அவர்களுடைய மிகுதி பற்றாக்குறையை ஈடுகட்டும்
வருடம் கி.பி. 49. “சபையின் தூண்கள் எனக் கருதப்பட்ட” யாக்கோபு, கேபா, யோவான் ஆகியோர் அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் அவருடைய சக ஊழியரான பர்னபாவுக்கும் ஒரு வேலையைக் கொடுத்தார்கள். அதாவது, புறதேசத்தாருக்குப் பிரசங்கிக்கச் செல்லும்போது வறுமையிலுள்ள சகோதரர்களை மறந்துவிடாமல் அவர்களுக்கு உதவும்படி சொன்னார்கள். (கலா. 2:9, 10) அந்த வேலை எவ்வாறு செய்து முடிக்கப்பட்டது?
அந்த வேலைக்கு பவுல் கவனம் செலுத்தினார் என்பது அவருடைய கடிதங்களிலிருந்து தெரிகிறது. உதாரணமாக, கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “பரிசுத்தவான்களுக்காக நன்கொடை திரட்டுவது பற்றி கலாத்தியாவில் உள்ள சபைகளுக்கு நான் கொடுத்த கட்டளைகளின்படியே நீங்களும் செய்யுங்கள். வாரத்தின் முதல்நாள்தோறும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய வருவாய்க்குத் தகுந்தபடி எதையாவது உங்கள் வீட்டில் சேமித்து வையுங்கள். அப்படிச் செய்தால், நான் வந்த பின்பு நன்கொடைகளைத் திரட்ட வேண்டியிருக்காது. நம்பிக்கைக்குரியவர்கள் என்று கடிதம் மூலம் நீங்கள் எனக்குத் தெரிவிக்கிற சகோதரர்களிடம், நான் வந்தபின் உங்கள் நன்கொடைகளை எருசலேமுக்குக் கொடுத்து அனுப்புவேன்.”—1 கொ. 16:1-3.
கொரிந்தியர்களுக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில், நன்கொடைகளைத் திரட்டுவதன் நோக்கத்தைப் பற்றி மறுபடியும் அவர் இவ்வாறு எழுதினார்: “உங்களிடையே சமநிலை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே சொல்கிறேன்; அப்படிச் சமநிலை ஏற்படும்போது, உங்களிடம் மிகுதியாக இருப்பது அவர்களுடைய பற்றாக்குறையை ஈடுகட்டும்.”—2 கொ. 8:12-15.
கி.பி. 56 வாக்கில் ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அவர் கடிதம் எழுதிய சமயத்தில் நன்கொடை திரட்டும் வேலை ஏறத்தாழ முடிவடைந்திருந்தது. அதனால்தான், “எருசலேமில் உள்ள பரிசுத்தவான்களுக்கு உதவி செய்யப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன். மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் இருக்கிற சகோதரர்கள் எருசலேமில் உள்ள ஏழை எளிய பரிசுத்தவான்களுக்குச் சந்தோஷமாக நன்கொடை கொடுத்தார்கள்” என்று அவர் எழுதினார். (ரோ. 15:25, 26) அதன்பின் சீக்கிரத்திலேயே பவுல் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்துமுடித்தார். இது நமக்கு எப்படித் தெரியும்? எருசலேமுக்கு அவர் திரும்பி வந்தவுடன் கைது செய்யப்பட்டு, ரோம ஆளுநர் பேலிக்ஸ் முன்பாக நிறுத்தப்பட்டபோது, “என் தேசத்தாருக்குப் பண உதவி செய்யவும் என் கடவுளுக்குக் காணிக்கைகள் செலுத்தவும் வந்தேன்” என்று அவர் சொன்னார்.—அப். 24:17.
