நம்முடைய பெயருக்குப் பின்னுள்ள அமைப்புக்கு மாணாக்கரை வழிநடத்துதல்
1 “200-க்கும் மேற்பட்ட மொழிகளில் பேசப்படுகிற ஒரு செய்தி அது. 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் கேட்கப்படுகிற ஒரு செய்தி அது. மக்கள் எங்கெல்லாம் காணப்படுகிறார்களோ அங்கெல்லாம் தனிப்பட்ட விதமாக கொடுக்கப்படுகிற ஒரு செய்தி அது. இந்த உலகம் இதுவரை அறிந்த பிரசங்க திட்டத்திலேயே மிகப் பெரியது அது, உலகமுழுவதிலுமுள்ள லட்சக்கணக்கானோரை ஐக்கியப்படுத்தும் ஒரு செய்தி அது. இந்த வேலையைச் செய்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் நூறு வருடங்களுக்கும் மேலாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள்!”
2 யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு (ஆங்கிலம்) என்ற வீடியோவின் வர்ணனை இவ்வாறுதான் தொடங்குகிறது. பின்வரும் கேள்விகளுக்கு அது பதிலளிக்க ஆரம்பிக்கிறது: உண்மையிலேயே யெகோவாவின் சாட்சிகள் யார்? அவர்களுடைய வேலை எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகிறது? வழிநடத்தப்படுகிறது? நிதியுதவியளிக்கப்படுகிறது? “பைபிளில் விசுவாசத்தை வளர்ப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய அயலகத்தாருக்கு உதவிசெய்ய ஓர் அமைப்பாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்ற உண்மை, பார்வையாளர்களின் மனதைக் கவருகிறது. மேலும் அவர்கள்தாமே நம்முடைய பெயருக்குப் பின்னுள்ள அமைப்பை பார்ப்பதற்கு அது உற்சாகப்படுத்துகிறது. இந்த வீடியோவைப் பார்த்தப் பிறகு, படித்துக்கொண்டிருந்த ஒரு பெண் போற்றுதல் பொங்கிவழிய ஆனந்தக் கண்ணீருடன் இவ்வாறு சொன்னார்: “இதுவே மெய்க் கடவுளாகிய யெகோவாவின் அமைப்பு என்பதை எப்படி எவரும் காணாமல் இருக்க முடியும்?”—1 கொரிந்தியர் 14:24, 25-ஐ ஒப்பிடுக.
3 மற்றொரு பெண் நீண்ட காலமாக விட்டுவிட்டு பைபிள் படித்துக்கொண்டிருந்தார், ஆனால் திரித்துவம் ஒரு பொய்க் கோட்பாடு என்ற உண்மையை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின்பு அவருக்கும் அவருடைய கணவருக்கும் நம்முடைய வீடியோ காண்பிக்கப்பட்டது. அதைப் பார்த்து அவர்கள் மிகவும் மனங்கவரப்பட்டு, அதே இராத்திரியில் அதை இரண்டுமுறை பார்த்தார்கள். அவர்களுடைய அடுத்த படிப்பில், அந்த மனைவி ஒரு சாட்சியாக ஆவதற்கான தன்னுடைய ஆசையை தெரிவித்தாள். அவர் தன்னுடைய நம்பிக்கையை திரித்துவத்தில் ஒருமுகப்படுத்திக் கொண்டிருந்ததாகவும் நம்முடைய அமைப்பையும் அதிலுள்ள மக்களையும் காணத் தவறிவிட்டதாகவும் அவர் சொன்னார். அந்த வீடியோவைப் பார்த்ததிலிருந்து கடவுளுடைய உண்மையான அமைப்பைக் கண்டுபிடித்துவிட்டதாக அவர் உணர்ந்துகொண்டார். உடனடியாக வீட்டுக்கு வீடு பிரசங்கத்தை ஆரம்பிக்க விரும்பினார். முழுக்காட்டப்படாத ஒரு பிரஸ்தாபியாக ஆவதற்கு எடுக்கவேண்டிய அவசியமான படிகள் அவருக்கு விளக்கிக் கூறப்பட்ட பிறகு, அவர் சொன்னார்: “அதில் மும்முரமாக ஈடுபடப் போகிறேன்.” அவர் தன்னுடைய சர்ச்சிலிருந்து விலகிக்கொண்டு, வெளி ஊழிய நடவடிக்கையை ஆரம்பித்தார், திரித்துவத்தை தவறென்று நிரூபிப்பதில் திறம்பட்டவராக ஆனார்.
