யெகோவாவின் சேவையில் சந்தோஷத்தைக் கண்டடைதல்
1 தெய்வீக ஏவுதலினால் எழுதுகையில், கடவுளுடைய மக்களைப் பற்றி ஏசாயா பொருத்தமாக இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்.” (ஏசா. 65:14) அநேகர் கேட்கலாம், ஒவ்வொரு நாளும் அநேக அழுத்தங்களையும் பிரச்னைகளையும் ஒருவர் சமாளிக்கவேண்டியிருக்கும்போது, நான் எவ்வாறு சந்தோஷமாக இருக்கமுடியும்? நாம் எதிர்ப்பட்டுவருகிற பொருளாதார, உணர்ச்சிப்பூர்வமான, மற்றும் சரீரசம்பந்தமான இதர கஷ்டங்கள் தவிர, கிறிஸ்தவ வணக்கம் மற்றும் சேவைக்குரிய கடமைகள் இருக்கின்றன. நவீன நாளைய வாழ்க்கையின் இந்த எல்லா உத்தரவாதங்களையும் பாரங்களையும் சமாளிக்க முயற்சிக்கும்போது, அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்று அநேகர் நினைக்கிறார்கள்.
2 நம்முடைய வாழ்க்கையில் “மனமகிழ்ச்சி” சந்தோஷத்தைத் தூண்டுவிக்கிறது என்று ஏசாயாவின் ஏவப்பட்ட வார்த்தைகள் சொன்னதை நீங்கள் கவனித்தீர்களா? சந்தோஷமானது, பொருள்சம்பந்தமான ஆஸ்திகள், பொழுதுபோக்கு அல்லது சுதந்திரம் ஆகியவற்றின்பேரில் சார்ந்திருக்கிறது என்பதை முன்னேற்றுவிக்கிற இந்த உலக தத்துவத்திற்கு இது முரணாக இருக்கிறது. உண்மையான சந்தோஷமானது, அடையாளப்பூர்வமான இருதயத்திலிருந்து, அல்லது உள்ளான மனிதனிலிருந்து வருகிறது. இது நம்முடைய நடவடிக்கைகள், ஆசைகள், நேசங்கள் மற்றும் உணர்ச்சிகளில் அதுவாகவே வெளிப்படுகிறது. சந்தோஷம் என்றால் என்ன? அது இவ்வாறு விவரிக்கப்படுகிறது: “நன்மையானதைப் பெறுவதன்மூலம் அல்லது எதிர்பார்ப்பதன்மூலம் கிளர்ச்சியூட்டப்படும் உணர்ச்சி; மகிழ்ச்சியான நிலை; களிகூருதல்.” (உட்பார்வை, [ஆங்கிலம்] தொகுதி 2, பக்கம் 119) வேகமாக நெருங்கிவருகிற புதிய உலகத்தின் உணர்ச்சிப்பூர்வமான கிளர்ச்சியை நாம் உணரவேண்டும் அல்லவா? ஆனால், நீங்கள் கேட்கலாம், நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து படையெடுத்து வருவதாகத் தோன்றுகிற பிரச்னைகள் மத்தியிலும், நாம் எவ்வாறு ‘ஒரு மகிழ்ச்சியான நிலையை’ இப்பொழுது பெறமுடியும்?
