புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல்
“அனைத்தையும் நற்செய்தியின் நிமித்தமே செய்யுங்கள்” என்பதுதான் இந்தியாவில் இம்மாதம் ஆரம்பிக்கவிருக்கும் புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரலின் தலைப்பாகும். (1 கொ. 9:23, NW) ராஜ்ய நற்செய்தியே, இன்று கேட்கப்படும் மிக முக்கிய செய்தியாகும். இந்த அற்புத செய்தியை எடுத்துச்செல்லும் ஒப்பற்ற சிலாக்கியத்தை மதித்துப் போற்றுவதற்கு இந்த நிகழ்ச்சிநிரல் நமக்கு உதவும். மேலும், நற்செய்தியை இடைவிடாமல் அறிவிக்க தேவைப்படும் தைரியத்தையும் அது நமக்கு கொடுக்கும்.—அப். 5:42.
ஊழியத்தை முழுமையாக நிறைவேற்ற நமது தேவராஜ்ய பயிற்றுவிப்பை எவ்வாறு முழுமையாக பயன்படுத்திக்கொள்வது என்பதையும் இந்த நிகழ்ச்சிநிரல் காட்டும். ஊழியத்தை விரிவாக்க வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்திருக்கும் சிலரது அனுபவங்களை அங்கு நாம் கேட்போம்; நற்செய்தியை இன்னுமதிகமாய் பரப்ப தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும் இளைஞர்களும் இதில் அடங்குவர்.—பிலிப்பியர் 2:22-ஐ NW ஒப்பிடுக.
முக்கிய பேச்சு, வருகைதரும் பேச்சாளரால் அளிக்கப்படும்; ‘சுவிசேஷத்தை ஒப்புவிப்பதற்குத் தகுதியுள்ளவர்களாய்’ தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை அது வலியுறுத்தும். (1 தெ. 2:4, NW) மற்றவர்களோடு நற்செய்தியை பகிர்ந்துகொள்வதன் சிலாக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால், நம் சிந்தையும் நடத்தையும் கடவுளது எதிர்பார்ப்புகளுக்கும் தராதரங்களுக்கும் இசைவாய் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதை அது நமக்கு புரியவைக்கும். இதைச் செய்வதால் நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்களும் சிறப்பித்துக் காட்டப்படும்.
இந்த முக்கிய நிகழ்ச்சிநிரலை தவறவிடாதீர்கள். புதிதாய் ஒப்புக்கொடுத்தவர்கள், விசேஷ மாநாட்டு தினத்தில் முழுக்காட்டுதல் எடுக்க விரும்பினால் உடனடியாக நடத்தும் கண்காணியிடம் தெரிவிக்கவேண்டும். உங்கள் பைபிள் மாணாக்கர்கள் அனைவரையும் மாநாட்டிற்கு வரும்படி அழையுங்கள். அனைத்தையும் நற்செய்தியின் நிமித்தமே செய்வதற்கும், இவ்வாறு அர்மகெதோனுக்கு முன்பான இந்த மிகப் பெரிய வேலையை செய்து முடிப்பதற்கும் யெகோவா நம்மை பலப்படுத்த நாம் அனுமதிப்போமாக.