கடவுளுடைய இருதயத்தை மகிழ்விக்கும் நன்கொடைகள்
அத்தாலியாள் என்ற ஓர் அரசி அரியணை ஏறிய கதை ஓர் இனிய கதை அல்ல. ஏனெனில், அவள் தந்திரமாகச் சூழ்ச்சிகள் செய்தும் கொலைகள் செய்தும் யூத ஆட்சியைக் கைப்பற்றினாள். ராஜ வாரிசுகளெல்லாம் கொலை செய்யப்பட்டதாக நினைத்து, தன்னையே ராணியாக்கிக்கொண்டாள். ஆனால், இளவரசியான யோசேபாள் யெகோவாவையும் அவருடைய சட்டங்களையும் உள்ளப்பூர்வமாக நேசித்தாள். அதனால், ராஜவாரிசாக இருந்த குழந்தை யோவாசை தைரியமாக மறைத்து வைத்தாள். யோசேபாளும் பிரதான ஆசாரியனான அவளுடைய கணவன் யோய்தாவும் ஆலயத்தில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் ஆறு வருடங்களாக யோவாசை மறைத்து வைத்தனர்.—2 இராஜாக்கள் 11:1-3.
யோவாசுக்கு ஏழு வயதானது. தந்திரமாக ஆட்சியை அபகரித்துக்கொண்ட ராணியை ஆட்சியிலிருந்து வீழ்த்தும் திட்டத்தை செயல்படுத்த பிரதான ஆசாரியனான யோய்தா தயாரானார். மறைத்து வைத்திருந்த யோவாசை வெளியே கொண்டு வந்தார். யூதாவை ஆளும் உரிமை பெற்ற வாரிசான யோவாசை ராஜாவாக முடிசூட்டினார். கெட்ட ராணியான அத்தாலியாள் ஆலயத்திலிருந்து வெளியே இழுத்துவரப்பட்டு, அரசு காவலாளிகளால் கொலைசெய்யப்பட்டாள். அவள் ஒழிந்த சந்தோஷத்தில் மக்கள் எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். யோய்தாவும் யோசேபாளும், யூதாவில் மெய் வணக்கத்தை திரும்பவும் நிலைநாட்டுவதில் பெரும் பங்கு வகித்தனர். அதைவிட முக்கியமாக, மேசியா வரவேண்டிய ராஜவம்சத்திற்கு, அதாவது தாவீதின் வம்சத்திற்கு, எந்தவித தடையும் வராதிருப்பதில் மிகப் பெரும் பங்கு வகித்தனர்.—2 இராஜாக்கள் 11:4-21.
புதிதாக முடிசூட்டப்பட்ட ராஜாவும், கடவுளின் இருதயத்தை மகிழ்விக்க தன்னுடைய பங்கில் சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருந்தது. யெகோவாவின் ஆலயம் மோசமாக பழுதடைந்திருந்தது. அத்தாலியாள், தான் மட்டுமே யூதாவை ஆட்சி செய்யவேண்டும் என்ற பேராசையால் ஆலயத்தை பராமரிக்காமல் விட்டுவிட்டதோடு, அங்கிருந்த பொருள்களையும் கொள்ளையடித்திருந்தாள். எனவே, யோவாஸ் ஆலயத்தை மீண்டும் கட்டவும் புதுப்பிக்கவும் தீர்மானித்தார். அதற்கு தேவைப்படும் பணத்தை சேகரிக்க உடனடியாக ஒரு கட்டளை பிறப்பித்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிற எல்லாப் பணங்களையும், இலக்கத்திற்குட்படுகிறவர்களின் பணத்தையும், மீட்புக்காக மதிக்கப்படுகிற ஆட்களின் பணத்தையும், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரும்படி, அவரவர் தம்தம் மனதிலே நியமித்திருக்கும் எல்லாப் பணத்தையும், ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்கள் கையில் வாங்கிக்கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுதுகாண்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும்.”—2 இராஜாக்கள் 12:4, 5.
