தாராள மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்
பிறக்கும்போதே ஒருவர் தாராள மனப்பான்மையோடு பிறப்பதில்லை. ‘எனக்கு இது வேண்டும் அது வேண்டும், இது தேவை அது தேவை’ என நினைப்பது ஒரு குழந்தையின் இயல்பான மனச்சாய்வாக இருக்கிறது; தன்னை பராமரிப்பவருடைய தேவைகளைக்கூட அது கண்டுகொள்வதில்லை. என்றாலும், இந்த உலகம் தன்னைச் சுற்றி மட்டுமே சுழன்று கொண்டில்லை என்பதை காலப்போக்கில் அந்தக் குழந்தை கற்றுக்கொள்கிறது. மற்றவர்களுடைய தேவைகளையும் அந்தக் குழந்தை புரிந்துகொள்ள வேண்டும், அதுமட்டுமல்ல மற்றவரிடமிருந்து கைநீட்டி வாங்குவதற்கு மட்டுமே பழகிக்கொள்ளாமல் கொடுப்பதற்கும் பழகிக்கொள்ள வேண்டும். ஆக, தாராள மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
கொடுப்பவர்கள் எல்லாருக்குமே—வாரி வழங்குபவர்களுக்குக்கூட—தாராள மனப்பான்மை இருப்பதில்லை. சுயநலத்தை மனதில் வைத்தே சிலர் அறக்கொடை நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடை அளிக்கலாம். மற்றவர்களோ தங்களுக்கு புகழ்மாலை சூட்டப்பட வேண்டும் என்பதற்காக தானதர்மம் செய்யலாம். ஆனால், உண்மை கிறிஸ்தவர்கள் அளிக்கும் கொடைகளோ இவற்றிலிருந்து வேறுபட்டவை. அப்படியானால், கடவுளுடைய வார்த்தை உற்சாகப்படுத்தும் இந்த தாராள மனப்பான்மையில் என்னென்ன காரியங்கள் உட்பட்டுள்ளன? முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்கள் எவ்வாறெல்லாம் தாராள மனப்பான்மையை காண்பித்தார்கள் என்பதை சுருக்கமாக ஆராய்ந்து பார்த்தால் இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கும்.
கிறிஸ்தவ தானத்திற்கான உதாரணங்கள்
நிஜமான தேவையில் இருந்தவர்களுக்கு ‘தானதர்மம் பண்ணுவதையே’ கிறிஸ்தவ தானம் பொதுவாக குறித்ததென்று பைபிள் விவரிக்கிறது. (எபிரெயர் 13:16; ரோமர் 15:26) அது கட்டாயத்தின்பேரில் செய்யப்பட வேண்டியதாக இருக்கவில்லை. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (2 கொரிந்தியர் 9:7) அதோடு, தானதர்மம் எல்லாரும் பார்க்க வேண்டும் என்பதற்காக செய்யப்படவில்லை. இப்படி பாசாங்கு செய்த அனனியாவும் சப்பீராளும் விபரீத விளைவுகளை சந்தித்தார்கள்.—அப்போஸ்தலர் 5:1-10.
அநேக யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே பண்டிகைக்காக வெகு தொலைவிலிருந்து எருசலேமிற்கு கூடிவந்திருந்த சமயத்தில் தாராள குணத்தை காண்பிக்கும் அவசியம் ஏற்பட்டது. அங்குதான் இயேசுவை பின்பற்றியவர்கள் “பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு . . . வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்.” திரளானோர் அவர்களைச் சுற்றி நின்று, இயேசு கிறிஸ்துவைப் பற்றி பேதுரு கொடுத்த ஊக்கமூட்டும் பேச்சை கேட்டார்கள். பிற்பாடு, ஆலய வாசலில் இருந்த ஒரு முடவனை பேதுருவும் யோவானும் குணப்படுத்தியதை கண்டார்கள், அதோடு இயேசுவைப் பற்றியும், மனந்திரும்ப வேண்டிய அவசியத்தைப் பற்றியும் பேதுரு மறுபடி பேசியதையும் அவர்கள் கேட்டார்கள். அப்போது ஆயிரக்கணக்கானோர் மனந்திரும்பி, கிறிஸ்துவின் சீஷர்களாக முழுக்காட்டப்பட்டார்கள்.—அப்போஸ்தலர், அதிகாரங்கள் 2 மற்றும் 3.
