ஏப்ரல்—நற்கிரியைகளைச் செய்ய சுறுசுறுப்பாய் இருக்க வேண்டிய மாதம்!
1 அநேகர் வாழ்ந்துவரும் ஒரு பகுதியை நோக்கி புயல் ஆவேசத்துடன் வீசப்போகிறதென்றால், அதைப் பற்றி மக்களுக்கு எவ்வளவு அவசர அவசரமாக அறிவிக்க வேண்டும். புயல் அவ்விடத்தை நெருங்க நெருங்க எச்சரிப்பு செய்தி காட்டுத் தீயைப் போல பரவ வேண்டாமா? ஏனென்றால் அங்குள்ள எல்லா உயிர்களும் ஆபத்தில் இருக்கின்றன. ஒருவேளை முன்பு கொடுக்கப்பட்ட அறிவிப்பை சிலர் கேட்டிருக்க மாட்டார்கள். வேறு சிலர் ஒருவேளை அந்த அறிவிப்பை கேட்டும், அதை அவ்வளவு சீரியஸாக எடுத்து செயல்படாமல் இருந்திருப்பார்கள். இது போன்றுதான் தெய்வீக எச்சரிப்பின் செய்தியும். கடவுளுடைய நீதியான கோபம், இந்த பொல்லாத உலகத்தை, இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்போகிறது. அந்த பெரும் “சுழல்காற்று” எல்லாவற்றையும் அழிப்பதற்கு முன்பு அனைவரையும் எச்சரிக்கும்படி நமக்கு கட்டளை இடப்பட்டுள்ளது. (நீதி. 10:25) கோடிக்கணக்கான மக்களின் நித்தியகால வாழ்க்கை இப்போது ஆபத்தில் இருக்கிறது! இந்த எச்சரிப்பு மணி நிச்சயம் ஒலிக்கப்பட வேண்டும். அதனால், நாம் “நற்கிரியைகளைச் செய்ய [“சுறுசுறுப்பானவர்களாக,” NW] பக்திவைராக்கியமுள்ளவர்களாக” இருக்க வேண்டும்.—தீத். 2:11-14.
2 ஊழியத்தில் சுறுசுறுப்பாய் செயல்பட, நினைவு ஆசரிப்பு சமயத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளும்படி யெகோவாவின் மக்கள் அநேக ஆண்டுகளாக உற்சாகப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றனர். 1939-ன் வசந்த காலத்தில், நம் ராஜ்ய ஊழியம் பிரசுரிக்கப்படுவதற்கு முன்பு வெளிவந்துகொண்டிருந்த இன்ஃபார்மென்ட் இவ்விதமாக சாட்சிகளை உற்சாகப்படுத்தியது: “வசந்த காலத்தில் நல்ல சீதோஷண நிலை இருக்கும் என்பதால், வெளி ஊழியத்தில் பிரஸ்தாபிகள் செலவிடும் நேரம் இருமடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்; அதேபோல பயனியர்களின் நேரமும் குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகரிக்கும். ஏப்ரல் மாதத்தில் ஐந்து சனி, ஞாயிறுகள் உள்ளன. அந்த ஒவ்வொரு சனி, ஞாயிறையும் . . . சாட்சி கொடுப்பதற்கான சிறந்த சமயமாக ஆக்குங்கள்.” இதுவே 60 வருடங்களுக்கு முன்பு சகோதரர்களுக்காக வைக்கப்பட்ட வைராக்கியமுள்ள இலக்கு! 1939-ல் இருந்ததைப் போலவே இவ்வருடத்திலும் ஏப்ரல் மாதத்தில் ஐந்து சனி, ஞாயிறுகள் உள்ளன. இந்த மாதத்திற்கான உங்களுடைய திட்டம் என்ன? இந்த வருடம், ஏப்ரல் மாதத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென காலண்டரில் குறித்து வைத்திருக்கிறீர்கள்? இந்த விசேஷ மாதத்தின்போது நம் ஆவிக்குரிய நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன; ஆகவே மற்ற யெகோவாவின் ஜனங்களுடன் சேர்ந்து நீங்களும் நற்கிரியைகளை செய்வதில் முழு மூச்சுடன் ஈடுபட இப்போதே திட்டமிடுங்கள்.
