“நான் போக வேண்டுமா?”
1 ‘புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்’ என்ற இயேசுவின் கட்டளைக்கிணங்க யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த அநேக ஊழியர்கள், தேவை எங்கு அதிகம் இருக்கிறதோ அங்கு சேவை செய்வதற்காக புறப்பட்டுப் போயிருக்கின்றனர். (மத். 28:19) “மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்” என்ற அழைப்பிற்கு பவுல் பிரதிபலித்ததுபோலவே இவர்கள் செயல்படுகின்றனர். (அப். 16:9) இதே மனப்பான்மையை நாமும் எவ்வாறு இன்று நடைமுறையான வழிகளில் காட்டலாம்?
2 படிப்படியாக முன்னேறுங்கள்: உங்கள் சபையின் பிராந்தியத்திலேயே அடிக்கடி ஊழியம் செய்யப்படாத பகுதி ஏதாவது இருக்கிறதா? அப்படியிருந்தால், அந்தப் பகுதியிலேயே உங்கள் கவனத்தை செலுத்தி அங்கேயே ஊழியம் செய்யலாம். அவ்வாறு இல்லையென்றால், வேறு இடத்திற்கு மாறிச்செல்வதைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் அதற்கு முன்பு, நீங்கள் மாறிச் சென்று ஊழியம் செய்ய தடை ஏதும் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள மூப்பர்களுடன் கலந்துபேசுங்கள். அருகிலேயே இருக்கும் வேறொரு சபைக்கு சென்று நீங்கள் ஊழியம் செய்வதைப் பற்றியும் யோசிக்கலாம். அவ்வாறு உதவி தேவைப்படும் சபை ஏதாவது அருகில் இருக்கிறதா என வட்டார கண்காணியிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். இல்லாவிடில், உங்கள் நிலவரங்களை எல்லாம் கவனமாக சீர்தூக்கிப் பார்த்தபின், உங்கள் நாட்டிலேயே வேறொரு பகுதிக்கு சென்று ஊழியம் செய்வதைப் பற்றியும் சிந்திக்கலாம். வேறு இடத்திற்கு மாறிச்செல்வது என தீர்மானித்தபின், உங்கள் கடிதத்தோடு, உங்கள் சபை மூப்பர் குழுவின் கடிதத்தையும் சேர்த்து கிளை அலுவலகத்திற்கு அனுப்புங்கள். அந்த கடிதத்தில் உங்கள் தேவராஜ்ய தகுதிகளையும், எங்கு சேவை செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும் குறிப்பிடவும். நீங்கள் மாறிச் செல்ல விரும்பும் பகுதிக்கு முதலில் சென்று, அங்குள்ள நிலைமைகளை பார்த்தபின், நிரந்தரமாக மாறிவிடலாமா வேண்டாமா என தீர்மானிப்பது நல்லது.
3 மாறிச் செல்வதைக் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்: தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் அல்லது கஷ்டங்களிலிருந்து விடுபடவேண்டும் என்று நம் சகோதரரில் அநேகர் வேறு நாடுகளுக்கு மாறிச் செல்கின்றனர். இவர்களில் சிலர் மோசமான சில பிரச்சினைகளை எதிர்பட்டிருக்கின்றனர். புது இடத்தில் செட்டிலாவதற்கு உதவி செய்வதாக கூறிக்கொண்டு வரும் சில நேர்மையற்ற ஆட்கள், சாட்சிகளின் பணத்தையும் பொருளையும் திருடிக்கொண்டு அவர்களை அம்போவென விட்டுவிடுகின்றனர். சிலர் இவ்வாறு மாறிச் சென்றவர்களை தவறான நடத்தையில் ஈடுபடும்படியும் அடிமைப்படுத்துகின்றனர். இதில் ஈடுபட மறுக்கும்போது உதவி செய்ய யாருமின்றி சாட்சிகள் நடுத்தெருவில் நிற்கின்றனர். இவ்வாறு, அவர்கள் தாய் நாட்டில் இருந்ததைவிட மிக மோசமான நிலைக்கு இந்த புதிய இடத்தில் தள்ளப்படுகின்றனர். இதனால் தங்களுக்கு உதவும்படி அல்லது வீட்டு வசதி செய்துதரும்படி, அங்கு ஏற்கெனவே தங்கள் பிரச்சினைகளில் தவித்துக்கொண்டிருக்கும் உள்ளூர் கிறிஸ்தவ குடும்பங்களை நாடுகின்றனர். இவற்றையெல்லாம் நன்கு சிந்தித்து பார்க்காமல் தங்கள் குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்வதால் அவர்களுடைய குடும்பத்தின் ஆவிக்குரிய நிலையும் குன்றிவிடுகிறது.—1 தீ. 6:8-11.
4 உங்கள் சொந்த நலனுக்காக வேறு இடத்திற்கு மாறிச்செல்ல வேண்டுமென விரும்பினால், நீங்கள் எங்கு சென்றாலும் பிரச்சினைகளை எதிர்ப்பட்டே ஆகவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோன்ற அந்த புதிய இடத்தில் புதிய புதிய பிரச்சினைகளுடன் அவஸ்தைப்படுவதைவிட, மொழி, கலாச்சாரம் போன்றவற்றையெல்லாம் ஏற்கெனவே அறிந்த இடத்திலேயே இருந்து பிரச்சினைகளை சமாளிப்பது எளிது!