அசட்டை செய்வோரை சந்திக்கையில் என்ன செய்வீர்கள்?
1 அசட்டை என்பது பரிவோ உணர்ச்சியோ அற்ற, ஆர்வமோ அக்கறையோ காண்பிக்கப்படாத ஒரு மனப்பான்மையாகும். ஊழியத்தில் நாம் இந்த மனப்பான்மையையே சர்வசாதாரணமாய் எதிர்ப்படுகிறோம்; இதைக் கையாளுவதும் ரொம்ப கஷ்டம். இதற்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள்? இது உங்களை ஊழியத்தில் சோர்ந்துபோகச் செய்திருக்கிறதா? மக்களுக்கு ராஜ்ய செய்தியை சொல்வதற்காக, இதை நீங்கள் எவ்வாறு மேற்கொள்ளலாம்?
2 முதலாவதாக, உங்கள் பிராந்தியத்திலுள்ள மக்கள் ஏன் அசட்டையாய் இருக்கிறார்கள் என்று கண்டறியுங்கள். அரசியல் தலைவர்களும் மதத்தலைவர்களும் அவர்களுக்கு ஏமாற்றமளித்திருப்பதால் அவ்வாறிருக்கிறார்களா? அவர்களுக்கிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வே இல்லையென நினைக்கிறார்களா? மேம்பட்ட நிலைமைகளைக் குறித்த வாக்குறுதிகளை சந்தேகிக்கிறார்களா? உடனுக்குடன் காணக்கூடிய பலன்கள் கிடைத்தாலொழிய ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து சிந்திக்க மறுக்கிறார்களா?
3 ராஜ்ய நம்பிக்கையை சிறப்பித்துக் காண்பியுங்கள்: ராஜ்யத்தால் தீர்க்கமுடியாத பிரச்சினையே இல்லை. ஆகவே நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போது ராஜ்ய வாக்குறுதிகளைக் குறித்து பேச வேண்டும்; ஒருவேளை பைபிள் வசனத்தை எடுத்து காண்பிக்க முடியாதிருந்தால் அல்லது அது நடைமுறைக்கு ஒத்துவராதிருந்தால்கூட முக்கிய வேதவசனங்களைக் குறிப்பிடவாவது வேண்டும். (எபி. 4:12) எனினும், எவ்விதம் நம்முடைய சம்பாஷணையை ராஜ்ய வாக்குறுதிகளிடம் திருப்புவது?
4 ஏன் நாம் அவர்களை சந்திக்கிறோம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அயலார்மீதுள்ள அன்பின் காரணமாகவும் சமுதாயத்தின்மீதுள்ள அக்கறையின் காரணமாகவும் நாம் சந்திக்கிறோம் என்பதை அவர்கள் உணரவேண்டும். நாம் இதுபோன்ற நன்கு சிந்திக்கப்பட்ட ஒரு கேள்வியைக் கேட்கலாம்: “இந்தப் பிரச்சினைக்கு [சமுதாயத்தைப் பாதிக்கும் ஒரு பிரச்சினைக்கு] தீர்வு என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” ஓர் அணுகுமுறை பலனளிக்கவில்லையென்றால், வேறொன்றை முயற்சிசெய்யுங்கள்.
5 செல்வந்தர்கள் நிறைந்த ஒரு பிராந்தியத்தில் ராஜ்ய செய்திக்கு ஆர்வம் காண்பிக்கப்படவில்லை; அச்சந்தர்ப்பத்தில், அக்கறையைத் தூண்டும் ஓர் அறிமுகத்தைத் தயாரிக்க பிரஸ்தாபிகள் முயன்றனர். அறிவு புத்தகத்தை சிறப்பித்துக்காட்டுகையில் ஒரு தம்பதியினர் இந்த அறிமுகத்தைப் பயன்படுத்திப் பார்த்தனர்: “இன்றைய உலகில் வெற்றிக்கு தரமான கல்வி அவசியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? விரிவான கல்வித்திட்டம் பைபிள் அறிவையும் உள்ளடக்கும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” ஒரே பிற்பகலில் அவர்கள் மூன்று புத்தகங்களை அளித்தார்கள்; அவற்றைப் பெற்றுக்கொண்டவர்களில் ஒரு பெண்மணி, அறிவு புத்தகம் முழுவதையும் தான் வாசித்துவிட்டதாக பின்னர் சொன்னார், ஒரு பைபிள் படிப்பையும் ஏற்றுக்கொண்டார்.
6 அசட்டை செய்வோரை நீங்கள் சந்திக்கையில், வெவ்வேறு அணுகுமுறைகளை முயன்றுபாருங்கள், சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைக் கேளுங்கள், மேலும் கடவுளது வார்த்தையின் வல்லமையைப் பயன்படுத்துங்கள். இவ்வாறு நமது மகத்தான ராஜ்ய நம்பிக்கையை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி உங்களால் உதவமுடியும்.