நல்ல அயலாராக சாட்சி கொடுங்கள்
1 “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல அயலானிடத்திலும் அன்புகூர வேண்டும்” என இயேசு சொன்னார். (மத். 22:39, தி.மொ.) சக விசுவாசிகளுக்கு “நன்மைசெய்”வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உங்கள் அண்டை அயலில் இருப்பவர்களுக்கும் அன்பு காட்டுவீர்களா? (கலா. 6:10) எப்படி காட்டலாம்?
2 நீங்கள் யாரென அடையாளம் காட்டுவதன் மூலம்: நீங்கள் யெகோவாவின் சாட்சி என்பது உங்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தெரியுமா? இல்லையென்றால் அவர்களை ஏன் வெளி ஊழியத்தில் சென்று சந்திக்கக்கூடாது? அப்படி செய்கையில் கிடைக்கும் பலனைக் கண்டு நீங்கள் அசந்துவிடுவீர்கள்! அல்லது அதைவிட சௌகரியமாக தோன்றினால் அவர்களுக்கு சந்தர்ப்ப சாட்சி கொடுக்க முயலுங்கள். நீங்கள் வெளியே செல்லும்போது, அவர்கள் தங்கள் வீட்டு தோட்டத்தில் வேலை செய்வதையோ தெருவில் சாவகாசமாக உலாவுவதையோ காணலாம். அவர்களைப் பார்த்து புன்முறுவல் செய்யுங்கள். உங்கள் நம்பிக்கைகள், ராஜ்ய மன்றம் இருக்கும் இடம், அங்கு என்ன நடக்கும், அயலாரில் யாரெல்லாம் அங்கு வருகிறார்கள் என்பவற்றைப் பற்றி அவர்களிடம் பேச முயற்சி செய்யுங்கள். கூட்டங்களுக்கு வரும்படி அழையுங்கள். உங்களுக்கு அறிமுகமான அனைவருக்கும் நற்செய்தியைப் பற்றி முழுமையாக சாட்சி கொடுக்க தீர்மானமாய் இருங்கள்.—அப். 10:42; 28:23, NW.
3 முன்மாதிரியான நடத்தையின் மூலம்: உங்கள் அன்பான நடத்தை உங்களைப் பற்றி ஏராளமானவற்றை சொல்வதோடு சாட்சி கொடுக்க வழியையும் திறந்து வைக்கும். அது ‘தேவனுடைய உபதேசத்தை . . . அலங்கரிக்கவும்’ செய்யும். (தீத். 2:7, 9) உங்கள் அயலாரிடம் உண்மையான அக்கறை காட்டுங்கள். அவரைப் புரிந்துகொண்டு சிநேகப்பான்மையாய் நடந்துகொள்ளுங்கள். தனிமையையும் அமைதியையும் விரும்பும் அவர்களுடைய உரிமையை மதியுங்கள். அவர்களில் யாராவது சுகவீனமடைந்தால் அவர்மீது அக்கறை காண்பித்து, ஏதேனும் உதவி செய்ய முயலுங்கள். உங்கள் அக்கம்பக்கத்தில் யாரேனும் புதிதாக குடிவந்தால் அவர்களைப் போய் சந்தித்து உங்கள் அயலாராக வந்ததில் சந்தோஷம் என சொல்லுங்கள். இத்தகைய கனிவான செயல்கள் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும், அவை யெகோவாவுக்குப் பிரியமானவை.—எபி. 13:16.
4 வீடு, சுற்றுப்புற தோற்றத்தின் மூலம்: நல்ல அயலாராக இருப்பது நேர்த்தியாக உங்கள் வீட்டை வைத்திருப்பதையும் உட்படுத்துகிறது. உங்கள் வீடும் சுற்றுப்புறமும் சுத்தமாக, கவர்ந்திழுப்பதாக இருந்தால் அதுவே சாட்சி கொடுக்கும். வீடு அசுத்தமாகவோ எங்கு பார்த்தாலும் ஓட்டை உடைசல் சாமான்கள் நிறைந்ததாகவோ இருந்தால் நாம் சொல்லும் ராஜ்ய செய்தி அவர்கள் காதுக்குள்கூட நுழையாது. எனவே உங்கள் வீட்டை, சுற்றுப்புறத்தை, வாகனங்களை சுத்தமாகவும் நல்ல நிலையிலும் வைத்திருப்பது மிக மிக முக்கியம்.
5 வெளியாட்களிடம் கரிசனை காட்டுவது நீங்கள் அயலாரிடம் அன்பு காட்டுவதை சுட்டிக்காட்டுகிறது. அதன் பலன்? “உங்கள் நற்கிரியைகளைக் கண்டு” அவர்களில் சிலர் ‘தேவனை மகிமைப்படுத்துவார்கள்.’—1 பே. 2:12.