அந்தப் புதிய சீஷர்கள், இயேசுவின் அப்போஸ்தலர்களிடமிருந்து இன்னுமதிக போதனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக எருசலேமிலேயே தங்க விரும்பினார்கள். ஆனால், அத்தனை பேருடைய தேவைகளையும் அப்போஸ்தலர்களால் எவ்வாறு பூர்த்தி செய்ய முடிந்தது? பைபிள் பதிவு இவ்வாறு சொல்கிறது: “நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத் தக்கதாய்ப் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.” (அப்போஸ்தலர் 4:33-35) ஆம், புதிதாக அமைக்கப்பட்டிருந்த எருசலேம் சபையை சேர்ந்தவர்களுக்கு உண்மையிலேயே தாராள மனப்பான்மை இருந்தது!
பிற்பாடு, மற்ற ஊர்களிலிருந்த சபையாரும் இதே போன்ற தாராள மனப்பான்மையை வெளிக்காட்டினார்கள். உதாரணத்திற்கு, மக்கெதோனியாவிலிருந்த கிறிஸ்தவர்கள் ஏழைகளாக இருந்தபோதிலும், அவர்கள் யூதேயாவில் வறுமையில் வாடிக்கொண்டிருந்த தங்கள் சகோதரர்களுக்காக தங்கள் திராணிக்கு மிஞ்சி நன்கொடைகளை அளித்தார்கள். (ரோமர் 15:26; 2 கொரிந்தியர் 8:1-7) பவுலின் ஊழியத்திற்கு ஆதரவு அளித்ததில் பிலிப்பியிலிருந்த சபை நிகரற்று விளங்கியது. (பிலிப்பியர் 4:15, 16) வறுமையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த விதவைகளுக்கு தினந்தோறும் உணவளிக்க எருசலேமிலிருந்த சபை ஏற்பாடு செய்தது; அதுமட்டுமல்ல, தேவையிலிருந்த எந்த விதவையும் கவனிப்பாரற்றுப் போகாதபடிக்கு அங்கிருந்த அப்போஸ்தலர்கள் தகுதி வாய்ந்த ஏழு சகோதரர்களையும் நியமித்தார்கள்.—அப்போஸ்தலர் 6:1-6.
கடின காலங்கள் வருவதை எதிர்பார்த்திருந்த சமயத்தில்கூட, ஆரம்ப கால கிறிஸ்தவ சபைகள் உதவிக்கரம் நீட்ட தயாராக இருந்தன. உதாரணத்திற்கு, கொடிய பஞ்சம் உண்டாகப் போகிறதென்று தீர்க்கதரிசியான அகபு முன்னறிவித்தபோது, சிரியாவின் அந்தியோகியா சபையிலே இருந்த சீஷர்கள், “தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணம் சேகரித்து அனுப்ப வேண்டுமென்று தீர்மானம் பண்ணினார்கள்.” (அப்போஸ்தலர் 11:28, 29) மற்றவர்களின் எதிர்கால தேவையை உணர்ந்து செயல்பட்டதில் என்னே ஒரு அருமையான மனப்பான்மையை வெளிக்காட்டினார்கள்!
அந்தளவு பெருந்தன்மையாகவும் அன்பாகவும் நடந்துகொள்ள ஆரம்ப கால கிறிஸ்தவர்களை எது தூண்டியது? தாராள மனப்பான்மையை ஒருவர் உண்மையிலேயே எப்படி வளர்க்க முடியும்? தாவீது ராஜாவின் உதாரணத்தைப் பற்றி சுருக்கமாக சிந்திப்பதன் மூலம் அதிகத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்.
உண்மை வணக்கத்திற்கு தாவீதின் தாராள உதவி
ஏறக்குறைய 500 ஆண்டுகளாக, உடன்படிக்கை பெட்டியை—யெகோவாவின் பிரசன்னத்தை பிரதிநிதித்துவம் செய்த புனிதப் பெட்டியை—வைக்க நிரந்தரமான ஒரு இடம் இருக்கவில்லை. அது ஒரு கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்தது; அந்தக் கூடாரத்தை இஸ்ரவேலர்கள் வனாந்தரத்திலே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும், பிறகு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள்ளும் தங்களோடே தூக்கிக் கொண்டு போனார்கள். கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த உடன்படிக்கைப் பெட்டியை அங்கிருந்து எடுத்து, யெகோவாவுக்காக தகுந்த ஒரு வீட்டை கட்டி அதில் அந்தப் பெட்டியை வைக்க வேண்டுமென்று தாவீது ராஜா பெரிதும் ஆசைப்பட்டார். தீர்க்கதரிசியான நாத்தானிடம் தாவீது பேசுகையில்: “பாரும், நான் கேதுருமர வீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது” என்று சொன்னார்.—1 நாளாகமம் 17:1.