3 வாழ்க்கைப் பிரச்னைகள் அனைத்தையும் முழுமையாக நீக்குவது சாத்தியமற்றது. புதிய உலகம் மட்டுமே பிரச்னைகளற்ற ஒரு வாழ்க்கையை வாழ நம்மை அனுமதிக்கும். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் சந்தோஷத்தை அதிகரிப்பதற்கு நாம் எடுக்கக்கூடிய படிகள் இருக்கின்றன. மகிழ்ச்சியான மக்களோடு கூட்டுறவுகொள்வது நம்முடைய சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்கிறது. யெகோவா ‘நித்தியானந்த தேவன்’ என்பதாக விவரிக்கப்படுகிறார். (1 தீ. 1:11) யாக்கோபு 4:8-ல் உள்ள உற்சாகத்தை பின்பற்றி, நம்முடைய சந்தோஷத்தை அதிகரிக்கச்செய்ய முடியுமா? அது சொல்கிறது, “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.” ஜெபம், கடவுளுடைய வார்த்தையை வாசித்தல் மற்றும் தனிப்பட்ட படிப்பு, அவருடைய சித்தத்தைச் செய்தல் ஆகியவற்றின்மூலம் அவரிடம் நாம் நெருங்கிவருகிறோம். இதுதானே இயேசுவுக்கு சந்தோஷத்தைக் கொண்டுவந்தது. அவர் தம்முடைய பிதாவின் சித்தத்தைச் செய்வதை, இன்பமான சாப்பாட்டை மகிழ்ந்தனுபவிப்பதற்கு ஒப்பிட்டார். (யோவா. 4:34) அதேவிதத்தில் உங்களுடைய சந்தோஷத்தை நீங்கள் அதிகரிக்கச்செய்ய முடியுமா?
4 ஏப்ரல், அதிகரிப்பான சந்தோஷத்தின் காலம்: எல்லா சபைகளும் ஏப்ரலை சந்தோஷமான ஆவிக்குரிய நடவடிக்கையின் மாதமாக்குவதற்கு திட்டமிட்டுவருகின்றன. நம்முடைய வேலையின் மூன்று அம்சங்களுக்கு விசேஷித்த முக்கியத்துவம் கொடுக்கப்படும். (1) துணைப் பயனியர் ஊழியம் செய்வதைக்குறித்து கருத்தாழமிக்க விதத்தில் சிந்திக்கும்படி நாங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறோம்; (2) புதிய பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கும் இலக்கு முக்கியத்துவத்தைப் பெறும்; மேலும் (3) விசேஷித்த பத்திரிகை ஊழியத்தில் பங்குகொள்ளும்படி நீங்கள் உற்சாகப்படுத்தப்படுகிறீர்கள், அதில் தெரு ஊழியம் முனைப்பாக சிறப்பித்துக் காட்டப்படும். ஊழியத்தின் இந்த அம்சங்களில் பங்குகொள்வதன் சந்தோஷத்தை ஒருவேளை நீங்கள் ஒருபோதும் அனுபவித்திருக்க மாட்டீர்கள். இந்த ஏற்பாடுகளுக்கு இருதயப்பூர்வமான ஆதரவைக் கொடுப்பதன்மூலம் ஏப்ரலில் உங்களுடைய சந்தோஷத்தை அதிகரிக்கச்செய்வதற்கு இப்பொழுதே திட்டமிடுங்கள்.
5 துணைப் பயனியர் ஊழியம்செய்தல்: நீங்கள் அடையப்பெறுவதற்கு முடியாமல் இருப்பதாக அவசரப்பட்டு இந்த நடவடிக்கையை புறக்கணிப்பதற்கு முன்பாக, உங்களுடைய வாழ்க்கையில் அது கொண்டுவரக்கூடிய சந்தோஷத்தைச் சிந்தித்துப் பாருங்கள். இயேசுவின் சீஷர்கள் நற்செய்தியை அறிவிப்பதில் ஈடுபட்டபோது அனுபவித்துமகிழ்ந்த சந்தோஷ உணர்ச்சியின்பேரில் ஒரு கணம் தியானம்செய்யுங்கள். இந்த வேலையில் ஈடுபடுவதற்கு முதலாவது சென்ற சிலர் பூரிப்போடு இயேசுவிடம் திரும்பிவந்தார்கள். “பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்”தார்கள். (லூக். 10:17) அவர்களுடைய பேசும் திறமையைக் குறித்த அவநம்பிக்கையில்லாமல் தாங்கள் கற்றிருந்த சத்தியங்களை அறிவிப்பதற்குச் சென்றார்கள். இயேசுவிடமிருந்து அவர்கள் கற்றிருந்த நற்காரியங்களால் அவர்களுடைய இருதயங்கள் நிரப்பப்பட்டிருந்தன, மேலும் மற்றவர்களுக்கு இந்தக் காரியங்களைச் சொல்ல ஆவலுள்ளவர்களாய் இருந்தார்கள். வெறுப்பூட்டுகிற அனுபவங்களும் அவர்கள் பேசியவர்களில் அநேகர் காண்பித்த அக்கறையின்மையும் அவர்களுடைய சந்தோஷத்தை தணிக்கவில்லை. தாங்கள் கடவுளுடைய இருதயத்தைக் களிகூரும்படி செய்துகொண்டிருந்தனர் என்பதை அறிந்தவர்களாய், அவரைச் சேவிக்கும் இந்த முறையைக் குறித்து அவர்கள் கொண்டிருந்த சரியான மனநிலையால் அது உயிர்ப்போடு காக்கப்பட்டது.—நீதி. 27:11.
