சீஷராக்கும் அவசர சேவை வளரும் வேகத்தில் ஒரு கண்ணோட்டம்
1 பூமியை விட்டு பரலோகத்திற்கு செல்வதற்கு முன்பாக, இயேசு தம் சீஷர்களிடம் ‘சகல ஜாதிகளையும் சீஷராக்கும்படி’ கட்டளையிட்டார். இதைச் செய்ய சீஷர்கள் மும்முரமாக பிரசங்கிக்கவும் போதிக்கவும் வேண்டியிருந்தது. இதன்மூலம் எங்கெல்லாம் மனிதர் வாழ்கிறார்களோ அங்கெல்லாம், அதாவது பூமியெங்கும், அவர்கள் தங்கள் சேவையை விரிவுபடுத்த முடியும். (மத். 28:19, 20; அப். 1:8) இந்தச் சேவையை ஒரு பாரமாக, செய்துமுடிக்க முடியாத ஒன்றாக, அவர்கள் நினைத்தார்களா? அப்போஸ்தலன் யோவானைக் கேட்டால், அவர் அப்படி நினைக்கவில்லை என்று சொல்வார். 65 வருடம் சீஷராக்கும் சேவையை செய்தபின், இந்தச் சேவையைப் பற்றி அவர் இவ்வாறு எழுதினார்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.”—1 யோ. 5:3.
2 ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் நடவடிக்கையைப் பற்றிய வேதாகமப் பதிவு அவர்கள் மும்முரமாக தங்கள் சேவையைச் செய்தனர் என நிரூபிக்கிறது. (2 தீ. 4:1, 2, NW) இதை ஒரு கடமைக்காக செய்யாமல், கடவுளைத் துதிக்கவும் மற்றவர்களை ரட்சிப்புக்கு வழிநடத்தவும் அவர்களுக்கு இருந்த ஆவலினால் அவ்வாறு செய்தார்கள். (அப். 13:47-49) சீஷர்களாக மாறிய அனைவருமே சீஷராக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டதனால், கிறிஸ்தவ சபை முதல் நூற்றாண்டில் வெகுவேகமாக வளர்ந்தது.—அப். 5:14; 6:7; 16:5.
3 சீஷராக்கும் சேவை சூடுபிடிக்கிறது: மிகச் சிறப்பான இந்தச் சீஷராக்கும் சேவை இந்த 20-ம் நூற்றாண்டில் சூடுபிடிக்கிறது. இதுவரை, லட்சக்கணக்கானோர் ராஜ்ய செய்தியைக் கேட்டு அதைப் பின்பற்றி வருகிறார்கள். (லூக். 8:15) இந்தக் காரிய ஒழுங்குமுறை முடிவடையும் காலம் மிகவும் நெருங்கி விட்டதால், நேர்மை இருதயமுள்ளவர்கள் சத்தியத்தை சீக்கிரத்தில் கற்றுக்கொள்ள உதவ, ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையினர்’ நமக்கு நல்ல புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.—மத். 24:45, NW.
4 1995-ல் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தைப் பெற்றோம். 1996-ல் கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டையும் பெற்றோம். அறிவு புத்தகத்தைப் பற்றி, ஜனவரி 15, 1996, காவற்கோபுர இதழ், பக்கம் 14, சொன்னது இவ்வாறு: “இந்த 192-பக்க புத்தகத்தை குறுகிய காலப்பகுதிக்குள் படித்து முடித்துவிடலாம், ‘நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள்’ அதைப் படிப்பதன்மூலம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுமளவுக்கு போதுமானதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.”—அப். 13:48.