மக்கள் நன்கொடைகளை மனமுவந்து தந்தார்கள். ஆனால் ஆசாரியர்களோ ஆலயத்தை பழுதுபார்க்கும் தங்கள் கடமையை ஏனோதானோவென்று செய்தார்கள். எனவே ராஜாவே எல்லா வேலைகளையும் முன்நின்று மேற்பார்வை செய்ய முடிவெடுத்தார். எல்லா நன்கொடைகளையும், அதற்காக வைக்கப்பட்டிருந்த விசேஷ பெட்டிக்குள் போட கட்டளையிட்டார். அந்தப் பொறுப்பை யோய்தாவிடம் ஒப்படைத்தார். அதைப் பற்றிய பதிவு இவ்வாறு சொல்கிறது: “ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தண்டையிலே கர்த்தருடைய ஆலயத்தில் ஜனங்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான்; வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள். பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனும் வந்து: கர்த்தருடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி முடிப்புக்கட்டி, எண்ணின பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்திலே விசாரிப்புக்காரர் கையிலே கொடுப்பார்கள்; அதை அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொற்றருக்கும், கல்தச்சருக்கும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் கொள்ளுகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குச் செல்லும் எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள்.”—2 இராஜாக்கள் 12:9-12.
மக்கள் இருதயப்பூர்வமான ஆதரவை அளித்தார்கள். யெகோவாவுடைய வழிபாடு கண்ணியமான முறையில் தொடர வேண்டும் என்பதற்காக அவருடைய ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. இவ்வாறு எல்லா நன்கொடைகளும் உரிய விதத்தில் செலவிடப்பட்டன. அதை யோவாஸ் ராஜாவே பார்த்துக்கொண்டார்!
இன்றும்கூட யெகோவாவின் காணக்கூடிய அமைப்பு, கிடைக்கும் நன்கொடைகளையெல்லாம் யெகோவாவின் வணக்கத்தை முன்னேற்றுவிக்க பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்கிறது. பூர்வ இஸ்ரவேலர்களைப் போலவே இன்றுள்ள உண்மை கிறிஸ்தவர்களும் மெய் வணக்கத்திற்கு இருதயப்பூர்வமான ஆதரவை அளித்திருக்கிறார்கள். கடந்த ஊழிய ஆண்டில் ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்க அவ்வாறு ஆதரவளித்தவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். உங்களுடைய நன்கொடைகள் எந்தெந்த வழிகளிலெல்லாம் உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
பிரசுரிப்பு
கடந்த ஊழிய ஆண்டில் உலகம் முழுவதும், பின்வரும் பிரசுரங்கள் படிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் அச்சிடப்பட்டன:
• புத்தகங்கள்: 4,74,90,247
• சிறு புத்தகங்கள்: 68,34,740
• சிற்றேடுகள்: 16,78,54,462
• காலண்டர்கள்: 54,05,955
• பத்திரிகைகள்: 1,17,92,66,348
• துண்டுப்பிரதிகள்: 44,09,95,740
• வீடியோக்கள்: 31,68,611
ஆப்பிரிக்கா, வட, தென், மத்திய அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, பசிபிக் தீவுகள் என்று மொத்தம் 19 நாடுகளில் பிரசுரங்கள் அச்சடிக்கப்படுகின்றன.
“என் பெயர் கேட்லின் மே. எனக்கு எட்டு வயதாகிறது. என்னிடம் 28 டாலர் இருக்கிறது. அச்சு இயந்திரங்களை வாங்க இந்த பணத்தை நீங்கள் உபயோகித்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இப்படிக்கு, அன்புள்ள குட்டி சகோதரி, கேட்லின்.”
“புதிய அச்சு இயந்திரங்களைப் பற்றி நாங்கள் குடும்பமாக உட்கார்ந்து பேசினோம். எனக்கு 11 வயதிலும் 9 வயதிலும் இரண்டு பிள்ளைகள்; அவர்களும் தங்கள் சேமிப்பிலிருந்து நன்கொடை கொடுக்க விரும்பினார்கள். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் நன்கொடைகளை அனுப்புவதில் சந்தோஷப்படுகிறோம்.”
