புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
நம்முடைய அன்புக்கும் பற்றுமாறா பக்திக்கும் உகந்தவர் யெகோவா தேவன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடன் நெருங்கிய உறவை அனுபவிக்கவிடாமல் நம்மை இந்த உலகம் வேறுபக்கமாக சுண்டியிழுக்கப் பார்க்கிறது. (யோவா. 17:14) யெகோவாவிடமுள்ள நம் அன்பை வலுப்படுத்தவும் நம் ஆன்மீகத்திற்கு ஆபத்துண்டாக்கும் உலகியல் இன்பங்களை ஒதுக்கித்தள்ளவும், இதோ! நமக்கு உதவ காத்திருக்கிறது புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல். 2001-ன் ஊழிய ஆண்டிற்கான வட்டார மாநாட்டின் பொருள்: “கடவுளை நேசியுங்கள்—உலக காரியங்களை அல்ல.”—1 யோ. 2:15-17, NW.
யெகோவாவிடம் நமக்கு இருக்கும் அளவற்ற அன்பு அவரைப் பற்றி சாட்சி கொடுக்க நம்மை தூண்டுகிறது. அப்படியிருக்கிறபோதிலும், கடவுளுடைய ஜனங்களில் அநேகருக்கு வெளி ஊழியம் அவ்வளவு எளிதானதல்ல. “கடவுள்மீதுள்ள அன்பு ஊழியத்தில் நம்மை தூண்டுவிக்கிறது” என்ற பேச்சிலிருந்து இந்த ஊழியத்தில் முழுமையாய் ஈடுபடுவதற்காக வெட்கத்தையும் மற்ற தடைகளையும் தகர்த்தெறிந்திருக்கிற அநேகரை பற்றி கற்றுக்கொள்ளுங்கள்.
சீரழிந்துவரும் இந்த உலக தராதரங்கள் நம்மை எப்படி பாதிக்கின்றன? ஒருகாலத்தில் மோசமான நடத்தைக்குரியவை என முத்திரை குத்தப்பட்டவை இன்று சகஜமானவையாய் கருதப்படுகின்றன. “யெகோவாவை நேசிப்பவர்கள் தீமையை வெறுக்கிறார்கள்” என்ற பேச்சும் “உலக காரியங்கள்—அவற்றை நாம் எப்படி கருதுகிறோம்?” என்ற தொடர்பேச்சும் தவறான ஆசாபாசங்களை அடியோடு ஒழிப்பதற்கு நாம் எடுக்கும் திடதீர்மானத்தை பலப்படுத்தும்.
இந்த நிகழ்ச்சிநிரலில் மாதிரியாய் அமையும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியும் ஊழியக் கூட்டமும் சேர்க்கப்பட்டுள்ளன; அத்தோடு அந்த வாரத்திற்கான காவற்கோபுர கட்டுரையின் சுருக்கமும் இருக்கும். “அன்பாலும் விசுவாசத்தாலும் உலகை ஜெயித்தல்” என்ற பொதுப் பேச்சு இந்த உலக அழுத்தங்களை எதிர்ப்பதில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற நம்மை உற்சாகப்படுத்தும். (யோவா. 16:33) உங்களோடு பைபிள் படிப்பவர்களையும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கத் தவறாதீர்கள். முழுக்காட்டப்பட விரும்புகிறவர்கள் உடனடியாக நடத்தும் கண்காணியிடம் தெரிவிக்க வேண்டும். இது, தேவையான ஏற்பாடுகளை செய்ய உதவியாய் இருக்கும்.
யெகோவா அருளும் அளவற்ற ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வதற்கு நம்முடைய அன்பை எதன்மீது ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதை இந்த வட்டார மாநாடு நமக்கு காண்பிக்கும். மாநாட்டின் எந்த நிகழ்ச்சியையும் தவறவிடாதீர்கள்!