3 எதை சாதிக்க விரும்புகிறோம்: 2000-ம் ஆண்டின் மிக முக்கியமான நாள் இந்த மாதத்திலேயே வருகிறது. இயேசுவின் மரண நினைவு ஆசரிப்பு நாளான ஏப்ரல் 19-ம் தேதியே அது. நினைவு ஆசரிப்புக்கு நம்மால் முடிந்த எல்லோரையும் அழைத்துவர நாம் விசேஷ முயற்சி எடுப்போமாக. சென்ற மாதம் சொல்லப்பட்ட விதமாக, நினைவு ஆசரிப்புக்கு யாரெல்லாம் வர முடியும் என ஒரு பட்டியலை தயார் செய்யுங்கள், பின்பு அவர்களுள் ஒருவரையும் விட்டுவிடாதபடி கவனமாயிருங்கள். செயலற்ற பிரஸ்தாபிகள், பைபிள் மாணாக்கர்கள், மறுசந்திப்புகள், முன்பு உங்களுடன் படித்தவர்கள், உடன் வேலை செய்பவர்கள், பள்ளி சகாக்கள், அயலகத்தார், உறவினர், உங்களுக்கு தெரிந்த மற்றவர்கள் என எல்லோரையும் அந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள். வாகன வசதி உள்ளவர்கள் அவ்வாறு இல்லாத, தேவையிலிருப்போருக்கு அன்பாக உதவிசெய்யலாம். அந்த நினைவு ஆசரிப்பின்போது, அங்கு வருவோர் அனைவரையும் வரவேற்கும் சிலாக்கியத்தை நாம் எல்லோரும் எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் வந்ததில் நமக்கு சந்தோஷம் என அவர்கள் உணரும்படி செய்யலாம். நினைவு ஆசரிப்பிற்கு பிறகு, ஆர்வமுள்ள ஆட்களுக்கு கூடுதலான ஆன்மீக உதவி அளிக்கலாம்.
4 யெகோவா நமக்கு செய்திருக்கும் எல்லா நன்மைகளுக்கும் நாம் போற்றுதலை காட்ட, நினைவு ஆசரிப்பிற்கு முன்பும் பின்பும் நாம் ‘நற்கிரியைகளைச் செய்ய சுறுசுறுப்பாய்’ செயல்படுவதே சிறந்த வழியாகும். பகல் வெளிச்சம் வெகுநேரம் வரை இருக்கும் என்பதால், நம்மில் அநேகர் பிரசங்கிப்பு வேலையில் நம்முடைய முயற்சிகளை அதிகரிக்கலாம். நீங்கள் ஒருவேளை துணைப் பயனியர் ஊழியம் செய்தால், ஊழியத்தில் 50 அல்லது அதற்கும் அதிகமான மணிநேரத்தை செலவிட உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யலாம். (மத். 5:37) மாதத் துவக்கத்தில் நீங்கள் போட்ட அட்டவணையை நெருக்கமாக பின்பற்ற முயலுங்கள். (பிர. 3:1; 1 கொ. 14:40) அவ்வாறு பயனியர் ஊழியம் செய்ய முடியாவிட்டால், எல்லா பயனியர்களை உற்சாகப்படுத்துவதன் மூலமும், அவர்களுடன் ஊழியத்தில் கலந்து கொள்வதன் மூலமும் அவர்களுக்கு ஆதரவைக் காண்பிக்கலாம். (2 இராஜாக்கள் 10:15, 16-ஐ ஒப்பிடுக.) ஏப்ரல் மாதத்தில், வைராக்கியத்துடன் நாம் சத்திய விதைகளை விதைத்தால், அதிக சந்தோஷத்தையும் யெகோவா தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தையும் நாம் எதிர்பார்க்கலாம். (மல். 3:10) துணைப் பயனியர் அல்லது ஒழுங்கான பயனியர் ஊழியத்தை தொடர்ந்து செய்ய இது படிக்கல்லாக அமையக்கூடும். ஏப்ரலில் நாம் பெற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய உந்துவிப்பு இனிவரும் மாதங்களிலும் ஒழுங்கான ராஜ்ய பிரசங்கிகளாக தொடர்ந்து இருப்பதற்கு உதவட்டும்.
5 ஆயிரக்கணக்கான யெகோவாவின் மக்கள் இந்த மாதத்தில், கூடுதலான வீட்டு பைபிள் படிப்புகளை துவங்குவர் என்பதில் சந்தேகமே இல்லை. நீங்களும் ஒரு படிப்பை துவங்க ஆசைப்படுகிறீர்களா? பைபிள் படிப்பிற்காக நீங்கள் குறிப்பாக ஜெபியுங்கள், உங்கள் ஜெபத்திற்கிசைய செயல்படுங்கள். போதிப்பதற்காக நேர்மை இருதயமுள்ளவர்களை கண்டுபிடிக்க நீங்கள் கேட்கும் தாழ்மையான விண்ணப்பத்திற்கு யெகோவா பதிலளிப்பார் என்பதில் நிச்சயமாய் இருங்கள்.—1 யோ. 3:22.
