“எனக்கு அதில் அக்கறையில்லை”
1 சில இடங்களில், நம் செய்திக்கு மக்கள் பொதுவாக இப்படித்தான் பிரதிபலிக்கிறார்கள். நம் பிராந்தியத்திலுள்ள ஆட்களின் அலட்சியப் போக்கைக் கண்டு, மனம் தளர்ந்துவிடாமல் இருக்க எது நமக்கு உதவும்? நற்செய்தியில் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு நாம் என்ன செய்யலாம்?
2 சந்தோஷத்தைக் காத்துக்கொள்ளுங்கள்: அநேகர் ஆர்வம் காட்டாதிருப்பதற்கான காரணத்தைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது நம் சந்தோஷத்தைக் காத்துக் கொள்ள உதவுகிறது. பரிணாமத்தைப்பற்றி கற்பிக்கப்பட்ட ஆட்களும் கடவுளே இல்லை என்று வலியுறுத்துகிற சமுதாயத்தில் வளர்க்கப்பட்டவர்களும் பைபிளின் முக்கியத்துவத்தைக் குறித்து யோசிக்காமல் இருக்கலாம். மதத்திலுள்ள மாய்மாலத்தைக் கண்டு சிலர் ஏமாற்றமடைந்திருக்கலாம். இன்னும் சிலருடைய அலட்சியப் போக்குக்கு விரக்தியும், நம்பிக்கையின்மையும் காரணமாக இருக்கலாம். (எபே. 2:12) சிலர் அன்றாட கவலைகளில் மூழ்கி இருப்பதால் நற்செய்திக்கு ‘செவிசாய்ப்பதேயில்லை.’—மத். 24:37-39, NW.
3 நம் செய்தியை சிலர் அசட்டை செய்தாலும்கூட, நம் முயற்சிகள் யெகோவாவை மகிமைப்படுத்துகிறது என்பதை அறிந்திருப்பதன்மூலம் ஊழியத்தில் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள முடியும். (1 பே. 4:11) அதோடு, ஆட்கள் சத்தியத்தின் அருமையை உணராதவர்களாக இருந்தாலும், அவர்களிடம்கூட பிரசங்கிப்பது நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. நம் பிராந்தியத்திலுள்ள மக்களை யெகோவா பார்க்கும் விதமாக பார்க்க முயலுவோமாக. “வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத” நினிவே மக்களுக்காக அவர் வருத்தப்பட்டார். (யோனா 4:11) நம் பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு நற்செய்தி மிகவும் அவசியம்! எனவே, நாம் முயற்சியைக் கைவிடக்கூடாது; அதோடு பைபிள் செய்தியில் மக்களுடைய ஆர்வத்தை தூண்டுவதற்கு வழிகளைத் தேட வேண்டும்.
4 உள்ளூர் மக்களின் கவலைகளைக் குறித்து பேசுங்கள்: ஒருவேளை, அந்தப் பகுதியிலுள்ள மக்கள் கவலைப்படுகிற விஷயத்தை அறிமுகத்தில் குறிப்பிட்ட பிறகு அதைக் குறித்து வீட்டுக்காரரின் கருத்தைக் கேளுங்கள். அதை கவனித்துக் கேட்ட பிறகு, அவருடைய கவலைகளை தணிக்கும்விதமாக, பைபிளிலிருந்து ஆறுதலளிக்கும் செய்தியைக் காட்டுங்கள். ஒரு சாட்சி, உள்ளூரில் நடந்த ஒரு கோர சம்பவத்திற்கு பிறகு, தான் சந்தித்த ஒவ்வொரு வீட்டிலும் அதைக் குறிப்பிட்டு, அதற்காக தான் உண்மையாக வருந்துவதாக தெரிவித்தார். “திடீரென்று, மக்கள் பேசத் துவங்கிவிட்டார்கள், அவர்களைப் பாதித்த விஷயத்தில் நான் அக்கறைக் காட்டியதால், அன்று அநேகரோடு நன்கு உரையாட முடிந்தது” என்று அவர் சொல்கிறார்.
5 மனிதர்கள் அனுபவிக்கிற எல்லா பிரச்சினைகளுக்கும் கடவுளுடைய ராஜ்யத்தில் விடிவுகாலம் பிறக்கும். வீட்டுக்காரரை பெரிதும் பாதிக்கிற பிரச்சினை எது என்பதைக் கண்டறிய முயலுங்கள். அப்படிச் செய்கையில், பைபிள் அளிக்கிற நம்பிக்கையின் செய்தியைச் சொல்வதற்கு அவர் உங்களை அனுமதிக்கலாம். இல்லையென்றால், “இன்னொருவேளை” அதைக் கேட்பதற்கு அவர் மனமுள்ளவராக இருக்கலாம்.—அப். 17:32.