வாழ்க்கை சரிதை
தேவ பக்திமிக்க வாழ்க்கை பலன் தந்தது
வில்லியம் ஐஹிநாரியா சொன்னபடி
எனக்கு பழகிப்போயிருந்த அப்பாவின் முனகலொலியைக் கேட்டு நடுஜாமத்தில் நான் விழித்துக்கொண்டேன். அவர் தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு தரையில் புரண்டார். அம்மா, அக்கா, நான் அவரைச் சுற்றி நின்றோம். வலி சற்று தணிந்தபோது, நேராக நிமிர்ந்து உட்கார்ந்து, பெருமூச்சுவிட்டு, “யெகோவாவின் சாட்சிகளுக்கு மாத்திரமே இந்த பூமியில் சமாதானமுண்டு” என்று அவர் சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை நான் அதுவரை கேள்விப்படாததால் அது என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அவர் ஏன் அப்படி சொன்னார் என்று தெரிந்துகொள்ள ஆசையாக இருந்தது.
இது நடந்தது 1953-ல். அப்போது எனக்கு ஆறு வயது. பலதாரமணம் முடித்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். மத்திப மேற்கு நைஜீரியாவில் இவோசா என்ற விவசாய கிராமத்தில் நாங்கள் வசித்து வந்தோம். பிள்ளைகளில் நான் இரண்டாமவன். ஆனால் குடும்பத்திற்கு தலை மகன். எங்கள் குடும்பம் பெரிதானது. அதில் அப்பாவின் மூன்று மனைவிகளும் பிள்ளைகள் நாங்கள் 13 பேரும் இருந்தோம். தாத்தாவுக்கு சொந்தமான, நான்கு அறைகள் கொண்ட கூரைவேயப்பட்ட மண் குடிசையில் நாங்கள் வாழ்ந்து வந்தோம். இதே வீட்டில் பாட்டியும், அப்பாவின் மூன்று சகோதரர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் இருந்தார்கள்.
அப்பா நோயில் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததால் என் இளமைப் பருவம் எட்டிக்காய் போல் கசந்தது. அவருக்கு தீராத வயிற்றுவலி. மரிக்கும்வரை பல வருடங்களுக்கு அப்படி அவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். என்னவென்றே தெரியாத அந்த வியாதிக்கு மூலிகை மருந்து, நாட்டு மருந்து என்று ஒரு விவசாய குடும்பத்தால் முடிந்த எல்லா வைத்தியமும் பார்த்தும் பயனில்லை. பல இரவுகள் அப்பா தரையில் புரண்டு, வலியால் காலையில் கோழிகூவும் வரை துடித்துக்கொண்டிருக்கும் போது நாங்கள் அப்பாவின் பக்கத்தில் அழுதுகொண்டு தூங்காமல் கண்விழித்திருப்போம். நோய் குணமடைவதற்காக அம்மாவை அழைத்துக்கொண்டு அவர் பல இடங்களுக்கும் சென்று வருவார். அப்போதெல்லாம் என்னையும் என் தம்பி தங்கைகளையும் பாட்டியிடம் விட்டுவிட்டு போய்விடுவார்கள்.
சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கோலா கொட்டைகள் ஆகியவற்றை பயிர் செய்து, விற்று நாங்கள் பிழைப்பு நடத்தினோம். கிடைத்த சொற்ப வருமானத்தை இன்னும் கொஞ்சம் பெருக்க கொஞ்சம் ரப்பர் பால் இறக்கினோம். எங்கள் முக்கிய உணவு சேனைக்கிழங்குதான். காலையில் சேனைக்கிழங்கு சாப்பிட்டோம், பிற்பகலுக்கு அதை இடித்து சாப்பிட்டோம், இரவில் திரும்பவும் சேனைக்கிழங்குதான். எப்போதாவது வாழைப்பழத்தை நெருப்பில் வாட்டி சாப்பிட்டபோது அது கொஞ்சம் வித்தியாசமான உணவாக சுவைத்தது.
மூதாதையர் வழிபாடு எங்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சம். வண்ணமிக்க சோழிகள் கட்டப்பட்ட கம்புகளுக்கு முன் உணவுப்பொருள்களை எங்கள் குடும்பத்தார் படையல் வைத்தார்கள். பொல்லாத ஆவிகளையும் சூனியக்காரிகளையும் விரட்டி அடிப்பதற்காக அப்பா ஒரு விக்கிரகத்தையும் வணங்குவார்.
எனக்கு ஐந்து வயதிருக்கையில் நாங்கள் கிராமத்தைவிட்டு 11 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு விவசாய முகாமுக்கு தற்காலிகமாக குடிமாறிச் சென்றோம். அங்கிருக்கையில் அப்பாவுக்கு கின்னிபுழு வியாதி வந்துவிட்டது. ஏற்கெனவே அவருக்கு வயிற்றுவலி வேறு இருந்தது. அவரால் பகல் நேரத்தில் வேலை செய்ய முடியவில்லை. இரவிலோ வயிற்று வலியால் துவண்டுபோவார். எனக்கு மண் உண்ணி நோய் என்ற விஷஜுரம் கண்டது. இதனால் எங்கள் உறவினர்கள் கொடுத்து உதவிய உணவையும் உடையையும் வைத்து காலத்தை ஓட்டினோம். இந்த அழுக்கு நிறைந்த இடத்தில் இன்னும் கொஞ்ச நாள் தங்கி மடிவதைவிட எங்கள் இவோசா கிராமத்துக்கு போய்விடுவதே மேல் என்று தீர்மானித்தோம். தலைப்பிள்ளையான நான் ஒரு ஏழை விவசாயியாகவே என் காலத்தை கழித்துவிடக்கூடாது என்று அப்பா விரும்பினார். நான் நன்கு படித்தால் எங்கள் குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, என் தம்பி தங்கைகளையும் கரைசேர்த்துவிடலாம் என்று அப்பா நினைத்தார்.
பல்வேறு மதங்களோடு பரிச்சயமாதல்
கிராமத்துக்கு திரும்பியதும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தேன். இதனால் கிறிஸ்தவமண்டல மதங்களோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. 1950-களில், மேற்கத்திய கல்வி, குடியேறியவர்கள் ஏற்படுத்தியிருந்த அரசாங்கத்தின் மதத்தோடு பின்னிப்பிணைந்ததாகவே இருந்தது. கத்தோலிக்க ஆரம்ப பள்ளியில் படித்ததால் நான் ஒரு ரோமன் கத்தோலிக்கனாக இருக்க வேண்டியிருந்தது.
1966-ல், எனக்கு 19 வயதான போது, ஈவோஹின்மி டவுனில் பில்கிரிம் பாப்டிஸ்டு செக்கண்டரி பள்ளியில் சேர்ந்தேன். இந்த இடம் இவோசாவிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அங்கே எனக்கு வித்தியாசமான மத போதனை கற்பிக்கப்பட்டது. இப்போது நான் புராட்டஸ்டன்டு பள்ளியில் படித்ததால் ஞாயிற்றுக்கிழமை மாஸில் பங்கெடுக்கக்கூடாது என்று கத்தோலிக்க பாதிரிகள் என்னிடம் சொல்லிவிட்டார்கள்.
இந்த பாப்டிஸ்டு பள்ளியில் படிக்கையிலேயே பைபிளை முதன்முறையாக வாசிக்க ஆரம்பித்தேன். கத்தோலிக்க சர்ச்சுக்கு தவறாமல் போய்க்கொண்டிருந்தாலும், கத்தோலிக்க சர்ச் ஆராதனைக்குப் பின்பு ஒவ்வொரு ஞாயிறும் தனியாக இருந்து பைபிளை படித்தேன். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன, தேவ பக்திமிக்க அர்த்தமுள்ள வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசையை என்னில் தூண்டின. நான் பைபிளை அதிகம் வாசிக்க வாசிக்க, சில மதத் தலைவர்களின் மாய்மாலமும் பாமர மக்கள் பலருடைய ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையும் எனக்கு அருவருப்பை ஏற்படுத்தின. கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் நான் பார்த்த காரியங்கள், இயேசுவும் அவருடைய சீஷர்களும் கற்பித்தவற்றிலிருந்தும், செய்தவற்றிலிருந்தும் மிகவும் வித்தியாசமாக இருந்தன.
