ராஜ்ய செய்தியில் ஆர்வம் காண்பித்தோரை மறுபடியும் சந்தியுங்கள்
1 கடந்த சில வாரங்களின்போது, “ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலம் வருமா?” என்ற தலைப்புடைய ராஜ்ய செய்தி எண் 35-ஐ விநியோகிக்கும் சிலாக்கியத்தை நாம் அனுபவித்துவந்தோம். எவ்விடத்திலுமுள்ள பிரஸ்தாபிகள் இந்த ராஜ்ய செய்தி வெளியீட்டைக் கொண்டு தகுதியுடைய எத்தனைப் பேரை சென்றெட்ட முடியுமோ அத்தனைப் பேரை சென்றெட்ட முயன்றுவருகின்றனர். (மத். 10:11) இந்த அளிக்கும் ஏற்பாடு, ஞாயிறு, நவம்பர் 16-ல் முடியும்படி அட்டவணையிடப்பட்டிருந்தாலும், சபை இருப்பில் இருக்கும்வரை ராஜ்ய செய்தி எண் 35-ஐ தொடர்ந்து விநியோகிக்குமாறு மூப்பர்கள் உங்களைக் கேட்டுக்கொள்ளலாம்.
2 இந்த ராஜ்ய செய்தி வெளியீடு, பலருடைய ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. மனிதர்கள் பொதுவாகவே தங்களுடைய இயல்பான பாசத்தை இழந்துவிட்டதாக அவர்கள் காண்கின்றனர், ஆகவே எதிர்காலத்தில் என்ன சம்பவிக்கப்போகிறதோ என்று கலக்கமுறுகின்றனர். (2 தீ. 3:3) ஆர்வம் காண்பித்தோரை மீண்டும் சந்திக்க நாம் விரும்புகிறோம்.
3 ராஜ்ய செய்தி பலனைப் பெறுகிறது: 1995-ம் ஆண்டு ராஜ்ய செய்தி அளிப்பு ஏற்பாட்டின்போது, ஒரு பிரதியைப் பெற்ற ஒரு பெண்மணி, ராஜ்ய மன்றத்தில் நடக்கும் ஒரு கூட்டத்திற்கு வந்தாள்; ஏனெனில் யெகோவாவின் சாட்சிகள் நம்பும் விஷயங்களைப் பற்றி அதிகத்தைக் கற்றுக்கொள்ள அவள் விரும்பினாள். அந்தக் கூட்டத்தில் ஒரு பைபிள் படிப்பை உடனே அவள் ஏற்றுக்கொண்டாள்; அதற்குப் பிறகு அவள் கூட்டத்தை அரிதாகவே தவறவிட்டாள். சீக்கிரத்தில், அவள் முன்பு போய்க்கொண்டிருந்த சர்ச்சுக்கு, தான் இனியும் உறுப்பினர் இல்லை என்று எழுதியிருந்தாள்!
4 இப்போதைக்குள், பிராந்தியத்திலுள்ள நூற்றுக்கணக்கானோர் ராஜ்ய செய்தி எண் 35-ல் அடங்கியுள்ள செய்தியை வாசித்திருக்கின்றனர். ஆனால் அதற்கு அவர்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்? தாங்கள் வாசித்த விஷயத்தால் சாதகமாக அவர்கள் கவரப்பட்டிருந்தாலும், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் மறுபடியும் அவர்களைச் சந்திக்காவிட்டால் பெரும்பாலானோர் செயல்பட மாட்டார்கள். நீங்கள் மறுபடியும் செல்வதற்கு திட்டமிட்டுவருகிறீர்களா? நம் உடன்மானிடருக்கான அன்புள்ள அக்கறை நாம் அவ்வாறு செய்யும்படி நம்மைத் தூண்ட வேண்டும். ராஜ்ய செய்தியில் ஆர்வம் காட்டியிருக்கும் அனைவரும் மறுபடியும் சந்திக்கப்பட வேண்டும்.
5 நீங்கள் திரும்பிச் செல்கையில் என்ன சொல்வீர்கள்? ராஜ்ய செய்தியிலுள்ள விஷயம் எவ்வாறு காலத்துக்கேற்றதாய் இருக்கிறது என்பது பற்றிய சில குறிப்புகளை நீங்கள் சொல்லலாம்; பிறகு சிந்தனையைத் தூண்டும் ஒரு கேள்வியைக் கேட்கலாம். வீட்டுக்காரர் தன் கருத்துக்களைச் சொல்கையில் கவனமாகக் கேளுங்கள், அப்போதுதான் அவர் மனதில் என்ன இருக்கிறதென்பது உங்களுக்குத் தெரியவரும். பிறகு, ராஜ்ய செய்தியில் முக்கியப்படுத்திக் காட்டப்பட்டிருந்த, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் உள்ள ஒரு பொருத்தமான குறிப்புக்கு அவர்களுடைய கவனத்தைத் திருப்புங்கள். ஒரு சாதகமான பிரதிபலிப்பை நீங்கள் பெற்றால், உடனே ஒரு பைபிள் படிப்பைத் தொடங்க முயலுங்கள்.