6 உரையாடல்களை துவங்க வெளி ஊழியத்தில் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சில அணுகுமுறைகளை கவனியுங்கள். நீங்கள் ஒருவேளை இவ்வாறு ஆரம்பிக்கலாம்: “இன்று இளைஞர்கள் செய்யும் குற்றங்களுக்கும் வன்முறைகளுக்கும், பேய்த்தனமான நடவடிக்கைகள்தான் காரணமா அல்லது பெற்றோரின் தவறான வளர்ப்புமுறை காரணமா?” பதில் சொல்ல அனுமதியுங்கள். அவர் அப்படி “பேய்த்தனமான நடவடிக்கை” என சொன்னால், வெளிப்படுத்துதல் 12:9, 12-ஐ வாசித்து, இவ்வுலகத்தில் குழப்பத்தையும் கலகத்தையும் ஏற்படுத்துவதில் சாத்தானுக்குள்ள பங்கை வலியுறுத்திக் காட்டுங்கள். பின்பு, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் பாடம் 4-ற்கு திருப்பி, பிசாசு எங்கிருந்து வந்தான் என வீட்டுக்காரர் எப்போதாவது யோசித்திருக்கிறாரா என கேளுங்கள். பின்பு முதல் இரண்டு பாராக்களை வாசித்து கலந்தாலோசியுங்கள். பள்ளிகளில் நடக்கும் வன்முறைகளுக்கு “பெற்றோரின் தவறான வளர்ப்புமுறை”தான் காரணம் என ஒருவேளை அவர் சொன்னால், அப்போது 2 தீமோத்தேயு 3:1-3-ஐ வாசித்து இந்த பிரச்சினைகளுக்கு காரணமாயிருக்கும் குணங்களை சுட்டிக்காட்டுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை பாடம் 8-ற்கு திருப்பி, பாரா 5-ஐ வாசித்து கலந்தாலோசிப்பை தொடருங்கள். நீங்கள் மீண்டும் அவரை சென்று சந்திக்க அவர் ஒத்துக்கொண்டால், அந்த நபருடன் பைபிள் படிப்பை ஆரம்பிக்க வழிவகுக்கிறீர்கள் என்று அர்த்தம். அடுத்தமுறை அவரை சந்திக்கும்போது, அவர் படிக்கும் விஷயங்களைக் குறித்து தெரிந்துகொள்ள ஆர்வமுடைய மற்ற யாரையாவது அவருக்கு தெரியுமா என அவரிடமே கேளுங்கள்.
7 ஏப்ரலின்போது ‘நற்கிரியைகளைச் செய்வதில் சுறுசுறுப்பாய்’ இருப்பதற்கான மற்றொரு வழி பிரசங்கிப்பின் வெவ்வேறு வழிமுறைகளில் பங்கேற்பது. பூங்காவிலோ, வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலோ பிரசங்கிப்பதைக் குறித்து நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பஸ் ஸ்டான்டில் அல்லது இரயில்வே ஸ்டேஷனில்? அல்லது தொலைபேசி மூலமாகவோ, தெருக்களிலோ, வியாபார ஸ்தலங்களிலோ சாட்சி கொடுப்பதைப் பற்றி என்ன, அங்கு நீங்கள் முயற்சி செய்து பார்க்க விரும்புகிறீர்களா? உங்கள் மனதில் அலைபாயும் இந்த எண்ணங்களை ஏன் இந்த மாதம் நிஜமாக்கக்கூடாது? அதற்கு தேவையான தைரியத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள யெகோவா நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வார். (அப். 4:31; 1 தெ. 2:2) ஊழியத்தின் இந்த அம்சங்களில் அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபியுடனோ பயனியருடனோ வேலை செய்ய நீங்கள் ஒருவேளை நேரம் ஒதுக்கலாம்.
8 சாட்சி கொடுக்கும் வேலையில் தன்னுடைய பங்கை அதிகரிக்க விரும்பும் எவரும் சந்தர்ப்ப சாட்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு நபருடன் நட்போடு பேசி அவரை சுவாரஸ்யமான கலந்தாலோசிப்பில் உட்படுத்த வேண்டியதே. முதலாவது, பொதுவான விஷயங்களைப் பற்றி அவருடன் பேசுங்கள், ஒருவேளை பாரா 6-ல் கொடுக்கப்பட்டிருக்கும் அணுகுமுறைகளை பயன்படுத்தலாம். உங்களுக்கு கொஞ்ச நேரம் கிடைத்தால்கூட அதை ஞானமாக பயன்படுத்த முயலுங்கள், இல்லையென்றால் உங்கள் பொன்னான நேரம் வீணாகிவிடும். ஒருவேளை அது ஐந்து நிமிடங்களாகட்டும், பத்து நிமிடங்களாகட்டும் அல்லது கால்மணி நேரமாகக்கூட இருக்கட்டுமே, ஏன் அந்த கொஞ்ச நேரத்தை சந்தர்ப்ப சாட்சியில் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தக்கூடாது?
