சகோதரர்களிடத்தில் நன்கு பழகுங்கள்
1 அண்ணன் தம்பியைவிட நெருக்கமாக இருந்து, எப்போதும் அன்பு காட்டி, உண்மையாய் இருந்து, கஷ்ட காலத்தில் உதவ ஓடி வருபவனே உயிர்த்தோழன் என்று பைபிள் விவரிக்கிறது. (நீதி. 17:17; 18:24) நம் சகோதரர் ஒவ்வொருவரிடத்திலும் அன்பு காட்டி, அவர்களிடத்தில் பழக கொஞ்சம் முயற்சி எடுத்தாலே போதும், இத்தகைய உண்மையான நண்பர்களுக்கு நம் சபையில் பஞ்சமே இருக்காது.—யோவா. 13:35.
2 கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்பும் பின்பும் நம் சகோதரர்களிடத்தில் பழக நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. இவ்வாறு அன்போடு கூடி பழகுவதை அனுபவித்து மகிழ, நாம் சீக்கிரமே கூட்டத்திற்கு வந்து, கூட்டம் முடிந்து வெகு நேரம் கழித்து போகலாமே! வயதானவர்கள், அதிக அனுபவமுள்ளவர்கள், சிறுவர்கள், பயந்த சுபாவமுள்ளவர்கள் என்று யாரையும் விட்டுவிடாமல் எல்லா சகோதரர்களோடும் பேசுங்கள்.
3 பேச முந்துங்கள்: சகோதரர்களை பார்த்து வணக்கம் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாதீர்கள். வெளி ஊழியத்தில் ஏற்பட்ட நல்ல அனுபவத்தை பகிர்ந்துகொள்வதன் மூலம், புதிய பத்திரிகையில் வெளிவந்த ஆர்வத்தை தூண்டும் குறிப்பை எடுத்துரைப்பதன் மூலம் அல்லது நடந்து முடிந்த கூட்டத்தைப் பற்றி குறிப்பிடுவதன் மூலம் நீங்களே பேச முந்திக்கொள்ளலாம். சகோதரர்களுடைய அனுபவங்களை அல்லது அவர்கள் கற்கும் விஷயங்களை சொல்லச்சொல்லி, அவற்றை கவனமாக கேட்பதன் மூலம் அவர்களைப் பற்றி நீங்கள் நிறைய தெரிந்துகொள்ள முடியும். ஒருவர் எப்படி யெகோவாவை தெரிந்துகொண்டார் என்று கேட்டாலே போதும், விஷயங்கள் மடைதிறந்த வெள்ளமாய் வெளிவரும். ஒருசில சகோதரர்களிடத்தில் நம் விசுவாசத்தை பலப்படுத்தவல்ல அனுபவங்கள் இருக்கும். சிலர் நாம் நினைத்துக்கூட பார்த்திராத கஷ்டங்களை இன்றும் பொறுமையோடு சகித்துக்கொண்டிருக்கலாம். இதைப் புரிந்துகொண்டால், நாமும் உண்மையான நண்பர்களாய் இருந்து, மற்றவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, தேவைகளுக்கு ஏற்றார்போல் நடந்துகொள்ள உதவியாக இருக்கும்.
4 ஒருவரோடு ஒருவர் நட்போடு பழகுங்கள்: ஒரு சகோதரிக்கு தன்னுடைய பெண் குழந்தை இறந்த பிறகு, உயிர்த்தெழுதலைப் பற்றி வரும் பாடலை பாட முடியாதளவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அவர் நினைவுகூருகிறார்: “எதிர் வரிசையில் இருந்த ஒரு சகோதரி நான் அழுவதை பார்த்துவிட்டார். அவர் என்னிடம் வந்து, கையால் என்னை அரவணைத்தபடி மீதிப் பாடலை என்னோடு சேர்ந்து பாடினார். அப்போது நம் சகோதர சகோதரிகளின் அன்பை முழுமையாக உணர்ந்தேன். நமக்கு உதவி கிடைக்கும் இடம் ராஜ்ய மன்றம்தான் என்பதை அறிந்தபோது, நமக்காக ஏற்பாடு செய்யப்படும் இத்தகைய கூட்டங்களுக்காக நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.” நம் சகோதரர்களுக்குத் தக்க சமயத்தில் ஆறுதல் அளித்து, எல்லா நேரத்திலும் உற்சாகம் தந்து நாம் அவர்களோடு நட்போடு பழக வேண்டும்.—எபி. 10:24, 25.
5 இந்தப் பழைய உலகில் கொடுமை அதிகரித்துக்கொண்டே போகையில், நம் சகோதரர்களோடு நெருக்கமாக பழக உறுதியோடு இருப்போமாக. இப்படியாக, களங்கமில்லாமல் ஒருவரைவொருவர் பரஸ்பரமாக உற்சாகப்படுத்தினால், அது எல்லாருக்கும் ஆசீர்வாதமாக முடியும்.—ரோ. 1:10, 11.