“சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது”
1 சகோதர சகோதரிகளாக நாம் ஒருவரோடு ஒருவர் பழகுகையில், மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் நல்லதையே செய்ய வேண்டும். அவர்களுடைய ஆவிக்குரிய நலனை மனதில் வைத்து செயல்பட வேண்டியதையே இது அர்த்தப்படுத்துகிறது. நாம் செய்யும் எந்த ஒரு காரியமுமே நம் சகோதரர்களுக்கு இடறலாக இருக்கக் கூடாது. உதாரணமாக, ஒரு சேல்ஸ் ரெப்ரஸண்டேடிவாகவோ அல்லது சர்வீஸ் மேனாகவோ வேலை செய்கிறோமென்றால், தொழிலை முன்னேற்றுவிக்க சகோதரர்களை ஆதாயப்படுத்த நினைக்கக் கூடாது.—2 கொ. 6:3, பிலி. 1:9, 11.
2 உடன் கிறிஸ்தவர்களை எப்படியும் வாடிக்கையாளர்களாக ஆக்கிவிடலாம் என்ற எண்ணத்தோடு பல வியாபாரங்களில் சிலர் காலை விடுகின்றனர். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையுமே உங்களுடைய வாடிக்கையாளராக கருதுங்கள் என சில வியாபார ஸ்தாபனங்கள் தங்களுடைய சேல்ஸ் ரெப்ரஸண்டேடிவ்களை ஊக்குவிக்கின்றன. இதில், உங்களுடைய மதத்தைச் சேர்ந்தவர்களையும் விட்டுவிடாதீர்கள் என அவை வலியுறுத்துகின்றன. எனவே, சில சகோதரர்கள் சாட்சிகளில் பலரை வீட்டிற்கு அழைக்கின்றனர். காபி அல்லது டீ பரிமாறிய பிறகு, தங்கள் வியாபாரத் திட்டங்களைப் பற்றி நாசூக்காக பேசுகின்றனர். இவ்விதமாக ஏதாவது ஒரு வியாபாரத்தில் உட்படுத்த முயலுகின்றனர். இன்னும் சிலர், உடன் கிறிஸ்தவர்கள் கேட்காமலேயே தங்கள் வியாபாரப் பொருட்களையும் புரோஷர்களையும் இன்டர்நெட்டில் தகவல்களையும் கேஸட்டுகளையும் கொடுத்து தங்கள் வியாபாரத்தை பெருக்க முயலுகின்றனர். இவ்விதமாக, சபையிலிருக்கும் சகோதரர்களைத் தங்கள் ஆதாயத்துக்காக ஒரு கிறிஸ்தவன் பயன்படுத்திக் கொள்ளலாமா? கூடவே கூடாது!—1 கொ. 10:23, 24, 31-33.
3 சகோதரர்களே ஜாக்கிரதை! கிறிஸ்தவ சகோதரன் யாரோடும் சேர்ந்து எந்த வியாபாரத்திலுமே ஈடுபடக்கூடாது என்பதை இது அர்த்தப்படுத்தவில்லை. அது ஒவ்வொருவருடைய சொந்த விஷயம். என்றாலும், பேராசையை தூண்டும் வியாபாரத் திட்டங்களை சிலர் துவக்குகின்றனர். இந்தத் திட்டங்களில் தங்கள் உடன் விசுவாசிகளை பார்ட்னராக ஆகும்படி அல்லது முதலீடு செய்யும்படி தூண்டுகின்றனர். இவற்றில் அநேகம் திவாலாகி, லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தில் முடிவடைகின்றன. சீக்கிரத்தில் ‘குபேரனாகிவிட’ வேண்டும் என்கிற ஆசையில் ஒருவேளை சிலர் இப்படிப்பட்ட வியாபாரத் திட்டங்களில் சேரலாம். இது அவர்களுடைய சொந்த தீர்மானமாக இருந்தாலும், அத்திட்டங்கள் தோல்வியடையும்போது அவற்றை ஒழுங்கமைத்தவர் பொறுப்பை கைகழுவி விடக்கூடாது. தான் மேற்கொள்ளும் திட்டம் வெற்றி அடையாவிட்டால், உடன் கிறிஸ்தவர்களுடைய ஆவிக்குரிய, பொருளாதார நலனை அத்திட்டம் எந்தளவு பாதிக்கும் என்பதை அவர் முன்னமே கவனமாக ஆராய வேண்டும். சபையில் பொறுப்புள்ள ஸ்தானங்களில் இருக்கும் கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். ஏனென்றால், சபையார் அவர்கள்மீது மரியாதையையும் நம்பிக்கையையும் வைத்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கைக்கு ஏதும் பங்கம் ஏற்படாதபடி அவர்கள் நடந்துகொள்ள வேண்டும். அப்படி ஏதும் ஏற்பட்டால், சபையில் பொறுப்புகளை அவர்கள் இழக்க நேரிடும்.
4 ‘சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்பட வேண்டுமென்பதே’ நம் குறிக்கோள். (1 கொ. 14:26) வியாபாரத் திட்டங்களை அறிமுகப்படுத்தவோ அல்லது முன்னேற்றுவிக்கவோ சபையை பயன்படுத்தக் கூடாது. நாம் ஒன்றுகூடி வரவேண்டும் என்று பைபிள் அளிக்கும் கட்டளை நிச்சயமாக இந்த காரியங்களுக்காக அல்ல.—எபி. 10:24, 25.