பண்டைய போட்டி விளையாட்டுகளும் வெற்றியின் முக்கியத்துவமும்
“பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்.” “ஒருவன் மல்யுத்தம் பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.”—1 கொரிந்தியர் 9:25; 2 தீமோத்தேயு 2:5.
அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்ட அந்தப் போட்டி விளையாட்டுகள் பண்டைய கிரேக்க பண்பாட்டில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. அத்தகைய பந்தயங்களைப் பற்றியும் அவை நடைபெற்றபோது நிலவிய சூழலைப் பற்றியும் சரித்திரம் என்ன சொல்கிறது?
சமீபத்தில், ரோமிலுள்ள கொலோசியத்தில், நிக்கெ—இல் ஜோகோ ஏ லா விட்டோர்யா (“நைக்கீ—விளையாட்டும் வெற்றியும்”) என்ற தலைப்பில் கிரேக்க போட்டி விளையாட்டுகள் பற்றிய கண்காட்சி ஒன்று நடைபெற்றது.a மேற்குறிப்பிடப்பட்ட அந்தக் கேள்விக்கு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த சில பொருட்கள் பதிலளித்தன; போட்டி விளையாட்டுகள் சம்பந்தமாக ஒரு கிறிஸ்தவருக்கு எப்படிப்பட்ட நோக்குநிலை இருக்க வேண்டுமென்று இது நம்மை சிந்திக்க வைக்கிறது.
பூர்வ ஸ்தாபனம்
முதன்முதலாக போட்டி விளையாட்டுகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தவர்கள் கிரேக்கர்கள் அல்ல. என்றாலும், நாயகர்களாக வீரச்செயல் புரிகிற குறிக்கோளும் போட்டி மனப்பான்மையும் உடைய உயிர்த்துடிப்புமிக்க ஒரு சமுதாயத்தைப் பற்றி சுமார் பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் ஹோமர் என்ற கிரேக்க கவிஞர் விவரித்தார்; அத்தகைய சமுதாயத்தில் படை பலத்திற்கும் போட்டி விளையாட்டுகளுக்கும் பெருமதிப்பு கொடுக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கிரேக்க விழாக்கள், வீர நாயகர்களின் ஈமச்சடங்குகளின்போது தெய்வங்களுக்கு அஞ்சலி செலுத்துகிற மத நிகழ்ச்சிகளாகத்தான் கொண்டாடப்பட்டனவென்று அந்தக் கண்காட்சி விளக்கமளித்தது. உதாரணத்திற்கு, கிரேக்க இலக்கியத்தின் அதிக பழமை வாய்ந்த, இன்றும் அழியாதிருக்கிற படைப்பான ஹோமரின் இலியட் என்ற காவியத்தில், ஆக்கிலஸ் என்பவருடைய தோழர்களான உயர்குடி வீரர்கள், பாட்ரோக்லாஸ் என்பவரின் ஈமச்சடங்கின்போது தங்களுடைய போராயுதங்களை வைத்துவிட்டு, தங்கள் வீரத்தைக் காட்ட குத்துச்சண்டை, மல்யுத்தம், வட்டதட்டு வீசுதல், ஈட்டி எறிதல், ரதம் ஓட்டுதல் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டதாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற விழாக்கள் கிரேக்க தேசம் முழுவதும் கொண்டாடப்பட்டன. “தங்கள் தெய்வங்களின்பேரில் வைத்திருந்த மரியாதையின் காரணமாக, கிரேக்கர்கள் மூர்க்கத்தனமான தங்களுடைய தீரா சண்டைகளை அப்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்கள்; அவர்களுக்கே உரிய போட்டி மனப்பான்மையை சமாதான மனப்பான்மையாக மாற்ற அந்த விழாக்கள் அவர்களுக்கு வாய்ப்பளித்தன; சண்டைகளில் வெற்றி பெற அவர்கள் எந்தளவு ஊக்கம் காட்டினார்களோ, அதே அளவு ஊக்கத்தை போட்டி விளையாட்டுகளில் வெற்றி பெறுவதிலும் காட்டினார்கள்” என கண்காட்சியின் கையேடு சொல்கிறது.
