“வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது”
பாபிலோனில் அடிமைகளாய் இருந்த கடவுளுடைய மக்களை, பெர்சிய அரசனாகிய கோரேசு பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில் விடுவித்தார். ஆயிரக்கணக்கான இந்த மக்கள், பாழாய்க்கிடந்த எருசலேம் ஆலயத்தை மீண்டும் கட்டுவதற்காகப் படையெடுத்தார்கள். எருசலேமுக்குத் திரும்பிவந்த இவர்களுடைய பொருளாதார நிலை மிக மோசமாக இருந்தது. அதுபோக, சுற்றியிருந்த மக்களும் அவர்களுடைய கட்டிட வேலைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள். எனவே, கட்டிட வேலையில் களமிறங்கிய சிலர், பிரமாண்டமான இந்தப் பணியைச் செய்துமுடிக்க முடியுமா என்று சந்தேகித்தார்கள்.
ஆனால், யெகோவா அவர்களுக்குப் பக்கபலமாய் இருப்பார் என தம் தீர்க்கதரிசியான ஆகாய் மூலமாக நம்பிக்கை அளித்தார். “சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன்” என்று கடவுள் கூறினார். ஆலயத்தைக் கட்டி முடிப்பதற்கு நிதி உதவி கிடைக்குமா என்று பயந்தவர்களிடம் ஆகாய் இந்தச் செய்தியை அறிவித்தார்: “வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (ஆகாய் 2:7-9) உற்சாகமளிக்கும் இந்த வார்த்தைகளை ஆகாய் சொல்லி ஐந்து வருடங்களுக்குள் அந்த ஆலயத்தின் கட்டுமானப் பணி நிறைவடைந்தது.—எஸ்றா 6:13-15.
சமீப காலங்களிலும்கூட யெகோவாவுடைய வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட பெரிய பெரிய பணிகளை கடவுளுடைய ஊழியர்கள் மேற்கொண்டபோது ஆகாய் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் அவர்களுக்கு உற்சாகமளித்திருக்கின்றன. 1879-ல் உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் ஜயன்ஸ் உவாட்ச் டவர் அண்ட் ஹெரல்ட் ஆஃப் கிரைஸ்ட்ஸ் பிரசன்ஸ் என்ற பெயரில் காவற்கோபுர பத்திரிகையைப் பிரசுரிக்க ஆரம்பித்தபோது அதில் பின்வரும் வாக்கியம் காணப்பட்டது: “‘ஜயன்ஸ் உவாட்ச்டவர்’ பத்திரிகைக்கு யெகோவாவே ஆதரவு அளிக்கிறார் என்பதை நாங்கள் நம்புகிறோம்; ஆகவே, அது தொடர்ந்து வெளிவர மனிதரிடம் பிச்சை எடுக்காது, கெஞ்சியும் கேட்காது. ‘மலைகளிலுள்ள எல்லா வெள்ளியும் பொன்னும் என்னுடையது’ என்று சொல்லுகிற அவரே அதற்கு தேவையான நிதியை அளிக்கத் தவறினால், பிரசுரத்தை நிறுத்திவிடுவதற்கான சமயம் வந்துவிட்டதாக நாங்கள் புரிந்துகொள்வோம்.”
இந்தப் பத்திரிகை இன்று வரையாக நிறுத்தப்படாமல் தொடர்ந்து அச்சிடப்படுகிறது. இந்தப் பத்திரிகையின் முதல் இதழ், ஆங்கிலத்தில் மட்டுமே 6,000 பிரதிகள் அச்சிடப்பட்டது. இன்று இந்தப் பத்திரிகை 161 மொழிகளில் வெளிவருவதோடு அதன் ஒவ்வொரு இதழும் சுமார் 2,85,78,000 பிரதிகளுக்கும் அதிகமாக அச்சிடப்படுகிறது.a இதனுடைய துணைப் பத்திரிகையான விழித்தெழு! 81 மொழிகளில் வெளிவருவதோடு அதன் ஒவ்வொரு இதழும் சுமார் 3,42,67,000 பிரதிகளுக்கும் அதிகமாக அச்சிடப்படுகிறது.