தாவீது தன் வாழ்நாளெல்லாம் ஒரு யுத்த வீரராக இருந்திருந்தார். ஆகவே, அவருடைய குமாரனான சாலொமோன், தன் சமாதான ஆட்சியின்போது, உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்காக ஆலயத்தைக் கட்டுவார் என்று யெகோவா அறிவித்தார். (1 நாளாகமம் 22:7-10) என்றாலும், இது தாவீதின் தாராள மனப்பான்மைக்கு அணை போடவில்லை. ஆலயத்தின் கட்டுமான பணிக்குத் தேவையான பொருட்களை அளிப்பதற்காக அவர் அணிதிரண்டு சென்றார். சாலொமோனிடம் அவர் பிற்பாடு இப்படி சொன்னார்: “கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்து லட்சம் தாலந்து வெள்ளியையும், நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும் [‘சேகரித்தும்,’ பொது மொழிபெயர்ப்பு] மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன்.” (1 நாளாகமம் 22:14) இத்தனை கொடுத்தும் தாவீதிற்கு மனம் அடங்கவில்லை, தன்னுடைய சொந்த ஆஸ்தியிலிருந்துகூட தங்கத்தையும் வெள்ளியையும் நன்கொடையாக அளித்தார்; அவற்றின் இந்நாளைய மதிப்பு 6,000,00,00,000 ரூபாய் ஆகும். அதுமட்டுமல்ல, அங்கிருந்த பிரபுக்கள்கூட அள்ளி அள்ளித் தந்தனர். (1 நாளாகமம் 29:3-9) தாவீது பரந்த மனப்பான்மையோடு தாராளமாய் கொடுத்தார் என்பதில் துளியும் சந்தேகமில்லை!
இந்தளவு பரந்த மனப்பான்மையோடு கொடுக்க தாவீதை தூண்டியது எது? தான் பெற்றுக்கொண்ட, சாதிக்க முடிந்த அனைத்துமே யெகோவாவின் ஆசீர்வாதத்தால்தான் என்பதை அவர் உணர்ந்திருந்தார். தன் ஜெபத்தில் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப் பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது. என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன்.” (1 நாளாகமம் 29:16, 17) யெகோவாவோடு தனக்கிருந்த உறவை தாவீது பொக்கிஷமாக கருதினார். “உத்தம [“முழு,” NW] இருதயத்தோடும் உற்சாக மனதோடும்” கடவுளை சேவிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார், அவ்வாறு செய்ததில் சந்தோஷமும் கண்டார். (1 நாளாகமம் 28:9) இதே குணங்கள்தான் தாராள மனப்பான்மையை காண்பிக்க ஆரம்ப கால கிறிஸ்தவர்களையும் தூண்டின.
யெகோவா —மிகச் சிறந்த கொடையாளர்
வாரிக் கொடுப்பதில் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்பவர் யெகோவா தேவன். “தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிற” அளவுக்கு அத்தனை அன்பும் கரிசனையும் உள்ளவராக இருக்கிறார். (மத்தேயு 5:45) முழு மனிதவர்க்கத்துக்கும் அவர் “ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும்” கொடுக்கிறார். (அப்போஸ்தலர் 17:25) உண்மையிலேயே, சீஷனாகிய யாக்கோபு குறிப்பிட்டது போல, “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது.”—யாக்கோபு 1:17.
“தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு” அவரை இங்கு அனுப்பியதுதான் யெகோவா நமக்கு தந்திருக்கும் மிகப் பெரிய பரிசு. (யோவான் 3:16) அத்தகைய பரிசை பெற்றுக்கொள்ளும் தகுதி தங்களுக்கு இருக்கிறதென்று யாருமே உரிமை பாராட்டிக்கொள்ள முடியாது, ஏனெனில் “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி” இருக்கிறோம். (ரோமர் 3:23, 24; 1 யோவான் 4:9, 10) கிறிஸ்துவின் கிரய பலிதான் கடவுளின் ‘சொல்லிமுடியாத ஈவின்,’ அதாவது கடவுளின் ‘மிகவும் விசேஷித்த கிருபையின்’ அடிப்படையாகவும் வழியாகவும் இருக்கிறது. (2 கொரிந்தியர் 9:14, 15) கடவுளுடைய இந்தப் பரிசுக்கு நன்றி காண்பிக்கும் விதத்தில், பவுல் “தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணு”வதை தன் வாழ்க்கையின் தலையாய பணியாக்கினார். (அப்போஸ்தலர் 20:24) “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடை”யவும் வேண்டுமென்பதே கடவுளின் சித்தமாக இருக்கிறது என்பதை கண்டுணர்ந்தார்.—1 தீமோத்தேயு 2:4.
