வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
திருமணம் செய்யாமல் இருக்கத் தீர்மானிப்பவர்கள், அப்படிப்பட்ட வரத்தைக் கடவுளிடமிருந்து அற்புதமாய்ப் பெற்றிருக்கிறார்கள் என்று மத்தேயு 19:10-12-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றனவா?
திருமணம் செய்யாமல் இருப்பதைப் பற்றி இயேசு எந்தச் சூழ்நிலையில் பேசினார் என்பதை முதலில் கவனியுங்கள். பரிசேயர்கள் அவரிடம் வந்து விவாகரத்தைப் பற்றிக் கேட்டபோது, திருமணம் சம்பந்தமாக யெகோவாவின் நெறிமுறை என்ன என்பதை அவர் தெளிவுபடுத்தினார். ஒருவன் தன் மனைவி செய்த ‘அருவருக்கத்தக்க செயலை’ கண்டுபிடித்தால் அவளை விவாகரத்து செய்வதற்குத் திருச்சட்டம் அனுமதித்தது என்றாலும், ஆரம்பத்தில் அப்படியொரு ஏற்பாடு இருக்கவில்லை. (உபா. 24:1, 2 பொது மொழிபெயர்ப்பு) இதைப் பற்றிக் குறிப்பிட்டபின், “பாலியல் முறைகேட்டைத் தவிர, வேறெந்தக் காரணத்திற்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்து வேறொரு பெண்ணை மணந்துகொள்கிறவன் தவறான உறவுகொள்கிறான்” என்று இயேசு சொன்னார்.—மத். 19:3-9.
இதைக் கேட்ட சீடர்கள், “கணவன் மனைவி உறவுமுறை இப்படிப்பட்டதென்றால், திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது” என்று சொன்னார்கள். அதற்கு இயேசு, “வரம் பெற்றவர்களைத் தவிர வேறு யாருமே இந்த வார்த்தைகளின்படி நடக்க முடியாது. சிலர் பிறவிக் குறைபாட்டினால் திருமணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்; வேறு சிலர் மனிதர்களால் அந்நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; இன்னும் சிலர் பரலோக அரசாங்கத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்து திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்க முடிந்தவர்கள் அப்படி இருக்கட்டும்” என்றார்.—மத். 19:10-12.
சிலர் பிறவிக் குறைபாட்டினால் திருமணம் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். வேறு சிலர் ஏதோவொரு விபத்தினால் அல்லது பாலுறுப்பு நீக்கப்பட்டதால் திருமணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஒருசிலர் திருமணம் செய்ய முடிகிற நிலையில் இருந்தாலும் “பரலோக அரசாங்கத்திற்காக” திருமணம் செய்யாமல் சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள். இயேசுவைப் போல், கடவுளுடைய சேவைக்காகத் தங்களையே அர்ப்பணித்து திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள். மணமாகாதிருக்கும் வரத்தோடு அவர்கள் பிறக்கவும் இல்லை, அப்படிப்பட்ட வரத்தை அவர்களுக்குக் கடவுள் கொடுக்கவும் இல்லை; அவர்களாகவே அதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாக வைத்து பவுல் ஒரு விஷயத்தைச் சொன்னார். அதாவது, மணமானவர்களும் சரி மணமாகாதவர்களும் சரி, எல்லாக் கிறிஸ்தவர்களுமே கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற முடியுமென்றாலும், திருமணம் வேண்டாமென உறுதியாய் இருப்பவர்கள் மணமானவர்களைவிட “நல்ல” நிலையில் இருக்கிறார்கள் என்று சொன்னார். காரணம்? திருமணமானவர்கள் தங்கள் துணையைப் பிரியப்படுத்தவும் அவர்களைக் கவனித்துக்கொள்ளவும் அதிக நேரத்தை, சக்தியை செலவிட வேண்டியிருக்கும். மணமாகாத கிறிஸ்தவர்களுக்கோ அந்தக் கடமை இல்லாததால், கடவுளுடைய சேவையில் முழுமையாய் ஈடுபட முடியும். இதனால், மணமாகாத நிலையை அவர்கள் ‘வரமாக’ கருதுகிறார்கள்.—1 கொ. 7:7, 32-38.
எனவே, ஒரு கிறிஸ்தவர் மணமாகாமல் இருக்கும் வரத்தைக் கடவுளிடமிருந்து அற்புதமாய்ப் பெறுவதில்லை, அதை அவர் சுயமாகத் தேர்ந்தெடுக்கிறார் என்பதையே பைபிள் சுட்டிக்காட்டுகிறது. மணமாகாத ஒருவர் எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் கடவுளுடைய சேவையில் அதிகமதிகமாக ஈடுபட முடியும். அநேகர் இதற்காகவே திருமணம் செய்யாதிருக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். இந்தத் தீர்மானத்திற்காக மற்றவர்கள் அவர்களைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டும்.