உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 2/15 பக். 8-12
  • பைசாண்டியத்தில் சர்ச்சும் அரசும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைசாண்டியத்தில் சர்ச்சும் அரசும்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ‘உலகத்தின் பாகமல்ல’
  • அரசியலும் பணத்தால் பதவியை வாங்குவதும்
  • பேரரசருக்கு பணிதல்
  • அரசியல் நோக்கங்களுக்காக கோட்பாடுகள்
  • கசப்பான அறுவடை
  • ஒரு மனித-கடவுளுக்குப் பக்தி ஏன்?
    விழித்தெழு!—1990
  • கிறிஸ்தவமண்டலம் எப்படி இந்த உலகத்தின் பாகமானது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • பகுதி 13: பொ.ச. 476 முதல் இருளிலிருந்து, “பரிசுத்தமான” ஒன்று
    விழித்தெழு!—1991
  • பகுதி 15: பொ.ச. 1095–1453 பட்டயத்திற்குத் திரும்புதல்
    விழித்தெழு!—1991
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 2/15 பக். 8-12

பைசாண்டியத்தில் சர்ச்சும் அரசும்

தமது சீஷர்களுக்கும் கடவுளிடமிருந்து விலகிய மனிதருக்கும் இடையில் இருக்க வேண்டிய முனைப்பான வித்தியாசத்தைக் குறித்து கிறிஸ்தவத்தின் ஸ்தாபகர் தெளிவாக கூறியுள்ளார்: “நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.” (யோவான் 15:19, பொ.மொ.) இயேசு தம்முடைய நாளிலிருந்த வல்லரசின் பிரதிநிதியாகிய பிலாத்துவிடம், “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல” என்றும் கூறினார்.​—⁠யோவான் 18:⁠36.

கிறிஸ்தவர்கள் “பூமியின் கடைக்கோடி மட்டும்” பிரசங்கிக்க வேண்டிய தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு, உலக விவகாரங்களால் திசை திருப்பப்படாதிருப்பது அவசியமாக இருந்தது. (அப்போஸ்தலர் 1:8, NW) இயேசுவைப் போலவே ஆரம்பகால கிறிஸ்தவர்களும்

அரசியலில் ஈடுபடமாட்டார்கள். (யோவான் 6:15) உண்மை கிறிஸ்தவர்கள் அரசாங்கத்தில் உயர்ந்த பதவியையோ நிர்வாக பொறுப்பையோ ஏற்காமல் இருந்தது அனைவருக்கும் தெரிந்திருந்தது. காலப்போக்கில் இந்நிலை மாறியது.

‘உலகத்தின் பாகமல்ல’

கடைசி அப்போஸ்தலனின் மறைவுக்குப்பின், மதத் தலைவர்கள் தங்களையும் உலகத்தோடுள்ள தங்கள் உறவையும் பற்றிய கருத்துக்களை தாங்களாகவே மாற்றிக்கொள்ள ஆரம்பித்தார்கள். இந்த உலகத்திற்குரியதாக மட்டுமின்றி, அதன் பாகமாகவும் இருக்கும் ஒரு “ராஜ்யத்தை” அவர்கள் கற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். பைசாண்டிய பேரரசில் மதமும் அரசியலும் எவ்வாறு பின்னிப்பிணைந்திருந்தன என்பதைப் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை நமக்கு பாடம் புகட்டுவதாக இருக்கும். இது பைசாண்டியத்தை (இப்போது இஸ்தான்புல்) தலைநகராக கொண்ட கிழக்கு ரோம பேரரசாகும்.

தொன்றுதொட்டே மதம் அதிக செல்வாக்கு செலுத்தி வந்த சமுதாயத்தில், பைசாண்டியத்தை மையமாக கொண்ட பைசாண்டிய சர்ச்தான் பெருமளவு அதிகாரம் செலுத்தி வந்தது. சர்ச் சரித்திராசிரியர் பானாயாட்டிஸ் கிறீஸ்டு ஒரு சமயம் இவ்வாறு கூறினார்: “பூமியிலிருக்கும் தங்கள் பேரரசுதான் கடவுளுடைய ராஜ்யத்தின் வெளிக்காட்டு என்று பைசாண்டிய மக்கள் நம்பினர்.” ஆனால் பேரரசின் அரசாங்க அதிகாரிகளோ இதை எப்போதும் ஆமோதிக்கவில்லை. இதனால் சில சமயங்களில் சர்ச்சுக்கும் அரசுக்கும் இடையே உறவு சுமுகமாக இருக்கவில்லை. தி ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷ்னரி ஆஃப் பைசாண்டியம் இவ்வாறு கூறுகிறது: “கான்ஸ்டான்டிநோபிளின் [அல்லது பைசாண்டியத்தின்] பிஷப்புகள், ஒவ்வொரு சமயமும் மனம்போல் நடந்துகொண்டார்கள், ஒரு சமயம் வலிமை வாய்ந்த அரசருக்கு கோழைத்தனமாக அடிபணிந்தார்கள் . . . மறுசமயம் தங்கள் லாபத்துக்காக அரசனுக்குத் தோள்கொடுத்தார்கள் . . , இன்னொரு சமயம் அரசனை தைரியமாக எதிர்த்து நின்றார்கள்.”

கான்ஸ்டான்டிநோபிளின் பிஷப்பாக இருந்த ஈஸ்டர்ன் சர்ச்சின் தலைவருடைய செல்வாக்கு கொடிகட்டிப் பறந்தது. அரசருக்கு அவரே முடிசூட்டியதால் ஆர்த்தடாக்ஸ் கொள்கைகளை அரசர் ஆதரிக்கும்படி எதிர்பார்த்தார். இவர் அதிக பணம் படைத்தவராகவும் இருந்தார், ஏனென்றால் சர்ச்சுக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்கள் இவர் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. பாமர மக்கள்மீது அதிகாரம் செலுத்தியதோடு எண்ணிலடங்கா துறவிகள்மீதும் பெரும் செல்வாக்கு செலுத்தினார்.

பேரரசனை அவரால் எதிர்க்க முடிந்தது. திருச்சபையிலிருந்து விலக்கப் போவதாக மிரட்ட முடிந்தது​—⁠கடவுளுடைய பெயரில் என சொல்லிக்கொண்டு தன் இஷ்டப்படி செயல்பட முடிந்தது⁠—⁠அல்லது, அரசர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கு வேறுசில முறைகளை கையாள முடிந்தது.

தலைநகருக்கு வெளியே அரசாங்கத்தின் நிர்வாகம் படிப்படியாக நலிவடைய தொடங்கியபோது, பிஷப்புகளின் கை ஓங்கியது. இவர்கள் நகரங்களில் மாகாண ஆளுநர்களுக்கு இணையான அதிகாரத்தைப் பெற்றனர், இந்த ஆளுநர்களை தேர்ந்தெடுப்பதிலும் பிஷப்புகளே உதவினர். சர்ச் சம்பந்தப்பட்ட​—⁠சில சமயங்களில் சர்ச் சம்பந்தப்படாத​—⁠நீதிமன்ற வழக்குகளிலும் உலக விவகாரங்களிலும் பிஷப்புகள் தலையிட்டனர். உள்ளூர் பிஷப்புகளுக்குக் கட்டுப்பட்டிருந்த பாதிரியார்கள், துறவிகள் ஆகியோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்ததுதான் இதற்கு முக்கிய காரணம்.