கடவுளுடைய இந்த சித்தம், பிரசங்கிக்கும் மற்றும் போதிக்கும் வேலையின் மூலம் இன்று நிறைவேறி வருகிறது; இந்த பிரமாண்டமான வேலை உலகம் முழுவதுமுள்ள 234 நாடுகளில் விரிவடைந்துள்ளது. இந்த விஸ்தரிப்பைப் பற்றி இயேசு பின்வருமாறு முன்னறிவித்தார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) ஆம், “சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்பட வேண்டும்.” (மாற்கு 13:10) சென்ற ஆண்டு, சுவிசேஷத்தை பிரசங்கித்த 60 லட்சத்திற்கும் அதிகமானோர், இந்த வேலைக்காக 120,23,81,302 மணிநேரத்தை அர்ப்பணித்திருக்கிறார்கள், அதோடு 53,00,000-க்கும் அதிகமான பைபிள் படிப்புகளை நடத்தியிருக்கிறார்கள். உயிர்கள் ஆபத்தில் இருப்பதால் இந்த போதிக்கும் வேலை மிக மிக இன்றியமையாதது.—ரோமர் 10:13-15; 1 கொரிந்தியர் 1:21.
பைபிள் சத்தியத்திற்காக ஏங்கித் தவிப்பவர்களுக்கு உதவ, ஒவ்வொரு ஆண்டும், பைபிள்கள், புத்தகங்கள் மற்றும் சிற்றேடுகள் உட்பட லட்சக்கணக்கான பிரசுரங்கள் அச்சிடப்படுகின்றன. அதுபோக, காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் 100 கோடிக்கும் அதிகமாக தயாரிக்கப்படுகின்றன. இந்த நற்செய்திக்கு ஜனங்கள் நல்ல விதத்தில் பிரதிபலிப்பதால், யெகோவாவின் சாட்சிகளது ஏராளமான ராஜ்ய மன்றங்களும் அசெம்பிளி ஹால்களும் கட்டப்படுகின்றன; இவை பைபிள் போதனைகள் அளிக்கப்படும் மையங்களாக திகழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும், வட்டார மாநாடுகள், விசேஷ தின மாநாடுகள், அதோடு மாவட்ட மாநாடுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மிஷனரிகள், பயணக் கண்காணிகள், மூப்பர்கள், உதவி ஊழியர்கள் ஆகியோருக்கான பயிற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” மூலம் இப்படிப்பட்ட எல்லா ஏற்பாடுகளையும் செய்துவரும் யெகோவாவுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். (மத்தேயு 24:45-47, NW) அவருக்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க எவ்வளவு ஆவலுள்ளவர்களாக இருக்கிறோம்!
யெகோவாவுக்கு நன்றி காண்பித்தல்
முழுக்க முழுக்க மனமுவந்து கொடுக்கப்பட்ட நன்கொடைகள் ஆலயத்தின் கட்டுமான பணிக்கும் ஆரம்ப கால கிறிஸ்தவ சபைகளின் தேவைகளுக்கும் எவ்வாறு உதவியதோ அவ்வாறே மேற்குறிப்பிடப்பட்ட எல்லா ஏற்பாடுகளுக்கும் இன்று உதவுகிறது. என்றாலும் ஒன்றை மட்டும் நினைவில் வைக்க வேண்டும், அதாவது யெகோவா தேவனுக்கு கொடுப்பதன் மூலம் அவரை யாருமே பணக்காரராக்கிவிட முடியாது, ஏனெனில் எல்லாவற்றிற்கும் சொந்தக்காரர் அவர்தான். (1 நாளாகமம் 29:14; ஆகாய் 2:8) யெகோவாவை நாம் எந்தளவு நேசிக்கிறோம் என்பதையும் மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்க எந்தளவு ஆவலுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதையுமே நம்முடைய நன்கொடைகள் காண்பிக்கின்றன. பவுல் சொல்கிறார், தாராளமாக கொடுக்கும் இத்தகைய செயல்கள் “கடவுளுக்கு நன்றியறிதலான ஸ்தோத்திரம் உண்டாகச் செய்”கின்றன. (2 கொரிந்தியர் 9:8-13, திருத்திய மொழிபெயர்ப்பு) இப்படி தாராளமாய் கொடுப்பதை யெகோவா உற்சாகப்படுத்துகிறார், ஏனெனில் அது நமக்கு சரியான மனப்பான்மை இருப்பதை காண்பிக்கிறது, அதோடு அவரை நேசிக்கும் இருதயம் நமக்கு இருப்பதையும் காண்பிக்கிறது. யெகோவா மீது சார்ந்திருக்கும் உதார குணமுள்ளவர்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், ஆவிக்குரிய விதத்தில் செழித்தோங்குவார்கள். (உபாகமம் 11:13-15; நீதிமொழிகள் 3:9, 10; 11:25) இப்படி செய்யும்போது சந்தோஷத்தைப் பெறுவோம் என இயேசு உறுதியளித்தார், அவர் சொன்னதாவது: “வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே அதிக சந்தோஷம்.”—அப்போஸ்தலர் 20:35, NW.