யெகோவாவே சர்வலோகப் பேரரசர் என அவரை மகிமைப்படுத்துவதும் அவருடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதுமே காவற்கோபுர பத்திரிகையின் குறிக்கோள். இதே குறிக்கோளுடன்தான் யெகோவாவின் சாட்சிகள் பல பணிகளை மேற்கொள்கிறார்கள். (மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 4:11) 1879-ல் இந்தப் பத்திரிகை ஒலித்த நம்பிக்கையே இன்றும் சாட்சிகளுடைய நம்பிக்கையாக இருக்கிறது. தங்களுடைய வேலையைக் கடவுள் ஆதரிக்கிறார் என்றும் அவர் அங்கீகரிக்கிற வேலைகளுக்கு நிதி குறைவுபடாது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். அப்படியென்றால், யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளுக்கு நிதியுதவி எங்கிருந்து கிடைக்கிறது? நற்செய்தியை உலகமுழுவதிலும் பிரசங்கிப்பதற்கு என்ன விதமான வேலைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்?
நிதியுதவி எங்கிருந்து கிடைக்கிறது?
யெகோவாவின் சாட்சிகள் மக்களிடம் பிரசங்கிக்கையில், “இந்த வேலையில் உங்களுக்கு சம்பளம் கிடைக்கிறதா?” என்று அவர்களிடம் கேட்கப்படுகிறது. இல்லை என்பதே பதில். இந்தச் சேவைக்காக அவர்கள் மனமுவந்து தங்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள். இந்தச் சுவிசேஷகர்கள், யெகோவாவைப் பற்றியும் வரப்போகும் நல்ல எதிர்காலத்தைக் குறித்து பைபிளிலுள்ள வாக்குறுதியைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்வதில் பல மணிநேரங்களைச் செலவிடுகிறார்கள். அவர்கள் இப்படிச் செய்வதற்குக் காரணம் அவர்களிடமுள்ள நன்றியுணர்வே. கடவுள் தங்களுக்காகச் செய்திருப்பவற்றுக்காகவும், நற்செய்தியானது தங்கள் சொந்த வாழ்க்கையையும் கண்ணோட்டத்தையும் பெருமளவு மாற்றியிருப்பதற்காகவும் அவர்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். எனவே, தங்களுக்குக் கிடைத்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் இப்படிச் செய்வதன்மூலம் இயேசு கூறிய நியமத்தைப் பின்பற்றுகிறார்கள்: “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.” (மத்தேயு 10:8) ஆம், யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் சாட்சிகளாய் இருக்கவேண்டுமென்ற அவர்களுடைய ஆசை தங்கள் சொந்த பணத்தைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் தங்கள் நம்பிக்கைகளைச் சொல்லத் தூண்டுகிறது, வெகு தொலைவிலுள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தாலும் சரி, அவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை.—ஏசாயா 43:10; அப்போஸ்தலர் 1:8.
பரவலாகச் செய்யப்படுகிற இந்தப் பிரசங்கிப்பு வேலைக்காகவும் அதற்கு உதவியாக உள்ள அச்சகங்கள், அலுவலகங்கள், மாநாட்டு மன்றங்கள், மிஷனரி இல்லங்கள் போன்றவற்றுக்காகவும் அதிக செலவாகின்றன. இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் கிடைக்கிறது? இதுபோன்ற காரியங்களுக்குத் தேவையான நிதி, மனமுவந்து கொடுக்கப்படும் காணிக்கைகளிலிருந்து கிடைக்கிறது. அமைப்பு சம்பந்தப்பட்ட காரியங்களைச் செய்வதற்கு சபையில் உள்ள அங்கத்தினர்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று யெகோவாவின் சாட்சிகள் கட்டாயப்படுத்துவதில்லை. தங்களுடைய பிரசுரங்களை விலைக்கு கொடுப்பதும் இல்லை. ஆனால், தங்களுடைய கல்விபுகட்டும் வேலையை ஆதரிக்க விரும்புகிறவர்களின் நன்கொடையை சாட்சிகள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்கள். நற்செய்தியை உலகமுழுவதிலும் பிரசங்கிப்பதற்காக எடுக்கப்படும் பல முயற்சிகளில் ஒன்றை மட்டும், அதாவது, மொழிபெயர்ப்பை குறித்து மட்டும் இப்போது நாம் விரிவாகச் சிந்திக்கலாம்.