6 கடவுளுடைய வார்த்தையிலுள்ள நற்காரியங்களை வெளிப்படையாக அறிவிப்பதானது, கட்டியெழுப்பக்கூடியதாயும் ஜீவனைக் காக்கக்கூடியதாயும் இருக்கிறதை மற்றவர்களுக்கு ஒருவர் தாராளமாகக் கொடுப்பதைத் தேவைப்படுத்துகிறது. மற்றவர்களுக்கு நற்காரியங்களைக் கொடுப்பதில் மகிழ்ச்சியிருப்பதால், இது சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது. அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவ ஊழியத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது சுட்டிக்காண்பித்த நியமம் இதுவே. “இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன்.” (அப். 20:35) பவுலும் அவருடன் கூட்டுறவுகொண்டிருந்தவர்களும் தாங்கள் கற்றிருந்த நற்காரியங்களை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் சந்தோஷத்தைக் கண்டடைந்ததுபோலவே, இன்று யெகோவா தேவனைச் சேவிப்பவர்களும் அதே சரியான மனநிலையைக் காத்துக்கொள்வார்களாகில், அதே கட்டியெழுப்புகிற வேலையைச் செய்வதில் சந்தோஷத்தைக் கண்டடையலாம்.
7 அதிகரிப்பான வெளி ஊழிய நடவடிக்கையின்மூலம், ஏப்ரலில் உங்களுடைய மகிழ்ச்சியை அதிகரிக்கச்செய்ய நீங்கள் திட்டமிட முடியுமா? இதுபோன்ற எதிர்மறையான காரியங்களின்பேரில் உங்களுடைய மனது ஊன்றியிருக்கும்படி அனுமதிக்காதீர்கள்: நம்முடைய பிராந்தியம் ஏற்கெனவே நன்கு செய்துமுடிக்கப்பட்டிருக்கிறது, பிரதிபலிப்பும் அவ்வளவு உற்சாகமூட்டுவதாய் இல்லை; என்னுடைய ஓய்வான நேரத்தையும் ஒருவேளை பொழுதுபோக்கையும் இழக்கவேண்டியிருக்கலாம்; என்னுடைய அட்டவணையில் சுய-தியாகமுள்ள சரிப்படுத்தல்களை நான் செய்யவேண்டியிருக்கலாம். ஆம், உங்களுடைய ஆவிக்குரிய சுகநலத்திற்கு அவசியமாய் இல்லாத ஏதோவொரு நாட்டத்தை குறைக்கவேண்டியிருக்கலாம். ஆனால் எதிர்மறையான காரியங்களின்பேரில் ஊன்றியிருப்பதற்குப் பதிலாக, அதிகமான வெளி ஊழிய நடவடிக்கையிலிருந்து வருகிற சந்தோஷத்தின்மீது ஆழ்ந்து சிந்தனைசெய்யுங்கள். “மனமகிழ்ச்சியினாலே” சந்தோஷம் வருகிறது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். (ஏசா. 65:14) யெகோவாவை பிரியப்படுத்துவதற்கும் மற்றவர்களின் சார்பாகவும் நீங்கள் பிரயாசப்பட்டுகொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருப்பதானது, உங்களுடைய அடையாளப்பூர்வமான இருதயத்தில் ஆழ்ந்த திருப்தி உணர்ச்சியைக் கொண்டுவந்து, உங்களுடைய வாழ்க்கையில் சந்தோஷத்தை ஒளிவீசச்செய்யும்.