தாராள குணமுடைய கிறிஸ்தவர்கள், தேவை ஏற்பட்ட பிறகு ஏதாவது செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு காத்திருப்பதில்லை. மாறாக, “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்ய” வாய்ப்புகளுக்காக தேடுகிறார்கள். (கலாத்தியர் 6:10) கடவுளைப் போலவே தாராள மனப்பான்மையை காண்பிக்க ஊக்கப்படுத்தி பவுல் இவ்வாறு எழுதினார்: “நன்மை செய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (எபிரெயர் 13:16) மற்றவர்களுக்கு உதவுவதற்காகவும், மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்காகவும் நம்முடைய நேரம், பலம், பணம் ஆகியவற்றை பயன்படுத்தும்போது யெகோவா தேவன் மிகவும் பிரியப்படுகிறார். ஆம், தாராள மனப்பான்மையை உண்மையிலேயே அவர் நேசிக்கிறார்.
[பக்கம் 28, 29-ன் பெட்டி/படம்]
சிலர் வழங்க விரும்பும் வழிகள்
உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்
அநேகர் திட்டமிட்டு பணம் ஒதுக்கி, “உலகளாவிய வேலைக்காக நன்கொடைகள்—மத்தேயு 24:14” என்று குறிக்கப்பட்டிருக்கும் நன்கொடைப் பெட்டிகளில் அதை போடுகின்றனர்.
இத்தொகையை சபைகள் ஒவ்வொரு மாதமும் அந்தந்த நாட்டிற்குரிய யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கின்றன. மனப்பூர்வமாக அளிக்கப்படும் நன்கொடைப் பணத்தை நேரடியாகவும் இந்த அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கலாம். கிளை அலுவலகங்களின் விலாசங்களை இந்தப் பத்திரிகையின் 2-ம் பக்கத்தில் காணலாம். காசோலைகளை “Watch Tower” என்ற பெயரில் எடுக்க வேண்டும். நகைகளை அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களைக்கூட நன்கொடையாக வழங்கலாம். இவையனைத்தும் எவ்வித நிபந்தனையுமின்றி கொடுக்கப்படும் அன்பளிப்பு என்பதைக் குறிப்பிடும் சுருக்கமான கடிதத்தோடு அவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.
நிபந்தனைக்கு உட்பட்ட நன்கொடை ஏற்பாடு
சில நாடுகளில், பணத்தை மற்றொரு விசேஷ ஏற்பாட்டின் மூலமும் நன்கொடையாக அளிக்கலாம். இந்த ஏற்பாட்டின்படி, நன்கொடை அளிப்பவருக்கு பணம் தேவைப்படும் சமயத்தில் அது திருப்பி கொடுக்கப்படும். மேலுமான தகவல்களுக்கு தயவுசெய்து உங்கள் கிளை அலுவலகத்தோடு தொடர்பு கொள்ளவும்.
திட்டமிட்ட நன்கொடை
நிபந்தனையற்ற பண நன்கொடைகள், நிபந்தனைக்கு உட்பட்ட பண நன்கொடைகள் தவிர, நீங்கள் வாழும் நாட்டை பொறுத்து, உலகளாவிய ராஜ்ய சேவைக்கு உதவ மற்ற வழிமுறைகளும் இருக்கின்றன. அவையாவன:
இன்ஷ்யூரன்ஸ்: ஆயுள் காப்புறுதி பத்திரம் அல்லது ரிட்டையர்மென்ட்/ஓய்வூதிய திட்டத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம்.