கட்டுமானம்
பின்வருபவை யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை முன்னேற்றுவிப்பதற்காக கட்டப்பட்டு வருபவை:
• ஏழை நாடுகளில் கட்டப்படும் ராஜ்ய மன்றங்கள்: 2,180
• அசெம்பிளி ஹால்கள்: 15
• கிளை அலுவலகங்கள்: 10
• இந்தக் கட்டுமானப் பணிக்காக முழுநேர ஊழியம் செய்கிற சர்வதேச வாலண்டியர்களின் எண்ணிக்கை: 2,342
“இந்த வாரக்கடைசியில்தான் புதிதாய் கட்டப்பட்ட ராஜ்ய மன்றத்தில், எங்களுக்கு முதல் கூட்டம் நடந்தது. நம்முடைய பிதாவான யெகோவா தேவனுக்கு துதிசெலுத்துவதற்கு ஒரு நல்ல இடம் கிடைத்ததை நினைத்து நாங்கள் ரொம்ப சந்தோஷப்படுகிறோம். நிறைய ராஜ்ய மன்றங்களைக் கட்ட உதவுவதன் மூலம் எங்களுடைய தேவைகளுக்கு அதிக கவனம் செலுத்தும் யெகோவாவுக்கும் உங்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். உண்மையில், எங்களுடைய ராஜ்ய மன்றம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!”—சிலி.
“யெகோவாவின் அமைப்பு செய்துவரும் உதவிக்காக எங்களுடைய சகோதர சகோதரிகள் உள்ளப்பூர்வ நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறார்கள். கட்டுமானப் பணிக்காக வந்திருந்த சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து நாங்கள் செலவழித்த அந்த இன்பமான நேரத்தைப் பற்றி இன்னும் நாங்கள் பேசி மகிழ்கிறோம்.”—மால்டோவா.
“சமீபத்தில் நானும் என் மனைவியும் எங்களுடைய 35-வது கல்யாண நாளைக் கொண்டாடினோம். அந்த நாளில் ஒருவருக்கு ஒருவர் என்ன வாங்கிக்கொடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தோம். பிறகு நாங்கள் யெகோவாவுக்கும் அவருடைய அமைப்பிற்கும் ஏதாவது செலுத்துவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தீர்மானித்தோம். ஏனெனில் அவர்களுடைய உதவியில்லையென்றால் ஒருவேளை நாங்கள் திருமண வாழ்க்கையில் வெற்றிகண்டிருக்க முடியாது. எனவே நாங்கள் அனுப்பும் பணத்தை ஏதேனும் ஒரு ஏழை நாட்டில் ராஜ்ய மன்றத்தை கட்டுவதற்காக உபயோகித்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.”
“சமீபத்தில்தான் எனக்குச் சொத்து கிடைத்தது. நான் வாங்க ‘ஆசைப்படுகிற’ பொருட்கள் குறைவு; எனக்கு ‘தேவைப்படும்’ பொருட்களோ அதைவிட குறைவு. அநேக நாடுகளில் ஒரு நல்ல ராஜ்ய மன்றம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். எனவே நான் அனுப்பும் பணத்தை ராஜ்ய மன்றங்களைக் கட்ட பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
நிவாரண உதவிகள்
இந்தக் கடைசி நாட்களில் பேரழிவுகள் பெரும்பாலும் திடீரென்று தாக்குகின்றன. பாதிக்கப்பட்ட தங்களுடைய சகோதரர்களுக்கு உதவுவதற்காக அநேக யெகோவாவின் சாட்சிகள் கூடுதல் நன்கொடைகளை அளிக்கிறார்கள். அத்தகைய இடருதவி நிவாரண நன்கொடைகள், உலகளாவிய வேலையின் பாகமாக அளிக்கப்படுகின்றன என்பதை நினைப்பூட்டுகிறோம். யெகோவாவின் சாட்சிகள் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய இடங்களில் சில:
• ஆப்பிரிக்கா
• ஆசியா
• கரீபியன் பகுதி
• பசிபிக் தீவுகள்
“சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து மீட்க எங்களுக்கு உதவிக்கரம் நீட்டியதற்காக நானும் என் கணவரும் உங்களுக்கு கோடி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் வீட்டிற்கு புது கூரையை போட முடிந்தது. உடனடி உதவி செய்ததற்காக நாங்கள் மிக்க நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.”
“என் பெயர் கார்னர். எனக்கு 11 வயதாகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டதும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இது என்னுடைய சகோதர சகோதரிகளுக்கு உதவும் என்று நம்புகிறேன்.”