8 கடவுளுடைய வார்த்தையிலிருந்து நீங்கள் கற்றிருக்கிற காரியங்களைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதில் உணர்ந்தறிந்த எந்தவொரு திறமையின்மையும், ஏப்ரலில் துணைப் பயனியர் ஊழியம் செய்வதிலிருந்து உங்களைத் தடைசெய்யும்படி அனுமதிக்காதீர்கள். அவ்விதமாகச் செய்வதால் அவருடைய சேவையின் சந்தோஷத்தைப் பறித்துக்கொள்ளக்கூடிய மனநிலை வளருவதற்கு நீங்கள் அனுமதித்துக்கொண்டிருப்பீர்கள். உங்களுடைய பேச்சுத் திறமையை பேசுவதில் திறமைசாலியாக இருக்கிற ஒரு கிறிஸ்தவ சகோதரருடைய திறமையோடு ஒப்பிட்டுப் பார்க்காதேயுங்கள். பதிலாக, கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டிக்கொண்டு மற்றவர்களுக்கு கடவுளுடைய சத்தியத்தைப் பேசமுடியாமலும் பேசாமலுமிருக்கக்கூடிய ஊழியத்தில் நீங்கள் சந்திக்கிற மக்களோடு அதை ஒப்பிட்டுப்பாருங்கள். உங்களிடத்திலிருக்கிற திறமையை பயன்படுத்துங்கள், மேலும் அதை முன்னேற்றுவிப்பதற்கு முயற்சிசெய்யுங்கள். கடவுள் தம்முடைய நோக்கங்களை அறிவிப்பதற்கு இந்த உலக ஞானிகளையோ உயர்ந்த மதச் சொற்பொழிவாற்றுபவர்களையோ அல்ல, விசேஷ பேச்சுத் திறமையற்ற தாழ்மையுள்ள மக்களையே அவர் தெரிந்தெடுத்திருக்கிறார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். (1 கொ. 1:26-29) இயேசுவுடைய நாளில், ஊழியத்திலிருந்து மிக அதிகமான சந்தோஷத்தைப் பெற்ற அவருடைய சீஷர்கள், மீனவர்கள் போன்ற சாதாரண மக்களாக இருந்தனர். சரியான மனநிலையோடிருந்தால் யெகோவாவை சேவிக்கும் சந்தோஷம் உங்களுடையதாகும்.
9 இப்பொழுது நீங்கள் என்ன படிகளை எடுக்கலாம்? முதலாவதாக, உங்களுடைய சூழ்நிலைமைகளை நேர்மையுடனும் ஜெபத்துடனும் பரிசீலனை செய்துபாருங்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தின் பாகமாக இருந்தால், தலைமைதாங்கி நடத்துகிற கணவன் அல்லது தகப்பனுடன் இதை ஒன்றாகச் சேர்ந்துசெய்ய நீங்கள் விரும்பலாம். நீங்கள் இதை மிக அதிகக் கடினமான படியாக காணலாம். ராஜ்ய அக்கறைகளை முதலாவது வைக்கும் நோக்கோடு நம்முடைய வாழ்க்கை மாதிரியை மறுபார்வைசெய்ய தைரியம் தேவைப்படுகிறது. அனுபவித்துமகிழத்தக்க செயல்களாக இருந்தாலும், கடவுளுக்கான நம்முடைய சேவையை அதிகரிப்பதற்காக தேவையில்லாதவற்றை நீக்கித்தள்ளுவதற்கு ஆவிக்குரிய பலம் தேவைப்படுகிறது. கடவுளை சேவிப்பதற்குச் சரிப்படுத்தல்களைச் செய்யும் மனவிருப்பம் உடையவர்கள் சந்தோஷத்தைப் பலனாகப் பெறுகிறார்கள். சுறுசுறுப்பான முறையில் யெகோவாவை சேவிப்பதற்கான ஒரு வாய்ப்பை பற்றிக்கொள்வதன் பலன், 1 நாளாகமம் 29:9-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது: “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.” ஏப்ரலில் யெகோவாவின் சந்தோஷத்தை அனுபவிப்பதற்குத் திட்டமிடுங்கள்.
