சர்ச்சுகளை காப்பாற்ற முடியுமா?
“பிரிட்டனில் வசிக்கும் மக்களுக்கு இன்னும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது, ஆனால் கிறிஸ்துவுக்கு தங்களை ஒப்புக்கொடுக்கத்தான் மனமில்லை” என்று சொல்கிறார் உகாண்டா நாட்டு பாதிரியாரான ஸ்டீபன் டிராம்வி. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, உகாண்டாவிலிருந்த அவரது சர்ச் கொடூர தாக்குதலுக்குள்ளான சமயத்தில் அவர் உயிர் தப்பினார். இன்றைக்கு இங்கிலாந்தில் லீட்ஸ் என்ற இடத்திலுள்ள ஆண்களின் கிளப்புகளில் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார்; கிளப்புகளுக்கு வருகிறவர்கள் ‘பிங்கோ’ விளையாட ஆரம்பிப்பதற்கு முன்னால் இவர் பத்து நிமிடம் பிரசங்கிக்கிறார்.
அட்லாண்டிக் கடலுக்கு அப்பாலுள்ள அமெரிக்காவில், சமீபத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஆங்கிலிக்கன் மிஷனும் இது போல ஆன்மீக நெருக்கடியில் அல்லாடுகிறது. “சர்ச்சில் சேராத, ஆன்மீகத்தில் ஈடுபாடில்லாத, ஆங்கிலம் பேசுகிற மாபெரும் எண்ணிக்கையினரே இப்போது ஐக்கிய மாகாணங்களில் வாழ்கின்றனர்” என்றும், “இந்நாடு மிஷனரி சேவை தேவைப்படும் பிராந்தியமாக ஆகிவருகிறது” என்றும் அந்த மிஷனின் அதிகாரப்பூர்வ வெப்-சைட் சொல்கிறது. இந்தப் புது மிஷன் அதன் சர்ச்சுக்குள் மாற்றங்கள் செய்ய முயற்சிகள் எடுத்தும் தோல்வியடைந்தது; அந்த ஏமாற்றத்தில், பாரம்பரியத்தைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டு, ஆசிய மற்றும் ஆப்பிரிக்கத் தலைவர்களுடன் சேர்ந்து “ஐக்கிய மாகாணங்களுக்கு மிஷனரி சேவைகளை வழங்க” ஆரம்பித்தது.
ஆனால் ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் லத்தீன்-அமெரிக்க மிஷனரிகள் ஏன் கிறிஸ்தவ நாடுகளென உரிமைபாராட்டும் ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் ‘ஆத்துமாக்களை இரட்சிக்கிறார்கள்,’ அதாவது பிரசங்கிக்கிறார்கள்?
யாரை யார் இரட்சிக்கிறார்கள்?
நானூற்றுக்கும் அதிகமான ஆண்டுகளாக, ஆப்பிரிக்கா, ஆசியா, பசிபிக், தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஐரோப்பிய குடியேற்றம் படுவேகமாக பரவியது; பக்திமிக்க ஐரோப்பிய மிஷனரிகள் அதே வேகத்தில் அப்பகுதிகளுக்கு சென்றார்கள். அந்நாடுகளில் வசித்தவர்களுக்கு, அதாவது புறமதத்தவராக கருதப்பட்டவர்களுக்கு தங்களுடைய மதத்தைப் பரப்புவதே அவர்களுடைய இலட்சியமாக இருந்தது. காலப்போக்கில், கிறிஸ்தவ கொள்கைகளில் ஆதாரம் கொண்டதாக சொல்லப்பட்ட அமெரிக்க குடியேற்றங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து கொண்டு, உலகம் முழுவதிலும் தங்கள் இவான்ஜலிக்கல் மிஷன்களை ஸ்தாபிப்பதில் ஐரோப்பிய மிஷனரிகளையே விஞ்சிவிட்டன. இப்பொழுது நிலைமை தலைகீழாகிவிட்டது.
“[பெயர் கிறிஸ்தவத்தின்] மைய இடம் இப்போது மாறிவிட்டது” என கூறுகிறார் ஆன்ட்ரூ வால்ஸ், இவர் மேலைநாடுகள் அல்லாத உலகின் கிறிஸ்தவம் பற்றிய ஆராய்ச்சி மையத்தின் ஸ்தாபகரும் இயக்குநரும் ஆவார். 1900-ல், கிறிஸ்தவரென உரிமைபாராட்டிய 80 சதவீதத்தினர் ஐரோப்பியராகவோ வட அமெரிக்கராகவோ இருந்தனர். ஆனால் இன்று கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்ளும் 60 சதவீதத்தினர் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த பிரெஸ் அறிக்கை ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஐரோப்பாவில் உள்ள கத்தோலிக்க சர்ச்சுகள் பிலிப்பைன்ஸிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வருகிற பாதிரியார்களையே நம்பியிருக்கின்றன.” அதோடு, “அமெரிக்க கத்தோலிக்க திருக்கோயில்களில் பணிபுரியும் ஆறு பாதிரியார்களில் ஒருவர் இப்பொழுது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறார்.” நெதர்லாந்திலுள்ள ஆப்பிரிக்க இவான்ஜலிக்கல் பிரிவினர், முக்கியமாக கானாவை சேர்ந்தவர்கள் “மதச்சார்பற்ற கண்டத்தில் தங்களை மிஷனரிகளாக” கருதுகின்றனர். மேலும், பிரேஸிலைச் சேர்ந்த சுவிசேஷகர்கள் பிரிட்டனின் பல பாகங்களில் இப்பொழுது சீர்திருத்தத்தில் ஈடுபடுகிறார்கள். எழுத்தாளர் ஒருவர் கூறுகிறபடி, “கிறிஸ்தவ மிஷனரிகளை ஏற்றுமதி செய்துகொண்டிருந்த நாடுகள் இப்போது அவர்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றன.”