அரசியலும் பணத்தால் பதவியை வாங்குவதும்

மேற்குறிப்பிடப்பட்டபடி, எலும்பும் சதையும்போல மதகுரு பதவி அரசியலோடு பின்னிப்பிணைந்திருந்தது. அதுமட்டுமல்ல, பெரும் எண்ணிக்கையில் இருந்த மத குருக்களுக்கும் அவர்களுடைய மத நடவடிக்கைகளுக்கும் அதிக பணம் தேவைப்பட்டது. உயர் பதவியிலிருந்த பாதிரிமார் ஆடம்பரமாக வாழ்ந்தனர். சர்ச்சின் கையில் ஏகபோக அதிகாரமும் எக்கச்சக்கமான செல்வமும் புரளுகையில் அப்போஸ்தல வறுமையும் புனிதத்தன்மையும் அடியோடு மறைந்தே விட்டன. சில பாதிரிகளும் பிஷப்புகளும் பணம்கொடுத்து பதவியை ‘விலைக்கு வாங்கினர்.’ பணம்கொடுத்து பதவியைப் பெறும் இந்தப் பழக்கம் குருக்களாட்சியில் மேல்மட்டம் வரை சர்வசாதாரணமாக இருந்தது. தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி பதவியை விலைக்கு வாங்கும் செல்வந்தர்களின் ஆதரவு பெற்ற மதகுருக்கள் அரசரின் முன்னிலையில் சர்ச் பதவிகளுக்காக போட்டி போட்டனர்.

மூத்த மதத் தலைவர்களின் தயவைப் பெற லஞ்சமும் கொடுத்தார்கள். அரசி ஸோயீ (பொ.ச. 978-1050) சதித்திட்டம் தீட்டி தன் கணவர் மூன்றாம் ரோமேனஸை கொன்றுவிட்டு தன் காதலனும் வருங்கால அரசருமான நான்காம் மைக்கேலை மணமுடிக்க விரும்பியபோது, அவள் பிஷப் அலெக்ஸீயஸை அவசர அவசரமாக தன் அரண்மனைக்கு வரவழைத்தாள். அங்கே அவர் ரோமேனஸின் கொலையைப் பற்றியும் எதிர்பார்க்கப்பட்ட திருமண வைபவ ஆராதனை பற்றியும் அறிந்துகொண்டார். அன்று மாலை பெரிய வெள்ளி ஆராதனை சர்ச்சில் நடக்கவிருந்தபடியால் அலெக்ஸீயஸுக்கு நிலைமையை சமாளிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் அரசி அள்ளி வழங்கிய பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொண்டு அவள் விருப்பத்திற்கு அடிபணிந்தார்.

பேரரசருக்கு பணிதல்

பைசாண்டிய பேரரசின் வரலாற்றில் சில சமயங்களில் தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசனே கான்ஸ்டான்டிநோபிளின் பிஷப்பை தேர்ந்தெடுத்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அந்தச் சமயங்களில் யாரும் பேரரசரின் விருப்பத்திற்கு மாறாக பிஷப்பாக ஆகமுடியாது அல்லது அதிக நாட்களுக்கு பதவியில் நீடிக்க முடியாது.

பேரரசன் இரண்டாம் அன்ட்ரானக்கஸ் (1260-1332) ஒன்பது தடவை பிஷப்புகளை மாற்ற வேண்டியதாக இருந்தது. பிஷப்பின் ஸ்தானத்திலிருந்து அரசரின் சொல்படி நடக்க யார் அதிக மனமுள்ளவராக இருந்தாரோ அவரை நியமிப்பதே பெரும்பாலும் இவருடைய நோக்கமாக இருந்தது. த பைசாண்டைன்ஸ் என்ற புத்தகத்தின்படி, “தவறாகவே இருந்தாலும் [பேரரசரின்] உத்தரவின்படி நடக்கவும், அவருக்கு பிரியமில்லாத எதையும் செய்வதிலிருந்து விலகியிருக்கவும்” ஒரு பிஷப் எழுதிக் கொடுத்து சத்தியம் செய்தார். அரச குடும்பத்து இளவரசனை பிஷப்பாக நியமித்து தங்கள் விருப்பு வெறுப்புகளை சர்ச்சின்மீது திணிக்கவும் பேரரசர்கள் இரண்டு தடவை முயன்றனர். பேரரசன் முதலாம் ரோமேனஸ் 16 வயதே நிரம்பிய தன் மகன் தியாஃபைலாக்ட்டை பிஷப் பதவிக்கு உயர்த்தினார்.

அரசனுக்குப் பிரியமாக நடக்க பிஷப் தவறினால், அரசன் அவரை கட்டாய பதவி விலகல் செய்யவோ அல்லது அவரை பதவி நீக்கம் செய்யும்படி மத குருமார்களின் சபைக்கு உத்தரவிடவோ முடியும். பைசாண்டியம் என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “பிஷப்புகளை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் உயர் அதிகாரிகளின் செல்வாக்கும் அரசரின் நேரடி செல்வாக்கும் பெரும் பங்கு வகிப்பது பைசாண்டிய வரலாற்றில் அதிகமானது.”