10 மாலைநேர சாட்சிகொடுத்தல் மற்றும் வாரத்தின் மத்திபத்தில் சாட்சிகொடுத்தல் உட்பட, சபையானது ஏப்ரலில் விசேஷித்த வெளி ஊழிய ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கவேண்டும். வெளி ஊழியத்திற்கான இந்தக் கூட்டங்களில் நீங்கள் ஆஜராயிருப்பது, மற்றவர்களுக்கு உற்சாகமான ஒன்றாக இருக்கும். வெளி ஊழிய ஏற்பாடுகளுக்கான நேரங்கள் உங்களுடைய அட்டவணைக்குப் பொருந்துவதாக இல்லையென்றால் மூப்பர்களிடம் பேசுங்கள். வெளி ஊழியத்திற்குச் செல்ல உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் நேரத்தில், உங்களோடு சேர்ந்துகொள்வதற்கு மற்றவர்களை ஏற்பாடுசெய்வது கூடியகாரியமாக இருக்கலாம்.
11 நேர்மையுடனும் ஜெபத்துடனும் உங்களுடைய சூழ்நிலைமைகளைச் சீர்துக்கிப் பார்த்தப் பிறகு, ஒரு துணைப் பயனியராக 60 மணிநேரங்களை அடைவது உங்களுக்குச் சாத்தியமற்றதாய் இருப்பதாக நீங்கள் காண்பீர்களென்றால் சோர்ந்துவிடாதேயுங்கள். பயனியர் சேவைசெய்ய மற்றவர்களை உற்சாகப்படுத்துவதன் மூலமும் நடைமுறையான வழிகளில் அவர்களை ஆதரிப்பதன் மூலமும் அந்த மாதத்தின் ஆர்வத்தில் ஒரு பங்கைக் கொண்டிருங்கள். ஒருவேளை உங்களுடைய நடவடிக்கையை குறைந்தபட்சம் கொஞ்சமாவது அதிகரிக்கலாம், அதன்மூலம் ஒரு நல்ல முன்மாதிரியை வைக்கலாம். முழு இருதயத்தால் உந்துவிக்கப்படுகிற சேவையால் யெகோவா பிரியப்படுத்தப்படுகிறார். தாங்கள் விரும்புகிற அளவுக்கு அவர்கள் அதிகமானதைச் செய்ய அனுமதிக்காத சரீரசம்பந்தமான அல்லது மற்ற வரம்புகளை அநேகர் உடையவர்களாய் இருக்கிறார்கள். எனினும், யெகோவாவை முழு ஆத்துமாவோடு மனச்சாட்சிப்பூர்வமாக சேவிப்பதால் தாங்கள் அவருக்கு சந்தோஷத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதை அறிந்திருப்பதன் திருப்தியை இப்படிப்பட்டவர்கள் இன்னும் உணரலாம்.