6 “ராஜ்ய செய்தி” எண் 35-ல் ஆர்வம் காட்டினவர்களிடம் திரும்பிச் செல்கையில் நீங்கள் பேசக்கூடிய சில பிரசங்கங்கள் இங்கே ஆலோசனையாகத் தரப்பட்டுள்ளன:
◼“சமீபத்தில் உங்களிடம் நான் கொடுத்துவிட்டுச் சென்ற பிரதியில் அச்சிடப்பட்டிருந்த தகவல் உங்களுக்கு நினைவிருக்கலாம். இன்றைய மனிதகுலத்தைப் பிரித்துவைக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையைப் பற்றி—பிறருக்கான அன்பு குறைந்திருத்தலைப் பற்றி—அது பேசுகிறது.” “பிறரிடம் காட்டும் அன்பு தணிந்திருக்கிறது” என்ற தலைப்பில் ராஜ்ய செய்தி பக்கம் 2-ல் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தினிடமாக கவனத்தைத் திருப்புங்கள். பிறகு இவ்வாறு கேட்கலாம், “இப்படி வாழ்வதுதான் மனிதகுலத்துக்கான கடவுளுடைய நோக்கம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” பதில் சொல்ல அனுமதியுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் 5-ம் பாடத்துக்குத் திருப்பி, ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயலுங்கள்.
◼“நாம் முதலில் சந்தித்தபோது, ‘ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலம் வருமா?’ என்ற பொருளின்பேரிலான தகவல் சிலவற்றை உங்களிடம் சொன்னேன். அப்படிப்பட்ட ஒரு உலகம் சாத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” பதில் சொல்ல அனுமதியுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் 6-ம் பாடத்துக்குத் திருப்பி 6-வது பாராவை வாசியுங்கள். பிறகு மீகா 4:3, 4-ல் கொடுக்கப்பட்டுள்ள கடவுளின் வாக்குறுதியை வாசியுங்கள். வீட்டுக்காரர் ஆர்வம் காட்டுவதுபோல் தோன்றினால், சிற்றேட்டை அளித்து, ஒரு படிப்பை நடத்த முன்வாருங்கள்.
◼“உங்களைக் கடைசியாக நான் சந்தித்தபோது, ‘ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலம் வருமா?’ என்ற தலைப்பையுடைய ஒரு துண்டுப்பிரதியை கொடுத்தேன். அதில் ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்புக்கான அழைப்பு அடங்கியிருந்தது. படிப்பிற்காக நாங்கள் பயன்படுத்தும் புத்தகத்தை உங்களுக்குக் காட்டுவதற்காக நான் வந்திருக்கிறேன். [அறிவு புத்தகத்தைக் காட்டுங்கள்.] ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலத்தைப் பற்றி இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது; மேலும், நாம் ஏன் முதியோராகி மரிக்கிறோம்? கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்? இறந்துபோன நம் அன்பானவர்களுக்கு என்ன நேரிடுகிறது? போன்ற, நீங்கள் அறிந்துகொள்ள ஆவலோடிருக்கும் மற்ற கேள்விகளுக்கும் இது பதிலளிக்கிறது.” பிறகு கேளுங்கள், “இந்தப் படிப்பு முறையை உங்களிடம் செய்து காட்டட்டுமா?” உங்கள் அழைப்பை அந்த வீட்டுக்காரர் மறுத்தால், அந்தப் புத்தகத்தை தானாகவே வாசித்துக்கொள்ள அவருக்கு விருப்பமா என்று அவரைக் கேளுங்கள். அவரிடம் ஒரு பிரதியை அளியுங்கள். திரும்பிச் செல்ல திட்டமிடுங்கள்.
7 ராஜ்ய செய்தி எண் 35-ன் கையிருப்பு முடிந்ததும், அந்த மாதத்தின் மீதமுள்ள நாட்களில் அறிவு புத்தகத்தை நாம் அளிக்கலாம். இந்தப் புத்தகத்துக்காக ஆலோசனையாகக் கொடுக்கப்பட்டிருக்கும், தெரிந்தெடுக்கப்பட்ட ஏராளமான பிரசங்க முறைகளை, மார்ச், ஜூன், நவம்பர் 1996 மற்றும் ஜூன் 1997 நம் ராஜ்ய ஊழியத்தின் பின்பக்கத்தில் காணலாம்.
8. ராஜ்ய செய்தியின் இந்த விசேஷ விநியோகம், பிரசங்க வேலையில் நாம் எடுக்கும் முயற்சிகளை அதிகரிக்க நம் அனைவரையும் உந்துவிக்க வேண்டும். ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்பதே எல்லா மனிதகுலத்துக்குமான யெகோவாவின் நோக்கமாய் இருக்கிறது என்பதை ஜனங்கள் காண உதவுவதாய், இந்த அளிக்கும் ஏற்பாடு யெகோவாவின் ஒத்தாசையுடன் வெற்றி பெறும் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம். ராஜ்ய செய்தியில் ஆர்வம் காண்பித்தோரை மறுபடியும் சந்திப்பதில் நாம் எடுக்கும் கடுமையான முயற்சிகளை யெகோவா தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக.