்தியில் அன்பும் ஐக்கியத்தின் கட்டும் மிகவும் பலப்பட்டது. இந்த கட்டுமான பணியைப் பற்றிய இனிய நினைவுகள் என் நெஞ்சை விட்டு நீங்காதவை.
சிறை கைதிகளின் ஆன்மீக தேவைகளை திருப்தி செய்தல்
சில வருடங்கள் கழித்து வாய்ப்பென்னும் புதிய கதவு திறந்தது. என் சபையின் பிராந்தியத்துக்கு அருகே காரிடாலாஸில் கிரீஸின் மிகப் பெரிய சிறைச்சாலை அமைந்துள்ளது. ஏப்ரல் 1991 முதற்கொண்டு, யெகோவாவின் சாட்சிகளின் ஒரு ஊழியனாக வாரத்திற்கு ஒரு முறை இந்த சிறைச்சாலைக்கு செல்ல நியமனம் கிடைத்தது. அங்கே ஆர்வமுள்ள கைதிகளுக்கு பைபிள் படிப்புகளையும் கிறிஸ்தவ கூட்டங்களையும் நடத்த எனக்கு அனுமதி கிடைத்தது. அவர்களில் அநேகர் பெரிய மாற்றங்களைச் செய்து கடவுளுடைய வார்த்தை எத்தனை வல்லமையுள்ளது என்பதை நிரூபித்துள்ளார்கள். (எபிரெயர் 4:12) இது சிறை பணியாளர்களையும் மற்ற கைதிகளையும்கூட கவர்ந்துள்ளது. பைபிளை என்னோடு படித்த சில கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் இப்போது நற்செய்தியை அறிவிப்பவர்களாக இருக்கிறார்கள்.
பேர்போன போதைப்பொருள் டீலர்கள் மூவருக்கு சிலகாலமாக நான் பைபிள் படிப்பு நடத்தினேன். ஆவிக்குரிய விதத்தில் அவர்கள் முன்னேற்றம் செய்தார்கள். பைபிள் படிப்புக்காக வரும்போதே, சவரம் செய்து, தலையை நேர்த்தியாக சீவி, ஷர்ட்டும் டையும் அணிந்து வந்தார்கள்—அதுவும் கிரீஸில் மிகவும் உஷ்ணமாக இருக்கும் ஆகஸ்ட் மாத மத்தியில்! சிறைச்சாலையின் டைரக்டர், தலைமை வார்டன், அங்கே வேலைசெய்யும் சிலர் ஆகியோர் தங்கள் அலுவலகங்களிலிருந்து வேகமாக வந்து இந்தக் காட்சியை பார்ப்பார்கள். அவர்களால் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை!
சிறைச்சாலையில் பெண்கள் பகுதியில் உற்சாகமூட்டும் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றிருந்த ஒரு பெண்ணோடு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அவள் கலகம் செய்வதற்கு பேர்போனவள். ஆனால் அவள் கற்றுக்கொண்டிருந்த பைபிள் சத்தியம் சீக்கிரத்திலேயே குறிப்பிடத்தக்க மாற்றங்களை அவளில் ஏற்படுத்தியது. சிங்கம் போல இருந்தவள் ஆட்டுக்குட்டியாக மாறிவிட்டாள் என்று பலர் கூறினார்கள்! (ஏசாயா 11:6, 7) சிறைச்சாலை டைரக்டரின் மரியாதையையும் நம்பிக்கையையும் சீக்கிரத்தில் பெற்றாள். அவள் ஆவிக்குரிய முன்னேற்றங்களைச் செய்து தன்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கும் அளவுக்கு வந்ததைக் கண்டு நான் சந்தோஷப்பட்டேன்.
பலவீனருக்கும் முதியோருக்கும் உதவுதல்
என் மனைவி நீண்ட காலமாக நோயோடு போராடியதை பார்த்த அனுபவத்தின் காரணமாக எங்கள் மத்தியில் வியாதியாயும் முதியோராயும் இருந்தவர்களுடைய தேவைகளைக் குறித்து அதிக உணர்வுள்ளவனாய் இருந்தேன். இப்படிப்பட்டவர்களுக்கு அன்புடன் உதவ முன்வரும்படி நம்முடைய பிரசுரங்களில் வரும் கட்டுரைகள் ஒவ்வொரு சமயம் உற்சாகப்படுத்தியபோதும், எனக்கு புதுத் தெம்பே வந்துவிடும். இந்தக் கட்டுரைகள் பொக்கிஷமாக இருந்தன, அவற்றை நான் சேர்த்து வைத்தேன். சில வருடங்கள் கழித்துப்பார்த்தால், நூறு பக்கங்களுக்கு மேல் நான் சேர்த்து வைத்திருந்தேன். ஜூலை 15, 1962 காவற்கோபுரம் இதழில் வெளியான “முதிர்வயதுள்ளவர்கள், உபத்திரவப்படுகிறவர்கள் மீது கரிசனை” என்ற கட்டுரையிலிருந்து சேர்க்க ஆரம்பித்திருந்தேன். ஒவ்வொரு சபையும் நோயாளிகளுக்கும் வயோதிபருக்கும் உதவியளிக்க ஒழுங்கான ஏற்பாடு செய்வது மிகவும் நல்லது என்பதை இந்தக் கட்டுரைகளில் பல சுட்டிக்காட்டின.—1 யோவான் 3:17, 18.
