போதகர்களாக நம்மைப் பக்குவப்படுத்தும் தனிப்பட்ட படிப்பு
“நீ முன்னேறுவது அனைவருக்கும் தெரியும்படி இவற்றையே ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டு, இவற்றிலேயே லயித்திரு. உனக்கும் உன் போதனைக்கும் இடைவிடாமல் கவனம் செலுத்து.” —1 தீமோத்தேயு 4:15, 16, NW.
1. நேரத்தையும் தனிப்பட்ட படிப்பையும் பொருத்ததில் எது உண்மை?
“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு” என பிரசங்கி 3:1-ல் பைபிள் குறிப்பிடுகிறது. தனிப்பட்ட படிப்பைப் பொருத்ததிலும் இது நிச்சயம் உண்மை. பொருத்தமில்லாத நேரத்தில் அல்லது இடத்தில் ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பது அநேகருக்கு கடினம். உதாரணத்திற்கு நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலை பார்த்து முடித்துவிட்டு, பின் வயிறுநிரம்ப சாப்பிட்ட பிறகு உங்களுக்கு படிக்கத் தோன்றுமா? அதுவும் டிவிக்கு முன்னால் உங்களுக்கு பிடித்தமான ஈஸி சேரில் சாய்ந்திருக்கும்போது படிக்கப் பிடிக்குமா? பெரும்பாலும் பிடிக்காது. அப்படியென்றால் தீர்வுதான் என்ன? நம் முயற்சிகளிலிருந்து அதிகபட்ச பலன்களைப் பெற எப்போது, எங்கே படிப்பதென நாம் தீர்மானிக்க வேண்டும்.
2. தனிப்பட்ட படிப்பிற்கு பொதுவாக எது சிறந்த நேரம்?
2 அநேகருக்கு அதிகாலை வேளைதான் படிப்பிற்கு சிறந்த நேரமாக இருக்கிறது, ஏனென்றால் பொதுவாக அந்த சமயத்தில்தான் அவர்கள் அதிக விழிப்பாக இருக்கிறார்கள். மற்றவர்கள் நண்பகல் இடைவெளியின்போது சிறிது நேரம் படிக்கிறார்கள். பின்வரும் உதாரணங்களில், முக்கியமான ஆவிக்குரிய நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்ட நேரத்தைக் கவனியுங்கள். பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான தாவீது இப்படி எழுதினார்: “அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.” (சங்கீதம் 143:8) ஏசாயா தீர்க்கதரிசி அதேபோன்ற போற்றுதலைக் காட்டி, இவ்வாறு சொன்னார்: “இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச் செய்கிறார்.” ஆக, எந்த நேரமாக இருந்தாலும் சரி, நம் மனம் விழிப்புடன் இருக்கும்போது படிக்கவும் யெகோவாவிடம் அன்னியோன்னியமாக பேசவும் வேண்டும் என்பதே குறிப்பு.—ஏசாயா 50:4, 5; சங்கீதம் 5:3; 88:13.
3. திறம்பட படிப்பதற்கு என்ன சூழ்நிலைகள் உகந்தவை?
3 திறம்பட படிப்பதற்கு மிக சொகுசான சேரில் அல்லது சோபாவில் உட்காரக் கூடாது என்பது மற்றொரு குறிப்பு. அவ்வாறு உட்கார்ந்தால் விழிப்புடன் இருக்க முடியாது. நாம் படிக்கும்போது நம் மனம் தூண்டப்பட வேண்டும்; மிகவும் சொகுசான சூழலிலோ நேரெதிர் மாறானதே நடக்கும். மேலும், தொந்தரவுகள் இல்லாத ஓரளவு அமைதலான இடமே படிப்பிற்கும் தியானத்திற்கும் உகந்தது. ரேடியோ அலறிக்கொண்டிருக்கையில், டிவி ஓடிக்கொண்டிருக்கையில், அல்லது பிள்ளைகள் உங்களை தொந்தரவு செய்துகொண்டிருக்கையில் படிக்க முயலுவது சிறந்த பலன் தராது. இயேசு தியானிக்க விரும்பியபோது அமைதலான இடத்திற்குச் சென்றார். ஜெபம் செய்வதற்கு தனிமையான இடத்தைத் தேர்ந்தெடுப்பதன் மதிப்பைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.—மத்தேயு 6:6; 14:13; மாற்கு 6:30-32.