4 பைபிள் மாணாக்கர்கள் யெகோவாவின் அமைப்பை கண்டுணர்ந்து அதனுடன் கூட்டுறவுகொள்ளுகையில், நன்கு ஆவிக்குரிய முன்னேற்றமடைந்து அதிக வேகமாக முதிர்ச்சியை நோக்கி வளருகிறார்கள் என்பது நன்கு ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது. பெந்தெகொஸ்தே நாளன்று 3,000 பேர் முழுக்காட்டப்பட்ட பிறகு, “அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், . . . உறுதியாய்த் தரித்திருந்தார்கள்” என்பது குறிப்பிடத்தக்கதாகும். (அப். 2:42) இன்று மாணாக்கர்கள் அதையே செய்வதற்கு நாம் உதவிசெய்வது இன்றியமையாததாகும். நாம் எவ்வாறு செய்ய முடியும்?
5 உத்தரவாதத்தை தாங்குங்கள்: சீஷரை உருவாக்கும் ஒவ்வொருவரும் பைபிள் மாணாக்கரை கடவுளுடைய அமைப்புக்கு வழிநடத்த வேண்டியது தன்னுடைய பொறுப்பு என்பதை உணர வேண்டும். (1 தீ. 4:16) புதிய நபர் தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் யெகோவாவுக்கு தன்னுடைய ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்திக் காண்பிக்கும் மகிழ்ச்சியான அந்த நாளை நோக்கி முன்னேறுவதற்கு ஒரு படிக்கல்லாக ஒவ்வொரு படிப்பு நேரத்தையும் கருதவேண்டும். முழுக்காட்டுதல் நிகழ்ச்சியின்போது அவரிடம் கேட்கப்படுகிற கேள்விகளில் ஒன்று: “உங்களுடைய ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டுதலும் கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்படும் அமைப்போடு கூட்டுறவுகொள்ளும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக உங்களை அடையாளப்படுத்துகின்றன என்று நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா?” எனவே, உண்மை கிறிஸ்தவ சபையுடன் சுறுசுறுப்பாய் தொடர்புகொள்ளாமல் கடவுளை தான் சேவிக்க முடியாது என்பதை அவர் உணருவது முக்கியம்.—மத். 24:45-47; யோவா. 6:68; 2 கொ. 5:20.
6 உள்ளூர் சபையையும் யெகோவாவின் சாட்சிகளுக்குப் பின்னுள்ள சர்வதேச அமைப்பையும் பற்றி மாணாக்கருக்கு தொடர்ந்து கற்பியுங்கள். முதல் படிப்பு முதற்கொண்டே ஒவ்வொரு பைபிள் படிப்பு நேரத்திலும் இதைச் செய்யுங்கள். ஆரம்பத்திலிருந்தே, மாணாக்கரை கூட்டங்களுக்கு அழையுங்கள், தொடர்ந்து அழையுங்கள்.—வெளி. 22:17.