சில காரியங்கள் எனக்கு மிகவும் அதிர்ச்சி அளித்தன. ஜெபமாலை வாங்குவதற்காக மதபோதகர் நடத்தி வந்த கடைக்குச் சென்ற போது அங்கே கடையின் வாசலில் தொங்கிக்கொண்டிருந்த ஜூஜூ தாயத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். மற்றொரு சமயம், பாப்டிஸ்டு பள்ளியின் முதல்வர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் ஆண்புணர்ச்சிக்காரர் என்பதையும் பலரையும் அவர் பலாத்காரம் செய்திருப்பதையும் பின்னர் தெரிந்துகொண்டேன். இந்த காரியங்களையெல்லாம் யோசித்துப் பார்த்தேன், என்னை நானே இவ்வாறு கேட்டுக்கொண்டேன்: ‘பயங்கரமான பாவங்களைச் செய்யும் அங்கத்தினர்களையும் மதத் தலைவர்களையும்கூட தட்டிக் கேட்காத மதங்களை கடவுள் ஏற்றுக்கொள்வாரா?’
மத மாற்றம்
ஆனால், பைபிளில் வாசித்த காரியங்களை நேசித்தேன், அதை தொடர்ந்து வாசிக்கவும் தீர்மானமாயிருந்தேன். “யெகோவாவின் சாட்சிகளுக்கு மாத்திரமே இந்த பூமியில் சமாதானமுண்டு” என்று 15 ஆண்டுகளுக்கு முன்னால் அப்பா சொன்னது அப்போது என் நினைவுக்கு வந்தது. எனக்கு கொஞ்சம் பயமாகவும் இருந்தது, காரணம் என் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சாட்சிகள் பரிகாசம் செய்யப்பட்டார்கள், காலை மத ஆராதனையில் அவர்கள் கலந்துகொள்ளாததற்காக சில சமயங்களில் தண்டிக்கப்பட்டார்கள். அவர்களுடைய சில நம்பிக்கைகளும் எனக்கு வித்தியாசமாக பட்டன. உதாரணமாக, 1,44,000 பேர் மட்டுமே பரலோகத்துக்குச் செல்வார்கள் என்பதை நம்புவது எனக்கு கடினமாக இருந்தது. (வெளிப்படுத்துதல் 14:3) பரலோகத்திற்குப் போக வேண்டும் என்பதே என்னுடைய தீராத ஆசையாக இருந்ததால் இந்த எண்ணிக்கை நான் பிறப்பதற்கு முன்பே பூர்த்தி ஆகியிருக்குமோ என்றெல்லாம் எண்ணி குழம்பிப்போனேன்.
சாட்சிகளின் நடத்தையும் மனப்பான்மையும்கூட வித்தியாசமாக இருந்ததை தெளிவாக பார்க்க முடிந்தது. பள்ளியில் மற்ற இளைஞரைப் போல் ஒழுக்கங்கெட்ட, வன்முறையான காரியங்களில் ஈடுபடாமல் அவர்கள் விலகியிருந்தார்கள். எனக்கு தெரிந்தவரை அவர்கள் உலகத்தின் பாகமாக இல்லை, உண்மை மதத்தைப் பின்பற்றுபவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறதோ அப்படியே அவர்கள் இருந்தார்கள்.—யோவான் 17:14-16; யாக்கோபு 1:27.