பதிலளிக்க நம்மைப் பக்குவப்படுத்தும் தனிப்பட்ட படிப்பு
4, 5. எந்த விதங்களில் தேவைப்படுத்துகிறார் சிற்றேடு நடைமுறை உதவி அளிக்கிறது?
4 ஒரு தலைப்பின்பேரில் ஆழமாக ஆராய்ச்சி செய்ய பல்வேறு பைபிள் பிரசுரங்களை பயன்படுத்தும்போது தனிப்பட்ட படிப்பு மன திருப்தி அளிக்கிறது; அதுவும் உண்மை மனதோடு எவராவது கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக அவ்வாறு ஆராய்ச்சி செய்யும்போது திருப்தியளிக்கிறது. (1 தீமோத்தேயு 1:3; 2 தீமோத்தேயு 2:23) புதிதாக படிப்பவர்களில் அநேகர் முதலாவதாக கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?a என்ற சிற்றேட்டைப் படிக்கின்றனர்; இது இப்போது 261 மொழிகளில் கிடைக்கிறது. இது விஷயங்களை வெகு எளிமையாக, ஆனால் துல்லியமாக எடுத்துச் சொல்லும் பிரசுரம்; முழுக்க முழுக்க பைபிளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. உண்மை வணக்கத்திற்கான கடவுளுடைய தராதரங்கள் என்ன என்பதை உடனடியாக புரிந்துகொள்ள அது வாசகர்களுக்கு உதவுகிறது. இருந்தாலும், அது சிற்றேடாக இருப்பதால் ஒவ்வொரு தலைப்பையும் விலாவாரியாக விவரிப்பது சாத்தியமல்ல. கலந்தாலோசிக்கப்படும் சில பைபிள் விஷயங்களின்பேரில் உங்கள் மாணாக்கர் ஆர்வத்தோடு கேள்விகள் கேட்டால், அவற்றிற்கு பதிலளிக்க தேவைப்படும் கூடுதலான பைபிள் தகவல்களை எங்கிருந்து பெறலாம்?
5 சிடி-ராமில் உவாட்ச் டவர் லைப்ரரியை தங்கள் மொழியில் பெற்றிருப்பவர்களுக்கு, பல்வேறு விஷயங்களின்பேரில் ஏராளமான தகவல்களை கம்ப்யூட்டரில் கண்டடைவது சுலபம். ஆனால் இந்த வசதி இல்லாதவர்களுக்கு? எவ்வாறு நம் புரிந்துகொள்ளுதலை அதிகரிக்கவும் விலாவாரியாக பதிலளிக்கவும் முடியுமென தெரிந்துகொள்வதற்கு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் இரண்டு தலைப்புகளைக் கவனிக்கலாம்; முக்கியமாக, கடவுள் யார், இயேசு உண்மையில் எப்படிப்பட்டவர்? போன்ற கேள்விகளைக் கேட்பவர்களுக்கு எவ்வாறு விலாவாரியாக பதிலளிக்கலாமென கவனிக்கலாம்.—யாத்திராகமம் 5:2; லூக்கா 9:18-20; 1 பேதுரு 3:15.
கடவுள் யார்?
6, 7. (அ) கடவுளைப் பற்றி என்ன கேள்வி எழும்புகிறது? (ஆ) பாதிரி ஒருவர் என்ன முக்கியமான விஷயத்தை தன் பேச்சில் குறிப்பிடவேயில்லை?
