புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி
1 “யெகோவாவால் போதிக்கப்பட்டவர்களாய் இருங்கள்” என்பதே இந்த மாதத்தில் தொடங்கும் புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சியின் தலைப்புப் பொருள். (யோவா. 6:45, NW) யெகோவாவிடமிருந்து வரும் தெய்வீக போதனை திருப்திகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு உண்மையிலேயே உதவுகிறது. நம் ஆவிக்குரிய சொத்திற்கான ஆழ்ந்த போற்றுதலை அது நமக்குள் வளர்க்கிறது. நற்செய்தியை மற்றவர்கள் கேட்க உதவுவதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள் நம்மை சமுதாயத்தின் பயனுள்ள அங்கத்தினர்களாக ஆக்குகின்றன. யெகோவாவால் போதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களை இந்த விசேஷ மாநாட்டு தினம் சிறப்பித்துக் காட்டும்.
2 உலகப்பிரகாரமாக கற்பதன் ஆபத்துக்களை தெய்வீக போதனையின் நன்மைகளிலிருந்து இந்த நிகழ்ச்சி வேறுபடுத்திக் காட்டும். யெகோவா எப்படி மிகவும் உயர்தரமான கல்வியை—தம்முடைய வார்த்தையாகிய பைபிளின் அடிப்படையிலான கல்வியை—அளிக்கிறார் என்று நாம் மிக தெளிவாகக் காண்போம். கடவுளால் போதிக்கப்படுவதில் நாம் இன்பம் அனுபவிக்கிற, வணக்கத்தின் மூன்று அம்சங்களுக்கு முக்கியமாக கவனம் செலுத்தப்படும். மேலுமாக, பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள தாவீது மற்றும் தீமோத்தேயு போன்ற குறிப்பிடத்தக்க முன்மாதிரிகளைப் பின்பற்றவும், தங்கள் வாழ்க்கையை ஆவிக்குரிய நடவடிக்கைகளைச் சுற்றி அமைக்கவும் இளைஞருக்கு உற்சாகம் அளிக்கப்படும். வயதானவர்களின் உண்மைத்தன்மை சிறப்பித்துக் காட்டப்படுகையிலும் நம்முடைய விசுவாசம் பலப்படுத்தப்படும். தகுதிபெறும் புதிதாக ஒப்புக்கொடுத்திருக்கும் நபர்கள் முழுக்காட்டுதல் பெற முடியும். மாநாட்டு தினத்திற்கு வெகு முன்னரே, அவர்கள் தங்கள் விருப்பத்தைக் குறித்து நடத்தும் கண்காணியிடம் தெரிவிக்க வேண்டும்.
3 இந்த விசேஷ மாநாட்டு தினத்தின் முக்கியப் பேச்சு, “யெகோவாவின் சித்தத்தைச் செய்ய அவரால் போதிக்கப்படுதல்” என்ற தலைப்பை உடையது. கற்றுக்கொண்டே இருப்பதற்கும், விசுவாசத்தில் நிலைத்து உறுதியாக இருப்பதற்கும், தொடர்ந்து முன்னேறுவதற்குமான தேவை நம் அனைவருக்குமே ஏன் இருக்கிறது என்பதற்கான காரணங்களை அது அழுத்திக்காட்டும். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியத்தை மற்றவர்களுக்குப் போதிப்பதன்மூலம் நாம் யெகோவாவைப் பின்பற்றும்படி ஊக்குவிக்கப்படுவோம். அநேகர் யெகோவாவால் போதிக்கப்படுவதற்கு சங்கத்தின் பிரசுரங்கள் எப்படி உதவியிருக்கின்றன என்று காண்பிப்பதற்கு கட்டியெழுப்பும் அனுபவங்களும் சொல்லப்படும். யெகோவாவின் உலகளாவிய போதனா திட்டத்தின் பயனுள்ள சாதனைகள் சிறப்பித்துக் கூறப்படும்.
4 ஆஜராவதற்கு திட்டவட்டமான திட்டங்களைப் போடுங்கள். அக்கறையுள்ள அனைவரையும் ஆஜராகும்படி உற்சாகப்படுத்துங்கள். நம்முடைய மகத்தான போதகரால் அநேக நல்ல காரியங்கள் போதிக்கப்படுவதை எதிர்நோக்கி இருங்கள்.—ஏசா. 30:20, NW.