7 கொடுக்கப்படுகிற கருவிகளை பயன்படுத்துங்கள்: வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துவதற்கு நம்முடைய மிகச் சிறந்த பிரசுரங்கள், கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேடும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகமுமே. சபையுடன் கூட்டுறவு கொள்ளவேண்டியதன் அவசியத்தை இவை இரண்டும் முக்கியப்படுத்திக் காட்டுகின்றன. தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் 5-ம் பாடத்தின் கடைசி பகுதி இவ்வாறு குறிப்பிடுகிறது: “நீங்கள் தொடர்ந்து யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதும் அவர் தேவைப்படுத்தும் காரியங்களுக்குக் கீழ்ப்படிவதும் அவசியம். உள்ளூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களுக்குச் செல்வது, அவ்வாறு செய்ய உங்களுக்கு உதவும்.” கூட்டங்களில் ஆஜராகும்படி அறிவு புத்தகம் மாணாக்கரை திரும்பத் திரும்ப உற்சாகப்படுத்துகிறது. 5-ம் அதிகாரம், பாரா 22, இந்த அழைப்பை கொடுக்கிறது: “யெகோவாவின் சாட்சிகள் . . . கடவுளை ‘ஆவியோடும் உண்மையோடும்’ தொழுதுகொள்வதில் அவர்களைச் சேர்ந்துகொள்ளும்படியாக அவர்கள் உங்களை கனிவாக துரிதப்படுத்துகின்றனர். (யோவான் 4:24)” 12-ம் அதிகாரம், பாரா 16, இவ்வாறு குறிப்பிடுகிறது: “இந்தப் படிப்பைத் தொடர்ந்து யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் ஆஜராயிருப்பதை உங்களுடைய பழக்கமாக்கிக்கொள்ளும்போது, உங்கள் விசுவாசம் இன்னும் அதிகமாக பலமுள்ளதாகும்.” 16-ம் அதிகாரம், பாரா 20, இவ்வாறு சொல்லுகிறது: “யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு ஆஜராவதை உங்கள் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.” அது மேலும் சொல்லுகிறது: “இது நீங்கள் தேவனை அறியும் அறிவைப் புரிந்துகொண்டு, பின்னர் அதை உங்களுடைய வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிக்க உதவிசெய்து உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும். உலகளாவிய சகோதர கூட்டுறவின் ஒரு பாகமாக இருப்பது யெகோவாவிடம் நெருங்கியிருக்க உங்களுக்கு உதவிசெய்யும்.” கடவுளுடைய மக்கள் மத்தியில் ஒருவர் எவ்வாறு உண்மையான பாதுகாப்பைக் கண்டடைகிறார் என்பதை 17-ம் அதிகாரம் முழுக்க முழுக்க சிந்திக்கிறது. நாம் மற்றவர்களுடன் படிக்கையில், இந்தப் பாகங்களிலுள்ள விஷயங்களை வலியுறுத்திக் கூறுவது நம்முடைய உத்தரவாதமாகும்.
8 யெகோவாவின் சாட்சிகள்—ஒற்றுமையுடன் உலகம் முழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள் என்ற சிற்றேடு ஒரு சிறந்த கருவியாகும்; இன்று யெகோவா தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்திவரும் காணக்கூடிய ஒரே அமைப்போடு தனிப்பட்ட ஆட்கள் அறிமுகமாவதற்கு அது தயாரிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய ஊழியம், கூட்டங்கள், அமைப்பு ஆகியவற்றைப் பற்றி அதில் அடங்கியுள்ள விவரமான தகவலானது, அந்தச் சிற்றேட்டை வாசிப்பவர் கடவுளை வணங்குவதில் நம்முடன் கூட்டுறவுகொள்வதற்கு ஊக்கப்படுத்தும். பைபிள் படிப்பை முறையாக ஆரம்பித்த பிறகு, மாணாக்கரே சொந்தமாக வாசிப்பதற்கு இந்தச் சிற்றேட்டின் ஒரு பிரதியைக் கொடுக்கும்படி சிபாரிசு செய்யப்படுகிறது. கடந்த காலத்தில் செய்யப்பட்டதுபோல அவருடன் அதைப் படிக்க வேண்டிய அவசியமில்லை.
