‘கேட்டு அறிவில் தேறுங்கள்’
1 ஞானம் கூப்பிடுவதாக நீதிமொழிகள் புத்தகம் சித்தரிக்கிறது: “கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும். ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் [“நடைமுறை ஞானமும்,” NW] என்னுடையவைகள்; . . . எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.” (நீதி. 8:6, 14, 32, 35) “கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்” மாவட்ட மாநாட்டில் நமக்காக காத்திருக்கும் போதனையை இந்த வார்த்தைகள் அழகாக விவரிக்கின்றன.
2 உலகளாவிய சகோதரத்துவத்தின் தேவைகள் ஆராயப்பட்டு, அவற்றிற்குக் கவனம் செலுத்தி மாநாட்டு நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அங்கு தரப்படும் ஆவிக்குரிய போதனையையும் நடைமுறையான ஆலோசனைகளையும் பின்பற்றினால், மகிழ்ச்சியைப் பெறவும், யெகோவாவுடன் நல்ல உறவை காத்துக்கொள்ளவும், நித்திய ஜீவ பாதையில் தொடரவும் நமக்கு உதவும். நிச்சயமாகவே, ‘கேட்டு அறிவில் தேறுவதற்கு’ நமக்கு நல்ல காரணம் இருக்கிறது.—நீதி. 1:5.
3 நிகழ்ச்சி தொடங்குமுன்: அளிக்கப்படும் விஷயங்களிலிருந்து முழுமையாக பயன் பெறுவதற்கு நிகழ்ச்சி தொடங்குமுன் இருக்கையில் உட்கார வேண்டும், சரியான மனநிலையுடனும் இருக்க வேண்டும். இதற்கு தனிப்பட்ட வகையில் நல்ல ஒழுங்கமைப்பு தேவை. சீக்கிரமாக ஆரம்பிப்பதுதான் இதில் முக்கியம். முந்தின இரவு சீக்கிரமாக உறங்க செல்லுங்கள். உங்களுடன் இருக்கும் அனைவரும் கிளம்பி, ஏதாவது சாப்பிட்டுவிட்டு வருவதற்கு போதுமான நேரத்தை கணக்கிட்டு சீக்கிரமாக எழுங்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் அவசியமான விஷயங்களை கவனிப்பதற்கும், இருக்கைகளை கண்டுபிடிப்பதற்கும் போதுமான நேரம் இருக்கும்படி சீக்கிரமாக மாநாட்டு மன்றத்திற்கு வாருங்கள். ஒவ்வொரு நாளும் காலை 8:00 மணிக்கு மன்றம் திறக்கப்படும், காலை 9:30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும்.
4 “சபைகளிலே” யெகோவாவைத் துதிப்பதே நாம் கூடிவருவதன் முக்கிய நோக்கம் என்பதால் ஒவ்வொரு நாளும் காலை, பிற்பகல் நிகழ்ச்சிநிரல்களை கடவுளை மகிமைப்படுத்தும் வகையில் ஆரம்பிக்க வேண்டும். (சங். 26:12) ஆகவே ஆரம்ப பாட்டு அறிவிக்கப்படும் முன் எல்லாரும் இருக்கைகளில் அமர்ந்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது” என்ற வேதப்பூர்வ அறிவுரைக்கு இசைவானதாக இது இருக்கிறது. (1 கொ. 14:40) இது நம் ஒவ்வொருவருக்கும் எதை அர்த்தப்படுத்துகிறது? இசை ஆரம்பிக்கையில் சேர்மன் மேடையில் அமர்ந்திருப்பதை பார்க்கையில், உடனடியாக இருக்கையில் உட்காருங்கள். இவ்வாறு செய்தால், ஒவ்வொரு பகுதியும் ஆரம்பிக்கையில் இதயபூர்வமாக பாடி, யெகோவாவுக்கு துதி சேர்ப்பதில் பங்குகொள்ள முடியும்.—சங். 149:1.