437 மொழிகளில் பிரசுரங்கள்
பல பத்தாண்டு காலமாக உலகிலேயே மிகப் பரவலாக மொழிபெயர்க்கப்படும் பிரசுரங்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களும் அடங்கும். துண்டுபிரதிகள், சிற்றேடுகள், பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவை 437 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் உட்பட்டுள்ள மற்ற வேலைகளுக்கு அதிகளவு பணம் தேவைப்படுவதுபோல் மொழிபெயர்ப்புக்கும் தேவைப்படுகிறது. மொழிபெயர்ப்பில் என்னென்ன வேலைகள் அடங்கியுள்ளன?
யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களின் எழுத்தாளர்கள், முதல் படியாக ஆங்கிலக் கட்டுரையில் வெளிவர வேண்டிய விஷயங்களைத் தீர்மானிக்கிறார்கள். பிறகு உலகமுழுவதிலுமுள்ள பயிற்றுவிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் கம்ப்யூட்டரிலேயே பார்த்துக்கொள்ளும்படி அந்தத் தகவல் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்தந்த மொழிபெயர்ப்பு குழுக்கள் அந்தந்த மொழிகளில் பிரசுரங்களை மொழிபெயர்க்கின்றன. மொழிபெயர்க்கப்படும் பிரசுரங்களின் எண்ணிக்கை, மொழியின் சிக்கலான தன்மை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு குழுவிலும் சுமார் 5 முதல் 25 பேர்வரை இருக்கலாம்.
மொழிபெயர்க்கப்பட்ட விஷயம் சரியாக இருக்கிறதா என்று உறுதிசெய்யப்பட்டு பிழை திருத்தம் செய்யப்படுகிறது. இவையெல்லாம் செய்யப்படுவதற்குக் காரணம், மூல மொழியில் உள்ள கருத்துகள் மொழிபெயர்க்கப்படும் இலக்கு மொழியிலும் முடிந்தளவு திருத்தமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும் என்பதே. இந்தப் பணி பல சவால்களை முன்வைக்கிறது. பிரத்தியேக சொற்களை உடைய ஒரு கட்டுரையை மொழிபெயர்க்கையில், அது திருத்தமாக இருப்பதற்காக மொழிபெயர்ப்பாளர்களும் பிழை திருத்துபவர்களும் மூல மொழியிலும் (ஆங்கிலத்திலும்), இலக்கு மொழியிலும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கலாம். (சிலசமயங்களில் ஆங்கிலத்திலுள்ள கட்டுரைகள் பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு அவை மறுபடியும் வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன) எனவே, இவற்றிலும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கலாம். உதாரணத்திற்கு, விழித்தெழு!-வில் உள்ள ஒரு கட்டுரை தொழில் நுட்பத்தைக் குறித்தோ சரித்திரத்தைக் குறித்தோ பேசுகிறது என்றால் அதைச் சரியாக மொழிபெயர்ப்பதற்கு நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியிருக்கிறது.