பிஷப்பை அருகில் வைத்துக்கொண்டு பேரரசனே சர்ச் ஆலோசனைக் குழு கூட்டங்களையும் தலைமைதாங்கி நடத்தினார். விவாதங்களை நடத்தினார், மத கொள்கைகளை உருவாக்கினார், பிஷப்புகளோடும் முரண் சமய கோட்பாடுகளில் நம்பிக்கை வைத்திருந்தவர்களோடும் தர்க்கம் செய்தார், கடைசியில் முரண் சமய கோட்பாட்டாளர்களை தூக்கிலிடவும் செய்தார். ஆலோசனைக் குழு ஏற்றுக்கொண்ட கோட்பாடுகளை ஒப்புக்கொண்டு அமல்படுத்தியதும் பேரரசனே. தன்னை எதிர்த்தவர்களை ராஜதுரோகி என முத்திரை குத்தியதோடு அவர்களை சர்ச்சின் எதிரி, கடவுளின் எதிரி என்றும் அழைத்தார். “பேரரசனின் விருப்பத்துக்கும் உத்தரவுக்கும் மாறாக சர்ச் எதுவும் செய்யக் கூடாது” என்று ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பிஷப் கூறினார். அரசவையைச் சுற்றி வரும் பிஷப்புகள்​—⁠முகத்துக்கு எதிரே இனிக்க இனிக்கப் பேசும், எளிதில் இணங்கிச் செல்லும், சன்மானம் வழங்கி தந்திரமாக பேரம் பேசி தயவு தாட்சண்யம் காட்டப்படுகையில் தங்களை மறந்து செயல்படும் ஆட்கள்​—⁠பெரும்பாலும் அவர்களது மூத்த தலைவர்களைப் போலவே எதிர்க்கவே இல்லை.

உதாரணமாக, பிஷப் இக்னேஷியஸ் (பொ.ச. 799-878) முதலமைச்சர் பார்டாஸுக்கு புதுநன்மை கொடுக்க மறுத்தபோது அவர் கொதித்தெழுந்தார். இக்னேஷியஸை தேசதுரோகி எனவும் சதிகாரர் எனவும் குற்றம் சாட்டினார். இந்த பிஷப் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். இவருக்கு பதிலாக, தனக்கு வேண்டப்பட்ட ஃபோஷீயஸ் என்ற ஒரு பாமரனை தேர்தலில் வெற்றிபெற செய்து ஆறே நாட்களில் உயர்ந்த பிஷப் பதவியில் அமர்த்தினார். பிஷப் பதவிக்குரிய ஆன்மீக தகுதிகள் இவருக்கு இருந்தனவா? “அளவு கடந்த பேராசைக்காரன், பெரும் தலைகனம் பிடித்தவன், விஞ்ச முடியாத அரசியல் வித்தகன்” என்பதே இவரைப் பற்றி சொல்லப்பட்ட கருத்து.

அரசியல் நோக்கங்களுக்காக கோட்பாடுகள்

ஆர்த்தடாக்ஸ் கொள்கை, முரண் சமயக் கொள்கை ஆகியவற்றை பற்றிய விவாதங்கள் என்ற போர்வையில் அரசியல் எதிர்ப்புகள் செய்யப்பட்டன, பேரரசனுக்கு புதிய கோட்பாடுகளை அறிமுகப்படுத்துவதைவிட அரசியல் காரணிகளே முக்கியமாக இருந்தன. பொதுவாக பேரரசனே சர்ச்சின் கொள்கைகளை வகுத்து, சர்ச் அதற்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