6 தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் 2-ஆம் பாடம், கடவுள் யார்? என்ற முக்கிய கேள்விக்கு பதிலளிக்கிறது. இது அடிப்படை குறிப்புகளில் ஒன்று; ஏனென்றால் ஒருவர் உண்மைக் கடவுளை அறியவில்லையென்றால் அல்லது அவர் உண்மையில் இருக்கிறாரா என்று சந்தேகப்பட்டால் அவரை வணங்க முடியாது. (ரோமர் 1:19, 20; எபிரெயர் 11:6) இருந்தாலும் உலகெங்கும் உள்ள மக்களுக்கு கடவுளைப் பற்றி நூற்றுக்கணக்கான நம்பிக்கைகள் உள்ளன. (1 கொரிந்தியர் 8:4-6) கடவுள் யார் என்ற கேள்விக்கு ஒவ்வொரு மத தத்துவமும் ஒவ்வொரு விதமாக பதிலளிக்கிறது. கிறிஸ்தவமண்டலப் பிரிவுகள் பெரும்பாலும் கடவுளை திரித்துவமாக பாவிக்கின்றன. “கடவுள் யாரென்று உங்களுக்கு தெரியுமா?” என்ற தலைப்பில் ஐ.மா.-வைச் சேர்ந்த பிரபல பாதிரி ஒருவர் உரையாற்றினார்; ஆனால் எபிரெய வேதாகமத்திலிருந்து பலமுறை அவர் மேற்கோள் காட்டியபோதும் தன் பேச்சில் ஒரு முறைகூட கடவுளுடைய பெயரைக் குறிப்பிடவில்லை. யெகோவா அல்லது யாவே என்ற பெயருக்குப் பதிலாக தெளிவாக புரிந்துகொள்ள முடியாதபடி “கர்த்தர்” என்று மொட்டையாக குறிப்பிடும் ஒரு பைபிள் மொழிபெயர்ப்பிலிருந்தே அவர் வாசித்தார்.
7 எரேமியா 31:33, 34-ஐ மேற்கோள் காட்டியபோது அந்தப் பாதிரி மிக முக்கியமான குறிப்பை தவறவிட்டார்: “இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் [எபிரெயுவில், “யெகோவாவை அறிந்துகொள்”] என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் [எபிரெயுவில், யெகோவா] சொல்லுகிறார்.” அவர் பயன்படுத்திய மொழிபெயர்ப்பு, யெகோவா என்ற தனிச்சிறப்பு மிக்க கடவுளுடைய பெயரை உபயோகிக்கவில்லை.—சங்கீதம் 83:17.
8. கடவுளுடைய பெயரை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எது எடுத்துக் காட்டுகிறது?
8 யெகோவாவின் பெயரைப் பயன்படுத்துவது ஏன் அவ்வளவு முக்கியம் என்பதை சங்கீதம் 8:9 (திருத்திய மொழிபெயர்ப்பு) எடுத்துக் காட்டுகிறது: “எங்கள் ஆண்டவராகிய யெகோவா, உமது திருநாமம் உலகெங்கும் எவ்வளவோ மேன்மையானது!” இதை பின்வரும் மொழிபெயர்ப்போடு ஒப்பிட்டுப் பாருங்கள்: “எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது.” (தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு; இவற்றிலும் காண்க: தமிழ் கத்தோலிக்க பைபிள், பொது மொழிபெயர்ப்பு) இருந்தாலும், சென்ற கட்டுரையில் குறிப்பிட்டபடி, கடவுளுடைய வார்த்தை நமக்கு அறிவொளியூட்ட நாம் அனுமதித்தால் “கடவுளை அறியும் அறிவை” கண்டடைவோம். ஆனால் கடவுளுடைய பெயரின் முக்கியத்துவத்தைப் பற்றிய கேள்விகளுக்கு முழுக்க முழுக்க பதிலளிக்கும் பைபிள் பிரசுரம் எது?—நீதிமொழிகள் 2:1-6, NW.
9. (அ) கடவுளுடைய பெயரை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்க எந்தப் பிரசுரம் நமக்கு உதவும்? (ஆ) எவ்வாறு அநேக மொழிபெயர்ப்பாளர்கள் கடவுளுடைய பெயருக்கு மரியாதை காட்டத் தவறியிருக்கிறார்கள்?