அநேக மொழிபெயர்ப்பாளர்கள், யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்களில் முழுநேரமாகவோ பகுதிநேரமாகவோ வேலை செய்கிறார்கள். மற்ற மொழிபெயர்ப்பாளர்களோ அவர்களுடைய மொழி பேசப்படும் இடங்களிலேயே வேலை செய்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் தாங்கள் செய்கிற வேலைக்கு எந்தச் சம்பளத்தையும் பெறுவதில்லை. முழுநேரமாக இந்த வேலையைச் செய்கிறவர்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கப்படுகிறது. அதோடு, அவர்களுடைய சொந்த செலவுக்காக ஒரு சிறிய தொகையும் கொடுக்கப்படுகிறது. உலகமுழுவதிலும் சுமார் 2,800 சாட்சிகள் மொழிபெயர்ப்பாளர்களாக சேவை செய்துவருகிறார்கள். தற்சமயம், 98 கிளை அலுவலகங்களில் மொழிபெயர்ப்பு குழுக்கள் இருக்கின்றன அல்லது வேறு இடங்களில் இருக்கும் குழுக்களை இந்தக் கிளை அலுவலகங்கள் மேற்பார்வை செய்கின்றன. அதற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ரஷ்யாவிலுள்ள கிளை அலுவலகம் 230-க்கும் அதிகமான மொழிபெயர்ப்பாளர்களை—முழுநேரம் அல்லது பகுதிநேரம் வேலை செய்யும் மொழிபெயர்ப்பாளர்களை—மேற்பார்வையிடுகிறது. இவர்கள் 30-க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கிறார்கள். இவற்றில், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பேசப்படுகிற சுவாஷ், ஆஸெஷியன், விகுர் போன்ற பிரபலமற்ற மொழிகளும் அடங்குகின்றன.
மொழிபெயர்ப்பின் தரம் உயர்கிறது
சிக்கலான எண்ணங்களை திருத்தமாக மொழிபெயர்ப்பது சாதாரண விஷயமல்ல என்பதை வேறு மொழியைக் கற்க முயன்றவர்கள் புரிந்துகொள்வார்கள். மொழிபெயர்ப்பின் முக்கிய குறிக்கோள்: மூல மொழியில் உள்ள உண்மைகளும் கருத்துகளும் திருத்தமாகவும் அதேசமயம் இயல்பாகவும் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். வாசகர் படிக்கையில் அது மொழிபெயர்ப்பாகத் தொனிக்காமல் தங்களுடைய மொழியிலேயே எழுதப்பட்டதாகத் தோன்ற வேண்டும். இப்படி மொழிபெயர்ப்பது ஒரு கலை. புதிதாக வரும் மொழிபெயர்ப்பாளர்கள் திறம்பட்ட விதத்தில் மொழிபெயர்ப்பதற்குப் பல வருடங்கள் எடுக்கும். அவர்களுக்குத் தேவையான பயிற்சியை யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து அளித்து வருகிறார்கள். திறம்பட்டு விளங்கும் சகோதரர்கள், சிலசமயங்களில் மொழிபெயர்ப்பு குழுக்களை நேரடியாகப் போய் சந்தித்து அவர்கள் இன்னும் சிறப்பாக மொழிபெயர்க்க பயிற்சி அளிக்கிறார்கள், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரை நன்கு பயன்படுத்தவும் கற்றுத்தருகிறார்கள்.
இப்படிப்பட்ட பயிற்சிகளால் கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. உதாரணத்திற்கு நிகாராகுவாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் பின்வருமாறு அறிக்கையிடுகிறது: “முதல் முறையாக எங்கள் மிஸ்கிட்டோ மொழிபெயர்ப்பாளர்களுக்கு, மொழிபெயர்ப்பின் வழிமுறைகள் பற்றியும் நுணுக்கங்கள் பற்றியும் மெக்சிகோ கிளை அலுவலகத்திலிருந்து வந்த ஒரு பயிற்சியாளரிடமிருந்து பயிற்சி கிடைத்திருக்கிறது. இந்தப் பயிற்சி மிக உதவியாக இருக்கிறது. எங்கள் மொழிபெயர்ப்பாளர்களால் இன்னும் திறம்பட்ட விதத்தில் வேலை செய்ய முடிகிறது. மொழிபெயர்ப்பின் தரமும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.”
