கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவில் ஆறுதல்
கடவுளுடைய அன்பையும் இரக்கத்தையும் பற்றி பைபிள் சொல்வது சிலருடைய மனதை நெருடுகிறது. அவர்கள் இவ்வாறு கேட்கின்றனர்: தீமையை ஒழிக்க கடவுள் விரும்புகிறார், அதை எப்படி ஒழிப்பது என தெரிந்திருக்கிறார், அதை செய்வதற்கு சக்தி படைத்தவராக இருக்கிறார் என்பதெல்லாம் உண்மை என்றால், தீமை ஏன் அதிகமாகிக்கொண்டே போகிறது? பின்வரும் மூன்று விஷயங்கள் இணக்கமாக இல்லாததுபோல் தோன்றுவதே இவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது: (1) கடவுள் எல்லாம் வல்லவர்; (2) கடவுள் அன்பானவர், நல்லவர்; (3) தொடர்ந்து பேரழிவுகள் நிகழ்ந்து வருகின்றன. மூன்றாவதாக சொல்லப்பட்டது எந்தவித மறுப்புக்கும் இடமில்லாத உண்மை என்பதால், மற்ற இரண்டு விஷயங்களில் ஒன்றாவது உண்மையாக இருக்க முடியாது என வாதாடுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, துன்மார்க்கத்தை கடவுளால் ஒழிக்க முடியவில்லை அல்லது அவருக்கு அக்கறையில்லை.
நியூ யார்க்கில் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதற்கு பல நாட்கள் கழித்து, ஐக்கிய மாகாணங்களிலுள்ள பிரபல மதத் தலைவர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “கடவுள் ஏன் துன்பத்தையும் துயரத்தையும் அனுமதிக்கிறார் . . . என்ற கேள்வியை என்னிடம் இதுவரை நூற்றுக்கணக்கான தடவை பலர் கேட்டிருக்கிறார்கள். அதற்கு முழுமையான பதில் உண்மையிலேயே எனக்கு தெரியாது, முதலாவது என்னை திருப்திப்படுத்துகிற பதில்கூட தெரியாது என்பதை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.”
இறையியல் பேராசிரியர் ஒருவர் இதற்கு பதிலளிக்கையில், அந்த மதத் தலைவர் பிரசங்கித்த “நல்ல இறையியலால்” மனம் கவரப்பட்டதாக எழுதினார். அறிஞர் ஒருவர் பின்வருமாறு எழுதிய கருத்தையும் அவர் ஆமோதித்தார்: “துன்பத்தைப் புரிந்துகொள்ள முடியாதது கடவுளை புரிந்துகொள்ள முடியாததன் ஒரு அம்சம்.” ஆனால் கடவுள் ஏன் துன்மார்க்கத்தை அனுமதிக்கிறார் என்பது உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியாத ஒன்றா?
தீமை எப்படி தோன்றியது
கடவுள் ஏன் துன்மார்க்கத்தை அனுமதித்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாதென மதத் தலைவர்கள் சொன்னாலும் பைபிள் அவ்வாறு சொல்வதில்லை. துன்மார்க்கத்தைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான குறிப்பு, துன்மார்க்கம் நிறைந்த ஓர் உலகை யெகோவா படைக்கவில்லை என்பதே. முதல் மானிட ஜோடியை பாவத்தின் சுவடின்றி பரிபூரணமாக படைத்தார். யெகோவா தமது படைப்புகளைப் பார்த்து அது “மிகவும் நன்றாயிருந்த”தைக் கண்டார். (ஆதியாகமம் 1:26, 31) ஆதாமும் ஏவாளும் ஏதேன் போன்ற பரதீஸான நிலைமையை உலகளாவ விஸ்தரித்து, தமது அன்பான அரசதிகாரத்தின் கீழ் பாதுகாப்பாக வாழும் மகிழ்ச்சியான மக்களால் இப்பூமியை நிரப்ப வேண்டும் என்பதே அவருடைய நோக்கம்.—ஏசாயா 45:18.
