வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஓர் உண்மை கிறிஸ்தவர், சர்ச்சில் நடக்கும் சவ அடக்கத்திற்கு அல்லது திருமணத்திற்கு செல்வது சரியா?
நாம் எந்த விதமான பொய் வணக்க செயலில் பங்கெடுப்பதும் யெகோவாவிற்கு அருவருப்பானதால் அதை தவிர்க்க வேண்டும். (2 கொரிந்தியர் 6:14-17; வெளிப்படுத்துதல் 18:4) சர்ச்சில் நடக்கும் சவ அடக்கம் ஒருவித மத ஆராதனையே; அதில் பெரும்பாலும், ஆத்துமா அழியாமை, நல்லோர் அனைவரும் பரலோகத்திற்கு செல்வர் போன்ற வேதப்பூர்வமற்ற கருத்துக்களை ஆதரிக்கும் பிரசங்கம் கொடுக்கப்படலாம். சிலுவை போடுவது, பாதிரியார் செய்யும் ஜெபத்தில் சேர்ந்து கொள்வது போன்ற காரியங்களும் அச்சமயம் நடைபெறலாம். சர்ச்சிலோ வேறிடங்களிலோ மத முறைமைப்படி நடக்கும் திருமண வைபவத்தில், ஜெபங்களும் பைபிள் போதனைகளுக்கு விரோதமான மற்ற மத காரியங்களும் நடைபெறலாம். அப்போது, அந்தத் தவறான மத காரியங்களில் அனைவருமே ஈடுபடுவர். அந்தக் கூட்டத்தார் மத்தியிலிருக்கும் ஒரு கிறிஸ்தவருக்கு அவற்றில் பங்குகொள்ளும்படியான அழுத்தத்தை எதிர்ப்பது பெரும்பாடாக இருக்கலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை நாமே வருவித்துக்கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!
சர்ச்சில் நடக்கும் சவ அடக்கத்திற்கு அல்லது திருமணத்திற்கு போகும் கட்டாயம் இருப்பதாக ஒரு கிறிஸ்தவர் உணர்ந்தால் என்ன செய்வது? உதாரணமாக, விசுவாசத்தில் இல்லாத கணவன் அந்நிகழ்ச்சிக்குத் தன்னோடு வரும்படி தன் கிறிஸ்தவ மனைவியை வற்புறுத்தலாம். எதிலும் கலந்துகொள்ளாமல் வெறுமனே அவள் தன் கணவனோடு போய்விட்டு வருவது தவறா? எவ்வித மத சடங்குகளிலும் கலந்துகொள்ள போவதில்லை என உறுதியாயிருந்தாலும் தன் கணவனின் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்து அவரோடு செல்ல மனைவி தீர்மானிக்கலாம். மறுபட்சத்தில், அந்தச் சூழ்நிலையால் ஏற்படும் உணர்ச்சிப்பூர்வ அழுத்தத்தை தாங்க முடியாமல் கடவுளுடைய நியமங்களை மீறிவிடுவோமோ என நினைத்து அவள் செல்லாமலும் இருக்கலாம். எப்படியிருந்தாலும், அந்தத் தீர்மானத்தை அவளே செய்தாக வேண்டும். இருதயம் சஞ்சலப்படாமல், சுத்த மனசாட்சியைக் காத்துக்கொள்ளும்படி அவள் பார்த்துக்கொள்ள வேண்டும்.—1 தீமோத்தேயு 1:19.
போனாலும் சரி போகாவிட்டாலும் சரி, எவ்வித மத சடங்குகளிலும் மனசாட்சிக்கு விரோதமாக தன்னால் பங்குகொள்ள முடியாது, ஆராதனை கீதங்களை பாட முடியாது, ஜெபம் செய்யப்படுகையில் தலை குனிய முடியாது என்பதை தன் கணவனிடம் விளக்குவது நன்மை பயக்கும். இதையெல்லாம் அறிகையில், அவள் வருவது தனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கலாம் என கணவனே முடிவு செய்யலாம். மனைவியின் மீதுள்ள அன்பு, அவளுடைய நம்பிக்கைகளுக்கு காட்டும் மரியாதை அல்லது தர்மசங்கடத்தை தவிர்ப்பதற்கான விருப்பம் காரணமாக அவர் தனியாக செல்ல தீர்மானிக்கலாம். ஆனால், மனைவி தன்னோடு வரும்படி கணவன் வற்புறுத்தினால் கூடவே போய் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டு வரலாம்.
மத கட்டடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நாம் கலந்துகொள்வது சகவிசுவாசிகள்மீது என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் சிந்திக்க வேண்டும். அது சிலருடைய மனசாட்சியை புண்படுத்துமா? உருவ வழிபாட்டிலிருந்து விலகியிருப்பதற்கான அவர்களுடைய தீர்மானம் அதனால் பலவீனமடையுமா? “நீங்கள் குற்றமற்றவர்களாகவும் கிறிஸ்துவின் நாள்வரை மற்றவர்களை இடறலடைய செய்யாதவர்களாகவும் இருக்கும்படி அதி முக்கிய காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்” என அப்போஸ்தலன் பவுல் எச்சரிக்கிறார்.—பிலிப்பியர் 1:10, NW.
அது, நெருங்கிய உறவினர் வீட்டு நிகழ்ச்சியாக இருந்தால் வீட்டாரின் வற்புறுத்துதல் அதிகமாக இருக்கலாம். எவ்வாறாயினும், உட்பட்டுள்ள எல்லா அம்சங்களையும் ஒரு கிறிஸ்தவர் கவனமாக சீர்தூக்கி பார்க்க வேண்டும். சர்ச்சில் நடக்கும் சவ அடக்கத்தில் அல்லது திருமணத்தில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டு வருவதில் பிரச்சினையில்லை என சில சந்தர்ப்பங்களில் ஒரு கிறிஸ்தவர் முடிவு செய்யலாம். என்றாலும், அங்கு செல்வதால் உண்டாகும் நன்மையைவிட தனது மனசாட்சிக்கோ மற்றவர்களின் மனசாட்சிக்கோ ஏற்படும் பாதிப்பே அதிகமாயிருக்கும் சந்தர்ப்பங்களும் இருக்கலாம். எந்த சூழ்நிலையிலும் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக சுத்த மனசாட்சியை காத்துக்கொள்ள முட்டுக்கட்டையாய் இராத தீர்மானத்தை செய்யும்படி ஒரு கிறிஸ்தவர் பார்த்துக்கொள்ள வேண்டும்.