மனதைத் தொடும் வார்த்தைகள்
மக்கள் மனதைச் சென்றெட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடனே பைபிளும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களும் அவர்களுடைய தாய் மொழியில் பிரசுரிக்கப்படுகின்றன. இந்த இலட்சியமே இன்று அரங்கேறி வருகிறது. 2006-ல் பல்கேரியன் மொழியில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டபோது யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷத்தில் பூரித்துப்போனார்கள். பலர் இதற்கு நன்றி மடல்கள் எழுதியதாக பல்கேரியா கிளை அலுவலகம் தெரிவிக்கிறது. சபையிலுள்ளவர்கள் சொல்வதாவது: “இப்போதெல்லாம் பைபிளைப் படித்தால் நன்றாகப் புரிகிறது, அது எங்கள் இருதயத்தைத் தொட்டு செயல்படவும் வைக்கிறது.” சோஃபியா என்ற நகரத்தைச் சேர்ந்த வயதான ஒருவர் இவ்வாறு கூறினார்: “பல வருடங்களாக நான் பைபிளைப் படித்துவருகிறேன். ஆனால், இதுபோன்ற ஒரு மொழிபெயர்ப்பை நான் இதுவரை படித்ததில்லை, இதைச் சுலபமாகப் புரிந்துகொள்ள முடிகிறது, அதுமட்டுமல்ல படிக்கிற விஷயங்கள் இருதயத்தை ஆழமாகத் தொடுகின்றன.” அதேபோல் அல்பேனியன் மொழியில் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை பெற்றபோது அல்பேனியாவில் உள்ள ஒரு சாட்சி இவ்வாறு கூறினார்: “அல்பேனியன் மொழியில் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது! நம்முடைய தாய்மொழியிலேயே யெகோவா நம்மிடம் பேசுவதைக் கேட்பது எவ்வளவு பெரிய பாக்கியம்!”
முழு பைபிளையும் மொழிபெயர்த்து முடிக்க ஒரு மொழிபெயர்ப்பு குழுவிற்கு பல வருடங்கள் எடுக்கலாம். ஆனால், அதன் விளைவாக லட்சக்கணக்கான மக்கள் முதன்முறையாக கடவுளுடைய வார்த்தையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதைப் பார்க்கையில், அந்த மொழிபெயர்ப்பு குழு எடுத்த எல்லா முயற்சிக்கும் தக்க பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம், அல்லவா!
‘நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாய் இருக்கிறோம்’
திறம்பட்ட விதத்தில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் உட்பட்டுள்ள பல அம்சங்களில் ஒன்றுதான் மொழிபெயர்ப்பு. பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களை எழுதுவது, அவற்றை அச்சடிப்பது, அச்சிடப்பட்ட பிரசுரங்களை வேறு இடங்களுக்கு அனுப்பிவைப்பது போன்ற வேலைகளுக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள், வட்டாரங்கள், சபைகள் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட வேறு பல வேலைகளுக்கும் பெருமளவு பணமும் முயற்சியும் தேவைப்படுகிறது. இருந்தாலும், கடவுளுடைய மக்கள் இந்த வேலையைச் செய்து முடிப்பதற்கு, தங்களை ‘மனப்பூர்வமாக’ அளிக்கிறார்கள். (சங்கீதம் 110:3) தங்களால் முடிந்ததை யெகோவாவுக்குக் கொடுப்பதற்காக கிடைத்திருக்கும் வாய்ப்பை அவர்கள் பாக்கியமாகவும் மதிப்பாகவும் எண்ணுகிறார்கள். அதன் விளைவாக யெகோவா அவர்களைத் தம்முடைய ‘உடன்வேலையாட்களாய்’ கருதுகிறார்.—1 கொரிந்தியர் 3:5-9.
“வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது” என்று சொல்கிறவர் தம்முடைய வேலையைச் செய்துமுடிக்க நம்முடைய நிதி உதவியை எதிர்பார்ப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால், உயிரைக் காக்கும் சத்தியங்களை “சகல ஜாதிகளுக்கும்” பிரசங்கிக்கும் வேலைக்காக நாம் நன்கொடை செலுத்துகிறோமே. உண்மையில் பார்த்தால், அப்படி நன்கொடை செலுத்துவது தம்முடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்காக யெகோவா நமக்கு அளித்திருக்கும் ஒரு பிரத்தியேக வாய்ப்பாய் அமைகிறது. இப்படி ஒரு வாய்ப்பை அளித்து அவர் தம்முடைய ஊழியர்களை கெளரவப்படுத்துகிறார். (மத்தேயு 24:14; 28:19, 20) மறுபடியும் செய்யப்படாத இந்த வேலைக்காக உங்களால் முடிந்த எல்லா ஆதரவையும் அளிக்க நீங்கள் தூண்டப்படவில்லையா?
[அடிக்குறிப்பு]
a இப்பத்திரிகை வெளிவரும் மொழிகளின் பட்டியலுக்காக இரண்டாம் பக்கத்தைப் பார்க்கவும்.
[பக்கம் 18-ன் பெட்டி]
“நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன”
கேமருனிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு 14 வயது நிரம்பிய ஓர் இளம் பெண் இவ்வாறு கடிதம் எழுதினாள்: “இந்த வருடத்திற்கு தேவையான பாடப் புத்தகங்களை வாங்கிய பிறகு, போன வருட புத்தகங்களில் இரண்டை விற்றேன். 2,500 பிராங்க்ஸ் [ஐந்து அமெரிக்க டாலர்கள்] கிடைத்தன. இந்தத் தொகையையும் என்னுடைய சேமிப்பிலிருந்து 910 பிராங்க்ஸையும் [1.82 அமெரிக்க டாலர்கள்] காணிக்கையாக அளிக்கிறேன். நீங்கள் செய்யும் சிறந்த வேலையைத் தொடர்ந்து செய்வதற்கு என் வாழ்த்துக்கள். காவற்கோபுர, விழித்தெழு! பத்திரிகைகளுக்கு என் இதயம் கனிந்த நன்றி. அவை நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன.”
[பக்கம் 18-ன் பெட்டி/படம்]
வித்தியாசமான நன்கொடை
மெக்சிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு சியாபாஸ் மாநிலத்தில் வசிக்கிற மான்வெல் என்ற ஆறு வயது சிறுவனிடமிருந்து கடிதம் வந்தது. அவன் இன்னும் எழுதக்கூட பழகாததால் அவனுடைய நண்பன் ஒருவன் அவன் சார்பாக பின்வரும் கடிதத்தை எழுதினான். நன்றியுள்ளம் படைத்த மான்வெல் சொல்கிறதாவது: “என் பாட்டி எனக்கு ஒரு பெண் பன்றியைக் கொடுத்தார். அது குட்டி போட்டபோது அதில் கொழுகொழுவென்று இருந்ததைத் தேர்ந்தெடுத்து சபையிலிருந்த மற்ற சகோதரர்களின் உதவியுடன் வளர்த்தேன். 100 கிலோ எடையுள்ள அந்தப் பன்றியை விற்றதில் எனக்கு 1,250 பேஸோக்கள் [110 அமெரிக்க டாலர்கள்] கிடைத்தன. அந்தப் பணத்தை அன்புடன் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். தயவுசெய்து அதை யெகோவாவுக்காகப் பயன்படுத்துங்கள்.”