அவர்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ள தீர்மானித்தேன். 1969, செப்டம்பரில், எனக்கு “நித்தியஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியம்” என்ற புத்தகம் கிடைத்தது. அதற்கடுத்த மாதம், பயனியர் என்று யெகோவாவின் சாட்சிகள் அழைக்கும் ஒரு முழுநேர ஊழியர் வந்து எனக்கு பைபிளைக் கற்பித்தார். என்னுடைய முதல் படிப்பு எனக்கு அளித்த உற்சாகத்தில் சத்தியம் புத்தகத்தை சனிக்கிழமை இரவு கையில் எடுத்த நான் மறுநாள் பிற்பகலில் அதை படித்து முடித்த பின்பே கீழே வைத்தேன். என்னோடு படித்துக்கொண்டிருந்த மற்ற மாணவர்களிடம் வாசித்த அற்புதமான விஷயங்களை உடனடியாக பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். புதிதாக நான் கண்டுபிடித்துள்ள மதம் என்னை பைத்தியமாக்கிவிட்டது என்பதாக மாணவர்களும் ஆசிரியர்களும் நினைத்தார்கள். ஆனால் பைத்தியம் பிடிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும்.—அப்போஸ்தலர் 26:24.
ஒரு புதிய மதத்தைப்பற்றி நான் பிரசங்கித்துக் கொண்டிருந்த விஷயம் என் பெற்றோரின் காதை எட்டியது. பிரச்சினையை அறிய உடனடியாக என்னை கிளம்பி வரும்படி அவர்கள் சொன்னார்கள். யாரிடமாவது ஆலோசனை கேட்கலாம் என்றால் அப்போது யாரும் இல்லை, சாட்சிகள் அனைவரும் இல்லிஷாவில் நடைபெறும் ஒரு மாவட்ட மாநாட்டுக்குப் போயிருந்தார்கள். வீட்டுக்கு வந்தபோது என் அம்மாவும் மற்ற உறவினர்களும் என்னை கேட்காத கேள்விகள் இல்லை, பேசாத பேச்சுக்கள் இல்லை. முடிந்தவரை பைபிளிலிருந்து கற்றுக்கொண்டதை ஆதரித்துப் பேச முயற்சி செய்தேன்.—1 பேதுரு 3:15.
யெகோவாவின் சாட்சிகள் பொய் போதகர்கள் என்பதை நிரூபிப்பதில் தோல்வி கண்டபோது, என் அப்பாவின் சகோதரர்களின் ஒருவர் என்னை வேறு விதமாக மடக்க நினைத்தார். “நீ பள்ளிக்குப் போனது படிப்பதற்காக என்பதை மறந்துவிடாதே. அதை விட்டுட்டு நீ பிரசங்கிக்க போனால் உன் படிப்பை முடிக்க முடியாது. ஆகவே, இந்த புதிய மதத்தில் சேர்ந்துகொள்வதற்கு முன்பாக முதலில் படிப்பை முடி” என்று அவர் என்னிடம் கெஞ்சாத குறையாக சொல்லிப் பார்த்தார். அந்தச் சமயத்துக்கு அவர் சொல்வது சரி என்று எனக்குப் பட்டது. ஆகவே சாட்சிகளோடு படிப்பதை நிறுத்திவிட்டேன்.
டிசம்பர் 1970-ல் படிப்பை முடித்த கையோடு நேராக ராஜ்ய மன்றத்துக்குச் சென்றேன், அன்று முதல் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு போய் வருகிறேன். 1971 ஆகஸ்ட் 30-ஆம் தேதி, கடவுளுக்கு செய்திருந்த ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றேன். இதை அறிந்த என்னுடைய பெற்றோர் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக என் இனத்தாரே ஆடிப்போயினர். இவோசாவின் சுற்று வட்டாரத்தில் அரசாங்க ஸ்காலர்ஷிப் பெற்ற முதல் நபர் நான்தான். ஆகவே என் நடவடிக்கை அவர்களை ஏமாற்றமடைய செய்ததாக அவர்கள் சொன்னார்கள். என்னை பலரும் மலைபோல் நம்பியிருந்தார்கள். என் படிப்பால் என் இனத்தையே நான் முன்னுக்கு கொண்டு வந்துவிடுவேன் என்று அவர்கள் மனக்கோட்டை கட்டியிருந்தார்கள்.