9 நம்முடைய பெயருக்குப் பின்னுள்ள அமைப்புக்கு மாணாக்கரை வழிநடத்துவதற்கு சங்கம் தயாரித்திருக்கிற வீடியோக்களில் சில மிகச் சிறந்த கருவிகளாக இருக்கின்றன. பின்வரும் வீடியோக்களை அவர்கள் பார்ப்பார்களானால் பயனுள்ளதாய் இருக்கும்: (1) செயல்பட்டு வரும் புதிய உலக சமுதாயம் (ஆங்கிலம்), யெகோவாவின் அமைப்பு செயல்படுகிற மென்மையான, திறமையான, அன்பான தன்மையைக் கவர்ந்த 1954-ம் ஆண்டு படத்தை மறுபார்வை செய்கிறது; (2) பூமியின் கடைகோடிகளுக்கு (ஆங்கிலம்), உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 50-வது ஆண்டு விழாவை அடையாளப்படுத்திக் காண்பித்தது, மேலும் உலகளாவிய பிரசங்க வேலையில் மிஷனரிகள் ஏற்படுத்திய விளைவை அது காண்பிக்கிறது; (3) யெகோவாவின் சாட்சிகள் நாஸி தாக்குதலுக்கு எதிராக உறுதியாய் நிற்கிறார்கள் (ஆங்கிலம்), ஹிட்லருடைய கொடூரமான துன்புறுத்துதலை எதிர்ப்படுகையில் யெகோவாவின் சாட்சிகளுடைய தைரியத்தையும் வெற்றியையும் பற்றிய மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்றை சொல்லுகிறது; (4) தெய்வீக போதனையால் ஐக்கியப்படுதல் (ஆங்கிலம்), கிழக்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட நம்முடைய சர்வதேச மாநாடுகளில் காண்பிக்கப்பட்ட சமாதானமான ஐக்கியத்தை அது ஆராய்கிறது; (5) யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு. இந்தக் கடைசி இரண்டும் இந்தியாவில் கிடைக்கின்றன, சபையின் மூலம் ஆர்டர் செய்யலாம்; ஆனால் அநேக சகோதரர்கள் தனிப்பட்ட விதமாக மற்ற மூன்றையும் வெளி நாடுகளிலிருந்து பெற்றிருக்கிறார்கள், எனவே பைபிள் மாணாக்கர்களை அமைப்புக்கு வழிநடத்துவதில் இவற்றை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
10 கூட்டங்கள் சம்பந்தமாக படிப்படியான இலக்குகளை வையுங்கள்: வீட்டு பைபிள் படிப்பில் அளிக்கப்படும் தனிப்பட்ட பயிற்சிகள், சபை கூட்டங்களில் அளிக்கப்படும் வகுப்பறை கலந்தாலோசிப்புகள் ஆகிய இரண்டும் நமக்குத் தேவை என்பதை மாணாக்கர்களுக்கு விளக்க வேண்டும். (யோவா. 6:45) பைபிள், அமைப்பு ஆகிய இரண்டையும் புதியவர்கள் சமமாக புரிந்துகொள்வதில் வளர வேண்டியது அவசியம். அதைச் செய்வதற்கு, கூட்டங்களுக்கு ஆஜராவதைத் தவிர எந்தவித பதிலீடும் கிடையாது. (எபி. 10:23-25) சபை கூட்டங்களுக்கு வரும்படி அந்த நபரை ஆரம்பத்திலேயே அழைக்கத் தொடங்குங்கள். ஓர் ஒழுங்கான வீட்டு பைபிள் படிப்பைக் கொண்டிருப்பதற்கு முன்பாகவே புதிதாக அக்கறைகாண்பிக்கும் சிலர் கூட்டங்களுக்கு ஆஜராக ஆரம்பித்துவிடுகிறார்கள். நிச்சயமாகவே, தவறாமல் ஆஜராயிருப்பதன் மூலம் நாம்தாமே சரியான முன்மாதிரி வைக்க வேண்டும்.—லூக். 6:40; பிலி. 3:17.
