வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ராசிக் கற்கள் பதிக்கப்பட்ட மோதிரத்தை கிறிஸ்தவர்கள் அணியலாமா?
சில கலாச்சாரங்களில் ராசிக் கற்களுக்கும் ஒருவருடைய பிறந்த மாதத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ரத்தினக் கல் பதிக்கப்பட்ட மோதிரத்தை ஒரு கிறிஸ்தவர் அணியலாமா என்பது அவராகவே தீர்மானிக்க வேண்டிய விஷயம். (கலாத்தியர் 6:5) ஆனால், அதைத் தீர்மானிக்கையில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
ராசிக் கல் என்பது “ஒருவரின் பிறந்த நாளோடு சம்பந்தப்பட்ட ஒரு ரத்தினக் கல்; அதை அணிவதால் அதிர்ஷ்டம் அல்லது ஆரோக்கியம் கிடைக்கும் என பரவலாக நம்பப்படுகிறது” என என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது. “சில ரத்தினக் கற்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக ஜோதிடர்கள் வெகு காலமாக நம்பி வந்திருக்கிறார்கள்” என்றும் அது குறிப்பிடுகிறது.
ராசிக் கல்லை அணிந்தவருக்கு அதிர்ஷ்டம் கிடைத்ததாக முக்கியமாய் பண்டைக் கால மக்கள் பலர் நம்பினார்கள். உண்மை கிறிஸ்தவர் இதை நம்புவாரா? நம்புவதில்லை, ஏனென்றால் தம்மை விட்டுவிட்டு, “அதிர்ஷ்ட தேவதை” மீது நம்பிக்கை வைத்தவர்களை யெகோவா தண்டித்தார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—ஏசாயா [இசையாஸ் ஆகமம்] 65:11, தமிழ் கத்தோலிக்க பைபிள்.
இடைக்காலங்களின் போது, வருடத்தின் ஒவ்வொரு மாதத்திற்கென ஒரு ரத்தினக் கல்லை குறி சொல்பவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். பிறந்த அந்த மாதத்திற்குரிய ரத்தினக் கல்லை அணியும்படி மக்களை அவர்கள் ஊக்குவித்தார்கள்; ஏனென்றால் அது தீங்கிலிருந்து மக்களை பாதுகாக்கும் என்று நம்பினார்கள். ஆனால் கிறிஸ்தவர்களை பொறுத்ததில் குறி சொல்பவர்களுக்கு செவி சாய்ப்பது வேதப்பூர்வமாக தவறானது; ஏனென்றால் அப்படிப்பட்ட காரியங்களை பைபிள் கண்டனம் செய்கிறது.—உபாகமம் 18:9-12.
பிறந்த நாளுடன் சம்பந்தப்பட்ட ராசிக் கல் பதிக்கப்பட்ட ஒரு மோதிரத்துக்கு தனி மகத்துவம் உண்டு என கிறிஸ்தவர்கள் நினைப்பதும் தவறுதான். யெகோவாவின் சாட்சிகள் பிறந்த நாட்களை கொண்டாடுவதில்லை. ஏனென்றால் அப்படிப்பட்ட கொண்டாட்டங்கள், ஒரு தனி நபருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன; அதுமட்டுமல்ல கடவுளை வணங்காத ராஜாக்கள் கொண்டாடிய பிறந்த நாட்களைப் பற்றிய பதிவு மட்டுமே பைபிளில் உள்ளது.—ஆதியாகமம் 40:20; மத்தேயு 14:6-10.
ராசிக் கல் பதித்த மோதிரத்தை அணிவது ஒருவரின் சுபாவத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் மெய்க் கிறிஸ்தவர்கள் இதை நம்புவதில்லை; ஏனென்றால் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் மூலமும் பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதன் மூலமுமே “புதிய மனித சுபாவத்தை” அணிந்துகொள்ள முடியும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—எபேசியர் 4:22-24, NW.
ஒருவருடைய உள்நோக்கம் இதில் முக்கியமாக உட்பட்டிருக்கிறது. ராசிக் கல் பதித்த மோதிரத்தை அணிய தீர்மானிக்கையில், ஒரு கிறிஸ்தவர் தன்னையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘என்னுடைய ராசிக் கல் என்பதாக சொல்லப்பட்டாலும்கூட, இந்த மோதிரக் கல் எனக்கு ரொம்ப பிடித்திருப்பதால்தான் இதை நான் போட்டுக்கொள்ள விரும்புகிறேனா? அல்லது, அப்படிப்பட்ட ராசிக் கற்களைப் பற்றி மற்றவர்களைப் போல் ஏதோ மூடநம்பிக்கை இருப்பதால் அணிந்துகொள்ள விரும்புகிறேனா?’
ஒரு கிறிஸ்தவர் தனது உள்நோக்கத்தை அறிந்துகொள்ள இருதயத்தை ஆராய்வது அவசியம். “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்” என வேதவசனம் கூறுகிறது. (நீதிமொழிகள் 4:23) ராசிக்கற்களை அணிவது சம்பந்தமாக தீர்மானம் எடுப்பதில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய உள்நோக்கங்களைக் குறித்தும் அதனால் தங்களுக்கும் பிறருக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறித்தும் சிந்தித்துப் பார்த்தால் நல்லது.—ரோமர் 14:13.