மாற்றத்தினால் விளைந்த பாதிப்புகள்
என் மதத்தைவிட்டு வரும்படி என்னை இணங்க வைக்க என் பெற்றோரும் என் இனத்தாரில் சில பெரியவர்களும் ஒரு குழுவையே அனுப்பி வைத்தார்கள். அவர்கள் என்னை சபிக்கத் தொடங்கினார்கள்; அப்படியாவது நான் மாறிவிட மாட்டேனோ என்று பார்த்தார்கள். “அந்த மதத்தை விட்டு நீ வெளிவராவிட்டால் உன் எதிர்காலமே நாசமாய் போகும். உனக்கு வேலை கிடைக்காது. உனக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட இருக்காது. உனக்கு கல்யாணமும் ஆகாது, பிள்ளைகளும் பிறக்காது” என்றார்கள்.
அவர்கள் சொன்ன எல்லாமே பொய்த்துப் போனது, படிப்பை முடித்து எண்ணி பத்தே மாதங்களில் எனக்கு பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்தது. 1972 அக்டோபரில் என் அருமை மனைவி வெரோனிக்காவை மணந்தேன். அதற்கு பிறகு அரசாங்கம் எனக்கு வேளாண்மை விரிவாக்க பிரதிநிதியாக பயிற்சி அளித்தது. என்னுடைய முதல் காரை வாங்கினேன், வீடும் கட்ட ஆரம்பித்தேன். 1973 நவம்பர் 5-ஆம் தேதி எங்கள் மூத்த மகள் விக்டரி பிறந்தாள். அதற்குப் பின், லிடியா, வில்ஃபிரட், ஜோன் ஆகியோர் பிறந்தார்கள். 1986-ல் எங்கள் கடைசி மகன் மைக்கா பிறந்தான். அவர்கள் அனைவருமே அருமையான பிள்ளைகள், யெகோவா எங்களுக்குக் கொடுத்த சொத்து.—சங்கீதம் 127:4.
என் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையைப் பார்க்கும்போது என் இனத்தார் போட்ட சாபங்கள் அனைத்தும் ஆசீர்வாதமாக மாறியதை கவனித்தேன். அதனால்தான் என் முதல் மகளுக்கு விக்டரி என்று பெயர் வைத்தேன். சமீபத்தில் என் இனத்தார் எனக்கு இவ்வாறு கடிதம் எழுதியிருந்தார்கள்: “கடவுளின் அனுக்கிரகம் உனக்கு நிறையவே இருப்பதால், தயவுசெய்து நீ இங்கே வந்து நம் சமுதாயத்தை முன்னுக்கு கொண்டுவர வேண்டும்.”
கடவுளுடைய வழிகளில் பிள்ளைகளை வளர்த்தல்
கடவுள் எங்களுக்குக் கொடுத்திருந்த பிள்ளை செல்வங்களை வளர்க்கும் பொறுப்பையும் பொருளாதார செல்வங்களை நாடுவதையும் ஒரே சமயத்தில் செய்ய முடியாது என்பதை என் மனைவியும் நானும் புரிந்துகொண்டோம். ஆகவே நாங்கள் எளிய வாழ்க்கையில் திருப்தி காண கற்றுக்கொண்டோம். வேறொரு வாழ்க்கை முறையை தெரிந்துகொள்வதால் வரும் விளைவுகளை சமாளிப்பதைவிட இதுவே மேல் என்று நாங்கள் நினைத்தோம்.
நாங்கள் வாழுமிடத்தில் ஒரு கட்டடத்தில் பல குடும்பங்கள் வசிப்பது சகஜம். இவர்கள் அனைவரும் ஒரே குளியல் அறையையும், சமையலறையையும் பயன்படுத்துவார்கள். ஆனால் நான் ஒரு அரசு ஊழியனாக இருந்தபடியால் என்னை எங்கே மாற்றினாலும் அங்கே எல்லா வசதிகளும் அமைந்திருந்த தனி வீட்டில் வாழ முடிந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி தனி வீட்டில் வசிப்பதில் பணம் அதிகம் செலவானது, என்றாலும் எங்களுடைய பிள்ளைகள் மோசமான கூட்டுறவால் கெட்டுப்போகும் வாய்ப்பு குறைந்தது. இத்தனை வருடங்களும் என் பிள்ளைகளை ஆன்மீகத்தில் ஆரோக்கியமான சூழலில் வளர்க்க முடிந்ததற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்லுகிறேன்.