12 பைபிள் படிப்பை ஆரம்பிப்பது கூடுதலான சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது: இராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்கும் கட்டளைக்குக் கீழ்ப்படிவது சந்தோஷமாக இருக்கிறபோதிலும், சீஷரை உண்டுபண்ணுகிறவர்களாக ஆகிறவர்களுக்கு கூடுதலான சந்தோஷம் வருகிறது. (மத். 24:14; 28:19, 20) சீஷர்களாவதற்கு மற்றவர்களுக்குக் கற்பிக்கக்கூடிய இப்பொழுது பிரபல்யமாக இருக்கும் கட்டளையை இயேசு கொடுத்தபோது, ஐந்நூறு ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளிடம் அவர் பேசிக்கொண்டிருந்தார். இன்று அதே பொறுப்பு அவருடைய கிறிஸ்தவ சீஷர்களடங்கிய திரள்கூட்டத்தினரின்மேல் இருக்கிறது.
13 இது நாம் பிரசங்கிப்பதை எவ்வாறு பாதிக்கவேண்டும்? வீடு வீடாகவும் பொதுவாகவும் பிரசங்கிப்பதற்கான பிரதான காரணங்களில் ஒன்றை மதித்துணர இது நமக்கு உதவிசெய்கிறது. நெருங்கிவருகிற உலக முடிவைப் பற்றிய எச்சரிப்பை அறிவிப்பதோடுகூட, செம்மறியாடுகள் போன்ற ஆட்களைக் கண்டுபிடித்து, கிறிஸ்துவின் கீழ்ப்படிதலுள்ள சீஷர்களாகிறவர்களுக்கு மாறாத நம்பிக்கையிருக்கிறது என்பதை அவர்களுக்குக் கற்பிப்பது நம்முடைய நோக்கமாக இருக்கிறது. கடவுளுடைய உடன் வேலையாளாக இருந்து, ஒரு நபர் யெகோவாவின் சுறுசுறுப்பான ஊழியராக ஆகும்வரை ஆவிக்குரிய பிரகாரமாக அவர் வளருவதைக் காண்பது என்னே ஒரு சந்தோஷம்.—1 கொ. 3:6-9.
14 பெயரளவான சேவையோடு திருப்தியுள்ளவர்களாய் நாம் இருந்தால், அப்படிப்பட்ட சந்தோஷத்தை ஒருபோதும் அனுபவிக்கமுடியாது. பெயரளவான சேவை யெகோவாவால் அங்கீகரிக்கப்படுவதில்லை. அவருக்கு அன்பாக ஒப்புக்கொடுக்கப்பட்ட இருதயத்திலிருந்து அது வருகிறதுமில்லை, ஒருவருடைய அயலாரில் அன்பான அக்கறையை அது வெளிப்படுத்துகிறதுமில்லை. பெயரளவான சேவை இரண்டு வழிகளில் வெளிப்படுத்தப்படுகிறது. அவருடைய சேவையில் ஒருவர் சந்தோஷத்தைக் காண்பதில்லை, ஆகையால் குறைவான சேவையோடு திருப்தியடைந்து அக்கறையை வளர்ப்பதற்குக் குறைந்த விருப்பத்தையே செயலில் காட்டுகிறார். இப்படிப்பட்ட ஒரு மனப்பான்மை, “நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்,” என்று 1 தீமோத்தேயு 2:3, 4-ல் பவுலால் பதிவுசெய்யப்பட்ட வார்த்தைகளுக்கு நேர் விரோதமாக இருக்கிறது.