9 கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும் என்ற சிற்றேட்டை நாம் பயன்படுத்தலாம்; இது 69 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.b “கடவுளுடைய பெயர்—அதன் உட்பொருளும் உச்சரிப்பும்” (பக்கங்கள் 6-11) என்ற பகுதி, பூர்வ எபிரெய பிரதிகளில் எபிரெய டெட்ராக்ராமட்டன் (கிரேக்க அர்த்தப்படி “நான்கு எழுத்துக்கள்”) சுமார் 7,000 முறை காணப்படுவதாக தெளிவாகக் காட்டுகிறது. இருந்தாலும் குருவர்க்கத்தினரும் யூத மற்றும் கிறிஸ்தவமண்டல மொழிபெயர்ப்பாளர்களும் தங்கள் பைபிள் மொழிபெயர்ப்புகள் பெரும்பாலானவற்றில் அந்தப் பெயரை வேண்டுமென்றே விட்டுவிட்டிருக்கின்றனர்.c கடவுளை அவருடைய பெயரால் அழைக்க அவர்கள் மறுக்கும்போது, எப்படி கடவுளை அறிந்திருப்பதாகவும் அவருடன் நல்லுறவு அனுபவிப்பதாகவும் சொல்ல முடியும்? அவருடைய உண்மையான பெயர், அவரையும் அவருடைய நோக்கங்களையும் புரிந்துகொள்வதற்கு வழிவகுக்கிறது. மேலும், கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்படவே இல்லையென்றால், இயேசு கற்றுக்கொடுத்த மாதிரி ஜெபத்தில் “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என சொல்வதால் என்ன பயன் இருக்கும்?—மத்தேயு 6:9; யோவான் 5:43; 17:6.
இயேசு கிறிஸ்து யார்?
10. இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய முழுமையான விவரங்களை எவ்வழிகளில் நாம் பெறலாம்?
10 தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் 3-ஆம் பாடம், “இயேசு கிறிஸ்து யார்?” என்பதை கலந்தாலோசிக்கிறது. ஆறே பாராக்களில் அது இயேசுவையும், அவரது பிறப்பையும், அவர் பூமிக்கு வந்த நோக்கத்தையும் பற்றி ரத்தின சுருக்கமாக விளக்குகிறது. இருந்தாலும் அவரது வாழ்க்கையைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பினால், பைபிளிலுள்ள சுவிசேஷ பதிவுகளைத் தவிர படிக்கச் சிறந்த பிரசுரம், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகச் சிறந்த மனிதர் புத்தகமாகும்;d இது 111 மொழிகளில் கிடைக்கிறது. இந்தப் புத்தகம், நான்கு சுவிசேஷங்களின் அடிப்படையில் கிறிஸ்துவின் வாழ்க்கையையும் போதகங்களையும் பற்றிய முழுமையான விவரப்பதிவை காலவரிசைப்படி அளிக்கிறது. இதன் 133 அதிகாரங்கள், இயேசுவின் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் நிகழ்ந்த சம்பவங்களை விளக்குகின்றன. பகுத்துக் காட்டும் வித்தியாசமான அணுகுமுறைக்கு, உட்பார்வை ஆங்கில புத்தகம், தொகுதி 2-ல், “இயேசு கிறிஸ்து” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்தலாம்.
11. (அ) இயேசுவைப் பற்றிய நம்பிக்கை சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு வித்தியாசப்பட்டவர்கள்? (ஆ) திரித்துவ கோட்பாட்டை பொய்யென தெளிவாக நிரூபிக்கும் பைபிள் வசனங்கள் சில யாவை, இந்த விஷயத்திற்கு எந்தப் பிரசுரம் உபயோகமானது?
