பெற்றோர்களின் இருதயங்களை அவர்கள் மகிழ்வித்தார்கள்
“என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.” (நீதிமொழிகள் 23:15) ஆம், பிள்ளைகள் கடவுளுடைய ஞானத்தைப் பெறும்போது கிறிஸ்தவப் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். 2005, செப்டம்பர் 10-ம் தேதி சனிக்கிழமையன்று உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 119-ம் வகுப்பின் பட்டமளிப்பு விழாவிற்கு 6,859 பேர் கூடிவந்திருந்தார்கள். எட்டுத்திக்கிலுமிருந்து வந்த இவர்கள் அனைவரும் சந்தோஷக் கடலில் மூழ்கித் திளைத்தார்கள். குறிப்பாக, கிலியட் பள்ளியின் 56 பட்டதாரிகளுடைய பெற்றோர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அமெரிக்க பெத்தேல் குடும்பத்தில் பல வருடங்களாகச் சேவை செய்துவரும் டேவிட் வாக்கர் இருதயப்பூர்வமான ஜெபத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும்குழு அங்கத்தினர், டேவிட் ஸ்ப்லேன் நிகழ்ச்சியின் சேர்மனாக இருந்தார். அவர் கிலியட் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை இப்படியாகப் பாராட்டி நிகழ்ச்சியைச் தொடங்கினார், “உங்களுக்கு எங்களது இனிய வாழ்த்துக்கள். நீங்கள் உங்கள் மகன்களிடமும் மகள்களிடமும் வளர்த்திருக்கும் பண்புகள், மிஷனரி ஊழியத்தைத் தேர்ந்தெடுக்க அவர்களைத் தூண்டியிருக்கிறது.” தங்கள் மகன்களும் மகள்களும் கூடிய சீக்கிரம் தூர தேசங்களுக்குப் போய்விடுவதைக் குறித்து அவர்களுடைய பெற்றோர்கள் கவலைப்பட்டிருப்பார்கள். என்றாலும், சகோதரர், ஸ்ப்லேன் அவர்களை உற்சாகப்படுத்தி, “உங்கள் பிள்ளைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள். உங்களைவிட பல மடங்கு நன்றாகவே யெகோவா உங்கள் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வார். உங்கள் மகன்களும் மகள்களும் செய்யப்போகிற நல்ல காரியங்களை யோசித்துப் பாருங்கள். கஷ்டப்படுகிற மக்கள், வாழ்க்கையில் முதல் முறையாக உண்மையான ஆறுதலைப் பெறப் போகிறார்கள்” என்றார்.
மற்றவர்களை எவ்வாறு தொடர்ந்து மகிழ்விப்பது
நிகழ்ச்சியின் சேர்மன் நான்கு பேச்சாளர்களை அறிமுகப்படுத்தினார். முதலாவதாக ரால்ஃப் வால்ஸ் என்ற சகோதரர் “உங்கள் கண்களைத் திறந்து வைத்திருங்கள்” என்ற தலைப்பில் பேசினார். இவர் அமெரிக்க கிளை அலுவலகக் குழு அங்கத்தினராக இருக்கிறார். சொல்லர்த்தமான குருட்டுத்தன்மையைவிட ஆன்மீகக் குருட்டுத்தன்மை படு மோசமானது என்ற குறிப்பை அவர் வலியுறுத்தினார். முதல் நூற்றாண்டிலிருந்த லவோதிக்கேயா சபை ஆன்மீகப் பார்வையை இழந்துவிட்டிருந்தது. அந்தச் சபையில் ஆன்மீகப் பார்வை இழந்த கிறிஸ்தவர்களுக்கு உதவி அளிக்கப்பட்டது. என்றாலும், நம்முடைய ஆன்மீகக் கண்களைத் திறந்து வைப்பதன் மூலம் அப்படிப்பட்ட குருட்டுத்தன்மையைத் தவிர்ப்பதே எப்போதும் நல்லது. (வெளிப்படுத்துதல் 3:14-18) “உங்கள் கண்களைத் திறந்துவைத்து, பொறுப்பிலுள்ள மனிதர்களை யெகோவா பார்ப்பதுபோல பாருங்கள்” என்று கூறினார் பேச்சாளர். சபையில் பிரச்சினைகள் இருக்குமானால் பட்டதாரிகள் அளவுக்குமீறி கவலைப்படக் கூடாது. அப்படிப்பட்ட காரியங்களைப் பற்றி ஆண்டவரான இயேசு கிறிஸ்து அறிந்திருப்பதால் உரிய காலத்தில் அவர் நடவடிக்கை எடுப்பார்.