அதோடு என் மனைவியும் வீட்டில் இருந்து எங்கள் பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்காக வேலைக்குப் போய் சம்பாதிக்கவில்லை. என் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் நாங்கள் குடும்பமாக சேர்ந்து காரியங்களைச் செய்ய முயற்சி செய்தோம். எதைச் செய்தாலும் குடும்பமாக சேர்ந்தே செய்தோம். குடும்ப பைபிள் படிப்பு, சபை கூட்டங்களுக்கு தயாரிப்பதும் அதில் பங்குகொள்வதும், கிறிஸ்தவ ஊழியத்தில் கலந்துகொள்வது, மற்ற சமூக நடவடிக்கைகள் என்று எதுவாக இருந்தாலும் ஒன்றாகவே சேர்ந்து செய்தோம்.
உபாகமம் 6:6, 7 பெற்றோருக்கு சொல்கிற புத்திமதியின்படி, வீட்டில் மட்டுமல்ல, எல்லா சந்தர்ப்பங்களிலும் பிள்ளைகளுக்கு கற்பிக்க நாங்கள் முயன்று வந்திருக்கிறோம். இதனால் எங்கள் பிள்ளைகள் உலகப்பிரகாரமான நட்புறவைத் தேடாமல் சாட்சிகளுடன் நட்புறவை அனுபவிக்கிறார்கள். வெரோனிக்காவும் நானும் சத்தியத்தில் இராதவர்களுடன் அளவுக்கு அதிகமான நேரத்தை செலவழிப்பதில்லை, ஆகவே தங்கள் கூட்டுறவுகளைக் குறித்து கவனமாய் இருக்க எங்கள் முன்மாதிரியிலிருந்து பிள்ளைகள் கற்றிருக்கிறார்கள்.—நீதிமொழிகள் 13:20; 1 கொரிந்தியர் 15:33.
எங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் நல்ல செல்வாக்கு செலுத்தியது எங்கள் வழிநடத்தலும் போதனையும் மட்டுமே இல்லை. எங்களுடைய வீட்டின் கதவு அப்போதும் இப்போதும் வைராக்கியமுள்ள கிறிஸ்தவர்களுக்கு திறந்தே இருக்கிறது. இவர்களில் நிறைய பேர் யெகோவாவின் சாட்சிகளின் பிரயாண கண்காணிகள். முதிர்ச்சியுள்ள இந்தக் கிறிஸ்தவர்கள் எங்கள் குடும்பத்தாரோடு செலவழித்த நேரத்தில், அவர்களுடைய சுயதியாக வாழ்க்கையை கவனித்து கற்றுக்கொள்ள எங்களுடைய பிள்ளைகள் வாய்ப்பை பெற்றிருந்தார்கள். இதனால் எங்கள் போதனை இன்னும் உறுதிப்பட்டிருக்கிறது, பிள்ளைகள் பைபிள் சத்தியத்தை தங்களுடையதாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தேவபக்திக்கு கிடைத்த பலன்
இன்று நானும் என்னுடைய மனைவியும், எங்களுடைய நான்கு பிள்ளைகளும் முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறோம். முதலில் 1973-ல் பயனியர் செய்ய ஆரம்பித்தேன். இடை இடையே பொருளாதார சூழ்நிலைமைகளினால் என்னுடைய முழுநேர ஊழியம் தடைபட்டது. யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ கண்காணிகளை பயிற்றுவிப்பதற்காக நடத்தப்படும் ராஜ்ய ஊழியப் பள்ளியில் போதிக்கும் வாய்ப்பையும் அவ்வப்போது பெற்றேன். தற்போது, மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவிலும் ஊஹான்மாராவில் நகர கண்காணி பொறுப்பிலும் சேவிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.