ஓர் ஆவி சிருஷ்டியின் மூலமே முதலில் தீமை தலைதூக்க ஆரம்பித்தது; அவன் ஆதியில் கடவுளுக்கு உண்மையுடன் இருந்தபோதிலும், மற்றவர்கள் தன்னை வணங்க வேண்டுமென்ற ஆசையை பிற்பாடு வளர்த்துக்கொண்டான். (யாக்கோபு 1:14, 15) கடவுளை எதிர்ப்பதில் தன்னுடன் சேர்ந்துகொள்ள முதல் மானிட தம்பதியை தூண்டியபோது அவனுடைய கலகத்தனம் பூமியில் வெளிப்பட்டது. நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாது அல்லது தொடக்கூடாது என்ற கடவுளுடைய தெளிவான அறிவுரைக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, ஆதாமும் ஏவாளும் அதில் கொஞ்சத்தை எடுத்து புசித்தார்கள். (ஆதியாகமம் 3:1-6) அப்படி செய்ததால் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனது மட்டுமல்லாமல் அவரிடமிருந்து சுதந்திரத்தை விரும்பியதையும் காண்பித்தார்கள்.
ஒழுக்கநெறி சார்ந்த ஒரு விவாதம் எழுப்பப்பட்டது
ஏதேனில் நடந்த இந்தக் கலகம் ஒழுக்கநெறி சார்ந்த ஒரு விவாதத்தை, அதாவது அகிலம் முழுவதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவாதத்தை எழுப்பியது. யெகோவா தமது அரசதிகாரத்தை தமது சிருஷ்டிகளின் மீது சரியாக பயன்படுத்துகிறாரா என்ற கேள்வியை மனித கலகக்காரர்கள் எழுப்பினார்கள். மனிதரிடமிருந்து முழுமையான கீழ்ப்படிதலை கேட்கும் உரிமை படைப்பாளருக்கு இருந்ததா? மனிதர் தன்னிச்சையாக செயல்பட்டால் மேம்பட்டு விளங்குவார்களா?
தமது அரசுரிமைக்கு எதிரான இந்த சவாலை, அன்பு, நீதி, ஞானம், வல்லமை ஆகியவற்றை பூரண சமநிலையுடன் வெளிப்படுத்தும் விதத்தில் யெகோவா கையாண்டார். கலகத்தனத்தை ஒடுக்க உடனடியாக தமது வல்லமையை அவர் பயன்படுத்தியிருக்க முடியும். அது நீதியாகவும் தோன்றியிருக்கும், ஏனென்றால் அப்படி செய்ய கடவுளுக்கு உரிமை இருந்தது. ஆனால் அப்படி செய்வது எழுப்பப்பட்ட ஒழுக்கநெறி சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளித்திருக்காது. மறுபட்சத்தில், பாவத்தை கண்டும் காணாமல் அப்படியே கடவுள் விட்டிருந்திருக்கலாம். இன்று அதுதான் அன்பான செயலாக சிலருக்குத் தோன்றலாம். ஆனால் மனிதர்கள் தாங்களாகவே வெற்றிகரமாக தங்களை ஆண்டுகொள்ள முடியும் என்ற சாத்தானின் வாதத்திற்கு இதுவும் பதிலளித்திருக்காது. மேலும், இத்தகைய போக்கு, யெகோவாவின் வழியிலிருந்து விலகிச் செல்லும்படி மற்றவர்களையும் தூண்டியிருக்கும் அல்லவா? அதனால் முடிவே இல்லாத துன்பம்தான் விளைவடைந்திருக்கும்.
யெகோவா தமது ஞானத்தால், சிலகாலம் மனிதர் தங்களுடைய மனம்போல் வாழ அனுமதித்திருக்கிறார். இதற்காக துன்மார்க்கத்தை சிலகாலம் அனுமதிக்க வேண்டியிருந்தது உண்மைதான்; என்றாலும், மனிதர் கடவுளிடமிருந்து விலகி, எது சரி எது தவறு என்பதைப் பற்றிய தங்களுடைய சொந்த தராதரங்களின்படி வாழ்ந்து, வெற்றிகரமாக தங்களை ஆண்டுகொள்ள முடியுமா என்பதை நிரூபிப்பதற்கு இது அவர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறது. விளைவு என்ன? போர், அநீதி, ஒடுக்குதல், துன்பம் ஆகியவையே மனித சரித்திரத்தின் சிறப்பு அம்சங்களாக இருந்திருக்கின்றன. யெகோவாவுக்கு எதிரான கலகத்தனம் கடைசியில் தோல்வியைத் தழுவுவது ஏதேனில் எழுப்பப்பட்ட விவாதங்களுக்கு பதிலளிக்கும், அதுவும் நித்தியத்திற்குமாக.
