வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
அப்போஸ்தலன் பவுல் எபிரெயருக்கு எழுதிய கடிதத்தில், ‘கைகளை வைத்தல்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். அது மூப்பர்களை நியமனம் செய்வதைக் குறித்ததா, அல்லது வேறு எதையாவது குறித்ததா?—எபி. 6:2.
இவற்றில் எதை பவுல் அர்த்தப்படுத்தினார் என நாம் அடித்துச் சொல்ல வேண்டியதில்லை. என்றாலும், கடவுளுடைய சக்தியின் வரங்கள் ஒருவருக்கு அருளப்படுவதற்காகக் கைகளை வைத்தல் என்ற சொற்றொடரை அவர் பயன்படுத்தியிருக்க வேண்டுமெனத் தெரிகிறது.
யெகோவாவின் சேவையில் ஒருவரை நியமிப்பதன் சம்பந்தமாகவும் கைகளை வைத்தல் என்ற சொற்றொடரை பைபிள் பயன்படுத்துகிறது. மோசே, தனக்குப் பின் இஸ்ரவேலரை வழிநடத்த யோசுவாவை நியமித்தபோது அவர்மீது ‘தன் கைகளை வைத்தார்.’ (உபா. 34:9) கிறிஸ்தவ சபையில் தகுதிபெற்ற சிலரைப் பொறுப்பில் நியமிப்பதற்காக அவர்கள்மீது கைகள் வைக்கப்பட்டதாக பைபிள் சொல்கிறது. (அப். 6:6; 1 தீ. 4:14) ஒருவர்மீதும் சீக்கிரமாய் அல்லது அவசரப்பட்டு கைகளை வைக்காதபடி பவுல் அறிவுரை கூறினார்.—1 தீ. 5:22.
என்றாலும், ‘மூல [அதாவது, அடிப்படை] உபதேசத்தை’ விட்டுவிட்டிருந்த எபிரெய கிறிஸ்தவர்கள், ‘பூரணராகும்படி கடந்துபோகுமாறு,’ அதாவது முன்னேறுமாறு பவுல் அவர்களை அறிவுறுத்தினார். அதற்குப் பிறகு, “செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல்” போன்றவையே அந்த மூல உபதேசங்கள் என அவர் வரிசைப்படுத்தினார். (எபி. 6:1, 2) அப்படியானால், மூப்பர்களை நியமிப்பதும் அடிப்படை உபதேசங்களில் ஒன்றா, கிறிஸ்தவர்கள் அதிலிருந்தும் முன்னேற வேண்டியிருந்ததா? இல்லை. மூப்பர்கள் என்ற நியமிப்பைப் பெறுவது, முதிர்ச்சியுள்ள சகோதரர்கள் இலக்கு வைத்து அடைய வேண்டிய ஒன்று; அதை அடைந்த பிறகும் அவர்கள் ஆன்மீக ரீதியில் தொடர்ந்து உழைத்துவர வேண்டியிருந்தது.—1 தீ. 3:1.
ஆனால், கைகளை வைப்பதற்கு இன்னொரு அர்த்தமும் இருப்பதாக பைபிள் சொல்கிறது. முதல் நூற்றாண்டில், யெகோவா மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரை நிராகரித்து, ஆவிக்குரிய இஸ்ரவேலரை, அதாவது பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவ சபையாரைத் தேர்ந்தெடுத்தார். (மத். 21:43; அப். 15:14; கலா. 6:16) இதற்கு அடையாளமாய்த் தம்முடைய சக்தியின் அற்புத வரங்களில் ஒன்றான பற்பல பாஷைகளில் பேசும் வரத்தை அவர்களுக்கு அருளினார். (1 கொ. 12:4–11) கொர்நேலியுவும் அவருடைய வீட்டாரும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டபோது, அதுதான் நடந்தது; அவர்கள் ‘பல பாஷைகளில் பேசினார்கள்.’ அதுவே அவர்கள் கடவுளுடைய சக்தியைப் பெற்றதற்கு அடையாளமாக இருந்தது.—அப். 10:44–46.
சில சமயங்களில், ஒருவர்மீது கைகளை வைப்பதன் மூலம் அற்புத வரங்கள் அருளப்பட்டன. சமாரியா எங்கும் பிலிப்பு நற்செய்தியைப் பிரசங்கித்தபோது, அநேகர் அதை ஏற்று முழுக்காட்டுதல் பெற்றார்கள். அதனால், ஆளும் குழுவினர் அப்போஸ்தலரான பேதுருவையும் யோவானையும் அங்கு அனுப்பினார்கள். ஏன்? இவர்கள் இருவரும், “அவர்கள்மேல் [சமீபத்தில் முழுக்காட்டுதல் பெற்றவர்கள்மேல்] கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்” என நாம் பைபிளில் வாசிக்கிறோம். கடவுளுடைய சக்தியின் வரங்களை, அதாவது மற்றவர்களால் காண முடிந்த திறமைகளை, அவர்கள் பெற்றார்கள் என்பதையே இது குறிக்க வேண்டும். எதன் அடிப்படையில் இப்படிச் சொல்கிறோம்? முன்பு மாயவித்தைக்காரனாய் இருந்த சீமோன், கடவுளுடைய சக்தியின் இந்தச் செயலைக் கண்டபோது பேராசையுடன் தானும் மற்றவர்கள்மீது கைகளை வைத்து அவர்களுக்கு அற்புத வரங்களை அளிக்கும் திறமையைப் பெற்றுக்கொள்வதற்காக அதைப் பணம் கொடுத்து வாங்க முயன்றான். (அப். 8:5–20) பின்னர், எபேசுவில் முழுக்காட்டுதல் பெற்ற 12 பேரைக் குறித்து நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தது; அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.’—அப். 19:1–7; ஒப்பிடுக: 2 தீமோத்தேயு 1:6.
ஆகவே, சமீபத்தில் சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு கடவுளுடைய சக்தியின் வரங்கள் அருளப்படுவதற்காக அவர்கள்மீது கைகள் வைக்கப்படுவதைப் பற்றியே எபிரெயர் 6:2-ல் பவுல் சொல்லியிருக்க வேண்டும்.