தேவனுடைய வார்த்தைகளுக்கு கூர்ந்து கவனம் செலுத்துங்கள்
1 மற்றவர்கள் பேசும்போது கவனிக்கிறீர்களோ இல்லையோ, கடவுள் பேசுகையில் கூர்ந்து கவனிக்க வேண்டியது மிக மிக அவசியம். (உபா. 28:1, 2) தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதியவர்கள் ‘தேவனுடைய வார்த்தைகளை’ நம்முடைய நன்மைக்காகவே பதிவு செய்துள்ளார்கள். (ரோ. 3:2) வாசித்து விமர்சிக்கப்படும் இந்த வார்த்தைகளை கேட்பதற்கு, வரப்போகும் மாவட்ட மாநாடு அரியதோர் சந்தர்ப்பத்தை அளிக்கிறது. ஆகவே, தேவனுடைய வார்த்தைகளை கூர்ந்து கவனிப்பதற்கு சில வழிகள் யாவை?
2 சீக்கிரமாக வருதல்: யெகோவாவின் சட்டங்களை கேட்பதற்கு சீனாய் மலைக்கு வரும்படி சொன்னபோது இஸ்ரவேலர் எந்தளவுக்கு உற்சாகம் காட்டியிருப்பார்கள் என்பதை கற்பனை செய்துபாருங்கள்! (யாத். 19:10, 11, 16-19) யெகோவாவின் அறிவுரைகளை கேட்பதில் இஸ்ரவேலருக்கு இருந்த அதே ஆர்வம் உங்களுக்கும் இருந்தால், இந்த மாவட்ட மாநாட்டிற்கு ஒவ்வொரு நாளும் சீக்கிரமாக வருவதற்கு ஏற்பாடு செய்வீர்கள். தாமதமாக வந்து தடுமாறிக்கொண்டிருந்தால், நிகழ்ச்சியை முழுமையாக கவனிக்க முடியாது. மற்றவர்களுக்கும் இடைஞ்சலாக இருக்கும். ஒவ்வொரு நாளும் காலை 9:30-க்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். ஆனால் மாநாட்டு மன்றத்தின் கதவுகளோ காலை 8 மணிக்கே திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
3 சிலர் மாநாட்டுக்கு சீக்கிரமாக வந்துவிடுகிறார்கள். ஆனால், நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக இருக்கைகளில் வந்து உட்காருவதில்லை. ஏன்? ஆரம்பப் பாடலை சேர்மன் அறிவிக்கும் வரை நண்பர்களோடு அளவளாவி அதற்குப் பின்னரே இருக்கைகளுக்கு வருகிறார்கள். ஒவ்வொரு நாள் காலையும் பிற்பகலும் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ராஜ்ய இன்னிசை ஒலிக்கும். அந்த சமயத்தில், சேர்மன் மேடையில் வந்து உட்கார்ந்திருப்பார். இது இருக்கைகளில் வந்து அமருவதற்கான சமயம் என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. அப்போது ஆரம்பப் பாடல் அறிவிக்கப்படுகையில் நாம் அனைவரும் ஒருமித்து யெகோவாவை துதித்துப் பாடுவதற்கு தயாராக இருப்போம்.
4 குடும்பமாக கவனியுங்கள்: இஸ்ரவேல் குடும்பங்களுக்கு கடவுளுடைய வார்த்தைகள் வாசித்து காட்டப்பட்டபோது, “பிள்ளைகளும்” கவனித்து கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. (உபா. 31:12) அதேபோல் நம்முடைய மாநாடுகளிலும் பிள்ளைகளை “இஷ்டத்திற்கு விட”க்கூடாது. (நீதி. 29:15) பெற்றோரே! உங்களுடைய பருவ வயது பிள்ளைகளோடு முழு குடும்பமாக உட்காருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். பெற்றோர்கள் சிலர் பாட்டு ஆரம்பித்த பின்னரே பிள்ளைகளை டாய்லெட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவ்வாறு செய்கையில் பாட்டும் ஜெபமும் நம்முடைய வணக்கத்தின் முக்கிய அம்சங்கள் என்பதை பிள்ளைகள் கற்றுக்கொள்ள முடியாது. முடிந்தவரையில் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே செல்வது எவ்வளவு நல்லது!
