குறிக்கோள் என்ன?
1 நாம் ஏன் வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துகிறோம்? வெறுமனே அறிவைப் புகட்டி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கா, அல்லது எதிர்கால நோக்குநிலையை தெளிவாக வைக்க அவர்களுக்கு உதவுவதற்கா? இல்லை. நம் முக்கிய குறிக்கோள், அவர்களை இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக்குவதே! (மத். 28:19; அப். 14:21) ஆகவேதான் நாம் யாருடன் படிப்பு நடத்துகிறோமோ, அவர்கள் சபையுடன் கூட்டுறவு கொள்ள வேண்டியது அவசியம். கிறிஸ்தவ அமைப்பைப் பற்றி அவர்கள் ஆழமாக புரிந்துகொள்வதை பொறுத்தே அவர்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றமும் இருக்கும்.
2 எப்படி அடைவது: ஆரம்பத்திலிருந்தே, சபை கூட்டங்களுக்கு வருமாறு மாணவரை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். (எபி. 10:24, 25) இவை எவ்வாறு அவருடைய விசுவாசத்தை பலப்படுத்தும், கடவுளுடைய சித்தத்தை செய்ய அவருக்கு உதவும், யெகோவாவை துதிக்க விரும்பும் மற்றவர்களுடனும் நல்ல கூட்டுறவு வைக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்குங்கள். (சங். 27:13; 32:8; 35:18) சபையையும் கூட்டங்களையும் பற்றி அன்பும் போற்றுதலும் கலந்த உங்களது பேச்சே கூட்டங்களுக்குச் செல்ல அவரை உந்துவிக்கும்.
3 யெகோவாவின் அமைப்பு ஓர் உலகளாவிய சகோதரத்துவம் என்பதை புதியவர்கள் புரிந்துகொள்வது அவசியம். அவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு, நம் சகோதர கூட்டுறவு ஆகிய வீடியோக்களை போட்டுக் காட்டுங்கள். தம் சித்தத்தை நிறைவேற்ற, உலகளவிலுள்ள லட்சக்கணக்கான ஒப்புக்கொடுத்த ஆட்களை யெகோவா பயன்படுத்தி வருகிறார் என அவர்கள் மதித்துணர உதவுங்கள். கடவுளை சேவிக்க தங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது என்பதை இப்படிப்பட்ட புதியவர்கள் தெரிந்திருக்கட்டும்.—ஏசா. 2:2, 3.
4 பைபிள் மாணவர் ஒருவர் இயேசுவுக்கு உண்மையான சீஷராவதைக் காண்பது அளவிலா மகிழ்ச்சி தருகிறது. இதுவே நம் குறிக்கோள்!—3 யோ. 4.