புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல்
1 நற்செய்தியை நாம் ஏன் இடைவிடாது அறிவிக்க வேண்டும்? நற்செய்தியின் ஒரு பிரசங்கிப்பாளராக இருப்பதற்கு என்ன தகுதிகள் தேவைப்படுகின்றன? கூச்ச சுபாவமுள்ள அல்லது தைரியமில்லாத நபர்கள்கூட எவ்வாறு நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள முன்முயற்சி எடுக்கலாம்? “நற்செய்தியின் ஊழியர்களாக தகுதிபெற்றிருத்தல்” என்ற பொருளையுடைய இந்த வருடத்தின் விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல், யோசனையைத் தூண்டக்கூடிய இந்தக் கேள்விகளுக்கும் மற்ற கேள்விகளுக்கும் பதிலளிக்கும்.—ஒப்பிடுக: 2 கொரிந்தியர் 3:5.
2 யெகோவாவின் ஜனங்களாக, நம்முடைய நடத்தையைக் குறித்து நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும். சகாக்களின் அழுத்தத்தை எவ்வாறு எதிர்த்திருக்கிறார்கள் என்பதைக் குறித்து இளைஞர்கள் உற்சாகமளிக்கும் அனுபவங்களைச் சொல்வார்கள். தங்களுடைய பிள்ளைகளை கடவுளுடைய ஊழியர்களாக பயிற்றுவிப்பதன் தேவையைக் குறித்து பெற்றோர்களுக்கு அன்பான உற்சாகமூட்டுதல் கொடுக்கப்படும். பிரசங்கிக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்தும், நமக்கும் நம்முடைய உபதேசத்தைக் கேட்பவர்களுக்கும் கிடைக்கக்கூடிய நேரடியான ஆசீர்வாதங்களைக் குறித்தும் போற்றுதலை தெரிவிக்க நம் அனைவருக்கும் உதவியளிக்கப்படும்.—1 தீ. 4:16.
3 நிச்சயமாகவே, முழுக்காட்டுதல் அந்தத் தினத்தின் முக்கிய அம்சமாக இருக்கும். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, குறிப்பாய் புதிதாக ஒப்புக்கொடுத்திருக்கும் நபர்களுக்காக பைபிளை ஆதாரமாகக் கொண்ட ஒரு பேச்சு கொடுக்கப்படும். சந்தேகமில்லாமல், முழுக்காட்டுதல் என்ற பொருள் சிந்திக்கப்பட்டு, அதனுடைய அர்த்தம் தெளிவாக்கப்படும்போது அங்கே ஆஜராயிருக்கும் அனைவரும் கூர்ந்த கவனிப்பை செலுத்த விரும்புவோம். இந்த விசேஷ மாநாட்டு தினத்தில் முழுக்காட்டுதல் பெற எவராவது விரும்பினால், நடத்தும் கண்காணியிடம் அதை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்; முழுக்காட்டுதல் பெறவிருக்கும் நபர்களுடன் நியமிக்கப்பட்டிருக்கும் கேள்விகளை மறுபார்வை செய்வதற்கு மூப்பர்களை ஏற்பாடு செய்ய போதுமான சமயத்தைப் பெற்றிருக்க இது அவருக்கு உதவும்.
4 வருகைதரும் பேச்சாளரினால் கொடுக்கப்படும் பிரதான பேச்சே மற்றொரு முக்கிய அம்சமாக இருக்கும். “கடவுளுடைய ஊழியர்களாக தகுதிபெற்றவர்களாயும் ஆயத்தமானவர்களாயும் இருத்தல்” என்று அது தலைப்பிடப்பட்டிருக்கிறது. நம்மை ஊழியர்களாக ஆயத்தப்படுத்தும் நான்கு முக்கிய ஏற்பாடுகள் சிந்திக்கப்படும், மேலும் விசுவாசத்தைக் கட்டியெழுப்பும் அனுபவங்களை இந்தப் பேச்சு உட்படுத்தும்.
5 இந்த முழு நிகழ்ச்சிநிரலுக்கும் ஆஜராயிருக்க இப்போதே திட்டமிடுங்கள். அக்கறைகாட்டும் நபர்களும் பைபிள் மாணாக்கர்களும்கூட இந்த நாளின் தேவராஜ்ய கல்வியிலிருந்து நன்மை அடைவதற்கு அவர்களையும் கண்டிப்பாக அழையுங்கள். இவ்வாறு நற்செய்தியின் “தகுந்த அளவு தகுதிபெற்ற” ஊழியர்களாக நாம் இருக்கிறோம் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.