11 இயேசு கிறிஸ்து “கடவுளுடைய குமாரனாக” மட்டுமல்லாமல் “குமாரனாகிய கடவுளாகவும்” இருக்கிறாரா என்பதே கிறிஸ்தவமண்டலத்தில் சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கிறது; வேறு வார்த்தைகளில் சொன்னால், “கிறிஸ்தவ விசுவாசத்தின் முக்கிய மர்மம்” என காட்டகிஸம் ஆஃப் த கேத்தலிக் சர்ச் அழைக்கும் திரித்துவமே சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. கிறிஸ்தவமண்டலப் பிரிவுகளிலிருந்து வித்தியாசப்பட்ட யெகோவாவின் சாட்சிகள், இயேசு கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறார் என்றும் அவர் கடவுள் அல்லர் என்றும் நம்புகிறார்கள். இந்த விஷயத்தை மிகச் சிறப்பாக கலந்தாலோசிக்கும் பிரசுரம், நீங்கள் திரித்துவத்தை நம்ப வேண்டுமா? என்ற சிற்றேடாகும்; இது 95 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.e திரித்துவ கோட்பாட்டை பொய்யென நிரூபிக்க அது பயன்படுத்தும் பல்வேறு வசனங்களில், மாற்கு 13:32 மற்றும் 1 கொரிந்தியர் 15:24, 28 அடங்கும்.
12. மேலுமான என்ன கேள்விக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்?
12 கடவுளையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய இந்தக் கலந்தாலோசிப்பு, பைபிள் சத்தியத்தைப் பற்றி அறியாதவர்கள் திருத்தமான அறிவைப் பெறுவதற்கு உதவ வேண்டுமென்ற நோக்கத்தோடு தனிப்பட்ட படிப்பை எப்படியெல்லாம் படிக்கலாம் என காட்டுகிறது. (யோவான் 17:3) என்றாலும் பல வருடங்களாக கிறிஸ்தவ சபையோடு கூட்டுறவு வைத்திருப்போரைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் பெருமளவு பைபிள் அறிவைப் பெற்றிருப்பதால், யெகோவாவின் வார்த்தையை தனிப்பட்ட விதமாக படிப்பதற்கு இன்னமும் கவனம் செலுத்த வேண்டுமா?
‘இடைவிடாமல் கவனம் செலுத்த’ வேண்டியது ஏன்?
13. தனிப்பட்ட படிப்பு சம்பந்தமாக சிலருக்கு என்ன தவறான எண்ணம் இருக்கலாம்?
13 பல வருடங்களாக கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்களாக இருந்திருக்கும் சிலர், யெகோவாவின் சாட்சிகளாக ஆன முதல் சில வருடங்களில் கற்றறிந்த பைபிள் அறிவை மட்டுமே சார்ந்திருக்கும் பழக்கத்தைப் பெறலாம். “புதுசா வருகிறவங்க படிக்க வேண்டிய அளவுக்கு நான் படிக்க வேண்டியதில்லை. நான்தான் இவ்வளவு வருஷமா பைபிளையும் மற்ற புத்தகங்களையும் எத்தனையோ தடவை படித்துவிட்டேனே” என நியாயப்படுத்த முயல்வது சுலபம். இது, “நான் எவ்வளவு சாப்பிடுகிறேன் என இப்போது கவலைப்பட வேண்டியதே இல்லை, நான்தான் இவ்வளவு வருஷமா எத்தனையோ தடவை சாப்பிட்டுவிட்டேனே” என சொல்வதைப் போல்தான் இருக்கும். நன்றாக தயாரிக்கப்பட்ட, ஊட்டச்சத்துள்ள உணவு உடலுக்கு எப்போதும் தேவை என்பது நமக்கு தெரியும்; அப்போதுதான் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். அப்படியென்றால் நம் ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும் பலத்தையும் காத்துக்கொள்வதன் விஷயத்தில் இது இன்னும் எவ்வளவு உண்மையாய் இருக்கும்!—எபிரெயர் 5:12-14.
14. நாம் ஏன் இடைவிடாமல் நமக்கு கவனம் செலுத்த வேண்டும்?