15 இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி சத்தியத்தின் அறிவை அடைய மற்றவர்களுக்கு உதவிசெய்வதன்மூலம், யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாக வேலைசெய்வதில் நாம் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதைச் செயலில் காட்டுவதற்கு ஏப்ரலில் நாம் என்ன செய்யலாம்? ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க இலக்கு வையுங்கள்! வேலைசெய்பவரிடத்தில், பள்ளியிலுள்ளவர்களிடத்தில், அயலாரிடத்தில், உறவினரிடத்தில் அல்லது வேறு சிலரிடத்தில் நீங்கள் ஏற்கெனவே சத்தியத்தை பகிர்ந்துகொண்டதைக் குறித்து யோசித்துப்பாருங்கள். நீங்கள் உண்மையில் அவர்களோடு ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பது பற்றிய இலக்கைநோக்கி உழைத்திருக்கிறீர்களா அல்லது இன்பமான சம்பாஷணையில் ஈடுபடுவதிலேயே திருப்தியுள்ளவர்களாய் இருந்திருக்கிறீர்களா? சீஷராக்கும் நோக்கோடு சத்தியத்தைப் போதிப்பதற்கு மிகவும் பலன்தரும் வழி, வீட்டுப் பைபிள் படிப்பு ஒன்றை நடத்துவதாகும்.
16 வீட்டுக்கு வீடு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும்போது, இந்த இலக்கை நாம் எவ்வாறு நம்முடைய மனதில் வைத்திருக்கலாம்? செம்மறியாடு போன்ற ஆட்களைக் கண்டுபிடிப்பதற்கு ஊக்கமான ஆசையுடையவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும் பைபிள் படிப்பு ஒன்றை நடத்துவதன்மூலம் சத்தியத்தின் திருத்தமான அறிவைப் பெற இவர்களுக்கு உதவிசெய்வதற்கு மனவிருப்பமுடையவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுடைய ஜெபத்தில் யெகோவாவுக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் எந்தவொரு பிரசுரத்தையும் அளித்தாலும்சரி அளிக்காவிட்டாலும்சரி, அக்கறை காட்டுகிற அனைவரையும் நீங்கள் தொடர்ந்து சந்தியுங்கள். உங்களுடைய மறுசந்திப்பிற்காக, பதிலளிக்கப்படாத கேள்வி போன்றவற்றின் மூலம் ஆரம்ப சந்திப்பில் பலமான அஸ்திபாரத்தை விட்டுச்செல்வதைக் குறித்து நிச்சயமாயிருங்கள். கூடுமானால், சில வாரங்களுக்குள் அல்ல, சில நாட்களுக்குள் மீண்டும் சந்திப்புச் செய்யுங்கள். மறுசந்திப்புகள் செய்வதிலும் பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதிலும் வெற்றியுள்ளவர்களாய் இருக்கிறவர்களிடமிருந்து உதவியை நாடுங்கள். யெகோவாவின் ஆசீர்வாதத்திற்காகத் தொடர்ந்து கேளுங்கள்.—மத். 7:7-11.
17 விசேஷித்த பத்திரிகை தினத்தின் சந்தோஷம்: தெரு ஊழியத்தின்பேரில் விசேஷித்த முக்கியத்துவத்துடன், இந்தியா முழுவதும் ஏப்ரல் 16, 1994 சனிக்கிழமை ஒரு விசேஷித்தப் பத்திரிகை தினமாக இருக்கும். உங்களுடைய சபைக்கான ஏற்பாடுகளை மூப்பர்கள் அறிவிப்பார்கள். காலை, பிற்பகல் மற்றும் மாலைக்காக அட்டவணையிடப்பட்ட வெளி ஊழிய கூட்டங்களுடன் சேர்ந்த ஒரு முழு நாள் நடவடிக்கையாக அது இருக்கும். நடைமுறையானதாய் இருந்தால், இவற்றில் ஒன்றாவது, ஒருவேளை காலைநேர தொகுதி, சபையிலுள்ள அனைவரையும் ஓரிடத்திற்கு அழைக்கிற கூட்டு முயற்சியாக இருக்கலாம். இந்த விசேஷித்த நாள் வெளி ஊழியத்தில் சபையிலுள்ள அனைவரும் கொஞ்சம் நேரம் செலவிடக்கூடுமானால் என்னே சந்தோஷம் விளைவடையும்.