ஒரு புயல் உருவாகி வருகிறது
அதிகமதிகமாய் மதச்சார்பற்ற நாடுகளாக ஆகிவரும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் மிஷனரிகள் பெரும்பாலும் தேவைப்படுகிறார்கள். “ஸ்காட்லாந்தில் 10 சதவீதத்தினருக்கும் குறைவான கிறிஸ்தவர்களே தவறாமல் சர்ச்சுக்குப் போகிறார்கள்” என ஒரு செய்திப் பத்திரிகை குறிப்பிடுகிறது. பிரான்ஸிலும் ஜெர்மனியிலும் இதைவிட குறைவானவர்களே போகிறார்கள். ஒரு சுற்றாய்வின்படி, “அமெரிக்கர்களில் சுமார் 40 சதவீதத்தினரும், கனடாவைச் சேர்ந்தவர்களில் 20 சதவீதத்தினரும் தவறாமல் சர்ச்சுக்குப் போவதாக சொல்கிறார்கள்” என மற்றொரு பிரெஸ் அறிக்கை கூறுகிறது. மறுபட்சத்தில், பிலிப்பைன்ஸில் சர்ச்சுக்குச் செல்கிறவர்களின் எண்ணிக்கையோ கிட்டத்தட்ட 70 சதவீதம், வளர்ந்துவரும் பிற நாடுகளிலும் இது போலத்தான் இருக்கிறது.
இதைவிட மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வடகோளத்தில் சர்ச்சுக்குப் போகிறவர்களைவிட தென்கோளத்தில் சர்ச்சுக்குப் போகிறவர்கள் அதிக பாரம்பரியமிக்கவர்களாய் இருக்கிறார்கள். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களிலும் ஐரோப்பாவிலும் வசிக்கும் கத்தோலிக்கர்களிடையே சுற்றாய்வு நடத்தியபோது, குருவர்க்கத்தின் மீது நம்பிக்கை குறைந்துகொண்டே வருவதாக அவர்கள் அனைவரும் தெரிவித்தார்கள்; அதோடு குருவர்க்கத்தார் அல்லாதவர்களும் சர்ச்சில் அதிகமாய் பங்குபெற வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்றும் வாதாடினார்கள். மறுபட்சத்தில், தென்கோளத்திலுள்ள கத்தோலிக்கர்கள் இந்த விஷயங்களின் பேரில் சர்ச் எடுத்து வந்திருக்கும் பாரம்பரிய நிலைநிற்கைக்கு அமோக வரவேற்பு அளிக்கிறார்கள். இப்போதெல்லாம் வடகோளத்தைவிட தென்கோளத்திலேயே சர்ச்சுகளுக்கு பெருமளவு ஆதரவு தரப்படுகிறது; இது, வருங்கால சர்ச்சைக்கு ஏற்கெனவே அடிக்கல் நாட்டிவிட்டது. சரித்திர மற்றும் மத அறிஞரான ஃபிலிப் ஜென்கின்ஸ் இவ்வாறு முன்னறிவிக்கிறார்: “பத்து அல்லது இருபதாண்டுகளில், உலகிலுள்ள கிறிஸ்தவர்கள் எவரும் அடுத்த கோளத்திலுள்ள கிறிஸ்தவத்தை பூரணமானதாகவோ நம்பகமானதாகவோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.”
இந்தப் போக்கை கவனிக்கும்போது, “எப்படி ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க, வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கிறிஸ்தவர்களால் ஒரே விசுவாசத்தை உண்மையுடன் அறிக்கையிட்டு ஒரே சர்ச்சில் ஒன்றுசேர்ந்து வாழ முடிகிறது” என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறதென வால்ஸ் கூறுகிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பிளவுபட்டுள்ள ஓர் உலகில் சர்ச்சுகள் தாக்குப்பிடிக்குமா? மெய்யான கிறிஸ்தவ ஒருமைப்பாட்டிற்கு அடிப்படையாக அமைவது எது? அடுத்து வரும் கட்டுரை இவற்றிற்கு வேதப்பூர்வ பதில்களைத் தரும், அதோடு ஒன்றுபட்ட ஒரு கிறிஸ்தவ சமுதாயம் ஏற்கெனவே உலகளவில் செழித்தோங்கி வருகிறது என்பதற்குத் தெளிவான அத்தாட்சியையும் வழங்கும்.
[பக்கம் 4-ன் படம்]
இந்த முன்னாள் சர்ச் இப்பொழுது ஒரு மியூஸிக் கஃபே
[படத்திற்கான நன்றி]
AP Photo/Nancy Palmieri