5 “அறிவு புத்தகத்தை பயன்படுத்தி எவ்வாறு சீஷர்களை உண்டுபண்ணுவது” என்ற ஜூன் 1996, நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கை, இந்த இலக்கைப் பற்றி சொன்னது: “படிப்பை அவசரமாக நடத்தாமல், மாணாக்கரின் சூழ்நிலை, கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவற்றைச் சார்ந்து ஒரு மணிநேரம் அடங்கிய படிப்புப்பகுதிகளில் பெரும்பாலான அதிகாரங்களை முடித்துவிடலாம். ஒவ்வொரு வாரமும் கற்பிப்பவரும் மாணாக்கரும் தவறாது படித்தால் மாணாக்கர்கள் நல்ல முன்னேற்றத்தைச் செய்வர்.” அந்தக் கட்டுரை தொடர்ந்து சொன்னதாவது: “ஒரு நபர் அறிவு புத்தகத்தை படித்து முடித்தவுடன், கடவுளைச் சேவிப்பதில் அவருக்கு இருக்கும் உண்மைத்தன்மையும் ஆழமான அக்கறையும் வெளிப்படையாகத் தெரிய வரும் என்பதை எதிர்பார்க்க வேண்டும்.” அக்டோபர் 1996 (ஆங்கிலம்), நம் ராஜ்ய ஊழியத்தின் கேள்விப் பெட்டி விளக்கியது: “ஒரு சராசரி மாணாக்கர் ஓரளவு குறைவான காலத்திலேயே யெகோவாவை சேவிக்க ஞானமாக தீர்மானம் எடுக்க முடியும். இதைச் செய்வதற்கு தேவையான அறிவைப் பெற, திறமையாக படிப்பு நடத்துபவர் அவருக்கு உதவிசெய்ய முடியும்.”
6 அறிவு புத்தகம் நல்ல பலன்தருகிறது: அறிவு புத்தகத்தைப் படித்தபோது தான் எப்படி உணர்ந்தார் என்று ஓர் இளம் பெண் தன் முழுக்காட்டுதல் சமயத்தில் சொன்னார். என்றும் வாழலாம் புத்தகத்தில் கொஞ்ச நாளாக படித்து வந்தார் இவர். அறிவு புத்தகம் வெளிவந்தபோது, இவருக்குப் படிப்பு நடத்தின சகோதரி இந்தப் புதிய புத்தகத்திற்கு படிப்பை மாற்றினார். அவ்வாறு படிப்பை அறிவு புத்தகத்திற்கு மாற்றியபோது, இந்தப் பெண் தான் ஏதாவது தீர்மானம் எடுத்தாக வேண்டும் என்று சீக்கிரத்திலேயே உணர்ந்தார். அன்றிலிருந்து, தான் முன்னேற வேண்டும் முன்னேற வேண்டும் என்ற உணர்வு அவருக்குள் பொங்கியது. இந்த இளம்பெண் இப்போது நம் சகோதரியாக மாறிவிட்டார். அவர் சொல்வதாவது: “அந்த என்றும் வாழலாம் புத்தகம் யெகோவாவின்மீது அன்புகாட்ட உதவியது, ஆனால் இந்த அறிவு புத்தகமோ யெகோவாவுக்கு சேவை செய்யும்படி தீர்மானிக்க உதவியது.”
7 மற்றொரு பெண் எப்படி சத்தியத்தை வேகமாய் படித்தார் என்று பாருங்களேன். வாரத்தில் ஒரு நாள் என இரண்டு தடவை படித்த உடனேயே வட்டாரக் கண்காணியின் விஜயத்தின்போது ராஜ்ய மன்றத்தில் நடந்த ஒரு கூட்டத்திற்கு வந்திருந்தார். அந்த வாரம், அதாவது மூன்றாவது வாரம் படிக்கும்போது, தான் யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதாகவும் முழுக்காட்டுதல் பெறாத சாட்சியாக சேவிக்க விரும்புவதாகவும் வட்டாரக் கண்காணியிடம் சொன்னார். பின்பு, மூப்பர்களையும் சந்தித்து தன் விருப்பத்தைக் கூறினார். இவர் பிரஸ்தாபியாக இருக்க மூப்பர்களும் அங்கீகரித்தார்கள். அடுத்த வாரமே வெளி ஊழியத்திற்கு சென்றுவிட்டார். பைபிள் படிப்பின்மீது இந்தப் பெண்ணுக்கு ரொம்ப ஆர்வம் ஆகிவிட்டதனால், வேலைக்கு லீவுபோட்டு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை படிக்க ஆரம்பித்தார். அதிக நேரம் ஊழியமும் செய்தார். சில சமயங்களில், இவர்கள் இரண்டு அல்லது மூன்று அதிகாரங்களை ஒரே சமயத்தில் முடித்தனர். இந்தப் பெண் தான் படித்த விஷயங்களை தன் வாழ்க்கையில் எல்லா அம்சங்களிலும் பின்பற்ற ஆரம்பித்தார். நான்கே வாரங்களில் அறிவு புத்தகத்தைப் படித்து முடித்து, முழுக்காட்டுதல் பெறும் அளவிற்கு முன்னேறினார்!