விசேஷ முழுநேர ஊழியர்கள்
அநேக கிறிஸ்தவர்கள் பிரசங்க வேலையில் அல்லது பெத்தேல் வீடுகளில் முழுநேரமாக சேவை செய்கிறார்கள். சில முழுநேர வாலண்டியர்கள், மனமுவந்து தரப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறார்கள். அவர்களில் சிலரது எண்ணிக்கை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:
• மிஷனரிகள்: 2,635
• பயணக் கண்காணிகள்: 5,325
• பெத்தேல் அங்கத்தினர்கள்: 20,092
“இப்போது என்னால் [ஐந்து வயது சிறுவன்] பெத்தேல் சேவை செய்யமுடியாவிட்டாலும், இந்த நன்கொடையை அன்போடு அனுப்புகிறேன். ஆனால் நான் பெரியவனான பிறகு நிச்சயம் பெத்தேலுக்கு வந்து கடுமையாக உழைப்பேன்.”
பைபிள் கல்வியை முன்னேற்றுவித்தல்
‘சகல ஜாதிகளையும் சீஷராக்கும்படி’ இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றுகிறவர்களிடம் கட்டளையிட்டார். (மத்தேயு 28:19) அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இன்று யெகோவாவின் சாட்சிகள் 235 நாடுகளில் பைபிளைப் பற்றி சுறுசுறுப்பாக பிரசங்கித்தும் போதித்தும் வருகிறார்கள். 413 மொழிகளில் பைபிள் பிரசுரங்களை அச்சடித்தும் விநியோகித்தும் வருகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்குக் கொடுப்பதிலேயே விலைமதிப்புள்ளது நேரம்தான்; அவர்கள், தங்களுடைய நேரத்தைப் பயன்படுத்தி, கடவுளைப் பற்றியும் அவருடைய நோக்கத்தைப் பற்றியும் அநேக மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். தங்கள் அயலகத்தாருக்கு உதவுவதற்காக தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் அபரிமிதமாக செலவழிக்கிறார்கள். அவர்கள் நன்கொடையாக பணத்தைக்கூட தாராளமாக கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட அவர்களுடைய எல்லா நன்கொடைகளும் ஏதாவது ஒருவிதத்தில் யெகோவாவின் பெயரையும் அவருடைய நோக்கத்தையும் உலகம் முழுவதிலும் தெரியப்படுத்த உதவுகிறது. மற்றவர்களுக்கு யெகோவாவைப் பற்றி கற்றுக்கொடுக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளையெல்லாம் யெகோவா தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக. (நீதிமொழிகள் 19:17) மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற அவர்களுடைய உள்ளார்ந்த ஆசை யெகோவாவின் இருதயத்தை மகிழ்விக்கிறது!—எபிரெயர் 13:15, 16.
[பக்கம் 28-30-ன் பெட்டி]
சிலர் வழங்க விரும்பும் வழிகள்
உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்
அநேகர் திட்டமிட்டு பணம் ஒதுக்கி, “உலகளாவிய வேலைக்காக நன்கொடைகள்—மத்தேயு 24:14” என்று குறிக்கப்பட்டிருக்கும் நன்கொடைப் பெட்டிகளில் அதை போடுகின்றனர்.
இத்தொகையை சபைகள் ஒவ்வொரு மாதமும் அந்தந்த நாட்டிற்குரிய யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கின்றன. மனப்பூர்வமாக அளிக்கப்படும் நன்கொடைப் பணத்தை நேரடியாகவும் இந்த அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கலாம். கிளை அலுவலகங்களின் விலாசங்களை இந்தப் பத்திரிகையின் 2-ம் பக்கத்தில் காணலாம். காசோலைகளை “Watch Tower” என்ற பெயரில் எடுக்க வேண்டும். நகைகளை அல்லது விலைமதிப்புள்ள மற்ற பொருள்களைக்கூட நன்கொடையாக வழங்கலாம். இவையனைத்தும் எவ்வித நிபந்தனையுமின்றி கொடுக்கப்படும் அன்பளிப்பு என்பதைக் குறிப்பிடும் சுருக்கமான கடிதத்தோடு அவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.
திட்டமிட்ட நன்கொடை
நிபந்தனையற்ற பண நன்கொடைகள் தவிர நீங்கள் வாழும் நாட்டை பொறுத்து, உலகளாவிய ராஜ்ய சேவைக்கு உதவ மற்ற வழிகளும் இருக்கின்றன. அவையாவன:
இன்ஷ்யூரன்ஸ்: ஆயுள் காப்புறுதி பத்திரம் அல்லது ரிட்டையர்மென்ட்/ஓய்வூதிய திட்டத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம்.
