வார்த்தைகளின்றி சாட்சி கொடுத்தல்
1 யெகோவாவின் படைப்புகள் காணமுடியாத அவருடைய குணங்களைப் பற்றி வார்த்தைகளின்றி ஏராளமாய் சாட்சி பகருகின்றன. (சங். 19:1-3; ரோ. 1:20) அதேபோல் நம்முடைய நல்நடத்தை, கிறிஸ்தவ குணங்கள், அடக்கமான தோற்றம் ஆகியவை நம்மைப் பற்றி வார்த்தைகளின்றி சாட்சி பகரும். (1 பே. 2:12; 3:1-4) எனவே, “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக” நடந்துகொள்வதே நம் ஒவ்வொருவருடைய உள்ளப்பூர்வ விருப்பமாக இருக்க வேண்டும்.—தீத். 2:9.
2 அபூரண மனிதர்களால் எப்படி பைபிள் போதனைகளை அலங்கரிக்க முடியும்? கடவுளுடைய வார்த்தையின் வழிநடத்துதலோடும் அவருடைய பரிசுத்த ஆவியின் வல்லமையோடும் மட்டுமே அதைச் செய்ய முடியும். (சங். 119:105; 143:10) தேவனுடைய வார்த்தையானது “ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும்” இருக்கிறது. (எபி. 4:12) அது நம்முள் ஆழமாய் ஊடுருவிச் சென்று புதிய ஆள்தன்மையைத் தரித்துக்கொள்ள உதவுகிறது. (கொலோ. 3:9, 10) பரிசுத்த ஆவியானது தயவு, நற்குணம், சாந்தம், இச்சையடக்கம் போன்ற விரும்பத்தக்க குணங்களை நம்மில் வளர்க்க உதவுகிறது. (கலா. 5:22, 23) அப்படியானால், கடவுளுடைய வார்த்தையும் அவருடைய பரிசுத்த ஆவியும் நம் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்த நாம் அனுமதிக்கிறோமா?—எபே. 4:30; 1 தெ. 2:13.
3 மற்றவர்கள் நம்மைக் கவனிக்கின்றனர்: நாம் யெகோவாவின் தராதரங்களுக்கு இசைவாக வாழ்ந்து அவருடைய குணங்களைப் பிரதிபலிக்க முயற்சிப்பதை மற்றவர்கள் கவனிக்கின்றனர். இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஓர் அலுவலகத்தில் குள்ளமான ஒரு நபர் வேலை செய்துவந்தார், அவருடைய சக வேலையாட்கள் அவருடைய உருவத்தைப் பார்த்து கிண்டலடித்து வந்தனர். ஆனால் அதே அலுவலகத்தில் வேலை செய்த ஒரு சகோதரி அவரை எப்பொழுதும் மதிப்பு மரியாதையோடு நடத்தினார். இதைக் கவனித்த அந்த நபர், அவர் மட்டும் ஏன் அவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு அந்தச் சகோதரி, பைபிள் நியமங்களைத் தன்னுடைய வாழ்க்கையில் பொருத்துவதால்தான் மற்றவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்துவதாக விளக்கினார். அதோடு, மகத்தான ராஜ்ய நம்பிக்கையைப் பற்றியும் அவரிடம் சொன்னார். பிறகு அந்த நபர் பைபிள் படிக்க ஆரம்பித்து முழுக்காட்டுதலும் பெற்றார். அவர் தன் தாய்நாட்டுக்குத் திரும்பியபோது அவருடைய நல்நடத்தையைப் பார்த்து அவருடைய உறவினர்கள் மனங்கவரப்பட்டனர், அவர்களில் அநேகர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர்.
4 வேலை செய்யும் இடத்திலோ, பள்ளியிலோ, உறவினர்களோடும் அக்கம்பக்கத்தாரோடும் பழகுகையிலோ நம்முடைய நல்நடத்தையின் மூலமும் பிரசங்க ஊழியத்தின் மூலமும் தேவனை மகிமைப்படுத்த மற்றவர்களை நாம் தூண்டலாம்.—மத். 5:16.