8 ஒரு சகோதரியின் கணவர் “சத்தியத்தில் இல்லாதிருந்த விசேஷ கணவர்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவர். இவரிடம் ஒரு சகோதரர் அறிவு புத்தகத்தில் படிக்க விருப்பமா என்று கேட்டார். முதல் படிப்பு முடிந்த உடனேயோ அல்லது அதற்கு பின்பு எந்தச் சமயத்திலும் அவர் தன்னுடைய படிப்பை நிறுத்திக் கொள்ளலாம் என்று அந்தக் கணவரிடம் சொன்னார் சகோதரர். அந்தக் கணவர் தன் பள்ளி படிப்புக் காலங்களில் சரியாகப் படிக்காதவர். கடந்த 20-க்கும் மேலான ஆண்டுகள் மதப் புத்தகங்களை தொட்டுக்கூடப் பார்க்காதவர். இருந்தாலும் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார். அறிவு புத்தகத்தில் படிப்பது பற்றி அவர் என்ன சொன்னார்? அவர் சொன்னதாவது: “இந்தப் புத்தகம் ரொம்ப ஈஸியா இருக்கு. இந்தப் புத்தகத்த வச்சு பைபிள் படிச்சது எவ்வளவு சுவாரஸ்யமா இருந்துச்சு தெரியுமா! இதுல உள்ள விஷயம் ரொம்ப தெளிவாகவும், லாஜிக்கலாகவும் இருந்துச்சு. அதனால அடுத்த ஸ்டடி எப்போ எப்போன்னு ஏங்குவேன். எனக்கு ஸ்டடி எடுத்தவர் சங்கம் கொடுக்கும் போதனை முறைகளை இம்மியும் பிசகாமல் பின்பற்றியதால், நாலே மாதங்களில், யெகோவாவினுடைய ஆவியின் உதவியால், நான் முழுக்காட்டுதல் எடுத்தேன். நாம் சீஷர்களை உருவாக்கும் சேவையில் முழுமூச்சாய் ஈடுபட வேண்டும். ஊழியத்தில் நல்ல ஜனங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். சங்கம் வெளியிட்ட அறிவு புத்தகத்தையோ மற்ற புத்தகங்களையோ பயன்படுத்தி படிப்பை நடத்த வேண்டும். அத்துடன் மிக முக்கியமாக, யெகோவாவின் வழிநடத்துதலுக்காக ஊக்கமாய் ஜெபிக்கவும் வேண்டும். இப்படியெல்லாம் நாம் செய்யும்போது, சீஷர்களை உருவாக்கும் விசேஷித்த நல்வாய்ப்பைப் பெற முடியும்.” மேலே கொடுக்கப்பட்ட அனுபவமெல்லாம் லட்சத்தில் ஒன்றாகத்தான் இருக்கும்! நம்மோடு படிப்பவர்கள் இவ்வளவு சீக்கிரம் சத்தியத்திற்குள் வருவதில்லை.
9 வெவ்வேறு வேகத்தில் முன்னேற்றம்: படிப்பு எடுப்பவரின் திறமையைப் பொருத்தும், படிப்பவரின் திறமையைப் பொருத்தும், படிப்பவர் முன்னேறும் வேகம் மாறுபடலாம். ஆவிக்குரிய வளர்ச்சி மெதுவாகவோ வேகமாகவோ இருக்கலாம். சிலர் சில மாதங்களில் முன்னேறிவிடலாம். சிலர் பல மாதங்கள் எடுக்கலாம். ஒரு நபரின் ஆவிக்குரிய முன்னேற்றம், அவரவருடைய படிப்பு, ஆவிக்குரிய விஷயங்களுக்கு காண்பிக்கும் போற்றுதல், யெகோவாவிடம் இருக்கும் பக்தியின் ஆழம் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடலாம். விசுவாசிகளாக மாறிய அந்தக் காலத்து பெரோயா பட்டணத்தார் தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தனர். அதுபோல நாம் படிப்பு எடுக்கிற எல்லோருமே பைபிளை தினமும் படிக்க “மனோவாஞ்சையாய்” இருப்பதில்லை.—அப். 17:11, 12.