14 ஆகவே நாம் நீண்டகால பைபிள் மாணாக்கர்களாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, பொறுப்புமிக்க கண்காணியாக முதிர்ச்சியடைந்திருந்த தீமோத்தேயுவிற்கு பவுல் தந்த இந்த அறிவுரைக்கு செவிசாய்க்க வேண்டும்: “உனக்கும் உன் போதனைக்கும் இடைவிடாமல் கவனம் செலுத்து. இவற்றிலேயே நிலைத்திரு, ஏனென்றால் அப்படி செய்யும்போது உன்னையும் உனக்கு செவிகொடுத்துக் கேட்போரையும் இரட்சித்துக்கொள்வாய்.” (1 தீமோத்தேயு 4:15, 16, NW) நாம் ஏன் பவுலின் புத்திமதிக்கு செவிசாய்க்க வேண்டும்? ‘பிசாசின் தந்திரங்களோடும் [“ஏமாற்று வழிகள்,” பொது மொழிபெயர்ப்பு]’ “வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்” நாம் போராட வேண்டுமெனவும் பவுல் குறிப்பிட்டதை நினைவில் வையுங்கள். மேலும், பிசாசு ‘எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிக்’ கொண்டிருப்பதாகவும் ‘எவனை’ என்பது நம்மில் எவரையும் குறிக்கலாம் என்பதாகவும் அப்போஸ்தலனாகிய பேதுரு எச்சரித்தார். நம்முடைய மெத்தனமே, வாய்ப்பிற்காக காத்துக்கிடக்கும் அவனிடம் நம்மை வசமாக மாட்ட வைக்கலாம்.—எபேசியர் 6:11, 12; 1 பேதுரு 5:8.
15. ஆவிக்குரிய தற்காப்பளிக்கும் எது நம்மிடம் இருக்கிறது, அதை நாம் எப்படி பராமரிக்கலாம்?
15 அப்படியென்றால் நமக்கு என்ன தற்காப்பு இருக்கிறது? அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு இவ்வாறு நினைவூட்டுகிறார்: “தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும் சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 6:13) திறம்பட்ட ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கம், தொடக்கத்தில் இருந்த அதன் தரத்தை மட்டுமல்ல, அது எந்தளவு இடைவிடாமல் பராமரிக்கப்படுகிறது என்பதையும் சார்ந்திருக்கிறது. ஆகவே கடவுளிடமிருந்து வரும் அந்த முழு ஆயுதவர்க்கத்தில், அவருடைய வார்த்தையின் பேரிலான அறிவை அப்போதைக்கு அப்போது பெறுவதும் அடங்க வேண்டும். யெகோவா தமது வார்த்தையின் மூலமும் உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாரின் மூலமும் வெளிப்படுத்திவரும் சத்தியத்தை உடனுக்குடன் படித்து புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை இது சுட்டிக்காட்டுகிறது. நம் ஆவிக்குரிய ஆயுதத்தை பராமரிக்க பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் தவறாமல் படிப்பது அவசியம்.—மத்தேயு 24:45-47; எபேசியர் 6:14, 15.
16. நம்முடைய ‘விசுவாசமென்னும் கேடகம்’ நல்ல நிலையில் இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள நாம் என்ன செய்யலாம்?