கிரேக்க சுயாட்சி நகரத்தார் அநேகர், போட்டி விளையாட்டுகளின் மூலம் தங்கள் தெய்வங்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக பொது வணக்க மையங்களில் தவறாமல் கூடிவருவதை தங்கள் வழக்கமாக்கினார்கள். காலப்போக்கில், அத்தகைய விழாக்களில் நான்கு மிக முக்கியமானவையாக உருவாயின; ஆம், கிரேக்கர்கள் அனைவரும் கொண்டாடுகிற அளவுக்கு அவை முக்கிய விழாக்களாயின; அவற்றில், ஒலிம்பிக் விழாவும் நிமியன் விழாவும் ஜியஸ் என்ற தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டன; பித்தியன் விழா அப்போலோ தெய்வத்திற்கும், இஸ்துமியன் விழா பஸைடன் தெய்வத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்டன. கிரேக்க உலகம் முழுவதிலிருந்தும் போட்டியாளர்கள் இவற்றில் கலந்துகொள்ள முடிந்தது. இந்த விழாக்களின்போது பலிகள் செலுத்தப்பட்டன, பிரார்த்தனைகளும் ஏறெடுக்கப்பட்டன; என்றாலும் அவற்றில், தெய்வங்களை கௌரவிப்பதற்காக பிரமாண்டமான விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
அத்தகைய விழாக்களிலேயே மிகப் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான விழா பொ.ச.மு. 776-லிருந்து கொண்டாடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது; அது ஜியஸ் என்ற தெய்வத்திற்கு மரியாதை செலுத்தும் விதத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பியாவில் நடைபெற்றது. அதற்கு அடுத்தபடியாக, பித்தியன் விழா முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. டெல்ஃபையில், குறிசொல்வதற்கு அன்று பேர்போன ஒரு கோவிலுக்கு அருகில் நடைபெற்ற இந்த விழாவிலும் போட்டி விளையாட்டுகள் இடம்பெற்றன. என்றாலும், கவிதைக்கும் இசைக்கும் காவலனாக போற்றப்பட்ட அப்போலோவுக்கு மரியாதை செலுத்துகிற வகையில் பாட்டுக்கும் நடனத்திற்கும்தான் இவ்விழா அதிக முக்கியத்துவம் கொடுத்தது.
விளையாட்டு நிகழ்ச்சிகள்
நவீன நாளைய போட்டி விளையாட்டுகளோடு ஒப்பிடுகையில், அன்று மிகக் குறைவான நிகழ்ச்சிகளே இடம்பெற்றன; அவற்றில் ஆண்கள் மட்டுமே பங்குகொண்டார்கள். பூர்வ ஒலிம்பிக்கில் பொதுவாக பத்து நிகழ்ச்சிகளுக்கு மேல் நடைபெற்றதே இல்லை. கொலோசியம் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த சிலைகளும், சிற்பங்களும், மொசைக் ஓவியங்களும், களிமண் பூஞ்சாடிகளில் வரையப்பட்ட சித்திரங்களும் அந்நிகழ்ச்சிகளை ஓரளவு கண்முன் நிறுத்தின.
மூன்று வித ஓட்டப்பந்தயங்கள்—‘ஸ்டேடியம்’ என்ற சுமார் 200 மீட்டர் பந்தயமும், ‘டபுள் கோர்ஸ்’ என்ற இன்றைய 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு சமமான பந்தயமும், ‘லாங் ரேஸ்’ என்ற சுமார் 4,500 மீட்டர் பந்தயமும்—நடைபெற்றன. அவற்றில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் நிர்வாணமாகத்தான் ஓட்டத்திலும் கலந்துகொண்டார்கள், பயிற்சியும் செய்தார்கள். பென்ட்டாத்தலன் என்ற விளையாட்டில், போட்டியாளர்கள் ஐந்து நிகழ்ச்சிகளில், அதாவது ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், வட்டதட்டு வீசுதல், ஈட்டி எறிதல், மல்யுத்தம் ஆகியவற்றில் கலந்துகொண்டார்கள். மற்ற போட்டிகளில் குத்துச் சண்டை, பான்க்ரேஷியம், அதாவது “குத்துச்சண்டையும் மல்யுத்தமும் கலந்த வெறும் முஷ்டியால் தாக்கும் ஒருவித மூர்க்க போட்டி” ஆகியவை இடம்பெற்றன. மற்றொரு போட்டி, 1,600 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ரதம் ஓட்டுவதாகும்; பின்பக்க திறப்புடன் கனமில்லாத அந்த இரதங்களுக்கு சிறிய சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்தன; அவற்றில் இரண்டு அல்லது நான்கு குட்டிக் குதிரைகளோ பெரிய குதிரைகளோ பூட்டப்பட்டிருந்தன.