அடுத்ததாக, ஆளும் குழு அங்கத்தினரான சாம்யெல் ஹெர்ட், தன்னுடைய பேச்சில் “நீங்கள் தயாரா?” என்ற கேள்விக்குப் பதில் அளித்தார். பயணம் செய்பவர் தனக்குத் தேவையான துணிமணிகளைத் தன்னோடு எப்படி எடுத்துச் செல்வாரோ அப்படியே பட்டதாரிகளும் புதிய ஆள்தன்மையின் குணங்களை எப்போதுமே அணிந்திருக்க வேண்டும். இயேசு காண்பித்த இரக்கத்தை அவர்கள் காட்ட வேண்டும். குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து “உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டபோது இயேசு, “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்று கூறினார். (மாற்கு 1:40-42) இதைக் குறிப்பிட்ட பிறகு பேச்சாளர் இவ்வாறு சொன்னார்: “மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்று உண்மையிலேயே உங்களுக்குச் சித்தமிருந்தால் அதைச் செய்வதற்கான வழிகளைத் தேடுவீர்கள்.” கிறிஸ்தவர்கள் “ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக” கருதும்படி பிலிப்பியர் 2:3 சொல்கிறது. சகோதரர் ஹெர்ட் இவ்வாறு சொன்னார்: “அறிவாற்றலைவிட உங்களுக்கு மனத்தாழ்மைதான் முக்கியம். மனத்தாழ்மை இருந்தால்தான் ஊழியத்தில் நீங்கள் சந்திக்கிற ஆட்களும் சபையிலுள்ள சகோதர சகோதரிகளும் உங்களுடைய அறிவாற்றலிலிருந்து நன்மை பெறுவார்கள்.” மாணவர்கள் தொடர்ந்து கிறிஸ்தவ அன்பைக் காட்டுகிறார்கள் என்றால், நியமிக்கப்படுகிற நாடுகளுக்குச் செல்ல அவர்கள் தயாராயிருக்கிறார்கள், நிச்சயம் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என பேச்சின் இறுதியில் அவர் சொன்னார்.—கொலோசெயர் 3:14.
மார்க் நூமர் என்ற கிலியட் பள்ளி போதனையாளர் ஒருவர், “நீங்கள் தொடர்ந்து அதைக் காண்பிப்பீர்களா?” என்ற தலைப்பில் பேசினார். அந்தத் தலைப்பு அனைவருடைய ஆவலையும் கிளறியது. யெகோவாவின் நற்குணத்திற்கான நம் நன்றியுணர்வைத் தொடர்ந்து காண்பிப்பதையே அந்த ‘அது’ குறிக்கிறது. சங்கீதம் 103:2 சொல்கிறது: “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.” தாங்கள் உயிரோடு இருப்பதற்கு உதவிய மன்னாவிற்காக இஸ்ரவேலர் நன்றி காண்பிக்கவில்லை. அதை “அற்பமான உணவு” என்று அழைத்தார்கள். (எண்ணாகமம் 21:5) நாட்கள் செல்லச்செல்ல மன்னாவின் மதிப்பு அப்படியே மாறாமல் இருந்தது. ஆனால் அதற்கான நன்றியுணர்வுதான் இஸ்ரவேலரிடமிருந்து மறைந்துபோனது. அந்தப் போதனையாளர் இவ்வாறு சொன்னார்: “யெகோவாவின் மகத்தான செயல்களை மறந்து, வேறொரு நாட்டில் சேவை செய்வதை சாதாரண வேலையாகக் கருத ஆரம்பித்தீர்கள் என்றால், அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கும் வேலையை எப்படிக் கருதுகிறீர்கள் என்பதை அது பெரிதும் பாதிக்கும்.” யெகோவா ‘உங்களைக் கிருபையினால் முடிசூட்டுகிறார்’ என்று சங்கீதம் 103:4 சொல்கிறது. பட்டதாரிகள் தங்களுடைய புதிய சபைகளில் கடவுளுடைய கிருபைகளை அனுபவித்து மகிழ்வார்கள்.