16 ‘விசுவாசமென்னும் கேடகம்,’ தற்காப்பு ஆயுதத்தின் முக்கிய பாகமாக இருப்பதை பவுல் வலியுறுத்துகிறார்; அதைக் கொண்டு, பொய்க் குற்றச்சாட்டுகள் மற்றும் விசுவாசதுரோக போதகங்கள் என்ற சாத்தானின் அக்கினியாஸ்திரங்களை திசைதிருப்பி, அவித்துப்போட முடியும். (எபேசியர் 6:16) ஆகவே நம் விசுவாசக் கேடகம் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதையும் அதைப் பராமரிக்கவும் பலப்படுத்தவும் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்பதையும் நாம் சோதித்துப் பார்ப்பது அவசியம். உதாரணத்திற்கு நீங்கள் இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘காவற்கோபுரம் பத்திரிகையைப் பயன்படுத்தி வாராந்தர பைபிள் படிப்பிற்கு நான் எவ்வாறு தயாரிக்கிறேன்? கூட்டத்தின்போது மற்றவர்களை “அன்புக்கும் நற்கிரியைக்கும் ஏ[வும்]” விதத்தில் நன்கு யோசித்து பதில்கள் சொல்லும் அளவுக்கு நான் படித்து வைத்திருக்கிறேனா? மேற்கோள் காட்டப்படாமல் வெறுமனே குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களை என் பைபிளைத் திறந்து படித்துப் பார்க்கிறேனா? கூட்டங்களில் ஆர்வத்துடன் பங்குபெறுவதன் மூலம் மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறேனா?’ நாம் பலமான ஆவிக்குரிய ஆகாரத்தை உண்கிறோம், அதிலிருந்து முழு பயன் பெற அதை முழுமையாக ஜீரணிக்க வேண்டும்.—எபிரெயர் 5:14; 10:24.
17. (அ) நம் ஆவிக்குரிய தன்மையைக் கெடுக்கும் எண்ணத்துடன் சாத்தான் என்ன விஷத்தை பயன்படுத்துகிறான்? (ஆ) சாத்தானின் விஷத்தை எவ்வாறு முறிக்கலாம்?
17 அபூரண மனிதரின் பலவீனங்களை சாத்தான் அறிந்திருக்கிறான், அவனது தந்திரங்களும் சூட்சுமமானவை. டிவியிலும் இன்டர்நெட்டிலும் வீடியோக்களிலும் பிரசுரங்களிலும் ஆபாசம் தண்ணீர்பட்ட பாடாக இருக்கிறது; சாத்தான் தனது பொல்லாத செல்வாக்கை பரப்பும் ஒரு வழி இதுதான். சில கிறிஸ்தவர்கள் தங்கள் பலவீனமான ஆயுதவர்க்கத்தை இந்த விஷம் ஊடுருவ அனுமதித்திருக்கிறார்கள்; இதனால் சபையில் தங்களுக்கிருந்த விசேஷ பொறுப்புகளை இழந்திருக்கிறார்கள் அல்லது இதைவிட மோசமான விளைவுகளை சந்தித்திருக்கிறார்கள். (எபேசியர் 4:17-19) சாத்தானின் விஷத்தை எவ்வாறு முறிக்கலாம்? தவறாத தனிப்பட்ட பைபிள் படிப்பு, கிறிஸ்தவ கூட்டங்கள், கடவுளுடைய சர்வாயுதவர்க்கம் ஆகியவற்றை நாம் புறக்கணிக்கக் கூடாது. இவை அனைத்தும் சேர்ந்து, நன்மை தீமையை பகுத்தறிவதற்கும் கடவுள் வெறுப்பதை வெறுப்பதற்குமான திறனை நமக்கு அளிக்கின்றன.—சங்கீதம் 97:10; ரோமர் 12:9.
18. நம் ஆவிக்குரிய போராட்டத்தில் ‘ஆவியின் பட்டயம்’ எவ்வாறு உதவும்?