10 நிலைமை இப்படி இருப்பதால், மே 1998, நம் ராஜ்ய ஊழியத்தில் வந்த “தேவை—அதிக பைபிள் படிப்புகள்” என்ற உட்சேர்க்கை, பின்பற்ற முடிந்த இந்த ஆலோசனையைக் கொடுத்தது: “எல்லா பைபிள் மாணாக்கரும் ஒரே விதமாக முன்னேறுகிறதில்லை என்பது உண்மைதான். சிலர் வேறுசிலரைப் போல அந்தளவுக்கு ஆவிக்குரிய மனச்சாய்வு உள்ளவர்களாக இருப்பதில்லை; அல்லது கற்றுக்கொடுக்கப்படும் காரியங்களை எளிதில் கிரகித்துக் கொள்பவர்களாகவும் இல்லை. வேறுசிலர் ஒவ்வொரு வாரமும் ஒரு முழு அதிகாரத்தை முடித்துவிட நேரத்தை ஒதுக்கமுடியாதளவுக்கு மிகவும் பிஸியான வாழ்க்கை வாழ்கிறார்கள். எனவே, சிலருடைய விஷயத்தில், குறிப்பிட்ட சில அதிகாரங்களை முடிப்பதற்கு ஒரு முறைக்கு மேல் படிக்க வேண்டியிருக்கலாம்.”
11 சீஷராக்கும் சேவை செய்வோருக்குத் தேவை சமநிலை: படிப்பவரின் சூழ்நிலைக்கு ஏற்பவும் திறமைக்கு ஏற்பவும் படிப்பின் வேகம் அளவிடப்பட வேண்டும். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் படிப்பு ஆரம்பிக்கும்படி உற்சாகப்படுத்துகிறோம். இதற்கு கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று மாதங்கள் எடுக்கும். பின்னர், அறிவு புத்தகத்தில் படிப்பு ஆரம்பிக்கப்படும். ஜூன் 1996, நம் ராஜ்ய ஊழியத்தில் வந்த உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நாம் அறிவு புத்தகத்தில் படிப்பு நடத்தினால், இதை நடத்தி முடிக்க குறைந்தது ஆறு முதல் ஒன்பது மாதம் எடுக்கும். அறிவு புத்தகத்தில் சற்றுமுன்புதானே படிக்க ஆரம்பித்திருந்த சிலர், தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டுக்கு தங்கள் படிப்பை இடையில் மாற்றியிருக்கின்றனர். இது கடவுளுடைய வார்த்தையினுடைய அடிப்படை சத்தியங்களை சீக்கிரமாக கற்றுக்கொள்ள படிப்பவருக்கு உதவுகிறது. பின்னர், அறிவு புத்தகத்தில் படிப்பு தொடர்ந்தது. அறிவு புத்தகத்தில் படிப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்து, படிப்பவர் நன்றாக முன்னேறி இருந்தால், இந்தப் புத்தகம் படித்து முடித்தவுடன் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைப் படிப்பது நல்லது. மேற்கூறப்பட்ட இரண்டு முறைகளில் எதுவாக இருந்தாலும், படிப்பை வேகமாக முடிக்க வேண்டும் என்பதற்காக, படிப்பவர் தெளிவாக புரிந்துகொள்ளாமலே படிப்பை நடத்தக் கூடாது. படிக்கும் ஒவ்வொருவரும் தான் கற்ற புது சத்தியத்திற்கு கடவுளுடைய வார்த்தையிலிருந்து பலமான அத்தாட்சியைக் கொடுக்க அறிந்திருக்க வேண்டும்.
12 கால ஓட்டத்தில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை உணரும்போது, மற்றவர்கள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள உதவுவது இதுவரை இருந்ததைவிட மிக அவசரமான தேவையாக இருக்கிறது. புதிய வேதப் படிப்புகளை ஆரம்பிக்க தொடர்ந்து ஜெபிப்பதோடு, நம்மோடு இப்போது படித்து வருகிறவர்களுக்காகவும் ஜெபிப்போமாக. “காரிய ஒழுங்குமுறையின் முடிவுவரை சகல நாட்களிலும்” புதியவர்கள் முழுக்காட்டுதல் பெற தொடர்ந்து உதவிசெய்வது நமக்கு அளவில்லா சந்தோஷத்தைத் தரும்.—மத். 28:20, NW.