லாரன்ஸ் போவென் என்ற இன்னொரு கிலியட் போதனையாளர், “ஆசீர்வாதங்கள் உங்கள்மீது வருமா?” என்ற தலைப்பில் பேசினார். 119-வது கிலியட் பள்ளி மாணவர்கள் சிறந்த மிஷனரிகளாக ஆவதற்கு கடுமையாய் உழைத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அவர்கள் யெகோவாவின் மீது முழுமையாகச் சார்ந்திருந்து, அவர் கொடுத்திருக்கும் வேலையில் தொடர்ந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். வெளிப்படுத்துதல் 14:1-4 வசனங்கள், ‘ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறார்கள்’ என்று 1,44,000 பேரை விவரிக்கின்றன. அவர்கள் எல்லாருமே எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும், யெகோவாவையும் இயேசுவையும் விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறார்கள், அதனால் தங்கள் இலக்கை அடைகிறார்கள். அதேபோல் நாமும்கூட “வாழ்க்கையில் என்ன நேரிட்டாலும், யெகோவாவையே பற்றிக்கொண்டிருக்கிறோம், அவர் நமக்குக் கொடுத்திருக்கும் வேலையை தொடர்ந்து உண்மையுடன் செய்துகொண்டிருக்கிறோம்” என்று பேச்சாளர் கூறினார். கிலியட் பட்டதாரிகள் அவ்வாறு செய்வதன் மூலம் யெகோவாவின் ஆசீர்வாதங்கள் ‘அவர்கள் மேல் வருவதைக்’ காண்பார்கள்.—உபாகமம் 28:2.
ஊழியத்தில் பலன் தருதல்
பள்ளி நடந்த காலப்பகுதியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மாணவர்கள் வெளி ஊழியத்தில் கலந்துகொண்டார்கள். அதில் பலனும் கண்டார்கள்; இது கிலியட் பள்ளி பதிவாளரான வாலஸ் லிவ்ரன்ஸின் பேச்சிலிருந்து தெளிவானது. மாணவர்கள் குறைந்தது பத்து மொழிகளில் பிரசங்கித்தார்கள், நிறைய பைபிள் படிப்புகளையும் ஆரம்பித்தார்கள். ஒரு கிலியட் தம்பதியர் சீனாவைச் சேர்ந்த நபரிடம் பைபிள் படிப்பைத் தொடங்கினார்கள். இரண்டு முறை அவரைச் சந்தித்த பிறகு, ‘யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்வது உங்களுக்கு எப்படி இருக்கிறது’ என்று கேட்டார்கள். உடனே அவர் யோவான் 17:3-ஐ அவருடைய பைபிளிலிருந்து எடுத்து அவர்களையே படிக்கச் சொன்னார். ஜீவனுக்கு போகும் பாதையில் இருப்பதுபோல் அவர் உணர்ந்தார்.
கோட் டீவோர், டொமினிகன் குடியரசு, ஈக்வடார் ஆகிய நாடுகளின் கிளை அலுவலகக் குழுவினர் மூன்று பேரை ஆளும் குழுவைச் சேர்ந்த அன்தனி மோரிஸ் பேட்டி கண்டார். மாணவர்களின் வருகையைத் தாங்கள் ஆவலோடு எதிர்பார்ப்பதாகவும், அவர்கள் வந்த பிறகு தங்கள் நியமிப்புகளுக்கு அட்ஜஸ்ட் ஆவதற்கு தேவையான உதவிகளைத் செய்து தருவதாகவும் அவர்கள் உறுதி அளித்தார்கள்.
காங்கோவின் ஜனநாயகக் குடியரசு, பாப்புவா-நியூ கினி, உகாண்டா ஆகிய நாடுகளின் கிளை அலுவலகக் குழுவினர் மூன்று பேரிடம் அமெரிக்க பெத்தேல் குடும்பத்தைச் சேர்ந்த லெனார்ட் பியர்ஸன் பேசினார். ஊழியத்தில் முழுமையாக ஈடுபடும்படி பட்டதாரிகளை இவர்கள் உற்சாகப்படுத்தினார்கள். காங்கோவில் 21 வருடங்களுக்கும் மேல் ஒரு தம்பதியர் மிஷனரியாகச் சேவை செய்தார்கள்; அங்கு 60 பேர் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற அவர்கள் உதவியிருக்கிறார்கள். இப்போது 30 பைபிள் படிப்புகளை நடத்தி வருகிறார்கள். அவர்களில் 22 பேர் கூட்டங்களுக்கு வருகிறார்கள். அறுவடை வேலை இந்தளவு அதிகமாக இருப்பதால் மிஷனரி சேவைக்கு இதுவே சரியான காலம்.