குத்துச்சண்டை படுகொடூரமாக இருந்தது, சில நேரங்களில் உயிருக்கே உலை வைத்தது. போட்டியாளர்கள் தங்களுடைய முஷ்டிகளில் கெட்டியான தோல் வார்களை அணிந்திருந்தார்கள்; அவற்றில் நாசம் விளைவிக்கும் உலோகத் துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன. ஸ்ட்ராட்டோஃபான்டே என்ற ஒரு போட்டியாளர், நான்கு மணிநேர குத்துச்சண்டைக்குப் பிறகு தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தபோது தன்னையே அவருக்கு அடையாளம் தெரியவில்லையாம், அதற்குக் காரணம் என்னவென்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். குத்துச்சண்டை வீரர்கள் படுகோரமாக உருக்குலைந்து போனார்கள் என்பதற்கு பண்டைய சிலைகளும் மொசைக்கு ஓவியங்களும் சான்றளிக்கின்றன.
மல்யுத்தத்தில், தனக்கு எதிராக போட்டியிடுபவருடைய உடம்பின் மேற்பாகத்தை மட்டுமே இறுக்கமாக பிடிக்க போட்டியாளருக்கு அனுமதி இருந்தது; எழ முடியாதபடி மூன்று முறை எதிராளியை தரையில் வீழ்த்துபவரே வெற்றி வாகை சூடியவராக அறிவிக்கப்பட்டார். இதற்கு நேர்மாறாக, பான்க்ரேஷியம் சண்டையில் அப்படிப்பட்ட எந்த வரம்புகளும் இருக்கவில்லை. போட்டியாளர்கள் தங்கள் எதிராளிகளை உதைக்கலாம், குத்தலாம், மூட்டுகளைக்கூட திருகலாம். ஆனால் கண்களை தோண்டியெடுப்பது, பிறாண்டுவது, கடிப்பது ஆகியவை மட்டும் தடை செய்யப்பட்டன. எதிரியை தரையிலே வீழ்த்தி செயலிழக்கும்படி செய்வதும், பலப்பிரயோகம் செய்து அடிபணிய செய்வதுமே அந்தப் போட்டியில் எதிர்பார்க்கப்பட்டது. “ஒலிம்பியாவில் நடந்த எல்லாவற்றிலேயும் இதுதான் மிக சுவாரஸ்யமான நிகழ்ச்சி” என்பதாக சிலர் கருதினார்கள்.
அந்தக் காலத்தில் நடந்த பான்க்ரேஷியம் சண்டைகளிலேயே மிகப் பிரபலமான சண்டை பொ.ச.மு. 564-ல் ஒலிம்பிக் இறுதியாட்டத்தில் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதில், ஆராஹியோன் என்ற வீரன், தன்னுடைய கழுத்தை நெரித்துக்கொண்டிருந்த எதிரியின் கால்விரல்களில் ஒன்றை சமயோசிதமாக முறித்துவிட்டார். வலி தாங்க முடியாமல் அந்த எதிரி சரணடைந்தான்; அவன் சரணடைந்ததோ ஆராஹியோனின் உயிர் பிரியும் அந்த கணத்திற்கு முன்! எனவே அப்போட்டியில் ஆரோஹியோனின் சடலம்தான் ஜெயித்தது என நீதிபதிகள் அறிவித்தார்கள்!