9 ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம்: 1999-2000 “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை” மாவட்ட மாநாட்டின் நாடகத்தில் குறிப்பிடப்பட்ட அந்த வலிமைவாய்ந்த முக்கிய குறிப்புகளை உங்கள் மனத்திரையில் கொஞ்சம் ஓட்டிப்பாருங்கள். ஆவிக்குரிய ஆஸ்தியை மதித்தல் என்பதே அந்த நாடகத்தின் தலைப்பு. யாக்கோபு, ஏசா இவர்கள் இருவருக்குமிடையே இருந்த வித்தியாசங்களை நாம் கவனமாக சிந்திக்கும்படி இந்த நாடகம் நம்மை தூண்டியது அல்லவா! தனக்கும் யாக்கோபைப் போலவே ஆவிக்குரிய விஷயங்களில் அக்கறை இருக்கிறது என்று ஏசா சொன்னான், ஆனால் அவனுடைய செயல்களோ அவ்வாறு இல்லை. (ஆதி. 25:29-34) அது ஒரு கடுமையான எச்சரிப்பு அல்லவா! யெகோவாவின் ஆசீர்வாதத்திற்காக நாம் யாக்கோபைப்போல போராட, ஏன் சண்டையும்போட தயாராயிருப்போமாக. (ஆதி. 32:24-29) ஆவிக்குரிய ஆஸ்தியை ஒருபோதும் அற்பமாய் நினைத்துவிடாமல், நம்முடைய வைராக்கியத்தை அல்லது சுறுசுறுப்பை புதுப்பித்துக்கொள்ள நாம் ஏன் இந்த ஏப்ரல் மற்றும் அதைத் தொடர்ந்துவரும் மாதங்களை பயன்படுத்தக்கூடாது?
10 “கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது: அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது.” (செப். 1:14) ராஜ்ய நற்செய்தி இப்போதே ஒலிக்கப்பட வேண்டும். உயிர்கள் ஆபத்தில்! யெகோவாவின் மக்களாக நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து “நற்கிரியைகளைச் செய்ய சுறுசுறுப்பாய்” இருக்கிறோம் என்பதை காட்டுவோம். அவ்வாறு நாம் ஊழியத்தில் இந்த மாதம் சுறுசுறுப்பாக ஈடுபடப்போவதால் இது விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்ட மாதமாக ஆகட்டும்.
[பக்கம் 4-ன் பெட்டி]
நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்
இந்த வருட நினைவு ஆசரிப்பு ஏப்ரல் 19, புதன்கிழமை அன்று வருகிறது. பின்வரும் காரியங்களுக்கு மூப்பர்கள் கவனம் செலுத்த வேண்டும்:
◼ கூட்டத்திற்கான நேரத்தை நிர்ணயிக்கையில், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகே சின்னங்கள் சுற்றுமுறையில் அனுப்பப்படுமாறு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
◼ ஆசரிப்பின் சரியான நேரத்தையும் இடத்தையும் பற்றி பேச்சாளர் உட்பட எல்லாருக்கும் தெரிவிக்க வேண்டும்.
◼ தகுந்த அப்பமும் திராட்ச ரசமும் பெற்று தயாராய் வைக்க வேண்டும்.—பிப்ரவரி 15, 1985, காவற்கோபுரம் (ஆங்கிலம்) பக்கம் 19-ஐக் காண்க.
◼ பிளேட்டுகள், கிளாஸ்கள், பொருத்தமான மேஜை, மேஜை விரிப்பு ஆகியவற்றை மன்றத்திற்கு கொண்டுவந்து முன்னதாகவே அவற்றிற்குரிய இடத்தில் வைக்க வேண்டும்.
◼ ராஜ்ய மன்றத்தை அல்லது கூட்டம் நடத்தும் இடத்தை முன்னதாகவே நன்கு சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்.
◼ அட்டண்டன்ட்களையும் பரிமாறுபவர்களையும் தெரிந்தெடுத்து, அவர்களுடைய பொறுப்புகளையும் அவற்றை எவ்வாறு செய்ய வேண்டுமென்றும் அவர்களுக்கு ஆலோசனை கொடுங்கள்.
◼ வியாதிப்பட்ட அல்லது ஆஜராக முடியாத அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் யாராவது இருந்தால், அவர்களுக்கு நினைவு ஆசரிப்பு சின்னங்களை பரிமாறுவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
◼ ஒரே ராஜ்ய மன்றத்தை ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் உபயோகிக்க திட்டமிட்டிருந்தால் சபைகளிடையே நல்ல ஒத்திசைவு அவசியம். அப்போதுதான், மன்றத்தின் நுழைவாயிலிலோ, வெளியே இருக்கும் பொது சாலையிலோ, வாகனங்கள் நிறுத்துமிடங்களிலோ தேவையில்லாமல் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.