மீண்டும் மீண்டும் சந்தியுங்கள்
1 யாரோ ஒருவர் உங்களிடம் வந்து நற்செய்தியைச் சொன்னபோது, முதல்தடவையே வேதப்படிப்புக்கு ஒத்துக்கொண்டீர்களா? இல்லையெனில் நீங்கள் வேதப்படிப்புக்கு ஒத்துக்கொள்ளும் வரை மீண்டும் மீண்டும் உங்களை சந்தித்ததற்காக யெகோவாவின் சாட்சிகளுக்கு நீங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறீர்கள். உங்கள் பிராந்தியத்தில் திரும்பத் திரும்ப ஊழியம் செய்யும்போது இதை சற்று நினைவில் வைத்திருப்பது நல்லது.
2 மக்களின் வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. அவர்களது வாழ்க்கையில் புதுப்புது பிரச்சினைகளும் சூழ்நிலைகளும் தலைதூக்குகின்றன. தங்களது சமுதாயத்திலோ உலக முழுவதிலுமோ, மனதை உலுக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றியே கேள்விப்படுகின்றனர். அவர்களுக்கு பெருமளவில் பணமுடக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஏதாவது ஒரு நோயால் பீடிக்கப்பட்டிருக்கலாம்; குடும்பத்தில் யாராவது இறந்தும் போயிருக்கலாம். இப்படிப்பட்ட துயர்மிகு சந்தர்ப்பங்களில், இவையெல்லாம் ஏன் சம்பவிக்கின்றன என்பதை அறிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டலாம். ஆகவே, நாம் சந்திக்கும் மக்களின் மனதை வாட்டி வதைக்கும் பாரமான விஷயங்கள் என்ன என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பின்பு ஆறுதலளிக்கும் செய்தியை அவர்களிடம் சொல்ல வேண்டும்.
3 இது மீட்கும் பணி: பேரழிவு ஒன்று ஏற்பட்டுவிட்டதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்; மீட்புப் பணியாளர்கள் களத்தில் இறங்கி ஆட்களை மீட்கின்றனர். அவர்களில் சிலர் மீட்கும் பகுதிகளில் எப்பொழுதாவது அரிதாக ஓரிரண்டு பேரை மட்டுமே மீட்க முடிகிறது; அதே சமயத்தில் மற்ற பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களோ, நிமிடத்துக்கு நிமிடம் ஆட்களை மீட்கின்றனர். இப்பொழுது கேள்வி: தங்களால் அரிதாகவே ஆட்களை மீட்க முடிகிறது என்பதற்காக மீட்புப் பணியாளர்கள் சலிப்புற்று தங்கள் கைகளை நெகிழவிட்டு வேலையை நிறுத்திவிடுவார்களா? பதில்: மாட்டார்கள் என்பதே. அவ்வாறே நம்முடைய மீட்கும் பணியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஒவ்வொரு வருடமும் ‘மிகுந்த உபத்திரவத்தை’ தப்பிப்பிழைக்க விரும்பும் லட்சக்கணக்கானவர்கள் மீட்கப்படுகின்றனர்.—வெளி. 7:9, 14.
4 “யெகோவாவின் பெயரில் வழிபடுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.” (ரோ. 10:13-15, NW) நாம் ஒவ்வொருவரும் ஊழியத்தில் அயராது உழைக்க இந்த வசனம் நம் மனதில் வேரூன்றியிருக்க வேண்டும். நம்முடைய பிராந்தியத்தில் நாம் முதல் தடவையாக ஊழியம் செய்தபோது அநேகர் சிறுபிள்ளைகளாக இருந்தனர். ஆனால், இன்றோ வளர்ந்து தங்களுடைய சொந்த எதிர்காலத்தையும் நோக்கத்தையும் கவலையோடு சிந்திக்குமளவுக்கு பெரியவர்களாகிவிட்டனர். மொத்தத்தில் சத்தியத்திற்கு யார் செவிசாய்ப்பார்கள் மாட்டார்கள் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. (பிர. 11:6) அன்று சத்தியத்தை எதிர்த்தவர்கள் இன்று புன்னகையோடு வரவேற்கின்றனர். மக்களை நியாயம் தீர்ப்பது நமது வேலையல்ல. மாறாக அவர்கள் சத்தியத்தை கேட்க தொடர்ந்து வாய்ப்பளித்து, அழியப்போகும் இந்தப் பழைய உலகிலிருந்து அவர்களை மீட்க வேண்டும். இயேசுவின் ஆரம்ப சீஷர்களைப்போல நாமும் மக்களிடம் ‘தொடர்ந்து செல்லவேண்டும்.’ மேலுமாக ராஜ்ய செய்திக்கான அவர்களுடைய ஆவலைத் தூண்டவேண்டும்.—மத். 10:6, 7, NW.
5 பிரசங்கிப்பதற்கு வாய்ப்பென்னும் கதவு நமக்கு முன்பாக இன்னும் திறந்தே இருக்கிறது. இது யெகோவாவின் இரக்கத்தின் வெளிக்காட்டு என்பதில் சந்தேகமேயில்லை. (2 பே. 3:9) மற்றவர்கள் சத்தியத்தின் செய்தியை மீண்டும் மீண்டும் கேள்விப்பட நாம் சந்தர்ப்பம் அளிக்கையில், கடவுளுடைய அன்பு எப்பேர்ப்பட்டது என்பதை சிறப்பித்துக்காட்டுகிறோம். இவ்வாறு நாம் கடவுளை துதிக்கிறோம்.