விசேஷித்த உற்சாகப் பரிமாற்றம்
1 யெகோவாவின் ஜனங்களுடைய விசுவாசத்திற்கு சோதனைகள் வராத நாளே இல்லை. தனக்கு கொஞ்ச காலமே இருப்பதை பிசாசு அறிந்திருப்பதால், நாம் யெகோவாவிடம் காண்பிக்கும் உத்தமத்தன்மையை முறித்துப் போடுவதற்கு கடைசி தாக்குதலை அவன் மேற்கொண்டிருக்கிறான். (வெளி. 12:12) ‘தீங்குநாளிலே எதிர்க்கவும் சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் [“உறுதியாக,” NW] நிற்கவும்,’ ‘கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுவது’ அவசியம்.—எபே. 6:10, 13.
2 நாம் பலத்தைப் பெறுவதற்கு, சக விசுவாசிகளுடன் கூடிவரும் ஏற்பாட்டை யெகோவா செய்திருக்கிறார். இதன் முக்கியத்துவத்தை அப்போஸ்தலன் பவுல் புரிந்துகொண்டார். ‘ஒன்றாக ஊக்கமூட்டப்படுவதற்கும்’ ‘உறுதிப்படுவதற்கும்’ தன் கிறிஸ்தவ சகோதரர்களுடன் கூட்டுறவு கொள்ள அவர் ஏங்கினார். (ரோ. 1:11, 12, பொ.மொ.) கடவுளுடைய சித்தத்தை செய்வதில் நம்மை பலப்படுத்துவதற்கு, “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” மாவட்ட மாநாட்டை ஆளும் குழு நமக்காக அன்புடன் ஏற்பாடு செய்துள்ளது; உற்சாகப் பரிமாற்றத்தின் மூலம் பலனடைய இது நமக்கு வாய்ப்பளிக்கிறது.
3 பயனடைய அங்கிருங்கள்: மூன்று நாட்களும் முழுமையாக கலந்துகொள்வதை உங்கள் குறிக்கோளாக வையுங்கள். ஆரம்ப பாடல் துவங்குவதற்கு முன்பாக வந்து, முடிவான ஜெபத்தில் இருதயப்பூர்வமாக “ஆமென்” சொல்லும் வரை அங்கிருப்பதன் மூலம் நாம் ‘பிரயோஜனமடைவோம்.’ (ஏசா. 48:17, 18) இந்த வருடம் பொது விடுமுறை நாட்களின்போதே மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், பிள்ளைகள், வேலைக்குச் செல்லும் பிரஸ்தாபிகள் என அனைவரும் மாநாட்டிற்குச் செல்ல கூடுதல் விடுப்பு எடுக்க அவசியமிராது. என்றாலும், வடக்கு மற்றும் வடகிழக்கிலுள்ள சகோதரர்கள் மும்பைக்குப் பயணிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் விடுப்பு தேவைப்படலாம்; எனவே அவர்கள் மூன்று நாட்களும் கலந்துகொள்ளும்படி முன்கூட்டியே தங்கள் வேலைகளை திட்டமிட வேண்டியிருக்கும். இத்தகைய பெரிய மாநாடுகளில் கலந்துகொள்ள அதிகளவு முயற்சி செய்ய வேண்டியிருக்கலாம், ஆனால் யெகோவாவின் சித்தத்தை செய்ய அவரே நமக்கு உதவுவதாக உறுதி அளித்திருக்கிறார். (1 யோ. 5:14, 15) ரயிலில் பயணிக்க தீர்மானித்தால் இரண்டு மாதங்களுக்கு முன்பே புக்கிங் செய்யும் வசதி உள்ளது; எனவே பயணத்திற்கும் தங்குமிடத்திற்கும் திட்டவட்டமான ஏற்பாடுகளை இதுவரை செய்யாதவர்கள் ஏதேனும் வழி பிறக்கும் என வெறுமனே நம்பிக்கொண்டிராமல் உடனடியாக ஏற்பாடுகளை செய்யுங்கள். மூன்று நாட்களும் முழுமையாக கலந்துகொள்வதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார் என நம்பிக்கையோடு இருக்கலாம்.—நீதி. 10:22.
4 உற்சாகத்தை எதிர்பார்த்திருங்கள்: மாவட்ட மாநாடு முடிந்து வீடு திரும்புகையில், “இதுவரை நான் கலந்துகொண்ட மாநாடுகளிலேயே இதுதான் அருமையிலும் அருமை!” என நீங்கள் சொன்னதுண்டா? ஏன் அப்படி உணர்ந்தீர்கள்? ஏனெனில் அபூரணர்களாக இருப்பதால் நாம் மெல்ல மெல்ல சோர்ந்து போகிறோம், ஆவிக்குரிய உற்சாகம் தேவைப்படும் நிலையை அடைகிறோம். (ஏசா. 40:30) “இந்த ஒழுங்குமுறை என்னை பலவீனப்படுத்துகிறது, மாவட்ட மாநாடுகளோ எனது ஆவிக்குரிய நோக்குநிலையை மறுபடியும் புதுப்பிக்கின்றன, தேவையான ஆவிக்குரிய உற்சாகத்தையும் தருகின்றன. சரியான நேரத்தில் உற்சாகம் கிடைப்பதுபோல் தோன்றுகிறது” என ஒரு சகோதரி விளக்கினார். அதே விதமாக நீங்களும் உணர்ந்திருக்கலாம்.
5 நம் மாவட்ட மாநாடுகளில், பேச்சுக்கள், பேட்டிகள் வாயிலாக மட்டுமல்லாமல் ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்தும் மற்ற அம்சங்களிலிருந்தும் தேவையான உற்சாகமூட்டுதலை பெறுகிறோம். “பைபிள் நியமங்கள் நடைமுறையில் தெளிவாக பொருத்தி காட்டப்படுவதே எனக்கு மிகவும் பிடித்தமானது. பூர்வத்தாரின் நல்ல முன்மாதிரியிலிருந்தும் கெட்ட முன்மாதிரியிலிருந்தும் நாம் எப்படி பயனடையலாம் என காட்டும் நாடகங்கள் அதிக மதிப்புமிக்கவையாய் உள்ளன. புதிய வெளியீடுகளை நான் எப்போதுமே ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன், வீடு திரும்பிய பின் நீண்ட நாட்களுக்கு அவற்றை வாசித்து மகிழ்கிறேன்” என ஒரு சகோதரர் சொன்னார்.
6 “கையாளுவதற்கு கடினமான [இந்தக்] கொடிய காலங்களில்” மாவட்ட மாநாடுகள் யெகோவா செய்து கொடுக்கும் முக்கியமான ஏற்பாடு. (2 தீ. 3:1, NW) “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள். திடன்கொள்ளுங்கள்” என்ற ஏவப்பட்ட புத்திமதிக்குக் கீழ்ப்படிய அவை நமக்கு உதவுகின்றன. (1 கொ. 16:13) எனவே, “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” மாவட்ட மாநாட்டில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு, அபரிமிதமான உற்சாகப் பரிமாற்றத்தை அனுபவிப்பதற்கு தீர்மானமாய் இருப்போமாக!
[பக்கம் 3-ன் பெட்டி]
மூன்று நாட்களும் முழுமையாக கலந்துகொள்ள திட்டமிடுங்கள்
■ வேலை செய்யுமிடத்தில் விடுப்புக்கு விண்ணப்பியுங்கள்.
■ மாநாட்டு நகரத்தில் தங்குமிடத்திற்கு புக் செய்யுங்கள்.
■ மாநாட்டிற்கு பயணம் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்யுங்கள்.