அன்றைய நிகழ்ச்சிகளிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது ரதம் ஓட்டுவதுதான்; அதோடு உயர்குடியைச் சேர்ந்த செல்வச் சீமான்கள் அதை ரொம்பவுமே வரவேற்றார்கள்; காரணம், ரதம் ஓட்டுபவர் போட்டியில் ஜெயித்ததாக கருதப்படவில்லை, ஆனால் அந்த ரதம் மற்றும் குதிரைகளின் சொந்தக்காரர்களே ஜெயித்ததாக கருதப்பட்டார்கள். இந்தப் போட்டியின் ஆரம்பக் கட்டம்தான் அதிமுக்கியமானது, அப்போது ரதம் ஓட்டுபவர்கள் எல்லாரும் அவரவருக்குரிய பாதையிலேயே செல்ல வேண்டியிருந்தது. அதைவிட, பாதையின் இரு கோடியிலுமிருந்த கம்பங்களை சுற்றி வருகையிலும், பாதை மாறாமல் செல்ல வேண்டியிருந்தது. தவறுகளோ, முறைகேடுகளோ விபத்திற்கு காரணமாகிவிடலாம்; ஆனால் அத்தகைய விபத்துகளே இந்த ஜனரஞ்சக நிகழ்ச்சியை இன்னுமதிக விறுவிறுப்பாக்கின.
பரிசு
‘பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும் ஒருவனே பந்தயத்தைப் [“பரிசை,” NW] பெறுவான்’ என அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 கொரிந்தியர் 9:24) எல்லாவற்றையும்விட போட்டியில் வெற்றி பெறுவதுதான் அதிமுக்கியமானதாக கருதப்பட்டது. என்றாலும், வெள்ளி பதக்கங்களோ, வெண்கல பதக்கங்களோ கொடுக்கப்படவுமில்லை, இரண்டாவது இடமோ மூன்றாவது இடமோ நிர்ணயிக்கப்படவுமில்லை. “வெற்றி, ‘நைக்கீ,’ அடைவதே களத்தில் இறங்குபவர்களின் ஒரே இலட்சியம்” என அந்த கண்காட்சி விளக்கியது. “போட்டியாளருக்கு இந்த வெற்றியே தேவையாக இருந்தது, ஏனெனில் போட்டியில் ஜெயிப்பதுதான் அவருடைய சரீர, தார்மீக பண்புகளை வெளிக்காட்டியது; அதோடு அந்த வெற்றி அவர் பிறந்த மண்ணுக்கு பெருமையையும் சேர்த்தது” என அந்த கண்காட்சி மேலுமாக விளக்கியது. ஹோமரின் படைப்பு ஒன்று, அவர்களுடைய மனோபாவத்தை ஒரே வரியில் சுருக்கிச் சொல்கிறது: “எப்போதுமே வெற்றி சிறக்க நான் கற்றுள்ளேன்.”
கிரேக்கர்கள் அனைவரும் பங்குகொண்ட அந்த விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசு—இலைகளால் ஆன கிரீடம்—முழுக்க முழுக்க அடையாள அர்த்தமுடையதாகவே இருந்தது. பவுல் அதை ‘அழிவுள்ள கிரீடம்’ என அழைத்தார். (1 கொரிந்தியர் 9:25) என்றாலும், அந்தப் பரிசு ஆழ்ந்த உட்கருத்துள்ளதாய் இருந்தது. வெற்றி பெற்ற வீரர் மீது இயற்கை சக்தியே தன்னுடைய வல்லமையை பொழிகிறது என்பதை அந்தக் கிரீடம் குறித்தது. வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருக்கும்போது தெய்வங்களிடமிருந்து கண்டிப்பாக ஆசிகள் கிடைக்குமென்ற அர்த்தத்தை அது கொடுத்தது. இறக்கைகள் உடைய நைக்கீ என்ற கிரேக்க தேவதை—வெற்றி தேவதை—போட்டியில் ஜெயித்த வீரருக்கு கிரீடத்தை அளிப்பதாக பண்டைய காலத்து சிற்பிகளும் ஓவியர்களும் கற்பனை செய்திருந்த விதத்தை அந்தக் கண்காட்சி சித்தரித்தது. எந்தவொரு விளையாட்டு வீரனுக்கும் ஒலிம்பியாவில் நடந்த போட்டியில் வெற்றி பெறுவதே அவனுடைய வாழ்க்கையின் உச்சாணியை எட்டிப் பிடிப்பதாக இருந்தது.
