நாம் யெகோவாவால் போதிக்கப்படுகிறோம்
1 தெய்வீக வழிநடத்துதலின் கீழ், 233 தேசங்களில் ஓர் உலகளாவிய போதனாத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த உலகம் அளிக்கும் எந்த பயிற்சியும் இதற்கு ஈடாகாது. நமது மகா போதகராகிய யெகோவா, இப்போது நமக்கு பிரயோஜனமாயிருக்கிறவற்றையும், நித்திய ஜீவனைப் பெற தேவையானவற்றையும் நமக்கு போதிக்கிறார்.—ஏசா. 30:20; 48:17.
2 தெய்வீக பயிற்சிப் பள்ளி: யெகோவாவின் மக்களுடைய நன்மைக்காக தற்போது இயங்கி வரும் பயிற்சிப் பள்ளிகளை பற்றி சிந்தித்துப் பாருங்கள். வாரந்தோறும் சுமார் 87,000 சபைகளில் நடத்தப்படும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி, இலட்சக்கணக்கான ராஜ்ய பிரஸ்தாபிகளை, நற்செய்தியின் திறம்பட்ட ஊழியர்களாக பயிற்றுவிக்கிறது. அந்தப் பள்ளியில் நீங்களும் ஒரு மாணவரா? இரண்டு வார பயனியர் சேவை பள்ளியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானோரில் நீங்களும் ஒருவரா? ஒழுங்கான பயனியர்களுக்கான மணிநேரத்தில் குறைப்பு, ஒருவேளை அநேகர் பயனியர் செய்யவும் அந்த பள்ளியில் கலந்துகொள்ள தகுதிபெறவும் உதவி செய்யும். உலகம் முழுவதும் பிரதான மொழிகளில் நடத்தப்படும் இரண்டு மாத ஊழியப் பயிற்சி பள்ளி, திருமணமாகாத மூப்பர்களையும், உதவி ஊழியர்களையும் கூடுதலான தேவராஜ்ய பொறுப்புக்களை ஏற்க உதவி செய்கிறது. தவறாமல் அவ்வப்போது, மூப்பர்களும் உதவி ஊழியர்களும் ராஜ்ய ஊழியப் பள்ளி மூலம் விசேஷ போதனைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
3 பேட்டர்சன், நியூ யார்க்கில் உள்ள காவற்கோபுர கல்வி மையத்தின் கட்டடங்கள், மேம்பட்ட தேவராஜ்ய பயிற்றுவிப்பை அளிக்கும் மூன்று விசேஷ பள்ளிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் ஐந்துமாத பயிற்சி, ஊழியர்களை அன்னிய தேசங்களிலே மிஷனரி வேலைக்காக பயிற்றுவிக்கிறது. உலகமுழுவதிலும் இருக்கும் கிளை அலுவலக ஆலோசனைக் குழுவின் அங்கத்தினர்கள், கிளை ஒழுங்கமைப்பு சம்பந்தமாக இரண்டு மாத பயிற்சி பெறுகிறார்கள். மே 1999-ல் பயண கண்காணிகளுக்கான புதிய இரண்டு மாத பயிற்சி, ஐக்கிய மாகாணங்களிலிருந்தும் கனடாவிலிருந்தும் வந்த 48 மாணாக்கர்களை கொண்டு துவங்கியது. ஆகமொத்தத்தில், இப்படிப்பட்ட பல்வேறு பள்ளிகளின் மூலமாக யெகோவா அளிக்கும் பயிற்சியினால், அவருடைய எல்லா ஊழியர்களும் நல்ல பலன்களை பெற்றுக்கொள்கிறார்கள்.
4 என்ன நோக்கத்திற்காக போதனை? ஆளும் குழுவின் அங்கத்தினர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நீதிமொழிகள் 1:1-4-ல் சொல்லியிருக்கிற பிரகாரம் எல்லா இடங்களிலும் இருக்கும் யெகோவாவின் ஜனங்களை முதிர்ச்சியெனும் சிறந்த நிலையை எட்ட செய்யும் விதத்திலேயே எங்கள் தற்போதைய கல்வித்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.” யெகோவா தொடர்ந்து நம் ஒவ்வொருவருக்கும் “கல்விமானின் நாவைத்” தருவாராக.—ஏசா. 50:4.