உதாரணமாக, கிறிஸ்து எப்படிப்பட்டவர் என்பதன் சம்பந்தமாக எழுந்த கருத்து வேறுபாட்டை சரிசெய்ய பேரரசன் ஹெராக்ளியஸ் (பொ.ச. 575-641) கடும் முயற்சி எடுத்தார், ஏனென்றால் அது பலமிழந்து, பலவீனமடைந்திருந்த பேரரசில் பிளவை உண்டுபண்ணிவிடும் என்று அவர் பயந்தார். இதற்கு ஒரு முடிவுகட்ட மோனோதிலிட்டிசம் என்ற ஒரு புதிய கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார்.a தன் பேரரசின் தெற்கு பகுதியினுடைய ஆதரவை திரட்டுவதற்காக ஹெராக்ளியஸ் அலெக்ஸாந்திரியாவுக்கு சைரஸ் ஆஃப் ஃபேசிஸ் என்ற புதிய பிஷப்பை தெரிந்தெடுத்தார். அரசன் ஆதரித்த கோட்பாட்டையே இவர் உறுதிப்படுத்தினார். சைரஸை பிஷப்பாக மட்டுமல்லாமல் எகிப்தின் அதிகாரியாகவும் அந்தப் பேரரசன் நியமித்தார்; உள்ளூர் ஆட்சியாளர்கள்மீது இவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. கொஞ்சம் எதிர்ப்பு தலைதூக்கிய போதிலும், சைரஸ் எகிப்திய சர்ச்சின் பெரும்பான்மை ஆதரவை பெற்றுவிட்டார்.

கசப்பான அறுவடை

இந்த நிகழ்ச்சிகள் எவ்வாறு இயேசு ஜெபத்தில் சொன்ன வார்த்தைகளுக்கு இசைவாக இருக்க முடியும்? அவரைப் பின்பற்றுகிறவர்கள் ‘உலகத்தின் பாகமாக இருக்க மாட்டார்கள்’ என்றல்லவா அவர் கூறினார்?​—⁠யோவான் 17:14-16.

பைசாண்டிய காலங்களிலும் அதற்குப் பின்னும் கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டிக் கொண்ட தலைவர்கள் இவ்வுலகின் அரசியல், ராணுவ விவகாரங்களில் ஈடுபட்டதால் கசப்பான விளைவுகளை அறுவடை செய்திருக்கிறார்கள். சுருக்கமாக வரலாற்றை ஆராய்ந்ததிலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்? பைசாண்டிய சர்ச் தலைவர்கள் கடவுளின் மற்றும் கிறிஸ்துவின் தயவை சம்பாதித்துக் கொண்டார்களா?​—⁠யாக்கோபு 4:⁠4.

இப்படிப்பட்ட பேராசை பிடித்த மதத் தலைவர்கள், அவர்களுடைய அரசியல் கள்ளக் காதலர்கள் ஆகியோரால் உண்மை கிறிஸ்தவம் எந்தப் பயனும் அடையவில்லை. மதமும் அரசியலும் கைகோர்த்த இந்தப் புனிதமற்ற கலப்பினால் இயேசு கற்பித்த தூய்மையான மதம் தவறாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளது. வரலாற்றிலிருந்து படிப்பினையைக் கற்று ‘உலகத்தின் பாகமாக இல்லாதிருப்போமாக.’

[அடிக்குறிப்பு]

a கடவுளாகவும் மனிதனாகவும் இரு இயல்புகள் இருந்தாலும் கிறிஸ்துவின் சித்தம் ஒன்றே என்பதுதான் மோனோதிலிட்டிசம்.

[பக்கம் 10-ன் பெட்டி/படம்]

“விண்ணில் உலா வரும் கடவுள் போல”

சர்ச்சின் தலைவர் அரசாங்க அலுவல்களில் எந்தளவுக்கு தலையிடலாம், எந்தளவு புகழேணியில் ஏறலாம் ஆகியவற்றை பிஷப் மைக்கேல் செருலேரியஸ் (சுமார் 1000-1059) என்பவரின் விஷயத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். பிஷப்பான பின்பு செருலேரியஸ் இன்னும் உயர் பதவிபெற விரும்பினார். அவரை தலைக்கனம் பிடித்தவன், அகங்காரி, வளைந்துகொடுக்காதவன்​—⁠“விண்ணில் உலா வரும் கடவுள் போல நடந்துகொள்கிறான்” என்றெல்லாம் விவரித்தார்கள்.

