உங்கள் ஆவிக்குரிய தேவைகளைத் திருப்தி செய்துகொள்ளுங்கள்
1 “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” மாவட்ட மாநாடு, நம்முடைய ஆவிக்குரிய தேவைகளைத் திருப்தி செய்துகொள்வதற்கு நமக்கு அருமையான வாய்ப்பை அளிக்கும். நல்ல ஊட்டச்சத்துமிக்க சரீரப்பிரகாரமான உணவைப் போலவே, நமக்கு அந்த நிகழ்ச்சி உண்மையில் ஆவிக்குரிய விதமாக ‘விசுவாசத்திற்குரிய வார்த்தைகளில்’ நல்ல போஷாக்களிக்கும். (1 தீ. 4:6) அது யெகோவாவிடம் நெருங்கிவர நமக்கு உதவும். நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கும் சோதனைகளைச் சமாளிப்பதற்கு உதவும் புத்திமதியையும் உற்சாகத்தையும்கூட நாம் எதிர்பார்க்கலாம். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என யெகோவா நமக்கு உறுதியளிக்கிறார். (சங். 32:8) நம்முடைய வாழ்க்கையில் அவருடைய அன்பான வழிநடத்துதலைப் பெறுவதற்கு நாம் பாக்கியம் செய்தவர்கள்! மாநாட்டு நிகழ்ச்சியிலிருந்து அதிக பயனடைவதற்கு நாம் செய்ய வேண்டிய சில நடைமுறையான காரியங்களைக் கவனியுங்கள்.
2 நம் இருதயத்தைத் தயார்படுத்த வேண்டும்: அடையாளப்பூர்வமான இருதயத்தைக் காத்துக்கொள்ளும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. (நீதி. 4:23) இதற்கு, சுயசிட்சை அளித்துக் கொள்வதும், நமக்கு நாமே நேர்மையோடு இருப்பதும் அவசியம். மாநாடு யெகோவாவுடன் நம் உறவைக் குறித்து தியானிப்பதற்கும், “சுயாதீனப் பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தை உற்றுப்பார்”ப்பதற்குமுரிய சமயம். ‘நாட்டப்பட்ட வசனத்தை ஏற்றுக்கொள்ளும்படி’ நம் இருதயத்தைத் தயார்படுத்துவதற்கு, நம்மை சோதித்துப் பார்க்கும்படி யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்க வேண்டும்; மேலும், சரிப்படுத்துதல் தேவைப்படுகிற “வேதனை உண்டாக்கும் வழி” நம்மிடத்தில் உண்டோ என சுட்டிக்காட்டும்படியும், ‘நித்திய வழியிலே’ நம்மை நடத்தும்படியும் கெஞ்சிக் கேட்க வேண்டும்.—யாக். 1:21, 25; சங். 139:23, 24.
3 செவிசாய்ப்பதும் தியானிப்பதும்: இயேசுவின் வார்த்தைகளை மரியாள் கூர்ந்து கவனித்ததால் “நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என அவர் பாராட்டினார். (லூக். 10:39, 42, பொ.மொ.) அதே போன்ற மனநிலை நமக்கிருந்தால் சாதாரண காரியங்கள் நம் கவனத்தைச் சிதறடிக்க அனுமதிக்க மாட்டோம். நிகழ்ச்சி முழுவதற்கும் அமர்ந்திருந்து, கவனமாக செவிசாய்ப்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்வோம். பேசிக்கொண்டோ, அநாவசியமாக அங்கும் இங்கும் நடந்துகொண்டோ இருக்க மாட்டோம்; நம்முடைய செல் ஃபோன்கள், பேஜர்கள், காமிராக்கள், வீடியோக்கள் ஆகியவற்றால் மற்றவரின் கவனத்தை சிதறடிக்காமலிருக்க கவனமாய் இருப்போம்.
4 நாம் பேச்சுக்களைக் கேட்கையில் அந்தப் பொருள் எப்படி விரிவுபடுத்தப்படுகிறது என்பதை பகுத்தாராய்வதற்கு சுருக்கமாக குறிப்பு எடுப்பது நல்லது. நாம் கேட்பவற்றை ஏற்கெனவே நாம் அறிந்தவற்றோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அது விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் மறக்காமலிருக்கவும் உதவும். நாம் எழுதிய குறிப்புகளை பின்பற்றும் எண்ணத்தோடு அவற்றை திரும்ப எடுத்து வாசிப்பது அவசியம். பின்வருமாறு நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்வது நல்லது: ‘யெகோவாவுடன் என் உறவை இது எப்படி பாதிக்கிறது? என் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை நான் செய்வது அவசியம்? மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விஷயத்தில் இதை நான் எப்படி பின்பற்றலாம்? என்னுடைய ஊழியத்தில் இதை எப்படி பயன்படுத்தலாம்?’ மனதிற்கு பிடித்த குறிப்புகளைப் பற்றி மற்றவர்களிடம் கலந்தாலோசியுங்கள். இவற்றை செய்வது ‘நம் இருதயத்துக்குள்ளே’ யெகோவாவின் வார்த்தைகளை வைத்துக்கொள்ள நமக்கு உதவும்.—நீதி. 4:20, 21.
5 நாம் கற்றுக்கொள்பவற்றைப் பின்பற்றுவோம்: மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் ஒரு பிரதிநிதி இவ்வாறு சொன்னார்: “நிகழ்ச்சி தனிப்பட்ட விதத்தில் சிந்திக்க வைத்தது; ஒவ்வொருவரும் தங்கள் இருதயங்களையும் தங்கள் வீட்டாரின் இருதயங்களையும் சோதித்துப் பார்க்கவும், தேவைப்படும் அன்பான வேதப்பூர்வ உதவிக்கு வழி செய்யவும் தூண்டுவித்தது. சபைக்கு இன்னுமதிக உதவியாக இருக்க வேண்டிய பொறுப்பை இது எனக்கு நன்கு உணர்த்தியிருக்கிறது.” நம்மில் பெரும்பான்மையோர் ஒருவேளை அதேவிதமாக உணர்ந்திருக்கலாம். ஆனால் மாநாடு முடிந்து, உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் பெற்றவர்களாக வீடு திரும்பினால் மட்டுமே போதாது. ‘நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்’ என இயேசு சொன்னார். (யோவா. 13:17) தனிப்பட்ட விதத்தில் நமக்குப் பொருந்தும் விஷயங்களை பின்பற்றுவதற்கு கடுமையாக முயல வேண்டும். (பிலி. 4:9) நம்முடைய ஆவிக்குரிய தேவைகளை முழுமையாய் திருப்தி செய்துகொள்வதற்கு இதுவே வழி.
[பக்கம் 5-ன் பெட்டி]
நீங்கள் கேட்பவற்றை தியானியுங்கள்:
■ நான் கேட்கும் விஷயம் யெகோவாவுடன் என் உறவை எப்படி பாதிக்கிறது?
■ மற்றவர்களுடன் நான் நடந்துகொள்ளும் விதத்தில் அது எப்படி செல்வாக்கு செலுத்துகிறது?
■ என் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் அதை எப்படி நான் பின்பற்றலாம்?