ஒலிம்பிக் கிரீடங்கள் காட்டு ஒலிவ இலைகளால் செய்யப்பட்டிருந்தன; இஸ்துமியன் கிரீடங்கள் பைன் இலைகளாலும், பித்தியன் கிரீடங்கள் லாரல் இலைகளாலும், நிமியன் கிரீடங்கள் காட்டு செலரி இலைகளாலும் செய்யப்பட்டிருந்தன. மற்ற இடங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கமைத்தவர்கள், அப்போட்டிகளில் கலந்துகொள்ள மாபெரும் திறமைசாலிகளை ஈர்ப்பதற்காக வெற்றி பெறுவோருக்கு பணமுடிப்பையோ வேறு பரிசுப்பொருட்களையோ வழங்க முன்வந்தார்கள். அத்தீனா என்ற தேவதையை கௌரவிப்பதற்காக ஏதன்ஸில் நடத்தப்பட்ட பானெத்தீனேயிக் விளையாட்டுகளின்போது விருதுகளாக கொடுக்கப்பட்ட ஏராளமான பூஞ்சாடிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இரண்டு கைப்பிடிகளை உடைய இந்த ஜாடிகளில் விலையுயர்ந்த அட்டிக்கா ஒலிவ எண்ணெய் ஆரம்பத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பூஞ்சாடியின் ஒரு பக்கத்தில் அத்தீனா தேவதையின் சித்திரமும், “அத்தீனாவின் போட்டியாளர்களுக்கான பரிசு” என்ற சொற்றொடரும் இடம்பெற்றுள்ளன. மறுபக்கத்தில், விளையாட்டு வீரர் ஒருவரின் வெற்றி நிகழ்ச்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களால் அவர்கள் பிறந்த கிரேக்க நகரங்களும் புகழ் பெற்றன; வெற்றியடைந்தவர்கள் அவர்களுடைய சொந்த ஊரில் வீர நாயகர்களாக கருதப்பட்டார்கள். வெற்றி வாகை சூடியவரின் வருகை கோலாகலமான ஊர்வலத்தோடு கொண்டாடப்பட்டது. தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் வெற்றி வீரர்களுக்கு சிலைகள் எழுப்பப்பட்டன; பொதுவாக அப்படி எவருக்கும் சிலைகள் எழுப்பப்படாது; அதோடு, அந்த வீரனின் தைரியத்தைப் புகழ்ந்து கவிஞர்கள் பாடல்களும் பாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு, அது முதற்கொண்டு பொது நிகழ்ச்சிகளில் முதலிடம் கொடுக்கப்பட்டது, அதுமட்டுமல்ல, ஜனங்களிடமிருந்து பெற்ற காசிலிருந்து அவர்களுக்கு பண உதவியும் அளிக்கப்பட்டது.
உடற்பயிற்சிக் கூடங்களும் விளையாட்டு வீரர்களும்
ஒரு படைவீரனாகவும் குடிமகனாகவும் ஆவதற்கு போட்டி விளையாட்டுகளில் கலந்துகொள்வது அதிமுக்கியமென கருதப்பட்டது. கிரேக்க நகரங்கள் எல்லாவற்றிலும் உடற்பயிற்சிக் கூடங்கள் இருந்தன; இங்கு வாலிபர்களுக்கு உடற்பயிற்சி அளிக்கப்பட்டதோடு, அறிவுப்பூர்வமான விஷயங்களும் ஆன்மீக விஷயங்களும் போதிக்கப்பட்டன. இந்தக் கட்டடங்கள், உடற்பயிற்சி செய்வதற்கு வசதியாக பெரிய திறந்தவெளிகளில் அமைக்கப்பட்டிருந்தன; சுற்றிலும் மண்டபங்கள் இருந்தன; கூரையிருந்த இடங்கள் நூலகங்களாகவும் வகுப்பு அறைகளாகவும் பயன்படுத்தப்பட்டன. முக்கியமாக, பணக்கார வாலிபர்களே அத்தகைய பயிலகங்களில் பயின்றனர்; சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லாததால் கல்விக்காக அவர்கள் தாராளமாக நேரத்தை அர்ப்பணிக்க முடிந்தது. விளையாட்டுகளில் கலந்துகொள்வதற்காக இங்கு பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு நீண்ட நேரம், கடுமையான பயிற்சி அளித்தார்கள்; அவர்கள் என்ன சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது என்பதை அந்தப் பயிற்சியாளர்கள் சிபாரிசு செய்தார்கள்; அதுமட்டுமல்ல வீரர்கள் உடலுறவில் ஈடுபடாதவாறும் பார்த்துக்கொண்டார்கள்.