வங்கி பண இருப்பு: வங்கி பண இருப்புகள், டெபாஸிட் சர்டிஃபிகேட்டுகள், தனிநபரின் ஓய்வூதிய கணக்குகள் ஆகியவை ஒரு டிரஸ்ட் ஏற்பாட்டின் மூலம் அல்லது மரணத்திற்குப் பிறகு உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு கொடுக்கும்படி உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதி வைக்கலாம்.
பங்குகளும் பாண்டுகளும்: பங்குகளையும் பாண்டுகளையும் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம்.
நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு முதலியவற்றை நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம் அல்லது வசிக்குமிடமாக இருந்தால், அதை அளிப்பவர் தன் மரணம் வரை அதை அனுபவிப்பதற்கான ஏற்பாடு செய்துகொள்ளலாம். இதில் எவற்றையாவது சட்டப்படி பத்திரத்தில் எழுதுவதற்கு முன் உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்துடன் தொடர்புகொள்ள வேண்டும்.
வருடாந்தர அன்பளிப்பு: இது, ஒருவர் தன்னுடைய பணத்தை அல்லது செக்யூரிட்டி டெபாஸிட்டுகளை உவாட்ச் டவர் கார்ப்பரேஷனுக்கு எழுதிக் கொடுக்கும் ஏற்பாடாகும். நன்கொடை அளிப்பவர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் வாழ்நாள் முழுவதுமாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு வருடமும் இதற்கு மாற்றீடாக பெறுகிறார். வருடாந்தர அன்பளிப்பு என்ற இந்த ஏற்பாட்டை செய்யும் ஆண்டில் நன்கொடை வழங்குபவருக்கு வருமான வரி விலக்கு உண்டு.
உயில்களும் டிரஸ்டுகளும்: சொத்து அல்லது பணத்தை சட்டப்படி எழுதப்பட்ட உயில்கள் மூலம் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு சேரும்படி எழுதி வைக்கலாம் அல்லது ஒரு டிரஸ்ட் ஒப்பந்தத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம். சில நாடுகளில், மத அமைப்புக்கு உதவும் ஒரு டிரஸ்டுக்கு வரி சலுகைகள் கிடைக்கலாம். ஆனால், இந்தியாவுக்கு இது பொருந்தாது.
“திட்டமிட்ட நன்கொடை” என்ற பதம், இவ்விதமான நன்கொடைகளை அளிப்பவர் அதற்காக முன்கூட்டியே நன்கு திட்டமிட வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. இப்படிப்பட்ட திட்டமிட்ட நன்கொடை மூலம் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்கு ஆதரவளிக்க விரும்புகிறவர்களுக்கு உதவ உலகளாவிய ராஜ்ய சேவையை ஆதரிக்க திட்டமிட்ட நன்கொடை என்ற சிற்றேடு ஆங்கிலத்திலும் ஸ்பானிஷிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.a நன்கொடைகள், உயில்கள் மற்றும் டிரஸ்டுகள் சம்பந்தமாக சொஸைட்டியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்தச் சிற்றேடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. நிலம், பணம், வரி ஆகியவை சம்பந்தப்பட்டதில் திட்டமிடுவதற்குப் பயனுள்ள கூடுதல் தகவல்கள்கூட இதில் உள்ளன. மேலும் தனிநபர்கள் பல்வேறு வழிகளில் இப்போதே நன்கொடை கொடுப்பது அல்லது மரணத்திற்குப்பின் அனுபோகிக்க கொடுப்பது பற்றி இது தெரிவிக்கிறது. இந்தச் சிற்றேட்டை படித்துவிட்டு, தங்களுடைய சட்ட ஆலோசகரிடம் அல்லது வரிவிதிப்பு ஆலோசகரிடம் கலந்தாலோசித்தப் பின் அநேகர் உலகமுழுவதும் நடைபெறுகிற யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு உதவ முடிந்துள்ளது; அவ்வாறு செய்வதன் மூலம் நிறைய வரி சலுகைகளையும் பெற முடிந்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கோ உங்கள் நாட்டிற்குரிய யெகோவாவின் சாட்சிகளுடைய அலுவலகத்திற்கோ கடிதம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
Charitable Planning Office
Jehovah’s Witnesses of India,
Post Box 6440,
Yelahanka,
Bangalore 560 064,
Karnataka.
Telephone: (080) 28468072
[அடிக்குறிப்பு]
a இந்தியாவில் கிடையாது
[பக்கம் 27-ன் படத்திற்கான நன்றி]
Faithful video: Stalin: U.S. Army photo