வங்கி பண இருப்பு: வங்கி பண இருப்புகளும், டெபாஸிட் சர்டிஃபிகேட்டுகள், அல்லது தனிநபரின் ஓய்வூதிய கணக்குகளும் ஒரு டிரஸ்ட் ஏற்பாட்டின் மூலம் அல்லது மரணத்திற்குப் பிறகு உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு கொடுக்கும்படி உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதி வைக்கலாம்.
பங்குகளும் பாண்டுகளும்: பங்குகளையும் பாண்டுகளையும் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம்.
நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு முதலியவற்றை நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம் அல்லது வசிக்குமிடமாக இருந்தால், அதை அளிப்பவர் தன் மரணம் வரை அதை அனுபவிப்பதற்கான ஏற்பாடு செய்துகொள்ளலாம். இதில் எவற்றையாவது சட்டப்படி பத்திரத்தில் எழுதுவதற்கு முன் உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்துடன் தொடர்புகொள்ள வேண்டும்.
வருடாந்தர அன்பளிப்பு: இது, ஒருவர் தன்னுடைய பணத்தை அல்லது செக்யூரிட்டி டெபாஸிட்டுகளை உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு எழுதிக் கொடுக்கும் ஏற்பாடாகும். நன்கொடை அளிப்பவர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் முழுவதுமாக ஒரு குறிப்பிட்ட தொகையை இதற்கு மாற்றீடாக பெறுகிறார். வருடாந்தர அன்பளிப்பு என்ற இந்த ஏற்பாட்டை செய்யும் ஆண்டில் நன்கொடை வழங்குபவருக்கு வருமான வரி விலக்கு உண்டு.
உயில்களும் டிரஸ்டுகளும்: சொத்து அல்லது பணத்தை சட்டப்படி எழுதப்பட்ட உயில்கள் மூலம் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு சேரும்படி எழுதி வைக்கலாம் அல்லது ஒரு டிரஸ்ட் ஒப்பந்தத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம். மத அமைப்புக்கு உதவும் ஒரு டிரஸ்ட்டுக்கு வரி சலுகைகள் கிடைக்கலாம்.
“திட்டமிட்ட நன்கொடை” என்ற பதம், இவ்விதமான நன்கொடைகளை அளிப்பவர் அதற்காக முன்கூட்டியே நன்கு திட்டமிட வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. இப்படிப்பட்ட திட்டமிட்ட நன்கொடை மூலம் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்கு நன்மை செய்ய விரும்புகிறவர்களுக்கு உதவ உலகளாவிய ராஜ்ய சேவையை ஆதரிக்க திட்டமிட்ட நன்கொடை என்ற சிற்றேடு ஆங்கிலத்திலும் ஸ்பானிஷிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. நன்கொடைகள், உயில்கள் மற்றும் டிரஸ்டுகள் சம்பந்தமாக சொஸைட்டியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்தச் சிற்றேடு எழுதப்பட்டது. நிலம், பணம் மற்றும் வரி சம்பந்தப்பட்டதில் திட்டமிடுவதற்கு பயனுள்ள கூடுதல் தகவல்கள்கூட இதில் உள்ளன. மேலும் தனிநபர்கள் பல்வேறு வழிகளில் இப்போதே நன்கொடையாக கொடுப்பது அல்லது மரணத்திற்குப்பின் அனுபோகிக்க கொடுப்பது பற்றி இது தெரிவிக்கிறது. இந்தச் சிற்றேட்டை படித்துவிட்டு, தங்களுடைய சட்ட ஆலோசகரிடம் அல்லது வரிவிதிப்பு ஆலோசகரிடம், அதோடு நன்கொடை திட்ட அலுவலகத்துடனும் கலந்தாலோசித்தப் பின் அநேகர் உலகமுழுவதும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு உதவ முடிந்துள்ளது. அதே சமயத்தில் அவ்வாறு செய்வதன் மூலம் நிறைய வரி சலுகைகளையும் பெற்றுள்ளனர்.
கூடுதல் விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கோ உங்கள் நாட்டிற்குரிய யெகோவாவின் சாட்சிகளுடைய அலுவலகத்திற்கோ கடிதம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
Jehovah’s Witnesses of India,
Post Box 6440,
Yelahanka,
Bangalore 560 064,
Karnataka.
Telephone: (080) 8468072
[பக்கம் 26-ன் படம்]
தாராள குணத்தையும் அன்பையும் காண்பிக்க ஆரம்ப கால கிறிஸ்தவர்களை எது தூண்டியது?