பண்டைய விளையாட்டு வீரர்களின் அருமையான படங்களையும் சிலைகளையும் பார்வையாளர்கள் கண்டு ரசிப்பதற்கு கொலோசியம் கண்காட்சி ஒரு வாய்ப்பளித்தது; அந்தப் படங்களில் பெரும்பாலானவை ரோம பேரரசின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட கிரேக்க சிலைகளின் மாடல்கள் ஆகும். சரீரத்தில் பூரணமாயிருப்பது ஒழுக்கத்தில் பூரணமாயிருப்பதற்கு சமம் என்றும், அவ்வாறு பூரணமாயிருப்பவர்கள் உயர்குடியினர் மட்டுமே என்றும் பூர்வ கிரேக்கர்கள் நம்பினார்கள்; எனவே, வெற்றி பெற்ற இந்த வீரர்களுடைய கட்டுடல்கள் அக்கொள்கையை படம் பிடித்துக் காட்டின. அவர்களுடைய சிலைகளை ரோமர்கள் கலைநயப் பொருட்களாக மதித்தார்கள்; அவற்றில் பல, அரங்கங்களையும், குளியலறைகளையும், மாளிகைகளையும், அரண்மனைகளையும் அலங்கரித்தன.
ரோமர்கள் எப்போதும் மூர்க்கத்தனமான காட்சிகளையே பெரிதும் விரும்பினார்கள்; எனவே, கிரேக்க போட்டிகள் எல்லாவற்றிலும், குத்துச்சண்டை, மல்யுத்தம், பான்க்ரேஷியம் ஆகியவற்றையே அவர்கள் பெரிதும் ரசித்துப் பார்த்தார்கள். ரோமர்கள் அத்தகைய விளையாட்டுகளை, சம அளவு பலமுள்ளவர்களுக்கு மத்தியில் யார் பலவான்கள் என்பதை நிரூபிக்கும் போட்டிகளாக கருதாமல், ஒரு பொழுதுபோக்காக மட்டுமே கருதினார்கள். போட்டி விளையாட்டுகள் உயர்குடி போர் வீரர்களுடைய கல்வியின் பாகமென்ற பண்டைய கருத்து மாறியது. அதற்கு பதிலாக, குளியலுக்கு முன் செய்யப்படுகிற ஆரோக்கியமான உடற்பயிற்சியைப் போல கிரேக்க விளையாட்டுகள் ஆக்கப்பட்டன; அல்லது கீழ்த்தட்டு வீரர்கள் சண்டையிடும் நிகழ்ச்சிகளை—கேளிக்கை அரங்குகளில் சண்டையிடுவதைப் போன்ற நிகழ்ச்சிகளை—வெறுமனே வேடிக்கை பார்ப்பதைப் போல ஆக்கப்பட்டன.
கிறிஸ்தவர்களும் போட்டி விளையாட்டுகளும்
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அத்தகைய போட்டி விளையாட்டுகளில் ஈடுபடாதிருந்ததற்கான ஒரு காரணம் அவை மத சம்பந்தப்பட்டவையாக இருந்ததே; ஏனெனில் “தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?” (2 கொரிந்தியர் 6:14, 16) அப்படியானால், இன்றைய நாளின் போட்டி விளையாட்டுகளைப் பற்றி என்ன சொல்லலாம்?
இன்றைய போட்டி விளையாட்டுகள் புறமத கடவுட்களை மேன்மைப்படுத்துவதில்லை என்பது என்னவோ உண்மைதான். என்றாலும், பூர்வ காலத்தவர்களுக்கு இருந்ததைப் போன்ற மத உணர்வுகள் இன்றைய சில விளையாட்டுகளிலும் ஓரளவு தலைகாட்டுகின்றன அல்லவா? அதுமட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாக கிடைத்த அறிக்கைகளின்படி, சில விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக திறமையுடன் செயல்பட வைக்கும் போதை மருந்துகளைக்கூட உட்கொள்ள முன்வந்திருக்கிறார்கள்; அவை தங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்றோ, தங்கள் உயிருக்கே ஆபத்துண்டாக்கும் என்றோ அவர்கள் கவலைப்படுவதில்லை.