மக்கெதோனியர்களைப் பற்றி பவுல் சொன்ன விஷயம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் மனப்பான்மையைத் தெளிவாகக் காட்டுகிறது. “நிவாரணத் தொகை வழங்கி சேவை செய்கிற பாக்கியத்தைத் தர வேண்டுமென அவர்களாகவே வந்து திரும்பத்திரும்ப எங்களைக் கெஞ்சிக் கேட்டார்கள்” என்று அவர் சொன்னார். அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றும்படி கொரிந்தியர்களை அவர் உற்சாகப்படுத்தினார். “ஒவ்வொருவரும் வேண்டாவெறுப்பாகவும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும்; ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரையே கடவுள் நேசிக்கிறார்” என்று அவர் சொன்னார். அப்படிப்பட்ட தாராள மனப்பான்மையைக் காட்ட முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை எது தூண்டியது? ‘பரிசுத்தவான்களுடைய தேவைகளை அபரிமிதமாய்ப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், கடவுளுக்குச் செலுத்தப்படுகிற நன்றியையும் பெருகச் செய்ய’ வேண்டுமென்ற ஆசையே தூண்டியது. (2 கொ. 8:4; 9:7, 12) அத்தகைய நோக்கத்தோடுதான் நாமும் தாராள மனப்பான்மையைக் காட்டி வருகிறோம். இந்த நல்ல மனப்பான்மையை, சுய தியாக மனப்பான்மையை, காட்டி வருவதற்காக யெகோவா நம்மைக் கண்டிப்பாக ஆசீர்வதிப்பார். ஆம், அவருடைய ஆசீர்வாதமே நமக்கு ஐசுவரியம்!—நீதி. 10:22.
உலகளாவிய வேலைக்கு சிலர் நன்கொடை வழங்க விரும்பும் வழிகள்
அப்போஸ்தலன் பவுலுடைய நாட்களில் அநேகர் எப்படி நன்கொடை அளித்தார்களோ அப்படியே இன்றும், அநேகர் திட்டமிட்டுப் பணம் ஒதுக்கி, “உலகளாவிய வேலை” என்று குறிக்கப்பட்டிருக்கும் நன்கொடைப் பெட்டிகளில் அதைப் போடுகிறார்கள். (1 கொ. 16:2) இத்தொகையைச் சபைகள் ஒவ்வொரு மாதமும் அந்தந்த நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கின்றன. நீங்கள் மனப்பூர்வமாக அளிக்கும் நன்கொடைப் பணத்தை நேரடியாகவும் உங்கள் நாட்டின் கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம்.a கீழ்க்காணும் வழிகளில் அனுப்பி வைக்கலாம்:
நிபந்தனையற்ற நன்கொடை
பணம், நகை, அல்லது விலைமதிப்புள்ள மற்ற பொருள்களை நன்கொடையாக வழங்கலாம்.
எவ்வித நிபந்தனையுமின்றி கொடுக்கப்படுகிற நன்கொடை என்பதைக் குறிப்பிடும் கடிதத்தோடு அவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.
நிபந்தனையின் பேரில் நன்கொடை
நன்கொடைப் பணம் கொடுப்பவரது கோரிக்கையின் பேரில் திரும்பக் கொடுக்கப்படும்.
நிபந்தனையின் பேரில் நன்கொடை கொடுக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிடும் கடிதத்தோடு அதை அனுப்பி வைக்க வேண்டும்.
திட்டமிட்ட நன்கொடை b
நிபந்தனையற்ற பண நன்கொடைகள் தவிர, உலகளாவிய சேவைக்கு நன்கொடை அளிக்க மற்ற வழிகளும் இருக்கின்றன. அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. எந்த வழியில் அல்லது வழிகளில் நன்கொடை அளிக்க விரும்பினாலும் உங்கள் நாட்டின் கிளை அலுவலகத்திடம் விவரங்களை முன்னதாகக் கேட்டறியுங்கள். வரி விதிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். எனவே, வரியுடன் சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்களைத் தெரிந்துகொள்ள தயவுசெய்து உங்கள் கணக்கரையோ வக்கீலையோ தொடர்புகொள்ளுங்கள்.
இன்ஷ்யூரன்ஸ்: ஆயுள் காப்பீட்டுப் பத்திரத்தில் அல்லது ரிட்டையர்மென்ட்/ஓய்வூதிய திட்டத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம்.
வங்கிக் கணக்குகள்: வங்கிக் கணக்குகள், டெபாஸிட் சர்டிஃபிகேட்டுகள், அல்லது தனிநபரின் ஓய்வூதிய கணக்குகள் ஒரு டிரஸ்ட் ஏற்பாட்டின் மூலமோ அவரது மரணத்திற்குப் பிறகோ யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்குக் கொடுக்கும்படி உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதி வைக்கலாம்.