இதற்கிடையில், தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை தருவதன் மூலம் கடவுள் தமது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவர் கிரய பலியாக தம் மானிட உயிரை கொடுத்தார். ஆதாமின் கீழ்ப்படியாமையால் விளைந்த பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் கீழ்ப்படிதலுள்ள மனிதர் விடுதலை அடைய இது வழிசெய்கிறது. இயேசுவில் விசுவாசம் வைக்கும் அனைவரும் நித்திய ஜீவனைப் பெற இந்தக் கிரய பலி வழியை திறந்து வைத்திருக்கிறது.—யோவான் 3:16.
மனிதர் படும் துன்பமெல்லாம் தற்காலிகமானது என்ற ஆறுதலளிக்கும் உறுதியை யெகோவா நமக்கு அளித்திருக்கிறார். “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” என சங்கீதக்காரனாகிய தாவீது எழுதினார்.—சங்கீதம் 37:10, 11.
பாதுகாப்பும் மகிழ்ச்சியும் ததும்பும் ஓர் எதிர்காலம்
வியாதி, துன்பம், மரணம் ஆகியவற்றிற்கு கடவுள் முடிவுகட்டும் காலம் நெருங்கிவிட்டது என்பதை நிறைவேறிவரும் பைபிள் தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன. அப்போஸ்தலன் யோவானுக்கு அருளப்பட்ட தரிசனத்தில் வரப்போகும் மகத்தான காரியங்களைப் பற்றிய முற்காட்சி கொடுக்கப்பட்டது. அவர் இவ்வாறு எழுதினார்: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. . . . தேவன்தாமே அவர்களோடேகூட [மனிதர்களோடேகூட] இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” இந்த வாக்குறுதிகள் நம்பகமானவை என்பதை வலியுறுத்த யோவானுக்கு இவ்வாறு சொல்லப்பட்டது: “இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது.”—வெளிப்படுத்துதல் 21:1-5.
ஏதேனில் கலகம் தலைதூக்கியது முதற்கொண்டு மரித்துப்போன லட்சக்கணக்கான அப்பாவி ஜனங்களைப் பற்றியென்ன? இப்பொழுது மரண நித்திரையில் இருப்பவர்களை மீண்டும் உயிருக்குக் கொண்டுவருவதாக யெகோவா வாக்குறுதி அளித்தார். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறினார்: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று . . . தேவனிடத்தில் . . . நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 24:15) “நீதி வாசமாயிருக்கும்” ஓர் உலகில் வாழும் எதிர்பார்ப்பை இவர்கள் பெறுவார்கள்.—2 பேதுரு 3:13.
வேதனைமிகு அறுவை சிகிச்சை பிற்பாடு பிள்ளைக்கு நிரந்தர நன்மை தரும் என்று அறிகையில் ஒரு தகப்பன் அதற்கு எப்படி அனுமதிப்பாரோ அதைப் போலவே, பூமியில் மனிதர் தற்காலிகமாக துன்மார்க்கத்தை அனுபவிக்க யெகோவா அனுமதித்திருக்கிறார். என்றபோதிலும், கடவுளுடைய சித்தத்தைச் செய்ய நாடுகிற அனைவருக்கும் நித்திய ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன. பவுல் இவ்வாறு விளக்கினார்: “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.”—ரோமர் 8:20, 21.
இதுவே உண்மையில் செய்தி—இன்றைக்கு டெலிவிஷனிலோ செய்தித்தாளிலோ நாம் பார்ப்பதைப் போன்ற செய்தி அல்ல, ஆனால் நற்செய்தி. நம்மீது உண்மையிலேயே அக்கறை கொள்கிற “சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிற”வரிடமிருந்து வருகிற இந்தச் செய்தியே எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த செய்தி.—2 கொரிந்தியர் 1:3.
[பக்கம் 6-ன் படங்கள்]
கடவுளிடமிருந்து விலகி மனிதரே சுயமாக வெற்றிகரமாய் ஆண்டுகொள்ள முடியாது என்பதை காலம் நிரூபித்திருக்கிறது
[படங்களுக்கான நன்றி]
சோமாலியா குடும்பம்: UN PHOTO 159849/M. GRANT; அணுகுண்டு: USAF photo; சித்திரவதை முகாம்: U.S. National Archives photo