5 இரவில் நன்றாக ஓய்வெடுப்பதும், பகலில் அளவாக சாப்பிடுவதும் நன்கு கவனித்துக் கேட்பதற்கு உதவுகின்றன. பேச்சாளர் என்ன பேசுகிறார் என்பதில் உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். உங்கள் மனதை அலைபாய விடாதீர்கள். வேத வசனங்கள் வாசிக்கப்படுகையில் உங்கள் பைபிளைத் திறந்து பாருங்கள். சுருக்கமாக குறிப்பெடுங்கள். ஒவ்வொரு பேச்சின்போதும், பேச்சாளர் என்ன பேசுகிறார், அதை எப்படி வாழ்க்கையில் பொருத்தலாம் என்பதை தியானியுங்கள். அந்நாளின் நிகழ்ச்சிநிரலில் உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பிடித்த குறிப்புகள் என்ன? அவற்றை எப்படி வாழ்க்கையில் பொருத்தலாம்? இவற்றையெல்லாம் வீட்டுக்குச் சென்றபின் குடும்பமாக கலந்தாலோசியுங்கள்.
6 கடவுளுடைய வார்த்தைக்கு மரியாதை காட்டுங்கள்: நண்பர்களிடம் பேசி மகிழ்வதற்கும் உற்சாகமூட்டும் கூட்டுறவை அனுபவிப்பதற்கும் தகுந்த இடம் மாநாடுகளே. சற்று முன்னரே சென்றால் நிகழ்ச்சி ஆரம்பிக்கும்முன் நண்பர்களிடம் பேசுவதற்கு போதுமான நேரம் கிடைக்கிறது. சிலர், இவ்வளவு பெரிய அரங்கத்தில் ஒருவருக்கொருவர் பேசுவதால் மற்றவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது என நினைத்து நிகழ்ச்சியின்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். பெரிய கூட்டங்களாக இருந்தாலும், ராஜ்ய மன்றங்களில் உட்கார்ந்து கவனிப்பது போலவே, இதுவும் கவனித்துக் கேட்பதற்கான சமயம். செல்லுலார் ஃபோன்கள், பேஜர்கள், வீடியோக்கள், காமிராக்கள் நிகழ்ச்சியின்போது அனுமதிக்கப்படுவதில்லை.
7 யெகோவாவிடமிருந்து நியாயப்பிரமாணத்தை மோசே பெற்றுக்கொள்ளும் சமயத்தில் அவர் “அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும்” இருந்தார். (யாத். 34:28) ஆகவே, மாநாட்டு நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கையில் சாப்பிடுவதும், குடிப்பதும் சரியல்ல. உடல்நல பிரச்சினைகள் இருந்தால் தவிர ‘அதற்கான சமயம்’ வரும் வரை காத்திருங்கள்.—பிர. 3:1, NW.
8 சில மாநாடுகளில் நிகழ்ச்சியின்போது பல சகோதரர்களும், சகோதரிகளும், சிறுவர்களும்கூட வராண்டாக்களில் சுற்றித் திரிகிறார்கள். தங்களுடைய இருக்கைகளுக்கு செல்லுமாறு அட்டென்டன்ட்டுகள் அவர்களை கேட்டுக்கொள்வார்கள். மாநாட்டின் பல்வேறு இலாகாக்களில் பணிபுரியும் வாலன்டியர்கள் தங்கள் வேலை முடிந்தவுடன் பார்வையாளர்களுடன் இருக்கைகளில் வந்து அமர வேண்டும். நிகழ்ச்சியின்போது சில முக்கியமான வேலைகளில் ஈடுபட்டிருந்தால் தவிர, வாலன்டியர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து பேச்சுகளை கவனமாக கேட்க வேண்டும். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில் ஒவ்வொரு இலாகாக்களில் உள்ளவர்களையும் சந்தித்துக்கொண்டு நேரத்தை வீணடிக்கக் கூடாது.
9 கடவுளுடைய வார்த்தையை செவிகொடுத்து “கேட்பதில் மந்தமுள்ளவர்களாக” இருக்கக் கூடாது. (எபி. 5:11, NW) ஆகவே, வருகிற மாவட்ட மாநாட்டில் யெகோவாவிடமிருந்து வரும் வார்த்தைகளை கலந்தாலோசிக்கையில் கூர்ந்து கவனிப்பதற்கு இப்போதே தீர்மானிப்போமாக.