18 நாம் பைபிள் படிப்புப் பழக்கங்களை தவறாமல் பின்பற்றிவந்தால், கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவு அளிக்கும் பலமான தற்காப்பை பெற்றிருப்பதோடு, “தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தை” பயன்படுத்தி திறம்பட தாக்குவதற்கும் தயாராயிருப்போம். கடவுளுடைய வார்த்தை “இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபேசியர் 6:17; எபிரெயர் 4:12) அந்தப் ‘பட்டயத்தை’ பயன்படுத்துவதில் நாம் திறம்பட்டவர்களானால், சோதனைகளை எதிர்ப்படும்போது, தீங்கற்றதாக அல்லது நல்லதாகக்கூட தோன்றுபவற்றை ஊடுருவிப் பார்க்க முடியும்; இவ்வாறு, அவை பொல்லாதவனின் மரணத்திற்கு ஏதுவான கண்ணிகள் என்பதை புரிந்துகொள்ள முடியும். பைபிள் அறிவும் புரிந்துகொள்ளுதலும் அடங்கிய நம் களஞ்சியம், பொல்லாததை புறக்கணிக்கவும் நன்மையானதை செய்யவும் நமக்கு உதவும். ஆகவே நாம் ஒவ்வொருவரும் இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘என் பட்டயம் பதமாயிருக்கிறதா அல்லது துருப்பிடித்திருக்கிறதா? பலமாக தாக்குவதற்கு உதவும் பைபிள் வசனங்களை ஞாபகத்திற்கு கொண்டுவருவது எனக்கு பெரும் பாடாக இருக்கிறதா?’ நாம் அனைவரும் நல்ல பைபிள் படிப்புப் பழக்கங்களை பின்பற்றி, பிசாசை எதிர்ப்போமாக.—எபேசியர் 4:22-24.
19. தனிப்பட்ட படிப்பில் கருத்தாக ஈடுபடும்போது நாம் என்ன நன்மைகளைப் பெறலாம்?
19 “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என்று பவுல் எழுதினார். தீமோத்தேயுவிற்கு அவர் சொன்ன வார்த்தைகளை நாம் மனதில் வைத்து நடந்தால், நம் சொந்த ஆவிக்குரிய தன்மையை பலப்படுத்த முடியும்; நம் ஊழியத்தையும் அதிக திறம்பட்டதாக்க முடியும். ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ள மூப்பர்களும் உதவி ஊழியர்களும் சபைக்கு பெரும் ஆசீர்வாதமாக இருக்கலாம், மேலும் நாம் அனைவரும் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்கலாம்.—2 தீமோத்தேயு 3:16, 17; மத்தேயு 7:24-27.
[அடிக்குறிப்புகள்]
a புதிதாக ஆர்வம் காட்டுபவர் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை படித்த பிறகு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை பொதுவாக படிக்க ஆரம்பிப்பார்; இவ்விரண்டுமே யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது. ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கான தடைகளை சமாளிக்க இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகள் உதவும்.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது. வேதாகமத்தின் பேரில் உட்பார்வை புத்தகத்தை தங்கள் மொழியில் பெற்றிருப்பவர்கள், தொகுதி 2-ல், “யெகோவா” என்ற தலைப்பின்கீழ் காண்க.
c எபிரெய நான்கெழுத்தைப் பயன்படுத்தும் விஷயத்தில் குறிப்பிடத்தக்க விதிவிலக்குகள், ஸ்பானிய, காட்டலோனிய மொழிபெயர்ப்புகளில் பலவாகும்; அவை, “யாவே,” “யாவ்வே,” “ஜாவே,” “ஜேயோவா” என்றெல்லாம் குறிப்பிடுகின்றன.
d யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
e யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
நினைவிருக்கிறதா?
• திறம்பட்ட தனிப்பட்ட படிப்பிற்கு எப்படிப்பட்ட சூழல் தேவை?
• கடவுளுடைய பெயர் சம்பந்தமாக அநேக பைபிள் மொழிபெயர்ப்புகள் செய்யும் தவறு என்ன?
• திரித்துவத்தை பொய்யென நிரூபிக்க எந்த பைபிள் வசனங்களை நீங்கள் பயன்படுத்துவீர்கள்?
• நாம் அநேக ஆண்டுகளாக உண்மை கிறிஸ்தவர்களாக இருந்தாலும், சாத்தானுடைய தந்திரங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
[பக்கம் 19-ன் படங்கள்]
திறம்பட்ட தனிப்பட்ட படிப்பிற்கு அமைதலான இடமும் ஏற்ற சூழலும் அவசியம்
[பக்கம் 23-ன் படங்கள்]
உங்கள் ‘பட்டயம்’ பதமாயிருக்கிறதா அல்லது துருப்பிடித்திருக்கிறதா?