என்னுடைய முதல் இரண்டு மகள்கள் விக்டரியும் லிடியாவும் நல்ல கிறிஸ்தவ மூப்பர்களை மணந்து சந்தோஷமாக இருக்கின்றனர். அவர்களும் அவர்களுடைய கணவன்மாரும் நைஜீரியாவில், ஈகேடூமா என்ற இடத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலக அங்கத்தினர்களாக சேவித்து வருகின்றனர். எங்கள் மூத்த மகன் வில்ஃபிரட் ஒரு உதவி ஊழியனாக இருக்கிறான், இளையவன் மைக்கா அவ்வப்போது துணைப்பயனியர் ஊழியம் செய்கிறான். 1997-ல் ஜோன் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, ஒழுங்கான பயனியர் சேவை செய்கிறாள்.
மற்றவர்கள் யெகோவா தேவனை சேவிப்பதற்கு உதவி செய்வதே என்னுடைய வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தையும் திருப்தியையும் தரும் அனுபவமாக இருந்திருக்கிறது. என் உறவினர்கள் சிலருக்கும் இந்த விதத்தில் உதவி செய்திருக்கிறேன். என்னுடைய அப்பா யெகோவாவை சேவிக்க முயற்சிகள் எடுத்தார், ஆனால் பலதார மண பழக்கம் அவருடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. சின்ன வயதிலிருந்தே மக்களை மிகவும் நேசித்தேன். மற்றவர்கள் துன்பப்படுவதைப் பார்க்கும்போது என்னுடைய பிரச்சினைகள் ஒன்றுமே இல்லை என்று நினைப்பேன். அவர்களுக்கு உதவ நான் மனதார விரும்புவதை அவர்கள் புரிந்துகொண்டார்கள் என்றே நினைக்கிறேன், ஆகவே அவர்கள் என்னிடம் எளிதில் மனம் விட்டு பேசினார்கள்.
கடவுளுடைய நோக்கங்களை அறிந்துகொள்வதற்கு நான் உதவியவர்களில் படுத்த படுக்கையாக இருந்த இளைஞனும் ஒருவர். அவர் மின்சார நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். வேலை செய்கையில் மின்சாரம் பயங்கரமாக தாக்கியதால் அவர் மார்பிலிருந்து கால்வரை செயலிழந்து போனார். அவர் பைபிள் படிப்புக்கு சம்மதித்தார், படிப்படியாக கற்றுக்கொண்டபடி செய்ய ஆரம்பித்தார். அக்டோபர் 14, 1995-ல் என் வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு நீரோடையில் முழுக்காட்டுதல் பெற்றார். 15 வருடங்களில் அவர் படுக்கையைவிட்டு எழுந்தது அதுவே முதல் தடவை. அதுவே தன்னுடைய வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாள் என்று அவர் கூறினார். இப்போது அவர் சபையில் உதவி ஊழியராக இருக்கிறார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக, யெகோவாவை அவருடைய ஐக்கியப்பட்ட, ஒப்புக்கொடுக்கப்பட்ட ஜனத்தோடு சேர்ந்து சேவிக்க தீர்மானித்ததற்காக நான் துளியும் வருத்தப்படவில்லை. அவர்கள் மத்தியில் உண்மையான அன்பு செயலில் காட்டப்படுவதை கண்ணார கண்டிருக்கிறேன். யெகோவா அவருடைய உண்மையுள்ள ஊழியர்களுக்குக் கொடுக்கும் பலன்களில் நித்திய ஜீவன் என்ற நம்பிக்கை இல்லையென்றாலும்கூட அப்போதும் தேவபக்தியுள்ள இந்த வாழ்க்கையை வாழவே விரும்புவேன். (1 தீமோத்தேயு 6:6; எபிரெயர் 11:6) இந்த தேவபக்திமிக்க வாழ்க்கை போக்கே என் வாழ்க்கையை செதுக்கி சீராக்கியுள்ளது. இது எனக்கும் என் குடும்பத்துக்கும் சந்தோஷம், திருப்தி, ஆனந்தம் ஆகிய அனைத்தையும் அள்ளி தந்திருக்கிறது.
[பக்கம் 25-ன் படம்]
1990-ல் என் மனைவி பிள்ளைகளோடு
[பக்கம் 26-ன் படம்]
என்னுடைய மனைவி, பிள்ளைகள், இரண்டு மருமகன்களுடன்