[பக்கம் 19-ன் பெட்டி]
‘பைபிளை மொழிபெயர்க்க இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’
உக்ரைனில் 2005-ல் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளின் மாவட்ட மாநாடுகளில், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு உக்ரேனியன் மொழியில் வெளியிடப்பட்டது. அடுத்த நாள், மாநாட்டு நன்கொடை பெட்டியில் இந்தச் செய்தி காணப்பட்டது: “எனக்கு ஒன்பது வயதாகிறது. கிரேக்க வேதாகமத்தை வெளியிட்டதற்காக மிக்க நன்றி. பேருந்தில் ஸ்கூலுக்கு செல்வதற்காக எனக்கும் என் தம்பிக்கும் அம்மா இந்தப் பணத்தைக் கொடுத்தார். ஆனால், மழை இல்லாத நாட்களில் நாங்கள் நடந்தே ஸ்கூலுக்குச் சென்று இந்த 50 ஹிர்வ்னியாக்களை [10 அமெரிக்க டாலர்கள்] சேர்த்துவைத்தோம். முழு பைபிளையும் உக்ரேனியன் மொழியில் மொழிபெயர்ப்பதற்கு இதைப் பயன்படுத்தும்படி நானும் என் தம்பியும் கேட்டுக்கொள்கிறோம்.”
[பக்கம் 20, 21-ன் பெட்டி]
சிலர் வழங்க விரும்பும் வழிகள்
உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்
அநேகர் திட்டமிட்டு பணம் ஒதுக்கி, “உலகளாவிய வேலைக்காக நன்கொடை—மத்தேயு 24:14” என்று குறிக்கப்பட்டிருக்கும் நன்கொடைப் பெட்டிகளில் அதைப் போடுகிறார்கள்.
இத்தொகையை சபைகள் ஒவ்வொரு மாதமும் அந்தந்த நாட்டிற்குரிய யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கின்றன. மனப்பூர்வமாக அளிக்கப்படும் நன்கொடைப் பணத்தை நேரடியாகவும் இந்த அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கலாம். கிளை அலுவலகங்களின் விலாசங்களை இந்தப் பத்திரிகையின் 2-ம் பக்கத்தில் காணலாம். காசோலைகளை “Watch Tower” என்ற பெயரில் எடுக்க வேண்டும். நகைகளை அல்லது விலைமதிப்புள்ள மற்ற பொருள்களைக்கூட நன்கொடையாக வழங்கலாம். இவையனைத்தும் எவ்வித நிபந்தனையுமின்றி கொடுக்கப்படுகிற அன்பளிப்பு என்பதைக் குறிப்பிடும் சுருக்கமான கடிதத்தோடு அவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.
நிபந்தனையின் பேரில் நன்கொடை டிரஸ்ட் ஏற்பாடுb
உலகளாவிய வேலைக்காக டிரஸ்ட் ஏற்பாடுமூலம் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு பணம் அளிக்கலாம். என்றாலும், கொடுப்பவரின் கோரிக்கை பேரில் பணம் திரும்பக் கொடுக்கப்படும். கூடுதல் தகவலுக்காக தயவுசெய்து உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுங்கள்.
திட்டமிட்ட நன்கொடைc
நிபந்தனையற்ற பண நன்கொடைகள் தவிர, உலகளாவிய ராஜ்ய சேவைக்கு உதவ மற்ற வழிமுறைகளும் இருக்கின்றன. அவையாவன:
இன்ஷ்யூரன்ஸ்: ஆயுள் காப்புறுதி பத்திரம் அல்லது ரிட்டையர்மென்ட்/ஓய்வூதிய திட்டத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம்.
வங்கி பண இருப்பு: வங்கி பண இருப்புகளும், டெபாஸிட் சர்டிஃபிகேட்டுகள், அல்லது தனிநபரின் ஓய்வூதிய கணக்குகளும் ஒரு டிரஸ்ட் ஏற்பாட்டின்மூலம் அல்லது தன் மரணத்திற்குப் பிறகு உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு கொடுக்கும்படி உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதி வைக்கலாம்.
பங்குகளும் பாண்டுகளும்: பங்குகளையும் பாண்டுகளையும் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம்.
நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு முதலியவற்றை நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம் அல்லது வசிக்குமிடமாக இருந்தால், அதை அளிப்பவர் தன் மரணம் வரை அதை அனுபவிப்பதற்கான ஏற்பாடு செய்துகொள்ளலாம். இதில் எவற்றையாவது சட்டப்படி பத்திரத்தில் எழுதுவதற்கு முன் உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்துடன் தொடர்புகொள்ள வேண்டும்.