அவசர உணர்வுடன் பிரசங்கித்தல்
ஆளும் குழு அங்கத்தினர், கெரட் லாஷ் கடைசி பேச்சைக் கொடுத்தார். “கர்த்தருடைய நாளில் கடவுளுக்கும் இயேசுவுக்கும் சாட்சிகொடுத்தல்” என்பதே அவருடைய பேச்சின் பொருள். “சாட்சி,” “சாட்சிகள்,” “சாட்சி கொடுத்தல்” ஆகிய பதங்கள் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளிலுள்ள வெளிப்படுத்துதல் புத்தகத்தில் 19 முறை காணப்படுகின்றன. யெகோவா எந்த வேலையைத் தம்முடைய மக்கள் செய்ய வேண்டுமென விரும்புகிறார் என்பதை இந்தப் பதங்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இப்படிப்பட்ட சாட்சி கொடுக்கும் வேலையை நாம் எப்போது செய்ய வேண்டும்? “கர்த்தருடைய நாளில்” செய்ய வேண்டும். (வெளிப்படுத்துதல் 1:9, 10) கர்த்தருடைய அந்த நாள் 1914-ல் ஆரம்பமானது, நம்முடைய நாளிலும் தொடர்கிறது, அது இன்னும் முடியவில்லை. கடவுளைப் பற்றி சாட்சிகொடுக்கும் வேலையை தேவதூதர்கள் ஆதரிக்கிறார்கள் என்று வெளிப்படுத்துதல் 14:6, 7 சொல்கிறது. இயேசுவைக் குறித்து சாட்சிகொடுக்கும் வேலையை வழிநடத்த வேண்டிய பொறுப்பு அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று வெளிப்படுத்துதல் 22:17 காட்டுகிறது. ஆனாலும், இப்போது நாம் எல்லாருமே அந்த வேலையைச் செய்ய வேண்டும். 20-ம் வசனத்தில் “நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்று இயேசு சொல்கிறார். சகோதரர் லாஷ், கூடிவந்திருந்த அனைவரையும் இவ்வாறு கேட்டுக்கொண்டார்: “மக்களைப் பார்த்து, ‘வாருங்கள், வந்து ஜீவத் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லுங்கள். இயேசு விரைவாக வந்துகொண்டிருக்கிறார். அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா?”
பதினோரு வருடங்களாக கிலியட் பள்ளி போதனையாளராக இருந்த ஃபிரட் ரஸ்க், நிகழ்ச்சியின் இறுதியில் யெகோவாவுக்கு நன்றி செலுத்தி ஜெபம் செய்தார். அது அனைவருடைய மனதையும் நெகிழ வைத்தது. மகிழ்ச்சிகரமான அந்த நிகழ்ச்சியின் முடிவில் அந்த ஜெபம் மிகப் பொருத்தமாகவும் இருந்தது.
[பக்கம் 13-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 10
அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 25
மாணவர்களின் எண்ணிக்கை: 56
சராசரி வயது: 32.5
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 16.4
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 12.1
[பக்கம் 15-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 119-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) ஹெல்கசன், எஸ்.; டுகர், எச்.; பியர்லூயிசி, ஏ.; ஜோசஃப், ஐ.; ராகானெல்லீ, சி. (2) பார்ஜ், டி.; பட்லர், டி., ஃபிரிட்லன், ஜே.; நூன்யெஸ், கே.; பாவாஸோ, சி.; டூமன், டி. (3) காமாகோ, ஒ.; லின்ட்கிவிஸ்ட், எல்.; புரூமர், ஏ.; வெசல்ஸ், ஈ.; பர்டன், ஜே.; வுட்ஹவுஸ், ஒ.; டூமன், ஏ. (4) டீரீயோன், ஏ.; கானலீ, எல்.; ஃபூர்னியே, சி.; கில், ஏ.; யூன்ஸான், கே.; ஹாமில்டன், எல். (5) பர்ட், டி.; ஸ்கிரிப்னர், ஐ.; காமாகோ, பி.; லாஷின்ஸ்கீ, எச்.; ஹல்லஹன், எம்.; லிபூடா, ஓ. (6) ஜோசஃப், ஏ.; லின்ட்கிவிஸ்ட், எம்.; ஹெல்கஸன், சி.; நூன்யெஸ், டி.; ஸ்கிரிப்னர், எஸ்.; ஃபூர்னியே, ஜே. (7) பியர்லூயிஸி, எஃப்.; பாவாஸோ, டி.; புரூமர், சி.; ராகானெல்லீ, பி.; பட்லர், டி.; வுட்ஹவுஸ், எம்.; லிபூடா, ஜே. (8) லாஷின்ஸ்கீ, எம்.; ஃபிரிட்லன், எஸ்.; பர்டன், ஐ.; டீரீயோன், எம்.; பர்ட், எம்.; பார்ஜ், ஜே. (9) வெசல்ஸ், டி.; ஹல்லஹன், டி.; கானலீ, எஸ்.; கில், டி.; டுகர், பி.; ஹாமில்டன், எஸ்.; யூன்ஸான், டி.