5 நிகழ்ச்சியின்போது: ‘கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், . . . எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தினார்.’ (எஸ்றா 7:10) யெகோவா தரும் போதனையைப் பெற நம் இருதயத்தை எப்படி பக்குவப்படுத்த அல்லது தயார் செய்ய முடியும்? அச்சடிக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலிலுள்ள பல்வேறு தலைப்புகளை மறுபார்வை செய்கையில், ‘இந்த நிகழ்ச்சியின் மூலம் யெகோவா என்னிடம் என்ன சொல்கிறார்? எனக்கும் என் குடும்பத்துக்கும் பயன் தரும் வகையில் இந்த தகவலை எப்படி நான் பயன்படுத்தலாம்?’ என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். (ஏசா. 30:21; எபே. 5:17) இந்த கேள்விகளை மாநாட்டின் போது எப்போதுமே கேட்டுக்கொண்டிருங்கள். நீங்கள் பயன்படுத்த நினைக்கும் குறிப்புகளை குறித்து வையுங்கள். ஒவ்வொரு நாள் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி அவற்றை கலந்தாலோசியுங்கள். குறிப்புகளை மனதில் வைக்கவும் கடைப்பிடிக்கவும் இது உதவியாக இருக்கும்.
6 பல மணிநேரம் சேர்ந்தாற்போல் கவனம் செலுத்துவது சவாலாக இருக்கலாம். மனதை அலையவிடாமல் இருக்க என்ன செய்யலாம்? கண்களின் சக்தியை பயன்படுத்துங்கள். பெரும்பாலும், கண்கள் பார்க்கும் இடத்திற்கே நம் கவனமும் ஈர்க்கப்படும். (மத். 6:22) ஆகவே, ஏதாவதொரு சத்தம் கேட்டாலோ அசைவு தென்பட்டாலோ திரும்பி பார்க்க தோன்றும் தூண்டுதலை கட்டுப்படுத்துங்கள். உங்கள் கண்களை பேச்சாளர் மீது ஒருமுகப்படுத்துங்கள். ஒரு வசனம் வாசிக்கப்படுகையில், அதை உங்கள் பைபிளை திறந்து பாருங்கள். அந்த வசனம் சிந்திக்கப்படும்போதும் பைபிளை திறந்தே வைத்திருங்கள்.
7 நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது மற்றவர்களை தொந்தரவு செய்யாதிருக்க கிறிஸ்தவ அன்பு நம்மைத் தூண்டும். (1 கொ. 13:5) ‘மவுனமாயிருந்து’ கேட்க “ஒரு காலமுண்டு.” (பிர. 3:7) எனவே, தேவையின்றி பேசாதீர்கள், அங்கும் இங்கும் போகாதீர்கள். ஏற்கெனவே யோசித்து திட்டமிடுவதன் மூலம் அடிக்கடி கழிப்பறைக்கு செல்வதை குறைத்துக் கொள்ளுங்கள். கடும் உடல்நல பிரச்சினைகள் இல்லாத வரைக்கும் குறித்த இடைவேளை வரையில் எதையும் சாப்பிடாதீர்கள், குடிக்காதீர்கள். செல்லுலர் தொலைபேசிகள், பேஜர்கள், கேம்கார்டர்கள், கேமராக்கள் ஆகியவற்றை கொண்டுவருவோர் மற்றவர்களுடைய கவனத்தை சிதறச் செய்யும் வகையில் இவற்றை பயன்படுத்தக் கூடாது. டீனேஜிலிருக்கும் பிள்ளைகள் உட்பட அனைவரும் குடும்பமாக உட்காரும்படி பெற்றோர் ஏற்பாடு செய்ய வேண்டும். பிள்ளைகளை சரியாக கண்காணிக்க இது வசதியாக இருக்கும்.—நீதி. 29:15.
8 அநேக பத்தாண்டுகளாக மாநாடுகளில் கலந்துகொள்ளும் ஒரு மூப்பர் கடந்த வருடம் இதை கவனித்தார்: “வேறொரு காரணத்துக்காகவும் இந்த மாநாடு மிகவும் சிறப்பானதாக இருந்தது. பிள்ளைகள் உட்பட ஏறக்குறைய அனைவரும் குறிப்புகள் எடுத்தார்கள். இது பார்ப்பதற்கு சந்தோஷமாக இருந்தது. பேச்சாளர் ஒருசில வசனங்களை பார்க்கும்படி கேட்டுக்கொண்டபோது பைபிள்களை திறந்து பார்த்தார்கள்.” இப்படி கவனித்து கேட்டது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இது நமக்கும் நம்மோடு மாநாட்டுக்கு ஆஜரான அனைவருக்கும் பலன்தருவது மட்டுமல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலாக நம் மகத்தான போதகராகிய யெகோவா தேவனுக்கு மகிமை சேர்க்கிறது.—ஏசா. 30:20.