வருடாந்தர அன்பளிப்பு: இது, ஒருவர் தன்னுடைய பணத்தை அல்லது செக்யூரிட்டி டெபாஸிட்டுகளை உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு எழுதிக் கொடுக்கும் ஏற்பாடாகும். நன்கொடை அளிப்பவர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் முழுவதுமாக ஒரு குறிப்பிட்ட தொகையை இதற்கு கைமாறாகப் பெறுகிறார். வருடாந்தர அன்பளிப்பு என்ற இந்த ஏற்பாட்டைச் செய்யும் ஆண்டில் நன்கொடை வழங்குபவருக்கு வருமான வரிச் சலுகைகள் உண்டு.
உயில்களும் டிரஸ்டுகளும்: சொத்து அல்லது பணத்தை சட்டப்படி எழுதப்பட்ட உயில்கள்மூலம் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு சேரும்படி எழுதி வைக்கலாம் அல்லது ஒரு டிரஸ்ட் ஒப்பந்தத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம். மத அமைப்புக்கு உதவும் ஒரு டிரஸ்ட்டுக்கு வரிச் சலுகைகள் கிடைக்கலாம்.
“திட்டமிட்ட நன்கொடை” என்ற பதம், இவ்விதமான நன்கொடைகளை அளிப்பவர் அதற்காக முன்கூட்டியே நன்கு திட்டமிட வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. இதுபோன்ற திட்டமிட்ட நன்கொடைமூலம் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்கு நன்மை செய்ய விரும்புகிறவர்களுக்கு உதவ உலகளாவிய ராஜ்ய சேவையை ஆதரிக்க திட்டமிட்ட நன்கொடை என்ற சிற்றேடு ஆங்கிலத்திலும் ஸ்பானிஷிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.d பல்வேறு வழிகளில் இப்போதே நன்கொடையாகக் கொடுப்பது அல்லது மரணத்திற்குப்பின் அனுபோகிக்கக் கொடுப்பது பற்றிய தகவல்களை அளிப்பதற்காக இச்சிற்றேடு தயாரிக்கப்பட்டது. அநேகர் இந்தச் சிற்றேட்டைப் படித்துவிட்டு, தங்களுடைய சட்ட ஆலோசகரிடம் அல்லது வரிவிதிப்பு ஆலோசகரிடம் கலந்தாலோசித்த பிறகு உலகமுழுவதும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு உதவியிருக்கிறார்கள். திட்டமிட்ட நன்கொடை அலுவலகத்திலிருந்தே இச்சிற்றேட்டை நேரடியாகக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கோ உங்கள் நாட்டிற்குரிய யெகோவாவின் சாட்சிகளுடைய அலுவலகத்திற்கோ கடிதம்மூலம் அல்லது தொலைபேசிமூலம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
Jehovah’s Witnesses,
Post Box 6440,
Yelahanka,
Bangalore 560 064,
Karnataka.
Telephone: (080) 28468072
[அடிக்குறிப்புகள்]
b இந்தியாவுக்குப் பொருந்தாது
c குறிப்பு: வரி விதிமுறைகள் நாட்டிற்கு நாடு வேறுபடலாம். எனவே, வரியுடன் சம்பந்தப்பட்ட சட்டங்களையும் திட்டங்களையும் தெரிந்துகொள்ள தயவுசெய்து உங்கள் கணக்கரையோ வக்கீலையோ தொடர்புகொள்ளுங்கள். அதோடு, முடிவாக எந்த ஒரு தீர்மானத்தையும் எடுப்பதற்கு முன் உங்கள் நாட்டின் கிளை அலுவலகத்தையும் தொடர்புகொள்ளுங்கள்.
d இந்தியாவில் கிடைப்பதில்லை.
[பக்கம் 19-ன் படங்கள்]
நிகாராகுவா கிளை அலுவலகத்தில் மிஸ்கிட்டோ மொழிபெயர்ப்பாளர்கள்