ஆன்மீக உணவை எவ்வளவு நன்றாக சாப்பிடுகிறீர்கள்?
1 ‘உண்டவனை கண்டால் தெரியும்’ என்பது வழக்கு. அதற்கேற்ப, நம் உடல் பலமும் ஆரோக்கியமும் நம் உணவு பழக்கங்களை பொறுத்தே இருக்கிறது. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று இயேசு கூறியதால், நம் ஆன்மீக உணவு பழக்கங்கள் நம்மை சாதகமாகவோ பாதகமாகவோ பாதிக்கலாம். (மத். 4:4) ஆகவே, நீங்கள் ஆன்மீக ரீதியில் எவ்வளவு நன்றாக சாப்பிடுகிறீர்கள்? உங்களுக்குப் பிடித்தமான உணவை மட்டுமே சாப்பிடுபவரா? அவசர அவசரமாய் விழுங்குபவரா? அல்லது ஆன்மீக ரீதியில் ஊட்டமளிக்கும் சரிவிகித உணவை ரசித்து உண்ண, தவறாமல் நேரம் எடுத்துக்கொள்பவரா?
2 உணவை ஆராயுங்கள்: ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ மூலமாக, ‘ஏற்ற வேளையின் உணவையும்,’ ‘கொழுமையான பதார்த்தங்களையும்’ யெகோவா அளிக்கிறார். (மத். 24:45, NW; ஏசா. 25:6) அன்பான இந்த ஏற்பாடுகளிலிருந்து முழுமையாக பயனடைய ஆன்மீக ரீதியில் திருப்தியாக சாப்பிடுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
3 நீங்கள் பின்வருமாறு உங்களையே கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் தினவசனத்தையும் அதன் குறிப்புகளையும் ஒவ்வொரு நாளும் வாசிக்கிறேனா? பைபிளை அன்றாடம் வாசித்து தியானிக்கிறேனா? சபை கூட்டங்களுக்கு தயாரிக்கும் வகையில் முன்கூட்டியே படித்து வருகிறேனா? ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I புத்தகம் உட்பட, சமீபத்திய பிரசுரங்களை வாசித்திருக்கிறேனா?’
4 “ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்; . . . நீதிக்காக பசிதாகமுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” என்று இயேசு வாக்குறுதி அளித்தார். (மத். 5:3, 6, NW) ஆகையால், உங்கள் மனதையும் இருதயத்தையும் கடவுளுடைய அறிவால் நிரப்புவதன் மூலம் ஆன்மீக ரீதியில் நன்றாக சாப்பிடுங்கள்.