சபையில் வியாதியாய் இருப்பவர்கள், வயோதிகர் ஆகியோரின் தேவைகளை கவனித்துக் கொள்வதற்காக சகோதர சகோதரிகள் அடங்கிய ஒரு வாலண்டியர் குழுவை மூப்பர்கள் ஏற்பாடு செய்தார்கள். வாலண்டியர்களை பல்வேறு குழுக்களாக நாங்கள் பிரித்தோம்—பகல் நேரத்தில் உதவி செய்ய முடிகிறவர்கள், இரவு நேரத்தில் வேலை செய்ய முடிகிறவர்கள், போக்குவரத்து ஏற்பாட்டை கவனித்துக் கொள்பவர்கள், 24 மணிநேரமும் உதவ முன்வருகிறவர்கள். இந்தக் கடைசி குழுவினர், ஒருவித பறக்கும் படையைப் போல செயல்பட்டார்கள்.
இந்த முயற்சிகளால் வந்த பலன்கள் மிகவும் உற்சாகமளிப்பதாக இருந்திருக்கின்றன. உதாரணமாக, தனியாக வாழ்ந்து வந்த நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு சகோதரியை வழக்கம் போல தினமும் பார்க்கச் சென்ற ஒரு வாலண்டியர், அவர் தரையில் நினைவிழந்து கிடப்பதைக் கண்டார். அவர் வீட்டுக்கு அருகில் கார் வைத்திருந்த ஒரு சகோதரிக்கு தகவல் சொல்லி அனுப்பினோம். பத்தே நிமிடங்களில் அந்தச் சகோதரி இவர்களை அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு காரில் அழைத்துச் சென்றார்! இதனால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள்.
பலவீனமானவர்களும் வயதானவர்களும் அவர்களுக்குக் காட்டும் நன்றியுணர்வு மிகவும் திருப்தியை அளிக்கிறது. கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையில் வித்தியாசமான சூழ்நிலைகளில் இந்தச் சகோதர சகோதரிகளோடு வாழப்போகிறோம் என்ற நம்பிக்கை இதயத்துக்கு இதமாக உள்ளது. கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலங்களில் உதவியை பெற்றதால் அவர்கள் சகித்திருந்தார்கள் என்பதை அறிவது மற்றொரு வெகுமதியாக இருக்கிறது.
விடாமுயற்சியின் பலன்கள்
இப்போது நான் ப்ரெய்வ்ஸிலுள்ள ஒரு சபையில் மூப்பராக சேவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு வயதாகிவிட்டது, உடல்நல பிரச்சினைகளும் இருக்கின்றன, ஆனால் சபையின் நடவடிக்கைகளில் இன்னும் சுறுசுறுப்பாக ஈடுபட முடிவதால் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
என் வாழ்நாள் முழுவதும் சோதனைமிக்க சூழ்நிலைகள், கடினமான சவால்கள், எதிர்பாராத சம்பவங்கள் ஆகியவற்றை சமாளிக்க அளவுக்கு அதிகமான உறுதியும் விடாமுயற்சியும் தேவையாக இருந்திருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு தேவையான பலத்தை யெகோவா எனக்கு எப்போதும் கொடுத்துவந்திருக்கிறார். சங்கீதக்காரனின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை நான் பல தடவை என் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறேன்: “என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, யெகோவா, உமது கிருபை என்னைத் தாங்கினது; என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகும்போது உம்மால் வரும் ஆறுதல் என் ஆத்துமாவை மகிழச் செய்கிறது.”—சங்கீதம் 94:18, 19, தி.மொ.
[பக்கம் 25-ன் படம்]
இரண்டாவது ஆபரேஷனுக்குப்பின் 1957-ல் என் மனைவி எலினியோடு
[பக்கம் 26-ன் படம்]
1969-ல் ஜெர்மனியிலுள்ள நூரெம்பர்க்கில் ஒரு மாநாட்டில்
[பக்கம் 28-ன் படம்]
வியாதியஸ்தருக்கும் வயோதிகருக்கும் உதவிய சகோதர சகோதரிகள்