பங்குகளும் பத்திரங்களும்: பங்குகளையும் பத்திரங்களையும் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம் அல்லது சட்டப்பூர்வ உயிலில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம்.
நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு முதலியவற்றை நிபந்தனையற்ற நன்கொடையாக யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்கு அளிக்கலாம்; அல்லது வசிக்குமிடமாக இருந்தால், அதை அளிப்பவர் தன் மரணம்வரை அதை அனுபவிப்பதற்கு ஏற்பாடு செய்துகொள்ளலாம்.
வருடாந்தர அன்பளிப்பு: ஒருவர் தன்னுடைய பணத்தை அல்லது பத்திரங்களை யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்குக் கொடுக்கும் ஏற்பாடு இது. இந்த ஏற்பாட்டின்படி, நன்கொடை அளிப்பவர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் முழுவதுமாக ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறுகிறார். வருடாந்தர அன்பளிப்பு என்ற இந்த ஏற்பாட்டைச் செய்யும் ஆண்டில் நன்கொடை வழங்குபவருக்கு வருமான வரிச் சலுகைகள் உண்டு.
உயில்களும் டிரஸ்ட்டுகளும்: சட்டப்படி எழுதப்பட்ட உயில்கள் மூலம் சொத்து அல்லது பணம் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்குச் சொந்தமாகும்படி எழுதி வைக்கலாம் அல்லது ஒரு டிரஸ்ட் ஒப்பந்தத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம். இந்த ஏற்பாட்டில் சில வரிச் சலுகைகள் கிடைக்கலாம்.
“திட்டமிட்ட நன்கொடை” என்பது, நன்கொடை அளிப்பவர் அதற்காக முன்கூட்டியே நன்கு திட்டமிட வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலையை ஆதரிக்க விரும்புகிறவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க உலகளாவிய ராஜ்ய சேவையை ஆதரிக்க திட்டமிட்ட நன்கொடை என்ற சிற்றேடு, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.c பல்வேறு வழிகளில் இப்போதோ பிற்பாடோ நன்கொடை கொடுப்பது பற்றிய தகவல்களை அளிப்பதற்காக இந்தச் சிற்றேடு தயாரிக்கப்பட்டுள்ளது. உங்கள் நாட்டினுடைய வரிச் சட்டம் அல்லது வேறு சட்டங்கள் காரணமாக இந்தச் சிற்றேட்டிலுள்ள எல்லாத் தகவல்களும் உங்களுடைய சூழ்நிலைக்குப் பொருந்தாதிருக்கலாம். எனவே, இந்தச் சிற்றேட்டைப் படித்துவிட்டு, உங்களுடைய சட்ட ஆலோசகரிடம் அல்லது வரிவிதிப்பு ஆலோசகரிடம் கலந்தாலோசியுங்கள். மேற்குறிப்பிடப்பட்ட வழிகளில் நன்கொடை அளித்ததன் மூலம் உலகமுழுவதும் நடக்கும் நமது மத வேலைகளுக்கும் மனிதாபிமான சேவைகளுக்கும் அநேகர் உதவியிருக்கிறார்கள்; இதனால், அதிகப்பட்ச வரிவிலக்கைப் பெற்றிருக்கிறார்கள். இந்தச் சிற்றேடு உங்கள் நாட்டில் இருந்தால் இதன் ஒரு பிரதியை சபை செயலரிடம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.
கூடுதல் விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கோ உங்கள் நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய அலுவலகத்திற்கோ கடிதம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தியாவில், “Jehovah’s Witnesses of India” என்ற பெயரில் நன்கொடைகளை அனுப்ப வேண்டும்
b முடிவான தீர்மானத்தை எடுப்பதற்குமுன் உங்கள் நாட்டின் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.
c இந்தியாவில் “நன்கொடை திட்டங்களுக்கான கைப்பிரதி” என்ற ஆவணம் அஸ்ஸாமீஸ், ஆங்கிலம், கன்னடம், கொங்கனி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி, மலையாளம், மிசோ, ஹிந்தி ஆகிய மொழிகளில் சீக்கிரம் கிடைக்கும்.