18 இந்த விசேஷித்த நாளில் தெரு ஊழியத்திற்காக மூப்பர்கள் விசேஷித்த ஏற்பாடுகளைச் செய்வார்கள். தெரு ஊழியத்திற்காக மட்டுப்பட்ட பகுதிகளைக் கொண்டிருக்கிற சபைகள், மக்கள் கூடிவருகிற இடங்களாகிய பூங்காக்கள், கடற்கரைகள் அல்லது அரிதாக சாட்சிகொடுக்கப்படுகிற உங்களுடைய பிராந்தியத்தின் பகுதிகள் போன்ற மற்ற இடங்களில் சாட்சிகொடுக்கத் திட்டமிடலாம். மக்களை அணுகுவதில் சாதுரியமாகவும் உணர்ச்சி வேகமான சம்பாஷணைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகியுமிருங்கள். ரோமர் 12:18-ல் நமக்கு இவ்வாறு சொல்லப்படுகிறது: “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.”
19 தெரு ஊழியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது சந்தோஷத்தை காத்துக்கொள்ள முடியுமா? ஊழியத்தின் இந்த அம்சத்தில் நீங்கள் ஓரளவு கூச்சவுணர்வை அல்லது “பயத்தை” உடையவர்களாய் இருந்தால், நீங்கள் வழக்கத்துக்கு மாறானவர் அல்ல. பொது இடங்களிலுள்ள மக்களை அணுகி, பிரசங்கிப்பதற்கு யெகோவாவின்மேல் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் அது தேவைப்படுத்துகிறது. இந்தப் படியெடுப்பதைக் குறித்து நீங்கள் பயப்படுகிறவர்களாய் உணரலாம், ஆனால் ஒருதடவை முயற்சி செய்தப் பிறகு, யெகோவா தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு உங்களுக்குப் பலத்தையும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறார் என்பதை அறிவதிலிருந்து சந்தோஷம் வருகிறது. பிலிப்பியர் 4:13-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள வார்த்தைகளிலிருந்து நாம் ஆறுதலைப் பெறலாம், அது சொல்கிறது, “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.”
20 ஏப்ரலில் உங்களுடைய சந்தோஷத்தை அதிகரிக்கச்செய்யுங்கள்: ஏசாயா 65:14-ல் உள்ள வார்த்தைகளின் பெரிய நிறைவேற்றத்தை உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் காணும்போது, “இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்,” என்பதை நிரூபிக்கும் மாதமாக ஏப்ரல் இருப்பதாக. இன்று சிருஷ்டிகரைச் சேவிக்க விரும்புகிற ஒருவராக, தனிப்பட்ட பக்தியை அவருக்குக் கொடுக்க விரும்புகிற ஒருவராக, அவருடைய கண்களில் பிரியமாயிருக்கிற வேலையைச் செய்யவும் அவருடைய அங்கீகாரத்தையும் அவருடைய ஜீவ பரிசையும் பெற்றுக்கொள்ளவும் விரும்புகிற ஒருவராக இருந்தால், நீங்கள் அந்தச் சந்தோஷத்தை அனுபவிக்கலாம். யெகோவா தம்முடைய ஆவியின்மூலமாக, அவருடைய மக்களின் அடையாளக் குறியாக இருக்கிற மனமகிழ்ச்சியை உங்களில் வளர்ப்பாராக. அவருடைய அறிவுரைகளுக்கு உங்களுடைய இருதயத்தைத் திறவுங்கள். அவருடைய சேவையினிடமாக சரியான ஒரு மனநிலையை அவை உங்களில் வளர்ப்பதாக. சர்வலோகத்தின் மகத்தான கடவுளைச் சேவிப்பதில் மாத்திரமே கண்டடையக்கூடிய தனிப்படுத்திக் காட்டுகிற சந்தோஷத்தை வளர்ப்பதற்கு, அவருடைய வார்த்தையின் நற்செய்தியும் வாழ்க்கையை மாற்றுகிற அதன் சத்தியங்களும் உங்களைத் தூண்டுவிப்பதாக.