உடலளவில் புரியும் சாதனைகளை கிறிஸ்தவர்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. “இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே,” அதாவது ஆவிக்குரிய குணங்களே நம்மை கடவுளுடைய கண்களில் சௌந்தர்யமுள்ளவர்களாக ஆக்குகிறது. (1 பேதுரு 3:3, 4) இன்றைய விளையாட்டுகளில் கலந்துகொள்ளும் அத்தனை பேருக்குமே வெறித்தனமான போட்டி மனப்பான்மை இல்லை என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம், ஆனாலும் அத்தகைய மனப்பான்மை பலரிடம் இருக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்டவர்களோடு கூட்டுறவு வைத்துக்கொள்வது, “ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே” செய்யுங்கள் என்ற வேதப்பூர்வ அறிவுரையைக் கடைப்பிடிக்க நமக்கு உதவுமா? அல்லது அத்தகைய கூட்டுறவு “பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள்” ஆகியவற்றில் விளைவடையுமா?—பிலிப்பியர் 2:3; கலாத்தியர் 5:19-21.
நவீன நாளைய போட்டி விளையாட்டுகளில்—உடல் உராயும் விதமான விளையாட்டுகளில்—வன்முறை ஏற்படும் அபாயம் இருக்கிறது. அத்தகைய விளையாட்டுகளால் மனம் கவரப்படுவோர் சங்கீதம் 11:5-லுள்ள வார்த்தைகளை நினைவில் வைக்க வேண்டும்: ‘யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.’
உடற்பயிற்சியை உரிய இடத்தில் வைக்கும்போது, அதை நாம் அனுபவித்து மகிழலாம்; “சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது” என அப்போஸ்தலன் பவுல் சொல்லத்தான் செய்தார். (1 தீமோத்தேயு 4:7-10) என்றாலும், கிரேக்க விளையாட்டுகளைப் பற்றி அவர் எதற்காக பேசினார்? இச்சையடக்கம், சகிப்புத்தன்மை போன்ற குணங்கள் கிறிஸ்தவர்களுக்கு இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை மிகப் பொருத்தமான உதாரணத்தோடு விளக்குவதற்காகவே அவர் அதைப் பற்றி பேசினார். எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுள் கொடுக்கிற நித்திய ஜீவனுக்கான ‘கிரீடத்தை’ பெறுவதற்கே பவுல் பிரயாசப்பட்டார்; அதுவே அவருடைய குறிக்கோளாக இருந்தது. (1 கொரிந்தியர் 9:24-27; 1 தீமோத்தேயு 6:12) இவ்விஷயத்தில், அவர் நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக திகழ்கிறார்.
[அடிக்குறிப்பு]
a “வெற்றி” என்பதற்கான கிரேக்க வார்த்தையே நைக்கீ ஆகும்.
[பக்கம் 31-ன் பெட்டி/படங்கள்]
ஓய்வெடுக்கும் குத்துச்சண்டை வீரர்
பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த வெண்கல சிலை, பண்டைய நாட்களில் நடந்த குத்துச்சண்டைப் போட்டியின்போது ஏற்பட்ட நாசகரமான விளைவுகளை சித்தரித்துக் காட்டுகிறது; “சோர்வடையச் செய்யும் சண்டைகளில் குத்துச்சண்டை வீரர் ஒருவர் எதிரியை எதிர்த்துப் போராடுவது—‘காயத்திற்கு காயம்’ உண்டாக்குவது—ஓர் அருமையான முன்மாதிரியாக புகழப்பட்டது” என ரோம கண்காட்சியில் கொடுக்கப்பட்ட புத்தக அட்டவணை குறிப்பிடுகிறது. “முந்தைய போட்டிகளில் உண்டான தழும்புகள் போதாதென்று, சற்று முன் நடந்த சண்டையில் மேலுமான காயங்கள் ஏற்பட்டன” என்று அது தொடர்ந்து விவரிக்கிறது.
[பக்கம் 29-ன் படம்]
பண்டைய போட்டி விளையாட்டு நிகழ்ச்சிகளிலேயே ரதம் ஓட்டுவதுதான் மிக மிகப் பிரபலமானது
[பக்கம் 30-ன் படம்]
இறக்கைகளுடைய வெற்றி தேவதையான நைக்கீ போட்டியில் ஜெயித்த வீரருக்கு கிரீடம் அணிவிப்பதாக பண்டைக்கால ஓவியக் கலைஞர்கள் கற்பனை செய்தார்கள்