தன் சுய முன்னேற்றத்துக்காக, 1054-⁠ல் செருலேரியஸுக்கு ரோமில் போப்போடு கருத்து வேற்றுமை ஏற்பட்டபோது விளைந்த விரிசலை ஊக்குவித்து பிரிவினையை ஏற்றுக்கொள்ளும்படி பேரரசனை கட்டாயப்படுத்தினார். இதில் வெற்றிபெற்ற சந்தோஷத்தில் செருலேரியஸ் ஆறாம் மைக்கேலை அரியணையில் ஏற்றி அதிகாரம் செலுத்த அவருக்கு உதவினார். ஒரு வருடம் கழித்து, செருலேரியஸ் அந்த அரசனை நீக்கிவிட்டு ஐசக் கொம்னினஸை (சுமார் 1005-1061) அரியணையில் அமர்த்தினார்.

பிஷப்புக்கும் பேரரசுக்கும் இடையே மோதல் தீவிரமானது. பொது மக்களின் ஆதரவு பெற்றிருந்த செருலேரியஸ் மிரட்டினார், உத்தரவு போட்டார், வன்முறையில் ஈடுபட்டார். அக்காலத்திலிருந்த ஒரு வரலாற்றாசிரியர் இவ்வாறு குறிப்பிட்டார்: “பேரரசனின் வீழ்ச்சியைக் குறித்து தயங்காமல் அசிங்கமான வார்த்தைகளில் ‘பயித்தியக்காரா, என்னால் தான் நீ இப்படி உயர்ந்தாய், நானே உன்ன அழிச்சிடுவேன்’ என்று சொன்னார்.” ஆனால் ஐசக் கொம்னினஸ் அவரை கைதுசெய்து, சிறையிலடைத்து இம்பிரோஸுக்கு நாடுகடத்திவிட்டார்.

இந்த உதாரணங்கள், கான்ஸ்டான்டிநோபிளின் பிஷப் எந்தளவுக்கு பிரச்சினையை உண்டுபண்ண முடியும், எத்தனை துணிச்சலோடு அரசனை எதிர்த்து நிற்க முடியும் என்பதையே காட்டுகின்றன. அரசியல் வித்தகர்களும் அரசனையும் ராணுவத்தையும் துணிந்து எதிர்க்கிறவர்களுமான இவர்கள் அரசனுக்கு தலைவலியாகவே இருந்தார்கள்.

[பக்கம் 9-ன் தேசப்படம்/படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

பைசாண்டிய பேரரசின் அதிகபட்ச எல்லை

ரவன்னா

ரோம்

மாசிடோனியா

கான்ஸ்டான்டிநோபிள்

கருங்கடல்

நைஸியா

எபேசு

அந்தியோகியா

எருசலேம்

அலெக்ஸாந்திரியா

மத்திய தரைக் கடல்

[படத்திற்கான நன்றி]

வரைபடம்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.

[பக்கம் 10, 11-ன் படங்கள்]

கொம்னினஸ்

மூன்றாம் ரோமேனஸ் (இடது)

நான்காம் மைக்கேல்

பேரரசி ஸோயீ

முதலாம் ரோமேனஸ் (இடது)

[படங்களுக்கான நன்றி]

கொம்னினஸ், மூன்றாம் ரோமேனஸ், நான்காம் மைக்கேல்: Courtesy Classical Numismatic Group, Inc.; பேரரசி ஸோயீ: Hagia Sophia; முதலாம் ரோமேனஸ்: Photo courtesy Harlan J. Berk, Ltd.

[பக்கம் 12-ன் படம்]

ஃபோஷீயஸ்

[பக்கம் 12-ன் படம்]

ஹெராக்ளியஸும் அவரது மகனும்

[படங்களுக்கான நன்றி]

ஹெராக்ளியஸும் அவரது மகனும்: Photo courtesy Harlan J. Berk, Ltd.; பக்கங்கள் 8-12-⁠ல் உள்ள டிஸைன்கள்: From the book L’Art Byzantin III Ravenne Et Pompose

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்