11 கூட்டங்களைப் பற்றியும் அது எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதைப் பற்றியும் போதுமான தகவலைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; இதனால் மாணாக்கர் முதல் கூட்டத்திற்கு ஆஜராகும்போது சங்கோஜமில்லாமல் இருப்பார். முதல் தடவையாக புதிய இடங்களுக்குப் போகும்போது சில ஆட்கள் மிகவும் சங்கோஜப்படுகிறவர்களாய் இருப்பதால், முதல் கூட்டத்திற்கு மாணாக்கர் ஆஜராகையில் ராஜ்ய மன்றத்திற்கு அவருடன் சேர்ந்து வருவது பயனுள்ளதாய் இருக்கலாம். சபை அங்கத்தினர்களை அவர் சந்திக்கும்போது நீங்கள் அவருடன் இருந்தீர்களானால், அவர் அதிக செளகரியமாக உணருவார். மொத்தத்தில், உங்களுடைய பார்வையாளருக்கு ஒரு நல்ல விருந்தாளியாக இருந்து, அவர் வரவேற்கப்பட்டவராகவும் செளகரியமானவராகவும் உணரும்படி செய்யுங்கள்.—மத். 7:12; பிலி. 2:1-4.
12 முதல் வாய்ப்பிலேயே விசேஷ மாநாட்டு தினம், வட்டார மாநாடு, அல்லது மாவட்ட மாநாடு ஆகியவற்றிற்கு ஆஜராகும்படி மாணாக்கரை உற்சாகப்படுத்துங்கள். ஒருவேளை நீங்கள் உங்களுடைய போக்குவரத்து ஏற்பாடுகளில் அவரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
13 இருதயப்பூர்வமான போற்றுதலை பதியவையுங்கள்: நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல், பக்கம் 92, இவ்வாறு விளக்குகிறது: “யெகோவாவின் அமைப்பின்பேரிலிருக்கும் உங்கள் சொந்த, ஆழ்ந்த மதித்துணர்வானது, அக்கறை காட்டும் ஆட்களுடன் நீங்கள் பேசுகையில் பிரதிபலிக்கிறதென்றால் மதித்துணர்வில் வளருவது அவர்களுக்கு எளிதாயிருக்கும், மேலும் யெகோவாவை அறிவதில் மேலுமதிக முன்னேற்றமடைய முயலும்படி அவர்களைத் தூண்டுவிக்கும்.” உங்களுடைய உள்ளூர் சபையைப் பற்றி எப்பொழுதும் நேர்மறையாக பேசுங்கள், எதிர்மறையாக ஒருபோதும் பேசாதிருங்கள். (சங். 84:10; 133:1, 3ஆ) பைபிள் படிப்பிற்காக நீங்கள் செய்யும் ஜெபங்களில், சபையையும் சபையோடு மாணாக்கர் ஒழுங்காக ஆஜராவதன் அவசியத்தையும் குறிப்பிடுங்கள்.—எபே. 1:15-17.
14 கடவுளுடைய மக்கள் மத்தியில் காணப்படுகிற மகிழ்விக்கும் கூட்டுறவுக்காகவும் ஆவிக்குரிய பாதுகாப்புக்காகவும் புதியவர்கள் இருதயப்பூர்வமான போற்றுதலை வளர்த்துக்கொள்ளும்படி நாம் நிச்சயமாகவே விரும்புகிறோம். (1 தீ. 3:15; 1 பே. 2:17; 5:9, NW) யெகோவாவின் சாட்சிகளாக, கடவுளுடைய வார்த்தையைப் படிக்கும் மாணாக்கரை நம்முடைய பெயருக்குப் பின்னுள்ள அமைப்புக்கு வழிநடத்துவதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் நாம் செய்வோமாக.
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
மாணாக்கர்கள் தாமே அமைப்பைப் பார்க்கும்போது விரைவான ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்கிறார்கள்
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
கூட்டங்களுக்கு ஆஜராக மாணாக்கரை அழைப்பதில் தாமதிக்காதீர்கள்